உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன – ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இடையே சந்திப்பு !

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம்  இடம்பெற்ற நிலையில், இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சேய்பி, இத்தாலி மற்றும் நெதர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், ருமேனியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தூதரகங்களின் அலுவல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவிற்கு வாழ்த்துத் தெரிவித்த குறித்த பிரதிநிதிகள், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை நெருக்கமாகச் செயலாற்றி வருவது குறித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

மேலும், இலங்கையின் மிகமுக்கியமான ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பா விளங்குவதுடன் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என்பனவும் அதனூடாகவே அதிகளவில் கிடைக்கப்பெறுவது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை மிகவும் சிறப்பாகச் செயற்பட்டிருப்பதாகப் பாராட்டுத் தெரிவித்த டெனிஸ் சேய்பி, இதன் விளைவாக இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் எவ்வித அச்சமுமின்றி ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தரக்கூடிய நிலை உருவாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலமையில் புதிய கட்சி..?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தாவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான குழுவில் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி மனோகணேசன் வேண்டுகோள்!

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. எனினும், இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.

எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின் பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னணியின் நீண்ட இழுபறிக்கு வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் மணிவண்ணன் !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் என விளித்து செய்திகளை பிரசுரிக்காதீர்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினயமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன் , கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டார். அதனால் அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாம் கடிதம் மூலம் இதுகுறித்து அறிவித்தோம். அதற்கு அவர் எழுத்து மூலமாக பதில் அனுப்பி இருந்தார்.

அதனை மத்திய குழுவில் ஆராய்ந்து அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் கருத்தில் கொண்டு அவரை நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளோம். அது தொடர்பில் அவருக்கு அறிவித்துள்ளோம்.

இரண்டு கிழமைக்குள் அவர் பதில் அனுப்ப வேண்டும். உறுப்புரிமையை நீக்கப்பட்டதற்கு நிரந்தமாராக நீக்காது இருக்க அவர் பதில் அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் இரண்டு கிழமைக்குள் பொது குழு அமைத்து விசாரணை முன்னெடுக்கப்படும். அந்த விசாரணையின் பின்னர் கட்சியின் உறுப்புரிமையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா ? இல்லையா ? என தீர்மானிப்போம்.

இந்த கால கட்டத்தில் பொதுமக்களுக்கு அறியத்தருவது யாதெனில், இன்று முதல் கட்சியின் செயற்பாட்டில் மணிவண்ணன் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது.

அவருக்கு கட்சியின் பெயர் அல்லது சின்னத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளோம். அவர் கட்சியின் பெயரில் செயற்பட்டால் அது கட்சி ரீதியானது அல்ல. அது கட்சியை மீறியது என அறிய தருகின்றோம்.

ஒழுக்காற்று விசாரணைகள் முடிந்த பின்னர் மேலதிக தகவல்களை அறிவிப்போம். உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதனை மக்களுக்கும் , எமது ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கின்றோம்.

மணிவண்ணனின் கருத்துக்களோ செயற்பாடுகளோ கட்சியின் செயற்பாடாக இனிவரும் காலங்களில் அமையாது.

மணிவண்ணன் தொடர்பில் நாம் இவ்வளவு காலமும் அமைதி காத்தமையினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை இன்னும் பத்து  வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது” – ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை இன்னும் பத்து  வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது” என  ஐக்கிய தேசியக்கட்சியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜோன் அமரதுங்க மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களினால் மக்கள் தற்போது ஈர்க்கப்பட்டுள்ளனர். ஆகவே எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே தொடர்ந்து நிலவும்.

