உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கையின் உதவிகளுக்கு முஹம்மத் ஸப்தார் கான் பாராட்டு !

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை கடந்த 15.09.2020 அன்று சந்தித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கோள் காட்டிய கேர்ணல் ஸப்தார், கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கையின் உதவிகளை பாராட்டினார்.

இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் அதிகாரிகள், பாக்கிஸ்தானுக்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தான் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திய பாகிஸ்தான் அரசுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் இராணுவம் அளித்த உதவிகளையும் மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது நினைவு கூர்ந்தார்.

மேலும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

அத்துடன் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன“ – ரஞ்சித் மத்தும பண்டார

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால், 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு 19 பிளஸைக் கொண்டு வருவதற்கே அரசு முயற்சிக்க வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று 20ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டம் இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் தொடக்கம் இதுவரையில் அரசமைப்பு பல்வேறு முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் 17ஆவது திருத்தம் மற்றும் 19ஆவது திருத்தம் மாத்திரமே ஜனநாயகப் பண்புகளுக்கு முதலிடம் கொடுத்து, மக்களின் நலனை மாத்திரம் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட திருத்தங்கள். ஏனையவை அரசியல்வாதிகளின் நலனைக் கருத்தில்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 19 ஆவது திருத்ததில் குறைப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை, 20 ஆவது திருத்த வரைவை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.

20ஆவது திருத்தத்தில் காணப்படும் சர்வாதிகாரப் பண்புகளைக் கொண்ட ஏற்பாடுகள் தொடர்பில் தற்போது விமர்சனங்கள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இந்தத் திருத்தத்தைத் தாம் தயாரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்” – என்றார்.

காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு பணிப்பு !

காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

அத்துடன், சீனோர் நிறுவனத்தினூடாக பயணிகள் போக்குவரத்து படகுகளை உருவாக்கி அவற்றை கொழும்பில் பயணிகளில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ள நிலையில் இவ் வேலைத் திட்டம் தொடர்பிலும் ஆராயுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் செயற்றிட்ட ஆய்வு மற்றும் மீளாய்வுக் கூட்டம் நேற்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு மாநாட்டு மண்பத்தில் நடைபெற்ற நிலையிலேயே சீனோர் அதிகாரிகளிடம் அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்துள்ளார்.

சீனோர் நிறுவனத்தின் படகு கட்டும் செயற்பாடுகள் கடந்த காலத்தில் வினைத் திறனுடன் மேற்கொள்ளப்படாமையினால் அவற்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்ட்டுள்ளதுடன் சீனோர் நிறுவனம் பற்றிய நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழந்த நன்மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, பயணிகள் படகுகளை உருவாக்கி கொழும்பு நகரில் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய ரக படகுகளை உருவாக்கும் உட்கட்டுமானங்களைக் கொண்ட தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவதன் மூலம் சிறிய ரக படகுகளை உருவாக்க முடியுமெனவும் தெவித்தார்.

”புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசுடன் உள்ள கருணா, பிள்ளையான் குற்றமற்றவர்கள் தியாகி திலீபன்தான் இவர்கள் பார்வைக்கு குற்றவாளி” – மாவை சேனாதிராஜா காட்டம்!

”புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா, பிள்ளையான் குற்றமற்றவர்கள் தியாகி திலீபன்தான் இவர்கள் பார்வைக்கு குற்றவாளி” என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘ அமரர் வன்னியசிங்கத்தின் 61ஆவது நினைவு தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (17.09.2020) நடைபெற்றது. அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்

“ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையாலும் சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் அமைப்புகளினாலும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்களே இந்த நாட்டை ஆளுகின்றார்கள்.

அவ்வாறான கட்டமைப்புக்குள்தான் நாம் வாழ வேண்டிய நிலைக்குள் இருக்கின்றோம். எமது மக்களின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபனை நினைவேந்துவதற்கு இந்த அரசு பொலிஸார் ஊடாக நீதிமன்றத் தடையைப் பெற்றுள்ளது. இந்தத் தடையால் கண்ணீர்விட்டு அழுவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அஹிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் நோயினால் இறந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறுகின்றார்.

மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை இவர்கள் இப்படித்தான் கூறுவார்கள். இந்த நாட்டில் முதலில் ஆயுதம் எடுத்துப் போராடிய ஜே.வி.பியில் இருந்தவர்கள் தற்போது அமைச்சரவையில் இருக்கின்றார்கள். இதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறிப்பாக கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் உள்ளனர். அவர்கள் இன்று குற்றமற்றவர்களாம்.

20ஆவது திருத்தத்தின் மூலம் இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் வேளையில் எங்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள்.

நீதிமன்றத் தடைகள் மூலம் நீதியை எதிர்பாக்கும் எங்களுக்கு நீதியும் இல்லை; கண்ணீர் விட்டு அழுவதற்கும் எங்களுக்கு வழியும் இல்லாத நிலையில் வாழுகின்றோம்.

அமரர் வன்னியசிங்கம் ஒற்றுமையாக இருந்து மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். அவர் வழியில் நாமும் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

”20ஆவது அரசியலமைப்பின் அதிகாரங்கள் இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் ” – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரம், இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று இடம்பெற்றது . இதே வேளை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தமட்டில் அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலில் முன்னேறி வந்தவர். நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள இவர் மக்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை கொண்டு செயற்படுபவர்.

