உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட காணொளி இலங்கையில் எடுக்கப்பட்டதல்ல” – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் காணப்படும் வீடியோ இலங்கையில் யுத்தம் இடம்பெற்றவேளை எடுக்கப்பட்டதல்ல உலகின் பல நாடுகளில் எடுக்கப்பட்டது” என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் தொடர்பான காணொளி ஒன்றினைமனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தன்னுடைய  டுவிட்டர் கணக்கில் வெளியிட்டிருந்ததது . இது தொடர்பாக கூறும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறிப்பிட்ட வீடியோவில் காணப்படும் விடயங்கள் இலங்கையில் இடம்பெற்றவையல்ல வெவ்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டவை என்பதை  இலங்கை ஏற்கனவே நிரூபித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் அரசியல் நோக்கங்களை கொண்டவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் முன்வைக்கும் கேள்விகள் உள்நோக்கங்களை கொண்டவை என்பதால் இராஜாதந்திர அளவில் பதிலளிக்கவேண்டிய கேள்விகளை இலங்கை தெரிவு செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

“யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத்தூபி முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியாகவே அமைக்கப்படும்” – மாணவர் ஒன்றியம் உறுதி !

“யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத்தூபி முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியாகவே அமைக்கப்படும்” என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது.

அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலேயே தூபி மீளக் கட்டப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைவிடுத்து, ‘அமைதித் தூபி’ எனும் பெயரிலோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக் கூறி பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவில் கடந்த மாதம் எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டமையுடன், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த, எதிர்ப்பலையைத் தொடர்ந்து ஜனவரி 11ஆம் திகதி காலை தூபியை மீள அமைப்பதற்கு என துணைவேந்தர் தலைமையில் மாணவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் பின்னர், தூபி கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், தூபி விவகாரத்தில் நடைபெற்ற விடயங்களை விலாவரியாகக் குறிப்பிட்டு துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிக்கை சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அமைக்கப்படவுள்ள தூபியை ‘அமைதித் தூபி’ எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதி அளித்துள்ள நிலையில்,மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் மாணவர் ஒன்றியத்திடம் வினவியபோதே “யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத்தூபி முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியாகவே அமைக்கப்படும்” என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது.

 

“மட்டக்களப்பில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் மக்களை திரட்டி போராட வேண்டியேற்படும்” – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்கள குடும்பங்களை குடியேற்ற முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றுதிரட்டி அதற்கு எதிராக போராடவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பிழையான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது.மாவட்ட அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொல்பொருள் செயற்பாடுகள் சந்திரிகா ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும் மகிந்த ஆட்சிக்காலத்தில் அது கடுமையாக முனைப்பு பெற்றதாகவும் நல்லாட்சியிலும் அது முன்னெடுக்கப்பட்ட போது தங்களின் எதிர்ப்பு காரணமாக அது நிறுத்தப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சந்திரகாந்தனின் தொகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த சட்ட விரோத குடியேற்றத்தினை தடுக்க அவர் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் போராட்டத்தில் பங்குபெற்ற தவராசா கலையரசன் உள்ளிட்ட 32 பேருக்கு தடை !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு  நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

IMG 20210202 162636 1

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து திருக்கோவில் காவற்தறை தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம்,  திருக்கோவில் பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் சிவில் அமைப்பினர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்ட  32 பேருக்கு தடையுத்தரவு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

“தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. ” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. ” என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் -ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்று அமைச்சர்கள் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வையும், பல்வேறு இன்னல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியையும் வழங்குவது ஆட்சியாளர்களின் கடமையாகும். அப்போதுதான் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின் மனதை நாம் வென்றிருந்தோம். அதேவேளை, சர்வதேச சமூகத்தின் மனதையும் வென்று காட்டியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவற்றை ஏன் சாதிக்க முடியாமல் உள்ளது என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து இன முறுகலை மேலும் வலுவடையைச் செய்யும் விதத்திலும், சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் அரசிலுள்ள சிலர் கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதியும் பிரதமரும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் திறம்பட முன்னெடுக்க முடியாது.

இந்த அரசில் நாம் முக்கிய பங்காளிக் கட்சியாக இருக்கின்றோம். ஆனால், எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டுவதில் அரசிலுள்ள மேற்படி உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். அவர்கள் எமக்கும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் குறியாக உள்ளனர். ஆனால், நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உரிய கெளரவத்தை வழங்கி வருகின்றோம்.

நாடு இன்று நாலா புறங்களிலிருந்தும் நெருக்குவாரங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயார். ஆனால், நாட்டின் முக்கிய இடங்களை சர்வதேச நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நாம் சம்மதிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்ய முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் ” – அஜித் ரோஹண

அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக இன்று (02.02.2021) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவல்துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் தமது உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி – ஏ9 வீதியில் நேற்று 23 பேர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அவர், அவர்களால் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோருபவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.

