உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” – நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (04.09.2020) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாகக் கொண்டுவரப்படுகிறது என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இதற்குக் காரணம், நவம்பர் மாத நடுப்பகுதியில் சுயாதீக ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவிருக்கிறது. அவ்வாறு, முடிவடையும்போது இப்போது இருக்கின்ற அரசியலமைப்புச் சபையினுடைய அனுமதியோடுதான் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். தான் நினைத்தவர்களை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது.

ஆனால், அதற்கு முன்னதாக இந்த 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அடுத்த தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாகவே இருப்பார்கள். இதுவொரு பாரிய திருப்பத்தினை நாட்டில் ஏற்படுத்தும்.

சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்கள் கடந்த வருடங்களில் இந்த நாட்டிலே நடத்தப்பட்டிருக்கின்றன. அதற்கொரு பாரிய சவால் ஏற்படும். அதுதான் இத்தனை அவசரம்.

ஆனபடியால்தான், அவர்களுடைய கட்சிக்குள்ளே இருந்துகூட, இந்த இருபதாவது அரசியலமைப்புத் திருத்த ஏற்பாடுகள் பலவற்றுக்கு எதிர்ப்பு இருந்தபோதும், அவர்கள் அவற்றை மாற்றியமைப்பதாக இணங்கிக் கொண்டாலும்கூட, ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தையே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள்.

இல்லையென்றால், திருத்தங்களை உள்ளடக்கி வர்த்தமானியில் திரும்பவும் அரசியலமைப்புத் திருத்தம் பிரசுரிக்கப்பட வேண்டும். அதற்கு இரண்டு வாரகால அவகாசம் தேவை. அதற்குப் பிறகு நாடாளுமன்றத்திலே சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஒருவார கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

அப்படியெல்லாம் செய்துகொண்டிருக்க நவம்பர் மாதம் கடந்துவிடும். எனவேதான், 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அவர் மேற்கொண்ட போராட்டம் எனவே அந்த போராட்டத்தை நாங்கள் இழிவுபடுத்த முடியாது” – தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“ திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அவர் மேற்கொண்ட போராட்டம் எனவே அந்த போராட்டத்தை நாங்கள் இழிவுபடுத்த முடியாது” என தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04.09.2020) மட்டக்களப்பில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் கிறிஸ்தவ மத நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து மத வழிபாட்டின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடந்த காலங்களில் கூட திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல அதனை அசிங்கப்படுத்தியவர்களும் அல்ல நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். அதற்கான கௌரவத்தை கொடுத்திருக்கின்றோம். கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

திலீபனின் கனவு என்ன?  இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களும் ஏனைய சமூகத்துக்கு இணையாக, நிம்மதியாக, தலைநிமிர்ந்து வாழ வேண்டும் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது என்ற அந்த கனவை நனைவாக்க வேண்டும் என்று நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை அவர்கள் மற்ற சமூகத்துக்கு கைகட்டி வாழாமல் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் .

தீலீபனை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துகின்ற ஒரு சிலர் எங்கள் மீது அரசியல் காட்புணர்ச்சி காரணமாக நாங்கள் அமைதியாக இருந்தோம் என குற்றம் சுமத்துகின்றனர். நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போதும் திலீபனின் அந்த அகிம்சைவழி போராட்டத்தை மதிக்கின்றோம் மதித்துக் கொண்டிருக்கின்றோம் இதை தெளிவாக சில விசனத்தனங்களை கூறுகின்றவர்களுக்கு இந்த ஊடக சந்திப்பு வாயிலாக தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிரச்சனையை வைத்து நாங்கள் இனிமேல் அரசியல் செய்ய முடியாது நாங்கள் அரசாங்கத்தோடு இருப்பது என்பது பிரச்சனையை வைத்துக் கொண்டு எங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அரசியலை செய்ய முடியாது நாங்கள் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு ஹர்த்தாலை குழப்பவில்லை அதற்கு எதிர்மாறாக செயற்படவில்லை அந்த போராட்த்துக்கு மறுப்பு தெரிவித்ததில்லை கடந்த காலத்தில் 42 மேற்பட்ட போராட்டங்களை மேற்கொண்டோம். மக்களின் நியாயமான போராட்டங்களை மதிக்கின்றோம் அதனை கௌரவிக்கின்றோம் அதுதான் உண்மையும் அதுதான் யதார்த்தமும்.

