உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

13 ஆவது திருத்தச்சட்டத்தில் கை வைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம் ! – வே. இராதாகிருஷ்ணன்

அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று (16.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 28 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மலையக தமிழருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 1977 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை அமைச்சரவையில் மலையக தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இம்முறை அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

அதேபோல் புத்தசாசனத்துக்கு தனி அமைச்சொன்று இருக்கும் நிலையில், ஏனைய மதங்களுக்கான அமைச்சுகள் நீக்கப்பட்டு சமய விவகார அமைச்சென உருவாக்கப்பட்டு அவை சார்ந்த திணைக்களங்கள் பிரதமரின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும். அத்துடன் சில அமைச்சுகள் பொருத்தமற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. அதனை முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம். வேண்டுமானால் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 13 ஆவது திருத்தச்சட்டமானது சிறுபான்மையின மக்களுக்காக உருவானது. அதில் கைவைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக சில விட்டுக்கொடுப்புகளை செய்து பயணித்ததாலேயே 100 வீத வெற்றி கிடைத்தது.வருகின்ற தேர்தல்களிலும் முற்போக்கு கூட்டணியாகவே முடிவுகளை எடுப்போம். எதிரணியில் இருந்தாலும் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதற்கு எதிராகவும் நீதிக்காகவும் உரத்து குரல் எழுப்புவோம் என்றார்.

இத்தாலி நோக்கி பயணிக்க முற்பட்ட இலங்கை யுவதி ஒருவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது!

போலி தகவல்களை உள்ளடக்கிய வீசா மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி டோஹாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணிக்க முற்பட்ட இலங்கை யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி பயணிக்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR என்ற விமானத்தில் பயணிப்பதற்காக குறித்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது குறித்த பெண் சமர்பித்த கடவுச்சீட்டு தொடர்பில் சந்தேகம் ஏற்பட அவரிடம் விசாரித்த போது இத்தாலியில் உள்ள பெண் ஒருவரின் தகவல்களை பயன்படுத்தி அவர் இந்த போலி ஆவணங்களை தயாரித்தாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும் ! – வாசுதேவ நாணயக்கார

அண்மையில் இலங்கையின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் கண்டி மகுல்மடுவவில் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சுப்பதவி ஒன்று  முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு கிடைக்கும்  என பலரும் எதிர்பார்த்தபோதும்கூட   அமைச்சரவையில் இடம்கொடுக்கப்படாமை தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினையும் ஒரே கட்சியாக இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எல்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவரிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றும் வரும் நிலையிலேயே அவருக்கான அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்படவில்லை என்று தென்னிலங்கை ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுயிருந்தன.

அந்த நிலையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தினரால் முன்னாள் போராளிகளின் விவரங்கள் சேமிப்பு – முன்னாள் போராளிகள் அச்சம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இலங்கை ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விவரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா? என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னாள் போராளிகளின் விவரங்களை இராணுவத்தினர் சேகரிக்க தொடங்கியுள்ளமை முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.

முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வந்த ராணுவத்தினரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் கூற முடியாது எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று மக்களிடம் கூறி உள்ளனர்.

யாழ்.ஊரெழு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல். !

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஊரெழு போயிட்டி பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு பொலிசார் சென்றுள்ளனர்.

பொலிஸார் அப்பகுதிக்கு சென்று சந்தேக நபரை தேடிய போது அங்கு இரு தரப்புக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பில் விசாரிக்க சென்ற பொலிசார் மீது அங்கு நின்ற இளைஞர் குழு கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் இரு பொலிசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று !

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க (திங்கட்கிழமை) இடம்பெற்றது.நல்லூரானின் பெருந்திருவிழா கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே திருவிழா இடம்பெற்று வந்தது.மேலும் 25 நாட்கள் நடைபெற்று வரும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 13ஆம் திகதி கைலாச வாகனமும் மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும் நேற்று சப்பரதத் திருவிழாவும் இடம்பெற்றது.

இந்த நிலையில், இன்று தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்று வருகிறது.இதனையடுத்து, நாளை தினம் 18 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த திருவிழாவில் பங்குகொள்வதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் அதிகளவானோர் வருகை தருகின்றமை வழமை. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பங்கேற்பு இருக்காது என்றே கூறப்படுகின்றது.இதேநேரம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் பக்கத்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,50,000 வேலைவாய்ப்புக்கள் பற்றி வெளியான தகவல்..!

