உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்”- நாளைய கர்த்தாலுக்கு யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகம் முழுமையான ஆதரவு !

“வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்” என யாழ் முஸ்லிம் இளைஞர் கழக தலைவர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் ​மேலும் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய ஒன்றாகும். இச் செயற்பாட்டிற்கு யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகமாக நாம் எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதர உறவுகளின் மனங்களில் எவ்வளவு கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் அறிவோம். அவ் உறவுகளின் துயரத்தில் ‘மக்கள்’ என்ற நோக்கில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றோம்

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் இணைந்து வாழ வேண்டும் என்பது நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் விடயமாகும். இவ் விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு தூரம் எமது முன்னகர்வுகளை எடுத்துவைத்திருக்கின்றோம் என்பது பற்றி நாம் அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே இரு சமூகங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பாக அமையும் என்பது நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் உண்மையாகும். இதுவே எம்மை பிற சக்திகளின் சிறுபான்மை (தமிழ் முஸ்லிம்) மக்களுக்கு எதிரான விடயங்களில் இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக அனைத்து வழிகளிலும் ஒன்றினைய முயற்சிப்போம் என்று இத்தால் பகிரங்க அழைப்பு விடுவதுடன், நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளைய தினம் (11.01.2021) இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாமும் எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்பதை இத்தால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

‘வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நினைவு கூர்வது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” – அமைச்சர் சரத் வீரசேகர ட்வீட் !

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் பிரத்யேக சொத்து அல்ல. இது சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்வது மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது என்ற போர்வையில் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் முயற்சி !

முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை சந்தித்தன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நினைவுத் தூபி அகற்றப்பட்ட விடயம் சம்பந்தமாக உண்மையில் தனக்கு மிகப்பெரும் அழுத்தம் இருந்ததாகவும், அதற்கான நிரூபம் தன்னிடம் இருப்பதாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.

ஆகவே நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுப்பதாகவும், அதற்கு எங்களுடைய மற்றவர்களும் ஆதரவு தரவேண்டும் என்றும், இது தொடர்பில் மாணவர்களிடமும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அவர் மிகவும் தெளிவான நிலையிலேயே இருக்கின்றார். அத்தோடு தான் அதனை தானாக ஆரம்பிப்பதாகவும் கூறியிருந்தார்” என தெரிவித்திருந்தார்.

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன்” – முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு தொடர்பாக அங்கஜன் இராமநாதன் கண்டனம் !

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக ால்வேறுபட்ட தரப்பினரும் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே அங்கஜன் இராமநாதன் குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய  அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

“நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன் என கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து கூறியிருந்தேன். அந்தவகையில் தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது. ஓர் சமூகத்தின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் அவ் மக்கள் மனங்களில் உள்ள வடுக்களை அழித்துவிட முடியாது.

ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் நினைவாக அமைக்கப்படும் நினைவுத் தூபியை உடைப்பதென்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும். அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறிவிட்டது. எந்தவொரு செயற்பாட்டிற்கும் அனுமதி முக்கியம். கடந்த கால அரசியல் தலைமைகள் அன்றே நினைவுத் தூபிக்கான உரிய அனுமதியைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். அன்று விட்ட தவறு மற்றும் அசண்டையீனம் தான் இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது.

இந்த நினைவுச் சின்னம் தனி ஒரு மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சொந்தமானது அல்ல. இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்கள், போர் வீரர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றே இந்த நினைவுத் தூபி. இந்த உண்மையை சிங்கள மாணவர்களுக்கு எடுத்துரைத்திருந்தால் அவர்கள் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத் தூபியை அழிக்க வேண்டும் என சில தரப்புக்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தூபியை இடித்த பின்னரே எம்மால் அறிய முடிகிறது. இது தொடர்பில் எமக்கு முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நாம் இவ்வாறான விபரீதம் ஏற்பட முன்னதாகவே உரிய தரப்புக்களுடன் பேசி அதனை சுமூகமாக தீர்த்து வைத்திருக்க முடியும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற இனங்களுக்கிடையே குரோதங்களைத் தோற்றுவிக்கும் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஓர் விடயம் இன்று வன்முறை வரை வளர்ந்துவிட்டது. என மேலும் அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பிரித்தானிய மனித உரிமைகள் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் கண்டனம் !

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரும் அதற்கான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “ யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக பிரித்தானிய மனித உரிமைகள் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ள தாரிக் அஹமட் பிரபு இலங்கையின் மோதலில் துன்பகரமான விதத்தில் பலியானவர்களை நாங்கள் அனைவரும் நினைவில்வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது கடந்தகாலத்தின் காயங்களை ஆற்றுவதுடன் நல்லிணக்கத்திற்கு உதவும் எனவும் அமைச்சர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

“யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. ” – இரா.சம்பந்தன் காட்டம் !

“யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. ” என முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு தொடர்பாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் ஆகியோரின் நினைவாகவே யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. இதன் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம், இந்தத் தூபியை இரவோடிரவாக இடித்தழித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே நினைவுத்தூபியை இடித்தோம் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். ஆனால், நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது பல்கலைக்கழக துணைவேந்தர்தான் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். அதேவேளை,  நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அப்படியெனில் இந்த நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?

ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும். உரிய தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்.

இந்தச் செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தற்போதைய நிலைமையில் தேவையற்ற செயல். ஒரு குழப்பத்தை – ஒரு புதிய பிரச்சினையைத் திட்டமிட்டு உருவாக்குகின்ற செயல்.

தமிழர்களின் அடையாளச் சின்னங்களில் நினைவுத் தூபிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை செயற்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியா எங்களை மாகாணசபை தேர்தலை நடாத்துமாமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது” – அமைச்சர் சரத்வீரசேகர

“இந்தியா எங்களை மாகாணசபை தேர்தலை  நடாத்துமாமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது.இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது”  எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்தியா எங்கள் நட்பு நாடு என்பது உண்மை . இந்தியா சர்வதேச அரங்கில் எந்த விடயத்தையும் எழுப்பலாம் ஆனால் அவர்கள் எங்களை அதனை செய்யுமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது என சரத்வீரசேகர  குறிப்பிடடுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன 13வது திருத்தத்தை எங்கள் மீது திணித்துள்ளார்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறோ இந்தியா எங்களிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது . அவர்கள் யோசனைகளை முன்வைக்கலாம் ஆனால் நாங்களே தீர்மானிப்போம் அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை. அரசாங்கம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை காத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளது. புதிய அமைப்பு தேர்தல் முறைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும். இதன் காரணமாக மாகாணசபை முறை மாற்றப்படவேண்டும்” எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

“யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது” – ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

“யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது” என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட விவகாரத்தைத் தமிழ்க் கட்சியினர் தமது சுயலாப அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் எவரும் துணைபோகக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

பல்கலைக்கழகம் ஒரு கல்விக்கூடம். சகல இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஒற்றுமையாகக் கற்கும் இடம். அங்கு அரசியலுக்கு இடமில்லை.போர்க்காலச் சின்னங்கள் பல்கலைக்கழகத்தில் எதற்காக நிறுவப்பட வேண்டும். யாழ். பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த அரசின் காலத்திலும் அந்த எண்ணத்தில் சில மாணவர்கள் அங்கு செயற்பட்டார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் வைத்துப் விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்தினார்கள்.

அந்தக் காலம் மாதிரி இப்போதைய காலத்தை மாணவர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் எடைபோடுவது தவறானதாகும்.பல்கலைக்கழத்தில் எது இருக்கவேண்டும்? எது இருக்கக்கூடாது? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு உண்டு. இதை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. அந்தவகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த போர்க்காலச் சின்னமான நினைவுத்தூபியை துணைவேந்தர் அகற்றியுள்ளார்”  என குறிப்பிட்டார்

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிக்கப்பட்டதன் எதிரொலி – இரண்டாவது நாளாகவும் தொடரும் மாணவர் போராட்டம் – பாடசாலை மாணவனும் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் இணைவு !

நேற்று முன்தினம் யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருதனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதைய கொரோனா அச்ச நிலை காரனமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் அறிவித்தல் விடுத்திருந்தது.

இதனால் நேற்று பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20210110 091824

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தில், யாழ்.இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவத்தில் சுரேன்ராகவனின் தலையீடு ? – பாராளுமன்ற உறுப்பினர் சந்தேகம் !

“யாழ்ப்பாணபல்கலைக்கழக பல்கலைக்கழக வளாகத்தில்  அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவத்தில் சுரேன்ராகவனின் தலையீடு இருக்கலாம்” என கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(10.01.2021) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில்  அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைவாக இராணுவத்தின் உதவியுடன் பல்கலைக்கழக துனைவேந்தரின் ஆலோசனைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது.

அரச திணைக்களமாக இருக்கலாம்,அரச நிறுவனங்களின் பணிப்பாளர்களாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் ஒரு ஏஜேன்டுகளாக இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற நிகழ்வு என்பது  ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக குறித்த சம்பவத்தை பார்க்க முடியும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இலங்கையில் தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் இனப் படுகொலையால் 2009 ஆம் ஆண்டு  இடம் பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள்,பொது மக்கள் ஆகியோரை நினைவு கூறுவதற்கான ஒரு நினைவிடத்தையே இலங்கை அரசு இடித்துள்ளது.

உண்மையில் இதன் பிண்ணனியில் பல்வேறு விடயங்கள் உள்ளதாக நான் சந்தேகப்படுகின்றேன். என்னிடம் சிலர் ஆலோசனைகளையும் வழங்கி உள்ளனர். குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் முன்னாள் வடக்கு ஆளுநரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஒட்டோபா சட்ட சபையில் ஒரு சட்டமாக முன் மொழிவதற்கு விஜய் தனியாசனம் என்பவர் முன் மொழிந்துள்ளார். அதனை நிறை வேற்றக்கூடாது என்ற கருத்தை முன் வைத்தார்.என்னைப் பொருத்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் உடைக்கப்பட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பேசியதற்கும் இடையில் நேரடி தொடர்புகள் உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

அவர் பேசிய ஒரு வார காலத்தினுள்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில்  அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்டுள்ளது”என அவர் மேலும் தெரிவித்தார்.