உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“பசில் ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” – டிலான் பெரேரா

“பசில் ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்”  என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(03.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள டிலான் பெரேரா ,

“பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிப்பதை போன்றே வெளியில் உள்ளவர்களும் விருப்பத்துடன் உள்ளனர். ஆனால் அதனை அவரே தீர்மானிக்க வேண்டும். எனினும் அவர் பாராளுமன்றத்திற்கு வந்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களில் கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயலணியில் சுயேற்சையாக முன்னின்று தற்போது செயற்பட்டு வருகின்றார். நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்த்திட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை பிரச்சினை காணப்பட்டபோது, அவருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது கோட்டாபய ராஜபக்ஷவை பூதாகரமாக காட்டினார்கள் தற்போது பசில் ராஜபக்ஷவை பூதாகரமாக காட்ட முயல்கின்றார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 09 வயது சிறுமிக்கு கொரோனா !

யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள்கள் இருவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.அவர்களில், ஒன்பது வயதுச் சிறுமிக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாய் மற்றும் இன்னொரு பிள்ளைக்கு முதல் பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் இரண்டு வயது மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” – அநுர குமார திஸாநாயக்க

“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என ஜே.பி.வி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில்,  இன்று (03.11.2020)  இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போது கொரோனா, பொதுவான ஒரு எதிரியாக மாற்றமடைந்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தும்  காணப்பட்டால், நாடே பெரிதும் பாதிக்கப்படும்.

இன்று இராணுவத்தினர், சுகாதார அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்துதான் நிலைமையை கட்டுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். எனினும், இந்த கட்டமைப்பில் ஏதேனும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டால், அது பாரதூரமாக அமைந்துவிடும். இதனை அரசாங்கம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

இது தேசிய ரீதியிலான பிரச்சினை. இதனை முறியடிக்க தேசிய ரீதியிலான பொறிமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம். இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை கடந்து செயற்பட வேண்டும். அரசாங்கம் இதற்குத் தயார் என்றால், நாமும் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு !

“கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (03.11.2020) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கவிதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியர்களும் தாதியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுகின்றனர். இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என மேலும் குறிப்பிட்ட அவர் , வடக்கு, கிழக்கில் கொவிட் -19 சிகிச்சை வைத்திய நிலையங்களை உருவாக்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. நிதி பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கில் கொரோனா நோயாளர்களை கையாள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 12ஆயிரம் நோயாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த வைத்தியசாலை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக இங்கு சிகிச்சைக்கு செல்லும் மக்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள பருத்தித்துறை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. இங்கு 12 ஆயிரம் நோயாளர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு மாற்று வைத்திய முறைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் ”எனவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாத்தொற்றால் இறக்கும் முஸ்லீம்களின் உடலை எரிப்பதை சுயநல அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள்” – சஜித்பிரேமதாஸவிற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி  பதிலடி !

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று(03.11.2020) பாராளுமன்றம் கூடியிருந்தது. இன்றைய கலந்துரையாடல்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போகும்  முஸ்லீம்களின் உடலை எரிப்பது தொடர்பான விவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ “கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களை தமது மத சம்பிரதாயங்களின் பிரகாரம் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை கொரோனா விடயத்திலும் காண்பிப்பதாகவும்”  முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது பதிலை நீதி அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.

இதன்போது பதில் கூறிய நீதி அமைச்சர் அலி சப்ரி,

கொவிட் -19 என்பது மிகவும் அச்சுறுத்தலான நோயாகும். இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் இது அச்சுறுத்தலான நோயாகவே உள்ளது.

நாம் அனைவரும் இந்த நோய்க்கு முகம் கொடுத்து வருகின்றோம். கொவிட் -19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் முஸ்லிம் மக்களிடையே சில முரண்பாடுகள் உள்ளது என்பதையும் நாம் நன்கறிவோம். ஆனால் இதனை அரசியலாக்குவது தகுதியான செயற்பாடாக அமையாது.

முஸ்லிம் மக்களின் வேண்டுகோள் குறித்து வைத்தியர்களிடம் மீண்டும் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தோம். ஆறுமாத காலத்திற்கு முன்னரே நாம் இந்த வேண்டுகோளை விடுத்தோம்.

எனினும் விஞ்ஞான அல்லது மருத்துவ ரீதியில் இது தாக்கத்தை செலுத்தலாம் என வைத்தியர்களிடம் அச்சம் நிலவியது. அது  என்னவென்றால் தகனம் செய்வதில் முஸ்லிம் சமூகம் கேட்பதை போல நடவடிக்கை எடுத்தால் அது வைரஸ் பரவலுக்கு ஏதுவாக அமையலாம் என்ற அச்சம் நிலவியது.

எனினும் ஆறுமாத காலத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக வைத்தியர்கள் எமக்கு கூறினர். இப்போது மீண்டும் நாம் இது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

எனவே இதனை அரசியல் சுயநலன்களுக்காக கையாள வேண்டாம். மனிதாபிமான ரீதியில் இதனை கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விவாதங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்குமு் போது “கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் எனவும், தான் உயிரிழந்தால்கூட தன்னையும் எரிக்கும் நிலை ஏற்படும் எனவும், ஆகவே இந்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசிலனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

“இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்து அரசாங்கம் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுகிறது” – அரசின் மீது சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.

இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்து, அரசாங்கம் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுவதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாம் கடந்த ஜனவரி மாதமே எச்சரித்திருந்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறும் கோரினோம். ஆனால், அரசாங்கம் இவை அனைத்தையும் நிராகரித்தன.

இதனால், இன்று நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது கொரோனாவை வைத்து நாட்டில் பிரிவினைவாதத்தையே அரசாங்கம் தூண்டுகிறது. இஸ்லாம் மக்களை இலக்கு வைத்தே தற்போது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனாவை பரப்புவதே முஸ்லிம் மக்கள்தான் என ஒரு பிரசாரம் கூறப்பட்டது. அத்தோடு அவர்களின் மார்க்கத்துக்கு முரணாக, இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இது அடிப்படைவாத நடவடிக்கையாகும். உலகில் எந்தவொரு நாடும் இவ்வாறு சடலங்களை எரிக்கவில்லை.

இனவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் பரப்புவதில் தான் இந்த அரசாங்கம் தீவிரமாக உள்ளது. மார்ச் மாதத்திலிருந்து நாட்டுக்கு ஒரு வென்டிலேட்டரைக்கூட அரசாங்கம் வாங்கவில்லை. தரமான பி.சி.ஆர். இயந்திரங்களை கொள்வனவு செய்யவில்லை.

கொரோனா தொற்றாளர்களுக்கு படுக்கைகள் இல்லை. ஐ.சி.யு. படுக்கைகள் இல்லை. இவற்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் 20 ஆவது திருத்தத்தை மட்டும் உடனடியாக கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்கள். அரசாங்கத்தின் கொரோனா ஒழிப்பு செய்பாடு இன்று தோல்வியடைந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனாவிலிருந்து விடுபட கிளிநொச்சியில் விசேட யாகம் !

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் நாளை (12.11.2020) விசேட யாகம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு இந்து அலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசேட யாகம் நாளை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணியளவில் பசுமை பூங்கா அருகில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட  செயலகமும், வன்னி பிராந்திய  சைவகுருமார் ஒன்றியமும் இணைந்து குறித்த யாக வழிபாட்டினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்போது நாடு கொரோனா தொற்றிலிருந்த விடுபடும் வகையில் விசேட யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலையில் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை !

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இவ்வுத்தரவை நேற்று திங்கட்கிழமை (02.10.2020) பிறப்பித்துள்ளார்.

2015ம் ஆண்டு 4 மாதம் 14ம் திகதி மூதூர் பிரதேசத்தில் தனது மனைவிக்கு போதை ஊட்டிய நிலையில் கணவர் உட்பட இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக வழக்கு இடம்பெற்று வந்தது.

இவ்வழக்கு தொடர்பில் 2019ம் ஆண்டு 4ஆம் மாதம் 30ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் ஆகிய கணவன் கூட தனது மனைவியின் விருப்பம் இல்லாது பலாத்காரமாக உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் என சட்டம் தெரிவிக்கின்ற நிலையில் தனது மனைவியை போதையை ஊட்டி சக நண்பர்களுக்கு கூட்டு வன்புணர்வுக்கு உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இக்குற்றச்சாட்டுக்காக மூதூர்- சிராஜியா நகர் பகுதியைச் சேர்ந்த கணவரான நஜீர் நாபிர் (28வயது) என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மனைவிக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்குமாறும் அரச செலவாக 5,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும், செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாத கால கடூழிய சிறை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இதேவேளை மற்றைய எதிரியான மூதூர் சின்ன நகர் பகுதியைச் சேர்ந்த பைசர் பாசிம் (23 வயது) என்ற குறித்த எதிரிக்கு சம்பவம் நடைபெறும் போது 18 வயது 24 நாட்கள் எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து இவருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில்,2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறும் 5,000 ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும், செலுத்தத் தவறினால் ஒரு மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

அத்துடன் மூன்றாம் எதிரியான மூதூர் ஆலிம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் தாரிக் (37 வயது) பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடன் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில்,15 வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் 10 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

“கொரோவை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சர் மோசமான மந்திரவாதி மருத்துவரின் ஆலோசனைக்கு அமைவாக  செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்” – மங்கள சமரவீர கண்டனம் !

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பலர் இது தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின்  செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது“ என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

தனது  மங்கள சமரவீர தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. ஆனால், சுகாதார அமைச்சர் மோசமான ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக  செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

விஞ்ஞானத்தை நம்புகின்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டை நகைப்பிற்குரியதாக மாற்றும் வகையிலான தனது அமைச்சர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை எனது நம்பிக்கையின் ஒரு பகுதி” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக பலர் இது தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.

இதன் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி,  “இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை  சரியானதே என கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் , ஒரு பௌத்தனாக பௌத்த சடங்குகளையும் போதனைகளையும் தான் பின்பற்றுவேன் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.

அதன்படி கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த களுகங்கையில் ஒரு பானை தண்ணீரை ஊற்றியமை எனது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.