உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

உலக தரப்படுத்தலில் இலங்கையின் பேராதனை பல்கலைகழகத்துக்கு மேலும் ஒரு மகுடம் !

இலங்கையின் பல்கலைகழக தரப்படுத்தலின் அடிப்படையில் தொடர்ச்சியாக பேராதனைபல்கலைகழகம் முன்னிலையில் இருந்து வருவதுடன் சர்வதேச அளவிலும்  இந்த பல்கலைகழகம் பெயர்பெற்ற பல்கலைகழகமாக உள்ளது.

இந்த நிலையில் Times Higher Education World Ranking – 2022 என்றழைக்கப்படும் தரப்படுத்தலின் பிரகாரம், உலகின் முதன்மையான 500 பல்கலைக்கழகங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தையும், இலங்கை பல்கலைக்கழகங்களில் முதலாம் இடத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இந்த தரப்படுத்தலானது ஆய்வுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தர வரிசையை உருவாக்குகிறது.

பல்கலைக்கழகங்களின் ஆய்வை மையப்படுத்திய நோக்கங்கள், கற்றல் பின்புலம், தொழிற்துறை வருமானம், சர்வதேச ரீதியிலான தோற்றப்பாடு முதலான விடயங்களின் அடிப்படையில் தரப்படுத்தல் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

மாணவர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழக பிரதானிகள் ஆகியோருடன் அரசுகள் மற்றும் கைத்தொழில் அமைப்புக்களின் நம்பிக்கையை வென்ற முழுமையான மற்றும் நடுநிலையான ஒப்பீடுகளை மேற்கொள்ளக்கூடிய செயலாற்றுகை குறிக்காட்டிகளை அமைப்பு பயன்படுத்துகிறது.

 

“பொறுப்புடன் செயற்படுங்கள். எந்த நேரத்திலும் நிலை மாறலாம்.” – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை !

““பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. ” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. புதிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், மக்களின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிந்த போதிலும் இலக்கைத் தக்கவைக்க முடியவில்லை. அதற்கு மக்களின் செயற்பாடுகளே காரணமாகும். மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சுகாதார அமைச்சு, சுகாதாரப் பணியகம் மூலமாக பல்வேறு சுகாதார வழிகாட்டிகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை முழுமையாகப் பின்பற்றுவதில் சந்தேகம் உள்ளது. ஒரு சிறிய குழு தவறு செய்கின்றது.

இதனால் பெருமளவிலான மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை சகலரும் கவனத்தில்கொள்ள வேண்டும். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால், எப்போதும் மீண்டும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் போராடுகின்றோம் என்பதை சகலரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

“இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்க வேண்டும்.” – அலைனா டெப்லிட்ஸ்

“இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்க வேண்டும்.” என பதவியில் இருந்து விலகவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ள போது ,

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது. அனைவரும் மனித உரிமைகளை மதித்து செயற்பட வேண்டும்.

ஜனநாயக அரசாங்கமொன்று அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்பதனால் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் உள்ள மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் நல்லிணக்க முயற்சிகள், நிலைபேறுகால நீதிப் பொறிமுறையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கக்கூடிய கொள்கைகளை வகுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் வேகமெடுக்கும் டெல்டா – 10வயது சிறுவன் பலி !

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா திரிபு வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது

அதேவேளை 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கடந்த வாரம் 1,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 49 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது அதில் 43 பேருக்கு டெல்டா திரபு வைரஸும், 4 பேருக்கு அல்பா வைரசும் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். 2 பேரின் அறிக்கை கிடைக்கவில்லை

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு வைரஸ் இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றது. எனவே பொதுமக்க ஊரடங்கு சட்டத்தை மீறி தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் அதேவேளை சுகாதார துறையினரின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

“ஒற்றுமைப்பற்றி கூறிவிட்டு ஐ.நாவுக்கு நான்கு கடிதங்களை போலித்தேசியவாதிகள் அனுப்பியுள்ளனர்” – பிள்ளையான்

மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

இதன் போது பேசிய அவர்,

ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு தெரிவித்தார்.

மேலும் ஐ.நா. சபைக்கு நான்கு பகுதிகளில் இருந்து கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினை திருப்திப்படுத்தும் வகையில் கடிதத்தினை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்று. அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன்.” – சி.வி.கே.சிவஞானம்

“கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் ஆகவே அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன்.” என  வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எது நியாயமோ எது சரியோ அதை யார் செய்தாலும் சரி என்பேன் அதே பிழை என்றால் பிழை என்று கூறுவது என்னுடைய பொறுப்பு. இனி நான் பயப்படமாட்டேன். இதுவரை நான் அடக்கி வாசித்தேன். என் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர். தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது ஆனால் அவர்கள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, என்னைப்பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது.

புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் ஆகவே அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன் என்றார்.

“கர்ப்பம் தரிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.” – இலங்கையில் வெளியான அறிவிப்பு !

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பரவலால் நாளுக்குநாள் மரணவீதமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் முதியோர்களே அதிகம் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான போதும் அண்மைக்காலத்தில் சிறுவர்கள் – கர்ப்பிணி தாய்மார்கள் என பலர் இலங்கையில் கொரோனா உயிர்ப்பலிக்கு இலக்காகியுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் “கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா தொற்று தற்போது பரவி வருவதனால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில்  மேலும் பேசிய அவர்,

கொவிட் என்பது புதியதொரு நோய், அது குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் கிடையாது. கொவிட் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து, புதிய புறழ்வுகள் ஏற்பட்டு வருகின்றது. தாய்மாருக்கு கொவிட் வைரஸினால் பிரச்சினை கிடையாது என சுகாதார தரப்பினர் ஆரம்ப காலத்தில் தெரிவித்திருந்தனர். எனினும், தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

கர்ப்பணி தாய்மாருக்கு கொவிட் வைரஸ் தொற்றுமானால், அது அதியுயர் அபாயகரமான நிலைமையாகவே கருத வேண்டும்.

ஏனெனில், கொவிட் வைரஸ் கர்ப்பணித் தாய்மார்களை தாக்கினால், அது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்தான விடயம். எனவே, தம்பதியினர் விரும்பினால், குழந்தை பெற்றெடுப்பதை, ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு கோருகின்றேன் எனக் கூறியுள்ளார்.

வீட்டில் கசிப்பு உற்பத்தி – பெண் கைது !

வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இன்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் நூற்றுக்கு அதிகமானோருடன் நடந்த திருமணம் – யாழில் தம்பதியினருக்கு நேர்ந்த கதி !

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அச்சுவேலி வடக்கில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர்.

அத்தோடு, மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார கட்டுப்பாடுகளை மீறி திருமண வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என அச்சுவேலி பொலிஸார் கூறினார்.

வடக்கு, கிழக்கில் தேங்கிக்கிடக்கும் சடலங்கள் – பஷில்  ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ள சுமந்திரன் !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே  உடனடியாக எரிவாயு மின் தகன மேடைகளை வடக்கு, கிழக்கில் அமைக்க நிதி அமைச்சர் பஷில்  ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய  கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற  எம்.ஏ.சுமந்திரன்  கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற  61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட  ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய எரிப்பதற்கு அவசியமான எரிவாயு மின்தகனமேடைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதியளவு இல்லை. இதனால் வடக்கு, கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே எரிவாயு மின்தகன மேடைகள் உள்ளன. மட்டக்களப்பில் இல்லை. எனவே நிதி அமைச்சர் அவசரமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தற்காலிகமாகவேனும் எரிவாயு மின்தகனமேடைகளை வடக்கு,கிழக்கில்  அமைத்து கொரோன வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.