20 சீர்திருத்தம் என்பது 18 வது சீர்திருத்தத்தை தளுவி அதை நடைமுறைப்படுத்தும் ஒரு செயற்திட்டம் தான் 20 சீர்திருத்த சட்டம் இருக்கின்றது. இது தொடர்பாக எதிர்கட்சியில் பல்வேறு எதிர்ப்புக்கள் இருக்கின்றது எது எவ்வாறாக இருந்தாலும் 18 சீர்திருத்தம் 20 சீர்திருத்தமாக ஒரு சில மாற்றத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கின்றது  என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? “ – அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கேள்வி .

“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? என்று அவரிடம் நான் சவால் விடுகின்றேன்“ என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

‘இலங்கை அரசு சார்பானவர்கள் மாகாண சபைகளை உடனே நீக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாண சபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. எம்மைப் பொறுத்தவரையில் முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு, கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும்’ என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துத் தொடர்பில் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகள் நீக்கப்பட வேண்டுமெனில் 9 மாகாண சபைகளும் நீக்கப்படும். விக்னேஸ்வரனுக்காக வடக்கு, கிழக்கைத் தவிர்த்து ஏனைய 7 மாகாண சபைகளையும் நீக்க முடியாது.வடக்கு, கிழக்கு மாகாண சபைகள்தான் மிகவும் ஆபத்தாக இருக்கின்றபடியால் மாகாண சபைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எனினும், மாகாண சபைகள் முற்றாக நீக்கப்பட வேண்டுமா? அல்லது 9 மாகாண சபைகளையும் மீள இயங்க வைக்க வேண்டுமா? என்பதை புதிய அரசமைப்பில் ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்துக் கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை.

சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இயங்க வேண்டும் என்று கூறுகின்ற விக்னேஸ்வரன், அதைமீறி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்க முடியாது என்றும் குறிப்பிடுகின்றார். சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும் என்று புதிய நகைச்சுவையை விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

அவரின் இந்தக் கருத்தின் விரிவாக்கம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் கனவான ‘தமிழ் ஈழம்’ கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளை நீக்க முடியாது என்பதேயாகும். விடுதலைப்புலிகள் போல் விக்னேஸ்வரனும் கனவு காண்கின்றார். அவரின் கனவு ஒருபோதும் நனவாகாது எனவும் குறிப்பிட்டுளளார்

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த கொரோனா நோயாளியின் 16வயது மகளுக்கும் கொரோனா உறுதி !- புங்குடுதீவிலும் 20பேர் தனிமைப்படுத்தலில்..,

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுள்ளதுடன் சமூகப்பரவல் தொடர்பான அபாயமுமத் ஏற்பட்டுள்ளது.

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர் பணிபுரிந்த மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேரும், திவுலப்பிட்டியவில் அவருடன் நெருக்கமாகப் பழகிய 150 பேரும் வீடுகளிலில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின்  16 வயது மகளுக்கும் இன்று மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததுள்ளார்.

அதே நேரம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்  பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண் இன்று ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பத்தினரும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவருடன் தொடர்புடையவர்களும் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாத்மாகாந்தியின் 151வது பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் தமிழ் அரசியல்தலைவர்களின் இணைவுடன் அஞ்சலி !

இந்திய சுதந்திரப்போராட்டத்தலைவர் மகாத்மாகாந்தியின் 151வது பிறந்ததினத்தை முன்னிட்டு  யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் தமிழ் அரசியல்தலைவர்களின் இணைவுடன் இன்று  காலை அஞ்சலி செலுத்தும் வைபவம்  இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மதத் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், சரவணபவன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராசா,மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவருரை கௌரவித்து துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

IMG20201002082107 01

”திலீபனை நினைவுகூறும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் ” – எம்.ஏ சுமந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

திலீபனை நினைவுகூறும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப்போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று(02.09.2020) காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிராளிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டத்தரணி சுமந்திரனால் பொலிஸார் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தினை தவறான வழியில் நடாத்தமுற்படுவதாக கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தினார்.