இதேவேளை இதற்கு முன்னர் ஆட்சிசெய்த நல்லாட்சி அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இத்தகைய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்காது.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களுக்கு ஒரு வேலையேனும் வழங்கத் தவறிவிட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான போட்டியில் அண்ணனை எப்படி மண்டியிட்டு வைக்க முடியும் என்றே தம்பி எண்ணுகிறார்“ – புபுது ஜாகொட

2015 ஆம் ஆண்டில் மக்கள் சிங்கத்தை எதிர்பார்த்தனர். நல்லாட்சி அரசாங்கம் சிங்கத்திற்கு பதிலாக எருமை கன்றை வழங்கியது. அந்த எருமை கன்றையும் தற்போதைய அரசாங்கம் பறித்துக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (2020.0.04) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்தாலும் அதற்கு எதிராக மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இடமளிக்காது 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றும் அதிகாரம் இந்த திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவை மிகவும் பயங்கரமான அதிகாரங்கள்.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சட்டம் இருந்தது. அதனையும் நீக்கியுள்ளனர்.

ஜே.ஆர். செய்ததை விட மேலதிகமாக ஒன்றை செய்ய முயற்சிப்பதிலேயே பிரச்சினை இருக்கின்றது. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான போட்டியில் அண்ணனை எப்படி மண்டியிட்டு வைக்க முடியும் என்றே தம்பி எண்ணுகிறார் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

”சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை, இதுதொடர்பில் மீள் பரிசீலினை செய்ய வேண்டும்” – அமெரிக்கத் தூதரகம் அறிக்கை.

கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே சீனா அரசின் மீது அமெரிக்காவும் அதன்  சார்பு நாடுகள் அனைத்தும் தம்முடைய எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் இது பனிப்போராக உருமாறியுள்ளது.

இந்நியைில் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை  ஏற்படுத்தியதால் அமரிக்காவின் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீனத் தொடர்பாடல் – நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை, இதுதொடர்பில் மீள் பரிசீலினை செய்ய வேண்டுமென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

குறித்த நிறுவனத்தினாலேயே கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு நிர்மாணப் பணிகள் இலங்கையில்  முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிர்மாண நிறுவனம் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், சுற்றாடல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறான முறைகேடுகள் மற்றும் இறையாண்மை மீறலில் இருந்து நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும்  அமெரிக்காதூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

“20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசாங்கம் இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்“ – கரு ஜயசூரிய

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசாங்கம் இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனூடாக 19 ஆவது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

“இலங்கைத்தீவு தமிழர்களின் தேசம் முதுகெலும்புள்ளவர்கள் என்னிடம் வாருங்கள் நிரூபித்து காட்டுகிறேன்“ – மூத்த சிங்களக் கல்விமான் டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன சவால் !

இலங்கைத் தீவு ‘தமிழர் தேசம்’ என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முதுகெலும்பு இருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு தயாரா என்று இலங்கை புத்த சமயத் தலைவர் ஒருவருக்கு மூத்த இலங்கைத்தீவு தமிழர்களின் தேசம் முதுகெலும்புள்ளவர்கள் என்னிடம் வாருங்கள் நிரூபித்து காட்டுகிறேன் மூத்த சிங்களக் கல்விமானான டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.
சிங்களவர்கள் தான் வந்தேறி குடிகள் என்பதையும் வடக்கு தமிழர்களின் பூர்விகம் என்ற யாதார்த்த பூர்வமான உண்மையையும் தேரருக்கு  கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
வந்தேறி குடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோர முடியும்? என நாடாளுமன்ற உறுப்பினரா எல்லாமல மேதானந்தா தேரர் என்ற புத்த பிக்கு  கூறியது தொடர்பில் கருத்துரைத்த போது விக்கிரமபாகு கருணாரட்னா இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: மேதானந்தா தேரர் ஒரு கல்விமானாக இருந்து கொண்டு வரலாறு தெரிந்தும் சிங்கள மக்கள் மகிழ்ச்சிப் படுத்துவதற்கு போலிக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு இது தான் வரலாறு, இதிகாசம் என்றும் காட்டி வருகிறார்.
விஜய மன்னன் இங்கு ஆட்சியின் போதுதான்  பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள் தான் ஆட்சி செய்தனர்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்கு பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்த வந்தவர்கள் சிங்களவர்கள் என்று பறை சாற்றுகிறது.
ஆனால் தமிழர்கள் அப்படியல்ல. அவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகவே கொண்டவர்கள் எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

“இலங்கையில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி “! – ஜீ.எல்.பீரிஸ்

நாட்டில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்து வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.