Multiple Page/Post

பிக் பிரதர் புகழ் ஜேட் கூடி புற்றுநோய்க்கு பலி

_jadebigbro.jpgபிரிட்டிஷ் தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோ நட்சத்திரமான ஜேட் கூடி 27 வயதில் உயிரிழந்துள்ளார்.  அவரது வாழ்க்கையின் பிற விஷயங்களைப் போலவே அவர் புற்றுநோயுடன் போராடிவந்ததையும் ஊடகங்கள் உற்று அவதானித்துவந்துள்ளன.

ஜேட் கூடி ஒரு தைரியமான பெண் என்றும் அவரை அனைவரும் அன்பாக நினைவுகூறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியுள்ளார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.

2002ஆம் ஆண்டு பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பிரபலம் அடைந்திருந்தார். ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதே நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனத்துவேஷம் பாராட்டும் வகையில் நடந்துகொண்டார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது தொழில் வாழ்க்கை கிட்டத்தட்ட குலையும் நிலைக்கு சென்றிருந்தது.

ஆங்கிலம் தெரியாதா? பிரஜாவுரிமை இல்லை – கனடா அறிவிப்பு

flag_canadian.jpgபிரஜா வுரிமை பெறுவதற்கு மொழித்தேர்ச்சி அவசியமென்ற அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் கனடிய, குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னேய், குடியேற்றவாசிகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சை கற்றிருக்க வேண்டும் அல்லது பிரஜாவுரிமை மறுக்கப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கஸ்சாரியில் இடம்பெற்ற குடிவரவுத்துறை விவகாரம் சம்பந்தப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜாசன் கென்னேய், புதிய குடியேற்றவாசிகள் இரு மொழிகளில் (ஆங்கிலம், பிரெஞ்சு) ஒன்றை கற்பது அவசியம் என்றும் கனடிய சமூகத்துடன் ஒன்றிணைய அது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மொழிகளையும் கற்பதற்கு குடியேற்றவாசிகள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்பதற்கு உதாரணமொன்றை கூறிய அமைச்சர் கடந்த ஜனவரி இந்தியாவுக்கு தான் சென்றபோது புதுடில்லியில் குடியேற்றம் தொடர்பான சில நேர்முகப்பரீட்சைகளில் கலந்துகொண்டதாகவும் அச்சமயம் 12 வருடமாக கனடியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பெண் ஒருவர் ஆங்கில அறிவு சிறிதும் இல்லாமல் இருந்ததையிட்டு ஆச்சரியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப்பெண் தனது கணவன் கனடாவுக்கு வருவதற்கு “அனுசரணை’ வழங்கியுள்ளார். எனக்கு வியப்பாக இருந்தது கவலையாகவும் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடா பிரஜாவுரிமை பெற உத்தியோகபூர்வ மொழிகளை அறிந்திருப்பது அவசியமென்ற வகையில் குடிவரவுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வருடாந்தம் 2 1/2 இலட்சம் பேர் கனடாவுக்குப் புதிய குடியேற்ற வாசிகளாக வருகின்றனர். 66 ஆயிரம் பேர் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்துகொள்ள வருகை தருகின்றனர். குடும்பத்துடன் இணைந்து கொள்வோருக்கு மொழிப்புலமை அவசியமானதல்ல என்ற ஏற்பாடே இருந்து வருகிறது.

ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை: உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு கொழும்பு வருகை. இன்று மாத்தறை விஜயம்

vaccina.jpgருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து கண்டறி வதற்காக இருவர் கொண்ட உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு நேற்று மாலை கொழும்புக்கு வந்து சேர்ந்தது.

இவர்கள் இன்று (23) மாத்தறைக்குச் சென்று ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள தாக சுகாதார போசாக்கு அமைச்சு தெரிவித்தது.

ருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து ஒவ்வாமையினால் பாடசாலை மாணவி ஒருவர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு குழுவொன்றை அனுப்புமாறு சுகாதார அமைச்சு சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தை கோரியிருந்தது.