யுத்ததில் திலீபன் இறக்கவில்லையெனவும் பொய்யான வகையிலான குற்றசாட்டுகளை பொலிஸார் முன்வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் அவர்களின் நேரத்தினை வீண்விரயம் செய்துள்ளதாகவும் தனது கண்டனத்தினையும் நீதிமன்றில் தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலையங்களை இணைத்து தொடரப்பட்டிருந்த இந்த வழக்கினை தள்ளுபடி செய்தி நீதிபதி வழக்கில் இருந்து அவர்களை விடுவித்தார்.

பொய்யான குற்றசாட்டுகளை வைத்து வழக்குகளை தயார் செய்யும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

கொவிட் 19ஐ விட ஆபத்தான நோயாக இலங்கையில் உருமாறும் டெங்கு நோய் – .இந்த வருடம் மட்டும் 27,733 டெங்கு நோயாளிகள் அடையாளம் !

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு ஆபத்து அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநர் அனுரா ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அனுரா ஜெயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “டெங்கு பரவுவதற்கான நிலைமை ஆபத்தானது அல்ல என்றாலும், வரும் மாதங்களில் மழை நிலைகள் தீவிரமடைந்து வருவதால் டெங்கு ஆபத்து அதிகரிக்கும்.

டெங்கு நோய் ஒழிப்பு திட்டம் : பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்

எனவே மக்கள்,  தங்களை சுற்றியுள்ள சூழலை சுத்தமாக எந்நேரமும் வைத்திருக்க வேண்டும்.  மற்றும் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வகையில் காணப்படும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்து அவதானமாக இருக்க வேண்டும்.

தொற்றுநோயியல் பிரிவு புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல்  இதுவரை 27,733 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11,608 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்கு மாகாணத்தில் 8,014 பேர் டெங்கு நோயர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில்  முறையே 3,947,  2,420 மற்றும் 1,647 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில்  ​​இதுவரை 30 டெங்கு தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மயமாக்கல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களின் புராதன வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர் மலை ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்களால் சிறப்பு வழிபாடுகள் !

தொல்லியல் திணைக்களத்தால் பௌத்த மயமாக்கல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களின் புராதன வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர் மலை ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்களால் நேற்றையதினம் (01.09.2020) சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் விகாரை ஒன்று இருந்தது என தெரிவித்து தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தி விகாரை ஒன்றினை அமைக்க பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 2018 ஆம் ஆண்டு முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பினால் அது கைகூடாத நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்று கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தது .

அதாவது இந்த மலையில் உள்ள ஆலயத்தில் கிராம மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ள தடைகள் இல்லை எனவும் இப்பகுதியில் இரண்டு தரப்பினரும் புதிதாக கட்டுமானங்களை செய்யவோ தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தவோ முடியாது எனவும் மன்று பணித்திருந்ததுக்கு அமைவாக கிராம மக்கள் தமது ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில் புதிய அரசு மாற்றத்தின் பின்னர் இந்த மலையில் அமைந்திருந்த சூலம் ஒன்று உடைத்து எறியப்பட்டிருந்தது .

அத்தோடு அந்த பகுதியில் காவலரண் ஒன்றினை அமைக்கும் பணியினையும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்கொண்டிருந்தனர். இந்த காவலரண் அமைக்கும் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் 10 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினரால் நகர்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு புதிய கட்டுமானங்கள் செய்யமுடியாது காவலரண் அமைக்கமுடியும் என மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பூரணை தினமான இன்று ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கிராம மக்களின் ஆலயம் அமைந்துள்ள பகுதி கூகிள் (map)வரைபடத்தில் குருந்தாசேவ பௌத்த விகாரை என சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Capture

“20ஆவது திருத்தச்சட்டம் எமது சிறுவர்கள் பல்கலைக்கழகம் செல்வது தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் ” – நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் .