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்ந , ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (16.08.2020) ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வௌியிடப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமக்கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி தனக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர், பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வினவ முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியினால் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வட்டுக்கோட்டைப்பகுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த குணரத்தினம் விமலவர்ணா (19வயது) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் கலைப்பிரிவில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரத்தில் ஒரு சிலபாடத்திற்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சைக்குத் தன்னைத் தயார்படுத்கொண்டிருந்த காரணத்தினால் அவர் கடந்த சில நாட்களாக அவர் பாடசாலைக்குச் செல்லவில்லை, பரீட்சை விண்ணப்பதாளில் கையொப்பம் இடுவதற்கு வருமாறு பாடசாலையின் பரீட்சைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவியின் தந்தைக்கு தொலைபேசியூடாக தெரிவித்திருந்தார்.

மதியம் வீட்டிற்கு வந்த தந்தை கதவினைத் திறக்கும் படி மகளை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவினை திறக்கவில்லை, அதனால் அவர் மதில் மேல் ஏறி வீட்டிற்குள் சென்று பார்த்த போது மகள் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டு இன்று சடலம் உறவினர்களிடம் கையளிக்கட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ம் திகதி!

20.08.2020 அன்று நடைபெறவிருக்கும் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதற்கமைய பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி வைபவரீதியாக முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கவிருப்பதுடன், அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

அன்றையதினம் காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை என்பன இடம்பெறும். இதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.

பாராளுமன்ற அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி வருகைதரும் போது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள். அதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றி வைக்கப்படும்.

படைக்கல சேவிதர், பிரதிப் படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர், சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி மணிவண்ணன் நீக்கம்…?

அண்மைய காலத்து யாழ்ப்பாண தமிழ் அரசியலில் அதிகம் பேசப்பட்ட அதே நேரம் தேர்தலில் வெற்றிபெறுவார் என எதிர்பார்கக்ப்பட்டவர்  சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆவார். தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பல குழப்பங்கள்   தமிழ் கட்சிகளிடையே இந்த முறை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் இது போன்றதான ஒரு பிரச்சினையின் பின்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்தது.

இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறையும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. மூன்றாவது முறையாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிட்டார். எனினும் சட்டத்தரணி வி. மணிவண்ணனை விலக்கிவைத்தே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை முன்வைத்திருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், மணிவண்ணனுக்கு பரப்புரைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற பணிப்பும் தலைமையினால் விடுக்கப்பட்டிருந்தது.. அத்தோடு சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கும் முன்னணியின் உயர்மட்டம் குறுக்கீடு செய்தது.

சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவுத் தளம் பொதுத் தேர்தலில் அதிகரித்தது. அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றுக்கு தெரிவானதில் மணிவண்ணனின் பங்கும் கணிசமாக இருந்தது..

பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூன்றாம் நிலையைப் பெற்றார். அதனால் அவர் அண்மைய நாள்களாக ஒதுக்கப்பட்டார்.

மேலும் மணிவண்ணனை முன்னணியின் தலைமையுடன் சமரசம் செய்யும் பணியும் கல்வியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் நிலை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தொடர்பில் முடிவெடுக்க கட்சியின் மத்திய குழுவை செயலாளர் நேற்றிரவு கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக நேற்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி க.சுகாஷ், மணிவண்ணன் தரப்பு மீது குற்றச்சாட்டு ஒன்றை தனது முகநூல் பக்கம் ஊடாக முன்வைத்திருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவில் இல்லாத சட்டத்தரணி க.சுகாஷ், மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்பாளர்களுக்காக இந்த தகவலை பகிர்ந்திருந்தார்.

கட்சியின் தலைமையை துதி பாடும் உறுப்பினர்கள் இடையே சட்டத்தரணி வி.மணிவண்ணன் மட்டுமே தன்னால் எவற்றை செய்ய முடியும் என பரப்புரையில் வெளிப்படுத்தினார் என்று இளைஞர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் அவரிடம் கேட்ட போது,;கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைவரால் அறிவிக்கப்படவில்லை. அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்று பதிலளித்தார்