அமைச்சின் அழைப்பின் பேரில் உலக சுகாதார ஸ்தாபன குழு நேற்று இலங்கை வந்ததோடு இந்தக் குழு இன்று (23) காலை சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுடன் பேச்சு நடத்தவுள்ளது. அதன் பின்னர் மாத்தறைக்குச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளது.

விசாரணை முழுமையாக பூர்த்தி செய்யும் வரை உலக சுகாதார ஸ்தாபன குழு இலங்கையில் தங்கியிருக்கும். இதேவேளை சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு என்பனவும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனம் பரிசோதனை தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

இதேவேளை ருபெல்லா தடுப்பூசி மருந்து ஒவ்வாமையினால் மேலும்27 மாணவிகள் நோய்வாய்ப்பட்டு மாத்தறை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு தற்பொழுது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 7 மாணவிகள் வீடுகளுக்குத் திரும்ப அச்சம் தெரிவித்து வருவதாக மாத்தறை பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் அருண ஜெயசேகர கூறினார். இதேவேளை மற்றொரு சிறுமி நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் (21) ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக இறந்த மாணவி பேசளா ஹன்சனி (13) யின் இறுதிக் கிரியைகள் நேற்று மாத்தறையில் நடைபெற்றன. அவர் கல்வி பயிலும் மாத்தறை சென். தோமஸ் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஒருவரைத் தாக்கிய இரு பௌத்த பிக்குகளையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் அனுமதி

mihintale.jpgமிகிந்தலை புனித பிரதேசத்தில் வைத்து ஒரு நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு பௌத்த பிக்குமாரையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அநுராதபுரம் தலைமை நீதிவான் ருஸிரா வெலிவத்தை அனுமதித்தார். இரு சந்தேக நபர்களையும் மீண்டும் மே ஆறாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மிகிந்தலைக்கு அண்மையாகவுள்ள அம்பஸ்தல செய்த்தியா என்ற இடத்தைச் சேர்ந்த தான வீரரத்ன என்ற நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மிகிந்தலை ராஜமகா விகாராதிபதி வலக வெங்குணவேவ தம்மாரத்ன மற்றும் மிகிந்தலை சீலரத்ன தேரர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இரு பௌத்த பிக்குகளுக்காகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, சிரேஷ்ட சட்டத்தரணியான சந்தான வீரக்கோன், டாக்டர் ராஜா ஜோன் புள்ளேயின் வீட்டைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முறைப்பாட்டாளரான சந்தான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை சீலரத்ன தேரரின் சாட்சியத்திலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் ‘சுற்றாடல் நட்பு’ சேவை ஆரம்பம்

sri-lanka-air-lanka.jpgஸ்ரீலங்கன் விமான சேவையின் ‘சுற்றாடல் நட்பு’ விமான சேவை முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (21) பிற்பகல் 12.35 மணியளவில் பிரெங்பொட் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ. எல். 557 என்ற விமானத்தின் மூலம் முதலாவது பயணிகள் குழு புறப்பட்டது.

சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் ‘சுற்றாடல் நட்பு’ என்ற விமான சேவையை தெற்காசிய வலயத்தில் ஆரம்பித்த முதலாவது நாடு இலங்கையாகும் என்று ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் குணவர்தன தெரிவித்தார்.

அமெரிக்கா நிஜமாக மாறினால் இரானும் மாறும் என்கிறார் கமெனி

_khamenei.jpgஇரானுடனான உறவில் ஒரு புதிய துவக்கத்தை அமெரிக்கா விரும்புகிறது என்று அதிபர் ஒபாமா கூறியிருந்தமைக்கு பதில் தரும் விதமாக கருத்து வெளியிட்டுள்ள இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இரான் தொடர்பில் அமெரிக்கா தனது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நிஜமாகவே மாற்றிக்கொண்டால், இரானும் மாறும் என்று தெரிவித்துள்ளார்.

