நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அப்போதைய சில அமைச்சர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி தவைர்களுக்கும் எதிர்வரும் 21 ம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயத்திலக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு ஏற்ப இவர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா, மலிக் சமரவிக்கிரம ஆகியோருக்கும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன். ஜே.சி. வெலியமுன, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன ஆகியோருக்கும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும திணைக்களமாக மாற்றியமைக்கும் போது சுயமாக விலகிக்கொண்ட ஊழியர்களுக்கு நஸ்டஈடு மற்றும் பணிக்கொடை வழங்கியமை , சுபீட்சமான வீடமைப்பு திட்டத்தில் சலுகை வழங்கப்பட்டமை போன்ற விடயங்களுக்காக தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை அரசியல் பழிவாங்கல் என டொக்டர் நிஹால் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.
கடுவலை முன்னாள் நீதவான் தம்மிக்க ஹேமபாலவையும் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளராக முன்னிறுத்துமாறு நிஹால் ஜயத்திலக்க சார்பிலான சட்டத்தரணி செனரத் ஜயசுந்தர ஆணைக்குழுவை கோரியுள்ளார்.
இவ்விடயங்களை ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உபாலிஅபேரத்ன எதிர்வரும் 21 ம் திகதி தம்மிக்க ஹேமபாலவுக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.
இதேநேரம் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான கடற்படை கொமாண்டர் ஆர்.கே.சுமித் கருத்து வெளியிடுகையில் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்ட விதத்தினால் முப்படையினர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
யுத்த காலத்தில் கடற்படையின் புலனாய்வு பிரிவு துப்பறிவதற்காக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை தடுத்து வைப்பதற்காக திருகோணமலை துறைமுகத்தை அண்டியதாக கண்சைட் எனும் இடத்தை நடத்திவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் அரசியல் பழிவாங்கலாக அதனை 700 பயங்கரவாதிகளை பலாத்காரமாக தடுத்துவைக்கப்பட்ட வதை முகாமாக ஊடகங்கள் மூலம் சமூக மயப்படுத்தப்பட்டதாக சுமித் ரணசிங்க ஆணைக்குழுவில் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி சில்வா ஆகியோர் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாகவும் ஆணைக்குழுவில் அவர் மேலும் தெரிவித்தார்.