“20ஆவது திருத்தச்சட்டம் எமது சிறுவர்கள் பல்கலைக்கழகம் செல்வது தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் ”என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று(01.10.2020) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனிவரும் காலங்களில்தான் இந்த அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்புகள் ஏற்படப்போகின்றன. இங்கிருக்கின்ற சிறுவர்களின் எதிர்காலம்தான் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்படையப்போகின்றது.

1978ல் ஒரு அரசியலமைப்பினை உருவாக்கியிருந்தார்கள். அந்த அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல்வாதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 1990ஆம் ஆண்டுகளில் மரணித்துவிட்டனர். 2020ஆம் ஆண்டில்கூட அன்று உருவாக்கிய அரசியலமைப்பின் விளைவுகளை நாங்கள் எதிர்நோக்கவேண்டியிருக்கின்றது.

எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆளவேண்டியது இன்றைய சிறுவர்களாகிய நீங்கள் என்ற வகையில் உங்களுக்கும் அரசியல் ஆர்வம் வரவேண்டும். எங்களுடைய சகோதர சமூக இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் இருக்கின்றது. அதிகமானவர்கள் அரசியலில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.

புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற அரசியலமைப்பான 20ஆவது திருத்தச்சட்டம் அவசரமான முறையில் ஒருசிலருக்கு விரும்பிய வகையில் இந்த நாட்டில் கொண்டுவருகின்றனர் என்பது நீங்கள் அறிய வேண்டிய விடயமாகும். இது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கின்ற விடயமாகும்.

மிக அவசரமாக ஒரு அரசியலமைப்பை கொண்டுவந்தால் எங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும். சிலவேளைகளில் அந்த அரசியலமைப்பினூடாக நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வது தொடர்பில் சில மாற்றங்கள் வரலாம்.

இந்த நாட்டின் பொதுமக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது, மாற்றுவது இந்த அரசியலமைப்பு என்ற விடயமாகும். நாங்கள் இந்த நாட்டின் தமிழர்கள் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு இந்த அரசியலமைப்பினூடாக எவ்வாறு நல்ல விடயங்கள நாங்கள் பெறலாம் என்பது தொடர்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக படித்துக்கொண்டிருக்கின்றோம். இதுதொடர்பில் எதிர்காலத்தில் விவாதங்கள் வருகின்றபோது நிச்சயமாக நாங்கள் பேசுவோம்.

இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் தலையீடு செய்யும் நிலை காணப்படுகின்றது. நேற்றைய தினம்(30.09.2020) ஒரு பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் நான் உரையாடியிருந்தேன். அந்த பிரதேச செயலாளர் மிகவும் மனவருத்தத்துடன் கதைத்தார். ஏனென்றால் அந்த பிரதேசத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், சிலவேலைத்திட்டங்கள் தொடர்பாக அரசியல்வாதிகளுடைய பெயரைச் சொல்லி அவர்களுடைய சிறுவால்கள் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து தங்களுடைய வேலைத்திட்டங்களை செய்யும் காலம் திரும்பவும் உருவாகிக்கொண்டிருக்கின்றது.

ஒரு அரச அதிகாரியை எட்டாம் வகுப்புகூட படித்திராத நபர் சென்று அதிகாரம் செய்வது பிழையான விடயமாகும். இப்படியான விடயங்கள் நடக்காமல் இருக்கவேண்டுமானால் சிறுவர்களிடத்தில் இப்போதிருந்தே அரசியல் ஆர்வம் வரவேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய பங்காளி கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் கடந்த 70வருடமாக தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுவந்துள்ளனர். வருங்காலத்தில் சிறுவர்களின் நலன் கருதி கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது” – பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

“புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ”என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“15 மில்லியன் டொலர் நிதியையும் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இந்திய பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவத்திற்கு அடிபணியாமல் போராடி உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்திய அணியில் இருந்து அரச உணவை உண்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் இருக்காது.எமது நாட்டில்13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது ” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது ஒரு இறையாண்மை உள்ள ஒரு நாடு என்ற ரீதியில் எங்களை மீது யாரும் அழுத்தங்கள் பிரயோகிப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .