உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“கொவிட் – 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட்-19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்“ – வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர

“கொவிட் – 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட்-19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்“ என பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவு நிபுணத்துவ வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் (கொவிட் 19) ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது. எனவே, கொவிட் – 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட் 19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூக செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியாது.

கொவிட் -19 நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம், அதே நேரத்தில் இயல்பு வாழ்க்கையை பேண வேண்டும்.உயர்தர பரீட்சைகள் சுமார் ஒரு மாத காலத்துக்கு நடைபெறும். எனவே, அதற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் செயற்படுவதை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பொறுப்புடன் உறுதிப்படுத்த வேண்டும். தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுத விசேட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, கொவிட் -19 அச்சுறுத்தல் காணப்பட்டாலும் மாணவர்கள் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பரீட்சையை எதிர்கொண்டு வெற்றி பெறுவது சவால் மிக்கது எனவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் கோரிக்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களினால் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், குறித்த சம்பவத்திற்கு எதிராக காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கையின் வட பகுதியில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது.

தற்போதைய ஆட்சிக் காலத்திலும் வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் பலர் விசாரனைக்கு அழைக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம் பெற்ற சம்பவங்களுக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை

இதன் ஒரு தொடர் கதையாகவே முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் மரக்கடத்தல் மாபியாக்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோத செயற்பாடுகளை வெளிப்படுத்த முனைந்த ஊடகவியலாளர்கள் மீதே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஒரு சில அதிகாரிகளின் துணையுடன் மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் குழுவொன்று தொடர்பில் துணிச்சலுடன் செய்தியை வெளியிட முனைந்த ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம். குறித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

““தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களைப் பேச முடியாது.” – நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களைப் பேச முடியாது. அதனை எமது சமூகம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

முறிகண்டி நேசக்கரங்கள் அமைப்பின் மூலம் வீரமுனை காயத்திரி மக்கள் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது தமிழ்ப் பிரதேசங்கள் யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பது மட்டுமல்லாது யுத்தம் நடந்திருந்தாலும் இன்னொரு வழியில் இந்தப் பிரதேசத்தில் இருக்கும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலர் செயற்பட்டிருக்கின்றார்கள். அந்த செயற்பாட்டின் காரணமாக இந்தப் பிரதேசத்தில் மிக மோசமான சூழலில் எமது தமிழ் சமூகம் அகப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலே வாழ்ந்த தமிழர்கள் தங்கள் இருப்புக்கள் தொடர்பான விடயத்தை ஜனநாயக ரீதியான முன்னெடுப்புகள் வெற்றி தராததன் காரணமாக ஆயுத ரீதியான போராட்டங்களின் மூலம் முன்னெடுத்ததன் காரணமாக சிங்களத் தலைவர்கள் எதிர்மறையான பார்வையைக் கூடுதலாக எங்கள் மீது செலுத்தியதன் விளைவாக இந்த நாட்டிலே மிகவும் மோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் என்ற ரீதியில் இங்கு பல புறக்கணிப்புகள் இடம்பெற்றிருக்கின்றது. நாங்கள் 2012ம் ஆண்டு மாகாணசபைக்குள் நுழையும் போது இதனை நேரடியாக அவதானித்திருந்தோம். அக்காலத்தில் குறிப்பாக எமது மக்களின் பல காணிகள் பலவாறாக அபகரிப்புச் செய்யக் கூடியதான தீர்மானங்கள் கூட எமது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்டது. அதற்கு எதிராகப் பல குரல்கள் கொடுத்தவர்கள்.

இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி எமது சமூகம் சார்ந்த விடயங்களைப் பேச முடியாது. அதனை எமது சமூகம் முதலில் உணாந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர எங்களுடைய இனம் சார்ந்த, சமூகம் சார்ந்த விடயங்களைக் கையாள்வதற்கு முன்வரமாட்டார்கள் என்ற விடயத்தை நான் உங்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

நாங்கள் பல்வேறு விடயங்களை எமது பிரதேசங்களுக்குச் செய்திருக்கின்றோம் அவற்றை படம் போட்டுக் காட்டவில்லை. ஏனெனில் எமது நாட்டில் மிகவும் மோசமான சூழல் இருந்தது. எமது சமூகமும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த நிலையிலும் எமது சமூகத்திற்காக எங்களால் முடிந்த செயற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் இன்னும் பல உதவிகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.

இந்த நாட்டில் யுத்தம் முடிந்த கையோடு எமது மக்களைக் கையாளுகின்ற விடயங்களை எமது மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளெல்லாம் இந்த நாட்டிலே நடைபெறுகின்ற போது அதற்கு எதிராக எங்களுடைய மக்களின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய ஒரே ஒரு சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். நாங்கள் தொடர்ச்சியாக எமது மக்கள் சார்ந்த, அவர்களின் அடிப்படை விடயங்கள் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

எமது மாவட்டத்திற்குரிய ஒரே ஒரு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநித்துவம். நாங்கள் ஒரு சவால் நிறைந்த காலகட்டத்தினை எதிர்நோக்கியிருக்கின்றோம். எங்களுடைய தமிழர்களின் நிலையான இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்ற அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தலையைத் தடாவி கழுத்தை அறுக்கின்ற செயற்பாடுகளே எமது சமூகத்திற்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்மை ஆதரிப்பதாக, அரவணைப்பதாகக் கூறி எம்மை இல்லாமல் செய்கின்ற ஒரு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதிலே நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் போராட்டம் கடந்த காலங்களிலே வெற்றி தரவில்லை என்று எவருமே கூற முடியாது. நாங்கள் ஒரு தடவையல்ல பல தடவைகள் வெற்றியடைந்துள்ளோம். எமது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட காலம் தொடக்கம் இற்றைவரைக்கும் நாங்கள் அழிவுகளைச் சந்தித்திருந்தாலும் படிப்படியான வெற்றி வளர்ச்சிகளைக் கண்டிருக்கின்றோம் என்பதைத் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் போராட்ட இடைவெளிகளைப் பயன்படுத்தி சிலர் மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் எம்மை அடக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசில் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற பதம் பேசப்படுகின்றது. இருந்தும் எமது மக்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த மாவட்டத்தில் எமது சமூகத்திற்கு எவ்வித புறக்கணிப்புகளும் இருக்கக் கூடாது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம். இது எதிர்காலத்தில் இன ரீதியான முறுகல்களை உருவாக்கும்.

நடந்து முடிந்த இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே பல தமிழர்கள் தவறுகளை விளைவித்தவர்களாக எதிர்காலத்தில் இந்த மாவட்டத்திலே தலைதூக்கி வாழமுடியாத வகையிலான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த நிலையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம் மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கின்றது. எனவே நாங்கள் எமது சமூகம், எமது கட்சி, எமது இனம் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.

எமது மக்களின் இடங்களுக்குச் சென்று அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தவர்களாகவே நாங்கள் இருந்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் நிலையான தீர்வைப் பெறுகின்றவர்களாக இருந்து செயற்படுவோம். குறிப்பிட்ட காலத்திற்குள் எமது மாவட்ட ரீதியான பல விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

”ஐக்கியதேசியக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு கடந்த காலகட்டங்களில் பல அபிவிருத்திகளை கிழக்கில் மேற்கொண்டுள்ளது” – சீ.யோகேஸ்வரன்

”ஐக்கியதேசியக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு கடந்த காலகட்டங்களில் பல அபிவிருத்திகளை கிழக்கில் மேற்கொண்டுள்ளது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.10.2020) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த போது அக்கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சில ஆதரவுகளை வழங்கியிருந்தது. அந்தவகையில் அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். கிட்டத்தட்ட 8000க்கும் அதிகமான வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. பல வீடுகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்ட திட்டத்தின் கீழ் இன்று பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.

அதேபோன்று, பாடசாலை கட்டடங்கள், கிணறுகள், பொதுக்கட்டடங்கள் என பல அபிவிருத்திகளையும் இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கம்பரலிய திட்டத்தின் ஊடாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாகவும் இதர அமைச்சுகள் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முட்டுக்கொடுத்தவர்கள் எதுவும் செய்யவில்லையென்று இன்று சிலர் கூறுகின்றார்கள். பல கோடிக்கணக்கில் நாங்கள் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி எங்களை ஏமாற்றியதும் உண்டு. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வாழைச்சேனை காகிதசாலை நாங்கள் எடுத்த முயற்சியின் காரணமாகவே இன்று இயங்குகின்றது. கடந்த காலத்தில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். ஆட்சிமாற்றம் காரணமாக அவற்றினை எங்களால் தொடர முடியாமல்போனது.

கடந்த காலத்தில் மேய்ச்சல் தரை தொடர்பில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தோம். அன்றைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் பேசி அத்துமீறி குடியேறிய அனைத்து சிங்கள மக்களையும் அங்கிருந்து வெளியேற்றினோம். அண்மையில் குடியேற்றங்களை பார்வையிட சென்ற மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் சென்றபோது பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் அவர்களை குடியேறுவதற்கு அனுமதித்ததாக கூறினார்கள். சந்திரகாந்தன் அன்று சிங்கள மக்கள் குடியேறுவதற்கு அனுமதித்திருக்கின்றார்.

இவர்கள் இங்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முகத்தை காட்டுவதுடன் இரகசியமான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்கள். இதேபோன்றுதான் ஹிஸ்புல்லாவின் புனானை பல்கலைக்கழகமும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முழுமையான ஆதரவுடன்தான் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மறைமுக ஆதரவினை வழங்கிவிட்டு, எவ்வாறு கிழக்கின் தனித்துவம் பாதுகாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

சமூகவிரோத சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!! இதுவொரு மிக மோசமான சமூகசூழலை வெளிப்படுத்துகின்றது!!!

இன்றையதினம் முல்லைத்தீவில் நடைபெறும் மரக்கடத்தல்இ மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை வெளிக் கொண்டுவரும் முல்லைத்தீவு ஊடகவியலாளர்களான குமணன் மற்றும் தவசீலன் ஆகியோர் மீது மரக்கடத்தல்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களை தாக்கிய கடத்தல்காரர்கள் அவர்களை மிரட்டி “தாங்கள் திருடுவதற்கு தான் இங்கு வந்தோம்” என்று ஊடகவியலாளர்களை பேசவைத்து அதனை தமது கைத்தொலைபேசியில் காணொளியாக்கி இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும் மரகடத்தல்காரர்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து அழித்துள்ளார்கள். ஏற்கனவே பல தடவை இவ்வாறான அச்சுறுத்தல்களை குறித்த இரு ஊடகவியலாளர்களுக்கும் மரகடத்தல்காரர்களால் விடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரும்இ அங்குள்ள அரசியல்வாதிகளும் இது தொடர்பாக விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் காடழிப்பு, மண்கடத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதுதொடர்பாக கவனமெடுக்க வேண்டிய உரிய தரப்பினர் பெரிய அளவிற்கு அக்கறை காட்டாத சூழலே நீடிக்கின்றது.

இது சமூகத்தை சீரழிப்பதன் மிக மோசமான செயற்பாடாகக் கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கம் தேசம்நெற் தெரிவித்துள்ளது. இதுவரை அரச இயந்திரத்தின் செயற்பாடுகளே ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவந்தது. ஆனால் இன்று சமூகவிரோத சக்திகளே ஊடகவியலாளர்களைத் தாக்கி அவர்களை குற்றவாளிகளாகக் காட்சிப்படுத்தும் மோசமான நிலையேற்பட்டு உள்ளது.

இவ்வாறான சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளை மௌனமாகக் கடந்து செல்வது மிக மோசமான விளைவுகளை பின்நாட்களில் ஏற்படுத்தும். ஆகவே பாதிக்கப்பட்ட இந்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் சம்பந்தப்பட்ட சமூகவிரோத சக்திகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு மிகவும் அடிப்படையானது.

யாழ். மாதகல் கடல் பகுதியில் 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு !

யாழ். மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று (12.10.2020) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மாதகல் கடல் பகுதியில் மர்ம பொதிகள் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.

அவ்வாறு மிதந்து வந்த மர்ம பொருட்களை கடற்படையினர் சோதனையிட்ட போது அதில் இருந்து கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவினை கடற் படையினர் மீட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகள் 116 கிலோ எடையுடைய கேரள கஞ்சா என்று காங்கேசன் துறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலங்களாக கேரளாவில் இருந்து கடத்தப்படுகின்ற கஞ்சாவினுடைய அளவு அதிகரித்துள்ள நிலை ஒருபுறமாக இருக்க இவை எங்களுடைய சமூகத்தை எந்தளவு தூரம் படுகுழியில் தள்ளிவிடப்போகின்றன என்பது தொடர்பிலும் நாம் சிந்திக்கவேண்டியவர்களாகவுள்ளோம்.

சீனத்தூதுக்குழுவை அடுத்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் தலைமையிலான குழு இலங்கை வருகின்றது !

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு  எதிர்வரும் 28ஆம் திகதி  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.

சீனாவின் உயர்மட்ட குழுவினர் அண்மையில் இலங்கை வருகை தந்திருந்ததுடன் இலங்கையினுடைய பொருளாதார மேம்பாட்டுக்காக கணிசமான தொகையினை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  , அமெரிக்காவும் பலம்பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அரசியல் அரங்கினை பொறுத்தவரையில் அமெரிக்கா – சீனா இடையேயான பகை பெரிய பேசுபொருளாக மாறிவருகின்ற நிலையில் இலங்கை மீதமான இந்த இரு நாடுகளின் கவனமும் அரசியல் அவதானிகளால் மிக கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.

சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது !

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், 10 துப்பாக்கிகளை அவர்களிடம் இருந்து மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று  திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன்கோயிலுக்கு முன்னால் இயங்கிவரும், லேத் மெசின் கடையினை முற்றுகையிட்டனர். அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்

இதனையடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும் பாகமான துப்பாக்கியின் மரத்திலான பிடியை தயாரித்து வந்த, தச்சு தொழிலாழியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியீடு” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்படும்” என  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகள் பாதுகாப்பு வழிமுறைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நோய் தொற்று காணப்படும் பிரதேசங்களில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் எதிர்வரும் இரண்டு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளேன்.

குறித்த பிரதேசங்களில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடமிருந்து பகிரப்படுமாயின் அது நாட்டை பிளவுபடுத்திவிடும்” – மாகாணசபை தொடர்பில் எச்சரிக்கின்றார் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர !

“அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்” என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் சரத்வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,

“அதிகாரப்பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால், அனைவருக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் நோக்கமாகும். தற்போது மாகாணசபை முறைமை தொடர்பாக ஆராயவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். மாகாண சபை முறைமை இல்லாமல் தற்போது இரண்டு வருடங்களை நாம் கடந்து விட்டோம். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக- பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயவேண்டும்.

இதனால், நாடு பின்நோக்கி நகர்ந்துள்ளதா, அல்லது நன்மை ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயவேண்டும். நிதி விவகாரம் குறித்து பார்க்க வேண்டும். வளர்ந்துவரும் ஒரு நாட்டில் நிதியை அநாவசியமாக பயன்படுத்தக்கூடாது. இதனால்தான் மாகாணசபை முறைமை குறித்து ஆராயவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.