வெறும் வாய் வார்த்தைகள் என்று குறிப்பிட்டு அவை மட்டும் போதாது என்றார் அவர். இரான் மீதான பொருளாதாரத் தடைகளை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிபந்தனைகளற்ற ஆதரவு என்று குறிப்பிட்டு அவ்விவகாரம் போன்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நிஜமான மாற்றங்கள் எதனையும் தான் இதுவரைக் கண்டிருக்கவில்லை என்றும் கமேனி கூறியுள்ளார்.

அமெரிக்க இரான் உறவில் முப்பது ஆண்டு காலமாக நீடித்துவரும் பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக அதிபர் ஒபாமா வீடியோ உரையில் பேசியிருந்தற்கு அடுத்த நாள் அயதுல்லாவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.

1625 தாதியருக்கு இன்று நியமனம்

sri-lanka-hospitals.jpgஅரசாங்க சுகாதார சேவைக்கு 1625 தாதியர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நிய மனக் கடிதங்கள் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று (23ம் திகதி) கொழும்பில் வழங்கப்படவிருக்கிறது.

மருதானை, எல்பின்ஸ்டன் திரையரங்கில் காலை 10.00 மணிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் இத்தாதிரியருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. இன்று நியமனம் பெறுபவர்களில் 110 தாதியர் வடமாகாண ஆஸ்பத்திரிகளிலும், 260 தாதியர் கிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேநேரம் 28 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு 25 சிங்கள மொழி தாதியர் கடமைக்கென நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

சீனாவில் வன்செயல்; திபெத்திய பிக்குகள் கைது

_china_tibet_.gifசீனாவின் வடமேற்கே குயிங்கை மாகாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களை அடுத்து, திபெத்திய பிக்குகள் 6 பேரை தாம் கைதுசெய்துள்ளதாகவும், வேறு 90க்கும் அதிகமானோரின் சரணடைவதற்கான கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

பொலிஸ் காவலில் இருந்து திபெத்திய பிரிவினை ஆதரவளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தப்பித்ததை அடுத்து, சனிக்கிழமையன்று குறைந்தது 100 பேர் பொலிஸ் நிலையம் ஒன்றை தாக்கியதாக சீன சின்குவா அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த நபரின் நிலைமை குறித்த வெளியான தவறான வதந்திகளால் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாந்து விட்டார்கள் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.ஆனால், ஒரு திபெத்திய பிக்குவான, அந்த நபர் ஒரு ஆற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள திபெத்தியர்களால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று கூறுகிறது.

மெளலவி ஆசிரியர் நியமனம்: போட்டிப் பரீட்சை முடிவு அடுத்தவாரம்

susil-premaja.jpgமெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சம்மேளனத்தின் தலைவர் தலைமையில் கொழும்பு, பொரல்லை நகரோதய மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 200 பேர் மெளலவி ஆசிரியர்களாக சேர்த்துக்கொள்ளப்ப டுவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நன்மை கருதி மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந் நடவடிக்கை கடந்த இருபது வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறுகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்கள் மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை. அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நலன்கள் கருதி மூன்று கட்டங்களில் 640 மெளலவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா செல்வதற்கு ‘தடை’

_dalailama.jpgதிபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திப்போடச்சொல்லி தென்னாப்பிரிக்க அரசாங்கம் கோரியிருப்பதாகவும், தலாய் லாமாவுக்கு அது இதுவரை பயண விசா வழங்கியிருக்கவில்லை என்றும் லாமாவின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

2010ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தென்னாப்பிரிக்கா தயாராகிவரும் நிலையில், கால்பந்து விளையாட்டைப் பயன்படுத்தி இனத்துவேஷத்துக்கு எதிரான கருத்தைப் பரப்பும் வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா அங்கு பயணிக்கவிருந்தார். நொபெல் அமைதிப் பரிசு வென்ற வேறு சில பிரமுகர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா வருவதை நிறுத்துமாறு தென்னாப்பிரிக்காவிடம் சீன அரசு வலியுறுத்தியிருந்ததாக சீன தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னாப்பிரிக்க நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.