 

இதே நேரம் அரசினுடைய தமிழர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிஜலான நீண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தமிழ்மக்கள் தயாராகி வருகின்ற  நிலையில் பொலிஸ் ஊடகப்பபேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை நோக்க்தக்கது.

“இலங்கையில் இறுதிப்போரில் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷக்களே பொறுப்புடையவர்கள் ” – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

“இலங்கையில் இறுதிப்போரில் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷக்களே பொறுப்புடையவர்கள் ” என உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் , இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 93 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திறந்த காயங்கள் மற்றும் பெருகி வரும் பேராபத்துக்கள் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுக்கும் இலங்கை’ என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வழங்கும் விதமாக ஐ.நாவின் தீர்மானம் அமைய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வகையிலும், தற்போது நடைபெற்று வரும் துஷ்பிரயோகங்களைக் கண்டிக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கை அரசின் நீதி மீதான தாக்குதல்கள் இன்றும் எதிர்காலத்திலும் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும் அபாயத்தைக் காட்டுகின்றது.

இலங்கையில் இறுதிப் போரின்போது, பொதுமக்களைப் பாதுகாக்கும் ஐ.நாவின் நெறிமுறை சார்ந்த தோல்வி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உடைய அதிகாரிகளைப் பதவிகளுக்கு நியமித்ததோடு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றை மறுத்து வருகின்றார்.

இலங்கையின் ஊடகங்கள் சுய தணிக்கையோடு செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மீது இம்முறை கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றத் தவறுவது, உலகெங்கிலும் உள்ள அநியாயக்காரர்களுக்கு மோசமான செய்திகயைக் கொண்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழரசுக்கட்சியின் மாகாணசபை முதலைமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜா இல்லை” – தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இது வரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தின் போது மாகாணசபை தேர்தலில் அக்கட்சியின் மாகாணசபை முதல்வர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா களமிறக்கப்படவுள்ளதாக ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது பற்றி கூறும்போதே ப.சத்தியலிங்கம்இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து தெரிவித்த போது, வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டுமென்றார். சீ.வீ.கே.சிவஞானம் அதை ஆதரித்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென நேற்று கருத்துரைக்கும் போது கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள்தான் இப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்தின, தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

நாங்கள் பல விடயங்களை கலந்துரையாடினோம், மாகாணசபையை குறித்தும் கலந்துரையாடினோம், ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி தீர்மானங்கள் எடுக்கவில்லை.

அந்த முடிவை அரசியல்குழுவிலும் எடுப்பதில்லை, அதை மத்தியகுழுவிலேயே எடுக்க வேண்டும், இந்தக் கூட்டத்தில் சில வேளை பல பின்னடைவுகளை கண்ட கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சுமந்திரன் மீது அதிக கோபத்தை அல்லது, கடுமையான கட்சி நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கலாம், அதனைத் தனிக்கவே சிறிதரன் மிகவும் சமயோசிதமாக இந்தக் கருத்தை கூறி கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை சாந்தப்படுத்தினார், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சுமந்திரன் உட்பட கட்சியில் உள்ள பலர் பொது வேட்பாளரையே விரும்புகிறோம்.

கட்சித் தலைவர் மாவை சென்ற முறையும் போட்டியிட விருப்பப் பட்டவர் அதனை அப்போது மிக லாபகமாக தடுத்து முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை கட்சிக்குள் அழைத்து வருவதில் சிறிதரனின் பங்கு மிகப் பெரியது, இதனை கட்சித் தலைவர் மாவையும் புரிந்து செயற்படுவார்.

ஒட்டு மொத்தத்தில் சுமந்திரன் மீதான விமர்சனத்தை தடுப்பதற்கு சிறிதரன் மேற்கொண்ட மிகச் சிறந்த முயற்சி, அதை யாரும் முடிந்த முடிவாக கருதுவது தவறானது, எமக்குக் கிடைத்த மிகச் சிறந்த சொத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், அவரின் கருத்து இந்த விடயத்தில் பலராலும் எதிர்பார்க்கப் படுகிறது, நாம் கூடி நல்லதொரு முடிவினை எடுப்போம்.

அத்துடன் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தமிழ் அரசு கட்சி மட்டும் தீர்மானிப்பதில்லை, அது குறித்து, மற்றைய இரண்டு கட்சிகளுடனும் பேசிய பின்னரே தீர்மானிப்பது வழங்கம் என்றார்.

“எங்கள் தமிழ் மொழிக்கும், மதத்துக்கும், முக்கியத்துவம் கொடுக்காத  இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது” – மனோ கணேசன்

“எங்கள் தமிழ் மொழிக்கும், மதத்துக்கும், முக்கியத்துவம் கொடுக்காத  இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில் இது தொடர்பாகவும் இலங்கையின் சுதந்திரதினம் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கம் போதே மணோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதமாம். இறுமாப்பாகச் சொல்கின்றார்கள். தமிழில் பாடினால் மட்டும் அதனால், தமிழ் பேசும் இலங்கையர் வீடுகளில் தேனும், பாலும் ஓட போவதில்லை. இதன்மூலம் குடி எழும்பியும் விடாது. குடி முழுகியும் விடாது. ஆனால், நாட்டை ஒன்றுப்படுத்த கடவுள் தந்த, ‘ஒரே மெட்டு, ஒரே அர்த்தம்’ கொண்ட இரண்டு தேசிய கீதங்களையும் கூட ஒருசேர பாட முடியாத அளவில் இவர்கள் இனவாதத்தில் ஊறிப் போய் உள்ளார்கள்.

மேலை நாடுகளிலும் இனவாதம், நிறவாதம் இருந்தாலும், வெள்ளை இனவாதிகளுக்கு எதிராக, கறுப்பு அமெரிக்கர்களுக்கு ஆதரவாக, ‘கறுப்பு உயிர் கனதியானது’ என்று சொல்லி போராட, கோடிக்கணக்கான வெள்ளையர்களே அந்நாடுகளில் உள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகளில் இனவாதம் தோலின் நிறத்தில் உள்ளது. இலங்கையில் இங்கே அது ஆன்மாவில் ஊறியுள்ளது.

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையில், நான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரிடம் கடைசி நிமிட அழைப்பாக, “இலங்கைத் தாயைப் போற்றும், தமிழிலான தேசிய கீதத்தையும் பாடி, தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி, நாம் முன்னோக்கிச் செல்வோம். அதன்மூலம், நாமும் இந்த நாட்டுக்கு உடைமையானவர்கள் என்ற உணர்வை தமிழ் பேசும் சுமார் ஐந்து மில்லியன் இலங்கையர்களின் மனங்களில் ஏற்படுத்துவோம் என்று நேற்று கூறியிருந்தேன்.

ஆனால், இவர்களைத் திருத்த முடியவில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வளவு அடி வாங்கினாலும், திருந்தா ஜன்மங்கள். பல வர்ண பூக்கள் நிறைந்த பூங்கா எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை உணர தெரியாத பிற்போக்குவாதிகள். உலகமே அந்தந்த நாடுகளில், பல்லின, பன்மத, பன்மொழி அடங்கிய பன்மைதன்மைகளை கொண்டாடி மகிழும், இவ்வேளையில், இவர்கள் நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றார்கள்.

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என இவர்களுக்கு உணர்த்துவோம்.

65 வருடங்களுக்குப் பிறகு, கடந்த எமது நல்லாட்சியில், நாம் முன்னின்று போராடி பெற்ற, தமிழ்த் தேசிய கீதம் பாடும் உரிமையை, இடைநிறுத்தி விட்டு, இவர்கள் கொண்டாடும் சுதந்திர நிகழ்வுக்கு, எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை  நாம் ஏற்கமாட்டோம். எமது இருப்பிடங்களில் நாம் எமது சுதந்திர உணர்வைக் கொண்டாடுவோம். தமிழ்மொழிக்கு உரிய மரியாதையை தராத இலங்கை முழுமையான இலங்கை நாடல்ல.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய அரசுக்குள்ளே அடைக்கலம் புகுந்து, இந்த இனவாத அரசுக்கு ஒரு ஏற்புடைமை ஏற்படுத்தி கொடுக்க முயலும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என தெரிவித்துள்ளார்.

“நிரந்தர நியமனம் கிடைக்காது விடின் போராட்டங்கள் தொடரும்” – மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் தொண்டராசிரியர்கள் !

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றையதினம்(01.02.2021) போராட்டம் ஒன்றினை இன்றையதினம்  முன்னெடுத்துள்ளனர்.

“எமக்கான தீர்வினை தாருங்கள், நிரந்தர நியமனம் எப்போது ..? ” என பல பதாகைகளை தாங்கிய வண்ணம் தொண்டராசிரியர்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தொண்டராசிரியர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்ட போது ,

“யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான தற்போதைய காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், சேவை அடிப்படையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

ஆகையினால் எமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக நாம் தொடர்ச்சியான போராட்டங்களை நாம்முன்னெடுத்து வந்திருந்தோம். ஆயினும் எங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்காத நிலையில் மீண்டும் நாம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆகவே வடக்கில் நீண்ட காலமாக தொண்டராசிரியராக இருக்கின்ற எங்களுக்கான நிரந்தர நியமனத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும் என்று கோரி மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று மீண்டும் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.

இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் நாம் கையளித்து இருக்கின்றோம்.

IMG 20210201 WA0029

ஆகையினால் எமது கோரிக்கைகளுக்கமைய நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் உரிய பதில் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் எமக்கான நியமனம் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காத இடத்தில் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கிறோம்.

ஆகவே நமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாம் இந்த இடத்திலே தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். எனவே நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போராடி வருகின்ற எமக்கான தீர்வைப் பெற்றுத்தரசம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம் என போராட்டத்தில் கலந்து ​கொண்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.