அருண்மொழி

அருண்மொழி

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கம் போதைப்பொருள் பாவனை – நுரையீரல் மற்றும் இருதயநோயாளர்களாக உருவெடுக்கும் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் !

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில அவர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டது.

அதேவேளை சுவாசிக்க முடியாமல் சிரமத்துடன், கடும் காய்ச்ச்சலுடனும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் இளையோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களும் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்பவர்கள்.  இவ்வாறாக தினமும் சராசரியாக மூவர் வைத்தியசாலைக்கு சிகிசிச்சைக்கு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஒரு வருட காலத்தில், யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் சத்திர சிகிச்சையில் !

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம்  அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியை, மாணவனின் கையில் அடித்துள்ள நிலையிலேயே மாணவனின் விரல் நகம் சிதைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவரது நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பில் அம்மாணவனின் பெற்றோர்  அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு !

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்கள் மீதான விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்சனையாக உருவாகிவருகின்றது.

ஏனென்றால் – சிறிலங்கா அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே இந்த போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரது முழு ஒத்துழைப்புடனேயே இவை நடைபெறுகின்றன. இராணுவம் தான் நோரடியாகவே அந்த செயற்பாட்டை செய்துவருகின்றது. இப்படியான ஒரு சூழலில் வடக்கு கிழக்கில் மிகப்பெரும் அளவிலான இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்டு மோசமான நிலமைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

எனவே பாடசாலைகளில் உளவள செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும். பாதிக்கப்படுபவர்களை ஏதோ ஒரு வழியில் அதிலிருந்து மீட்க வேண்டுமாயின் இத்தகைய உளவள செயற்பாடுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்குரிய மனோநிலையை உருவாக்கி, அவர்களை நற்பிரஜைகளாக்குவதை விடுத்து, மாறாக அவர்களை குற்றவாளிகளாக்கி சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கும் நிலைமையையே உருவாக்கியிருக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு ஆராதனைக்கு வராத சிறுமியை தாக்கிய பங்குத்தந்தை – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது.

தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும் இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

O/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் கூட தொழிற்கல்வியை பெற்று டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப் பின் படிப்பு வரை கற்க முடியும் – மூன்றாம் நிலைக் கல்வி பணிப்பாளர் சமன் ரூபசிங்க !

கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

O/L சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இருதரப்பினருக்கும் தொழிற் கல்வி  பெறுவதற்கான வாய்ப்பு! | Kuruvi

நாடளாவிய ரீதியில் 525 பாடசாலைகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழிற்பயிற்சி நிலையத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இந்த பாடநெறிகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 உரையாடல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமன் ரூபசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் பிரகாரம் முதலாம் ஆண்டு தொழிற்கல்வியும், இரண்டாம் ஆண்டில், தொழில் பயிற்சி நிறுவனமொன்றின் ஊடாக NVQ தரச் சான்றிதழ் வழங்கப்படும். NVQ 4 சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப் பின் படிப்பு வரை கற்க முடியும்.

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே உயர்தரத்தில் கற்க வாய்ப்புக் கிடைக்கிறது.ஆனால் சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவர்கள், கல்விச் செயல்பாட்டில் இருந்து விலக்கிச் செல்கின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர் சமூகத்தை தயார்படுத்தும் வகையில், பாடசாலையின் ஊடாக மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதன் அவசியத்தை உணர்ந்து “13 வருட தொடர்ச்சியான கல்வித் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்தாலும் இல்லாவிட்டாலும் தொழிற்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தொழில்வாண்மையாளர்களாக வெளிநாடு செல்ல விரும்பும் பலர், தொழில்சார் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கின்றனர். அவர்கள் தேவையான மொழி அறிவைப் பெறுவதற்கு குறுகிய காலப் பாடநெறிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மோட்டார் மெக்கானிக், வெல்டிங் டெக்னீஷியன், விவசாய உதவியாளர், ஹோட்டல் துறை போன்ற எந்தத் துறையிலும் கணினி அறிவு பெற்றிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொழிற்துறை தகைமையாக இல்லாத போதும் மேலதிக தகுதியாக இது முக்கியமானது.

சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழிற்கல்வி கற்க முடிவு செய்யும் மற்றவர்களும் உள்ளனர். இவர்களுக்கான தொழிற்கல்வி திட்டங்கள் இலங்கையில் 525 தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. 13 வருட தொடர்ச்சியான கல்வித் திட்டத்தின் மூலம், அவர்கள் பாடசாலைகளில் இருந்தே தொழிற்கல்வியைத் தொடரும் திறனைப் பெற்றுள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அறிவிக்கப்படும்.

இந்த தொழில்முறை பாடநெறிகள் யாவும் தொழிற் சந்தையை இலக்காக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. தேசிய தொழில் தகுதி (NVQ) சான்றிதழ் திட்டத்தின் மூலம், கடந்த 5-6 ஆண்டுகளில் மிகவும் திறமையான தொழில்சார் நிபுணர்களை உருவாக்க முடிந்தது. அதனால்தான் மாணவர்கள் மத்தியில் இந்தத் திட்டம் பிரபலமாகியுள்ளது.

NVQ 3 மற்றும் NVQ 4 சான்றிதழ் வழங்கும் பயிற்சிகளுக்கே நாம் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறோம். அதன் டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் UNIVOTEC ஊடாக பட்டப் பின் படிப்பு வரை கற்க வாய்ப்பும் உள்ளது. NVQ 6 சான்றிதழைப் பெற்ற ஒருவர் வெளிநாடுகளில் பட்டப் பின் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. மோட்டார் பொறியியல், வெல்டிங், விவசாயம் மற்றும் ஹோட்டல் தொழில் உள்ளிட்ட 26 துறைகளை உள்ளடக்கி பாடநெறிகள் நடைபெறுகின்றன.

மேலும், உயர் தரத்திற்குப் பிறகு பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட 1400 தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு விருப்பமான தொழில் பயிற்சியைத் தொடர வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான தகவல்களை www.tvec.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் பொலிஸார் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – சஜித் பிரேமதாஸ கோரிக்கை !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸார்  அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பொலிஸார் தாம் நினைத்த மாதிரி செயற்படலாம் என்ற மனோநிலையில் இருக்கின்றார்கள். சந்தேகநபர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் காவல்துறையினரின் இந்த அத்துமீறல் செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் அங்கு அப்பாவி மக்களின் உயிர்களும் பறிக்கப்படுகின்றன.

காவல்துறைமா அதிபர் விவகாரத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்யும் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, பொலிஸாரின் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்பு – தொடரும் உண்ணாவிரத போராட்டம் !

திருகோணமலை, வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து  அப்பகுதி மக்கள்  கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும்  இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும்  இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை  மறித்து  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு  உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அவ்வீதியூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதி மக்களால்  போராட்டம்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டி – யாழ்ப்பாண மாணவன் சாதனை !

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

May be an image of 3 people

குறித்த போட்டி மலேசியாவில் நேற்று (03) நடைபெற்றது. இந்தநிலையில் UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மாணவனே குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிமா  –  சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் !

சிறிமா  –  சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன்,  சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள அமைச்சர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

“இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக பலவந்தமாக நாடு  கடத்தப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது. இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது மக்களுக்கு இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

இந்த வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். எமது மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவை போதுமானவை அல்ல.  பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறு சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக தமக்குள்ள பொறுப்புகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இது விடயம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணைந்து பணியாற்ற நான் தயாராகவே இருக்கின்றேன்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபா மீளப் பெறப்படவில்லை !

2022 ஆம் ஆண்டின் இறுதியில் பாராளுமன்ற பிரதிநிதிகளின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபா மீளப் பெறப்படவில்லை.

வருடாந்திர கணக்காய்வு அறிக்கை  மூலம்  இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதில் ரூ. 29 இணைப்புகள் தொடர்பான 5 மில்லியன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்திற்கும் மேலாக மீட்கப்படாமல் நிலுவையில் உள்ளது.