இந்நிலையில் எவ்வாறு மக்களின் விருப்பத்தை வெற்றிக் கொள்வது , எந்த சந்தர்ப்பத்தில் மக்கள் நாட்டின் தலைமைத்துவத்தின் மீது வெறுப்புக் கொள்வார்கள் என்ற விடயங்கள் தொடர்பில் நன்கு அறிந்துக் கொண்டுள்ளவர்.

அதனால், இவருக்கு இத்தகைய அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றால் , அதில் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படுத்தாவிட்டாலும் , ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் கையில் கிடைக்கப் பெற்றால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கூறமுடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

”பல்கலைகழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக புலனாய்வுப்பிரிவினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் ” – கேஹலிய ரம்புக்வெல்ல

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்தவருடம் யாழ் பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக நிர்வாணமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதனை செய்ய தவறுகின்ற மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென சிரேஷ்ட மாணவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

”ஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு” – ஜீவன் தொண்டமான்

ஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு எனவும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்  என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான சந்திப்பு இன்று ( 17.09.2020 ) ஹட்டன் நகரசபையில் நடைபெற்றது.

இதன்போது ஹட்டன்- டிக்கோயா நகரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கானதீர்வு திட்டம் ஆகியன தொடர்பில்   விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் கூறியதாவது, ”  ஹட்டன் நகரில் குப்பைப்பிரச்சினையென்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு தற்காலிக தீர்வு கிடைத்திருந்தாலும் நிரந்தர தீர்வே எமது எதிர்ப்பார்ப்பாகும். அட்டன் பிளான்டேசனுடன் கலந்துரையாடினோம். குப்பைகளை கொட்டுவதற்கு 2 ஏக்கர் வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

உரிய இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு கழிவு முகாமைத்துவம் செய்யப்படும். உரம் தயாரிப்புடம் இடம்பெறும்.அதன்மூலமும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும்.

தன்னிச்சையான முறையில் முடிவுகளை எடுப்பதைவிட மக்களுடனும், நகரத்திலுள்ள வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி திட்டங்களை வகுப்பதே சிறப்பாக இருக்கும். அப்போதுதான் உங்களுக்கும் திருப்தி, எங்களுக்கும் திருப்தி.

ஹட்டன் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது, வீதியை பெரிதாக்கினால்கூட அது தீராது, எனவே, உரிய ஏற்பாடுகளை செய்தபின்னர் பிரிதொரு இடத்துக்கு பஸ்தரிப்பிடத்தையும், டிப்போவையும் கொண்டுசெல்லவேண்டும். இதன்மூலம் வர்த்தகம் பாதிக்கப்படும் என சிலர் நினைக்கலாம் அவ்வாறு இல்லை,எல்லாதவி ஏற்பாடுகளையும் செய்த பின்னரே திட்டம் செயற்படுத்தப்படும்.

ஹட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அட்டனிலிருந்து, சிவனொலிபாதமலைவரை சிறந்த சுற்றுலா வாய்ப்பு இருக்கின்றது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, எமது இளைஞர், யுவதிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயற்படுத்தப்படும். கடந்தகாலங்களில் தற்காலிக அபிவிருத்தி பற்றியே சிந்திக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்ப்பார்ப்பது பொருளாதார அபிவிருத்தி. அது முறையாக நடக்கும்.” -என்றார்.

இலங்கையில் சிறுவர் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையில் மாற்றம் !

சிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதேநேரம் வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச வயதை 15 முதல் 16 வயது வரை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கிடையில், கடவுச்சீட்டு மற்றும் அரசாங்க ஆவணங்களை அச்சிட அரசு அச்சிடும் துறைக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், அத்தகைய ஆவணங்களை அச்சிடுவதற்கான உபகரணங்கள் வாங்குவதை மதிப்பீடு செய்யும் பணியை தேசிய திட்டமிடல் துறைக்கு ஒப்படைக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

”இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும்” –

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடாப் பிரதமர் நீக்க வேண்டும் எனவும் தமிழ் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறான நடவடிக்கை இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்காக நீதியைக் கோருவதற்கு உதவும் என கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவைச் சேர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் குமணண் குணரட்ணம் செய்தியாளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது மனிதர்கள் அனைவரினதும் ஆழ்ந்த கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறைமையுள்ள நாடு ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடா உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். வர்த்தக பரிமாற்றங்களுக்காக அதை அகற்ற முடியும் என்றால் ஏன் சர்வதேச குற்றங்களுக்காக அதை நீக்க முடியாது?

விடுபாட்டுரிமையை நீக்கும் சட்டமூலம் தமிழர்களுக்கு மாத்திரமல்ல சர்வதேச அளவில் காணாமல்போகச் செய்யப்பட்டமையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவியாக அமையும்” – என்றார்.

”அதிகாரத்தின் மூன்று தூண்களும் ஒன்றை மற்றொன்று பலவீனப்படுத்த முயலாத முறையை நாங்கள் உருவாக்க முயல்கின்றோம் ” – சஜித் பிரேமதாச

அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறைக்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

“ஆரம்பத்தில் நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உறுதியாக ஆதரித்தவன் எனினும் 2014 முதல் 2015 வரை இடம்பெற்ற விடயங்கள் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதி முறையை விரும்பத் தொடங்கினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தின் மூன்று தூண்களும் ஒன்றை மற்றொன்று பலவீனப்படுத்த முயலாத முறையை நாங்கள் உருவாக்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படும் போது காங்கிரஸ்,செனெட், ஜனாதிபதி ஆகியோர் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கான சிறந்த உதாரணம் அமெரிக்கா எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.