த ஜெயபாலன்

த ஜெயபாலன்

முடிவெடுக்கத் தெரியாதவர்கள் கையில் அதிகாரம் ஆபத்தானது!

முடிவெடுத்தல் என்பது சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் மிக முக்கியமான அம்சம். துரதிஸ்ட வசமாக சொந்த வாழ்விலும் சரி பொதுவாழ்விலும் சரி முடிவுகள் எடுப்பதில் கவனமும் நேரமும் செலுத்தப்படுவதில்லை. தவறான முடிவுகளுக்கு செலுத்தப்படுகின்ற விலை மிக அதிகமானது பெருமளவு சமயங்களில் ஈடுசெய்ய முடியாதது. முடிவெடுப்பதில் மிக முக்கியமான அம்சம் முடிவெடுக்கப்பட வேண்டிய அம்சம் தொடர்பான நேர்த்தியான தகவல்களைத் திரட்டுவது. இதில் விடப்படுகின்ற தவறுகள் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் இழப்புகளை ஏற்படுத்தும்.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் சரியான தகவல்களை குறித்த காலகட்டத்தில் சேகரித்து சரியான முடிவுகளை எடுக்காததால் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டிய மக்களை கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கில் பலி கொடுக்கின்றனர்.

இலங்கையில் 2019 ஈஸ்ரர் ஞாயிறு அன்று யார் குண்டு வைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அக்குண்டுகள் எங்கே வைக்கப்பட உள்ளன என்றும் அது யாரால் வைக்கப்பட உள்ளது என்றும் குறிப்பான தகவல்களை வழங்கியும் அப்போதைய மைத்திரி – ரணில் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களைப் பயங்கரவாதிகளின் குண்டுக்குப் பலியாக்கினர்.

1988இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் வட கிழக்கு இணைந்த மாகாண சபையை வழங்கியது. புலிகளுடன் கூத்தடித்த கூட்டமைப்பும் அதனை நிராகரித்தது. 20 வருடங்களுக்குப் பின் எல்லாம் மண் கவ்விய பின் பிரிந்த வடக்கு கிழக்கில் மிச்சம் இருக்கிறதை பிடுங்கிறதுக்கு போட்டி. அதிலும் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. எத்தினை ஆயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டு விட்டது.

தகவல் ஆயுதம்! தகவல் செல்வம்!! தகவல் அதிகாரம்!!!

மழை பெய்தால் நிலம் நனையும் ….

ஆனால் நிலம் நனைந்திருப்பதால் மழை பெய்தது என்று எழுதுகின்ற சமூகவலைத் தள யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 21ம் நூற்றாண்டை தகவல் தொழில்நுட்ப யுகமாக எதிர்பார்த்தோம். ஆனால் அது தகவல் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கவில்லை. தங்போதைய உலகத் தலைவர்களே நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகின்ற போது இணையத்தள தகவல் காவிகள் / காவாலிகள் அதனை பரப்பிக்கொண்டிருப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது.

தகவலை ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்து செல்வத்தை திரட்டுபவர்கள் தான் அரசியல்வாதிகளாக இன்று உள்ளனர். டொனாலட் ட்ரம் பொறிஸ் ஜோன்சன் நரேந்திர மோடி …. இந்தப்பட்டியல் மிக நீளமானது.

நாங்கள் தகவல்களைப் பரிமாறுகின்ற போது அது ஏற்படுத்தும் தாக்கங்களை மேம்போக்காக குறித்த நேர சிற்றின்ப பொழுதுபோக்காகச் செய்வது நீண்டகாலத்தில் எவ்வளவு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி கரிசனை கொள்வதில்லை. உண்மையற்ற தகவல்கள் தவறான தகவல்கள் பிழையான தகவல்கள் உண்மையை வலுவிழக்கச் செய்யும் உண்மையை நம்பகமற்றதாக்கும் தவறான முடிவுகளை எடுப்பதற்கு வழிகோலும். அதனால் தகவல்களை அலசி ஆராய்ந்து அதன் நம்பகத் தன்மையை உறதிப்படுத்திய பின் பரிமாறுங்கள்.

பழம் பறிப்பதற்கு விமானங்களில் வேiயாட்கள் தருவிப்பு!

பிரிக்சிற் வந்தால் பிரித்தானியாவில் தேனும் பாலும் ஓடும் என்ற இந்த கொன்சவேடிவ் அரசு, பிரித்தானிய வேலைகள் பிரித்தானியாவிற்கே என்றவர்கள் இன்று ருமேனியாவில் இருந்து 6 வீமானங்களில் பழங்கள் பிடுங்குவதற்கு வேலையாட்களை வரவழைக்க ஏற்பாடு செய்கின்றனர். இதையெல்லாம் கேட்க வேண்டிய நேரம் இது.

