வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

2024 ல் மீள களம் காண்கிறார் டொனால்ட் ட்ரம்ப்! 

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலம் கூறுகையில்,

“புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம்.

அமெரிக்க சட்டங்களை அமுல்படுத்துவதில் பைடன் தோல்வி அடைந்துவிட்டார். நாம் ஆரம்பித்த இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும்.

ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என கூறினார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். இதில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.

எனினும், தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் பதவியிலிருந்து நீங்கிச் சென்றார்.

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு  மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை !

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (01.03.2021) அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார். இந்நிலையில், 2014இல் ஒரு மூத்த நீதவான் ஊடாக சட்டவிரோதமாக இதுகுறித்த விசாரணைத் தகவல்களைப் பெற முயன்றார் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  இது தொடர்பாக நீதிபதிக்கு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக சார்க்கோசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு நடைபெற்ற 10 நாட்கள் விசாரணையின்போது தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுத்திருந்தார்.

எனினும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 66 வயதான சார்க்கோசி, பிரான்சின் தற்கால வரலாற்றில் சிறைத்தண்டனை பெற்றுள்ள  முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது.  அந்த நாட்டில் சுமார் 140 கோடிப்பேர் வாழ்கின்றனர்.

அங்கு வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் வகையிலும், வறுமை ஒழிப்பில் போராடியவர்களை கவுரவிக்கும் வகையிலும் பீஜிங்கில் ஒரு விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் ஜனாதிபதி ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சீனாவில் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களும் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த காலக்கெடுவை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது.

832 வறிய மாவட்டங்களும், 1 லட்சத்து 28 ஆயிரம் வறிய கிராமங்களும் வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

1970-களின் பிற்பகுதியில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டு, திறக்கப்பட்டதில் இருந்து 77 கோடி வறிய கிராமப்புற மக்கள் சீனாவின் தற்போதைய வறுமைக்கோட்டின் கணக்கெடுப்பில், வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என பதிவாகி இருக்கிறது.

இந்த கால கட்டத்தில் உலகளாவிய வறுமை ஒழிப்பில் சீனா 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை செய்துள்ளது.  இந்த சாதனைகள் மூலம் சீனா மற்றொரு அதிசயத்தை உருவாக்கி இருக்கிறது. அது வரலாற்றில் எழுதப்படும்.

நான் சீன ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் சீனா வறுமை ஒழிப்புக்காக கிட்டத்தட்ட 246 பில்லியன் டாலர் நிதியை முதலீடு செய்துள்ளது.

உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோட்டின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை, உலகளாவிய மொத்தத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

வறுமையை ஒழிப்பது கடைசிப்புள்ளி அல்ல. புதிய வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிதான் தொடக்கப்புள்ளி.

சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்ட காலம் தொட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வந்துள்ளது. 2012-ம் ஆண்டு நான் அதிகாரத்துக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிக்கு மேற்பட்டோர் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 79 லட்சம் வீடுகளில் வாழ்ந்து வந்த 2 கோடியே 56 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாழடைந்துபோன தங்கள் வீடுகளை புதுப்பித்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் வறிய பகுதிகளில் இருந்து 96 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

28 இன சிறுபான்மை குழுக்கள் 2012-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மொத்தமாக வறுமையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டுக்குள், கிராமப்புறங்களில் வாழ்க்கையை மேம்படுத்துவது, மிதமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வெற்றியை பெறுவதற்கு முக்கியம் ஆகும்.” இவ்வாறு அவர் கூறினார்.

“கொரொனா தடுப்பூசியால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பு பெறுவர்” – அரசி இரண்டாம் எலிசபெத்

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதனால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை. தடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் எளிது என்று அதைப் போட்டுக் கொண்டவர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் நிச்சயம் பாதுகாப்பு பெறுவார்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் அந்த பாதுகாப்பை பெற முடியாது.

எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதுகாக்கப்பட்ட உணர்வு ஏற்படும். தடுப்பூசி போடும் திட்டத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து மன்னர் பிலிப்பும் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். “இது ஒரு சிறப்பான பணி” என்று சுகாதாரத்துறை தலைவரிடம் கூறினார். “இது ஒரு ஊக்கமளிக்கும் செயல். இரண்டாம் உலகப்போரின் போது ஏராளமானோர் உயிரிழந்தார்கள். அதுபோல் கொரோனா தாக்குதல் நடந்துள்ளது.

அதை வெல்ல தடுப்பூசி அவசியம். இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார். தற்போது 94 வயதான இங்கிலாந்து அரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்றாலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேறுவதற்கான இறுக்கமான ட்ரம்பின் கொள்கைகளை நீக்கி தளர்வான கொள்கைகளை கொண்டு வந்த பைடன்! 

அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும் புரிதலையும் நிரூபிக்க இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை குறைக்க குடியுரிமை தேர்வு முறைகளை கடுமையாக்கியது. 2008-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளை மாற்றியது.‌ அதாவது தேர்வில் 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது. இந்த கேள்விகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானதாகவும் கடுமையாகவும் இருந்தன.இந்த விதிமுறைகள் 2020 டிசம்பர் 1-க்கு பிறகு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார். அந்தவகையில் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதன்படி இனி 2008-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் எனவும் இது மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனிமையால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க தனியான அமைச்சு ஒன்றினை உருவாக்கிய ஜப்பான்! 

ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது அந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தவர்களை விட அதிகம் ஆகும். ஜப்பானைப் பொறுத்தவரையில் தனிமையாக உணருபவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களே அதிகமாக தனிமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் அரசு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் மக்களின் தனிமையைப் போக்குவதற்காக தனிமை எனும் அமைச்சகத்தை அமைத்து அதன் மந்திரியாக டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை பிரதமர் யோஷிஹைட் சுகா நியமித்துள்ளார். தனிமை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், குடிமக்களின் தனிமையையும், சமூகத்தில் தனித்திருக்கும் நிலையையும் குறைக்க நடவடிக்கை எடுப்பார். டெட்சுஷி சாகாமோட்டோ, ஏற்கனவே ஜப்பானில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டெட்சுஷி சாகாமோட்டோ கூறுகையில், “சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

2017-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில், 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தாங்கள் எப்போதும் தனிமையை உணர்வதாக கூறியதையடுத்து, 2018-ம் ஆண்டில் தனிமை மந்திரியை இங்கிலாந்து அரசு முதல் முறையாக நியமித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தனிமை மந்திரியை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.‌

இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 400க்கும் மேற்பட்டோர் பலி! 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 938பேர் பாதிக்கப்பட்டதோடு 442பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 41இலட்சத்து 44ஆயிரத்து 577பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 747பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 56ஆயிரத்து 364பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 273பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 26இலட்சத்து 66ஆயிரத்து 466பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

“தொலைபேசி சிக்னலுக்காக இராட்டினத்தில் ஏறி பேசிய மத்திய பிரதேச சுகாதாரத் துறை மந்திரி !

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பொது சுகாதாரத் துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் ஒரு பொருட்காட்சி நடந்து வருகிறது. அதில், ‘பாகவத கதா’ என்ற பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்தி வருகிறார். அதற்காக அந்த கிராமத்திலேயே 9 நாட்களாக தங்கி இருக்கிறார்.

இதற்கிடையே, அந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பிரஜேந்திர சிங் யாதவ் செல்போனில் பேசும் காட்சி பத்திரிகைகளில் வெளியானது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகப் பரவியது.

பின்னரான தகவல்களின் போதே செல்போன் சிக்னலுக்காக அவர் அந்த ராட்டினத்தில் ஏறியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை அறிந்த நெட்டிசன்கள், ‘இதுதான் டிஜிட்டல் இந்தியா லட்சணமா?’ என்று கேலி செய்துள்ளனர். மீம்ஸ்களும் உலா வந்தன.

இதுதொடர்பாக, பிரஜேந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘‘அந்த கிராமத்தில் 9 நாட்களாக தங்கி இருப்பதால், அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கிராம மக்கள் என்னிடம் முறையிட்டனர். அதிகாரிகளிடம் பேசி இதற்கான உத்தரவை பிறப்பிக்க நினைத்தேன். ஆனால், மலைகளால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் செல்போன் சிக்னலே கிடைக்கவில்லை. எனவே ராட்டினத்தில் ஏறி பேசினேன்’’ என தெரிவித்தார்.

இந்தியா-மாலைத்தீவு இடையே ரூ.375 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து !

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாலைத்தீவுக்கு சென்றுள்ளார். நேற்று மாலைத்தீவு ராணுவ மந்திரி மரியா திதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இந்தியா-மாலைத்தீவு இடையே இந்திய ரூபாய் .375 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலைத்தீவின் கடலோர காவல்படை திறனை வலுப்படுத்துவதற்காக இத்தொகையை இந்தியா கடனாக வழங்குகிறது.

இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘மாலைத்தீவு இராணுவ மந்திரியுடனான சந்திப்பு சுமுகமாக அமைந்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பயனுள்ள முறையில் கருத்து பரிமாற்றம் செய்தோம். மாலத்தீவின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா நீடிக்கும். மரியா திதியுடன் துறைமுக திட்ட ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது” என்று கூறியுள்ளார்.

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலியை ஜெய்சங்கர் சந்தித்தார். அவரிடம் பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கொரோனா காலத்திலும், அதற்கு பிறகும் மாலைத்தீவின் விரிவான வளர்ச்சி கூட்டாளியாக இந்தியா நீடிக்கும் என்று உறுதி அளித்தார்.

சவுதி அரேபியாவில் பெண்களை இராணுவத்தில் இணைக்கும் பணி ஆரம்பம் !

சவுதி அரேபியாவில் பெண்கள் இராணுவத்தில் இணைவதற்கான சேர்க்கை நேற்று முதல் தொடங்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில்,

“ சவுதி அரேபியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இராணுவத்தில் பெண்கள்  சேருவதற்கான அனுமதி துவங்குகிறது. ஆண்களுக்கான சேர்க்கையும் தொடங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for Saudi Arabia opens military recruitment to women

சவுதி அரேபிய இராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கான சேர்க்கையை சவுதி அரேபியா இராணுவம் ஆரம்பித்துள்ளது. இதை வரவேற்று சவுதி அரேபியா பெண்கள் நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டில் உள்ள பெண்கள் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி மற்றும் ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி ஆகிய மாற்றங்களை கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கைகளை சவுதி அரேபியா பெண்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.