“எங்கள் சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்,
சீன கம்யூனிசக் கட்சியின் 100 வது வருடத்தை முன்னிட்டு நாங்கள் தங்க நாணயங்களை வெளிக்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே பல நிறுவனங்களின் முன் ஆங்கில, தமிழ் ஏன் சிங்கள மொழி கூடப் பாவிக்கப்படாமல் சீன மொழியில்
மட்டும் பெயர்ப்பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை எமக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தான் இவ்வாறான செயல்களில் நாம் ஈடுபடுகின்றோமோ நான் அறியேன். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் பூகோள அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி சிந்தித்தோமா? முகத்தைப் பகைத்து
மூக்கை வெட்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.
சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம். ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை.
இந்த நடவடிக்கையே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.
நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என்பதை அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.