இந்த அரசியல் வாதிகளுடன் கைகோர்த்து இந்த மேற்கு நாட்டு ஊடகங்கள் செய்கின்ற பிரச்சாரங்களுக்கு ஒரு எல்லை கிடையாது. காலம்காலமாக பொய்ப்பரப்புரைகளைச் செய்து உலகம் முழுவதும் யுத்தத்தை உங்பத்தி செய்தவர்களுக்கு சொந்த மக்களைக் கூட காப்பாற்ற இயலாமல் இல்லை காப்பாற்ற விருப்பமின்றி செயற்படுகின்றனர். இன்றைக்கு எடுக்கப்படும் முடிவுகள் தங்கள் வருமானத்தை எதிர்காலத்தில் பாதித்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கின்றன இந்த அரசியல் வாதிகளுக்கு பின்னால்லுள்ள வர்த்தகப் பெரும்புள்ளிகள். நிற்க.

இந்த கொன்சவேடிவ் அரசும் சில தீவிர இடதுசாரிகளும் கூட பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து வெளியேற வேண்டும் சன்னதம் ஆடி வெளியேறி விட்டனர். இன்று கொன்சவேடிவ் கட்சியின் சன்னதத்துக்கு வாக்களித்தவர்களையே காப்பாற்ற விரும்பமின்றி உள்ளது அரசு. அவர்களை மருத்துவ மனையில் வயோதிபர் இல்லங்களில் வைத்து பராமரிப்பவர்கள் இன்று பிரித்தானியாவுக்கு உணவு வழங்கிக்கொண்டு இருப்பவர்கள் பிரித்தானியாவை இயக்குபவர்கள் யார்? ஐரோப்பியர்கள், குறிப்பாக கிழக்கு ஐரோப்பியர்கள் ஆசியர்கள் ஆபிரிக்கர்கள். இவர்கள் தங்கள் உயிரைக்கொடுத்து பிரித்தானியாவை இயக்குகின்றனர். மக்களைக் காப்பாற்றுகின்றனர். நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து அனைத்தும் அரசியலே. ஆனபடியால் அரசியல் வழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம்.

பிரித்தானியா ஊடகங்கள் எழுப்பி இருக்க வேண்டிய கேள்விகள்!

ஏன் மருத்துவ சேவை பலவீனமாக இருந்தது?
அவ்வாறு பலவீனமாக இருந்ததுதான் கூடுதல் மரணங்கள் சம்பவிக்கக் காரணமா?
சீனாவில் வூஹான் மாநிலம் ஜனவரி 23இல் முற்றாக மூடப்பட்டது. ஜனவரி 31இல் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கையை அறிவித்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை?
உலனின் செல்வத்தின் 50 வீதத்தை தன்னாட்டில் வைத்துள்ள அமெரிக்காவில் ஏன் இவ்வளவு தொகையான அழிவு அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது?
அமெரிக்காவின சிஐஏ பிரித்தானியாவின் எம்ஐ5, எம்ஐ6 மற்றும் இஸ்ரேல் மொசாட் போன்ற உளவு ஸ்தாபனங்கள் இவ்வளவு அழிவை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி பரவும்வரை என்ன செய்து கொண்டிருந்தன?
இவ்வாறான அமைப்புகள் எதிர்காலத்தில் அவசியமா?
ஒரே ஒரு தடவை பயன்படுத்தப்பட்ட அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகளுக்கு தொடர்ந்தும் முதலீடு செய்வதா இல்லையேல் முகக்கவசங்களில் முதலீடு செய்வதா?
பொருளாதார வளர்ச்சிக்காக எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கலாம் என அரசுகள் கருதுகின்றன?

இப்படிப் பல முக்கிய கேவிகள் கேட்கப்பட வேண்டிய காலம் இது. ஆனால் ….

தற்போதைய ஆயிரக் கணக்கில் மக்களைப் பலிகொள்கின்ற இந்தக் கட்டத்தில் கூட, தங்களை நடுநிலை ஊடகங்களாக உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகங்களாகக் காட்டும் மேற்கு நாட்டு ஊடகங்கள் தங்களுடைய அரசாங்கங்களை நோக்கி முக்கியமான கேள்விகளை எழுப்ப மறுத்துவருகின்றன. மாறாக கொரோனாவால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பிரசுரிப்பதும் அரசுகளின் அறிவித்தல்களை வெளியிடுவதிலுமே உள்ளன. மேலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை எழுப்ப வேண்டும் என்ற அக்கறையைத் தான் இந்த ஊடகங்களும் வெளியிடுகின்றன.