13

13

கென்யாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் வில்லியம் ரூட்டோ !

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் திகதி ஜனாதிபதி பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த கென்யா சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது. கென்யாவின் ஜனாதிபதியாக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ இருந்தார். இந்த நிலையில் இருவருக்குமிடையே எழுந்த மனக் கசப்பால் ஒருவருக்கொருவர் மாதக் கணக்கில் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இருவரும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடையே மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் – உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை !

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன.

6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் கூறியுள்ளன.

ஏறக்குறைய 30% மக்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், எனவே அவசர உதவி தாமதமானால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என இலங்கை உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர சரண் கூறியுள்ளார்.

ஏறக்குறைய இரண்டு பருவகாலமாக பயிர்ச்செய்கை தோல்வியடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் உணவு உற்பத்தி கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது மற்றும் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக உணவு மற்றும் தானியங்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது.

இலங்கையின் நெருக்கடியான நிலையை சிலர் தமக்கு சாதமாக்க முயற்சி – ஜெனீவாவில் சீனா !

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபாண்டே தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தனிநபர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு எவ்வளவு தேவை..? – வெளியாகியுள்ள அறிக்கை !

இந்நாட்டில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு மாதம் வாழ்வதற்கு குறைந்தபட்ச தொகையாக 13,137 ரூபா அடையாளம் காணப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் துறை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

முந்தைய மாதத்தில் இதே எண்ணிக்கை 12,444 ரூபாவாகக் காட்டப்பட்டது, இம்முறை வளர்ச்சி 5.57% ஆக உள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவையான தொகை 52,552 ரூபா எனவும் கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 56,676 ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன  இலங்கையின் தற்போதைய பொருளாதார – வாழ்க்கைச்செலவு பற்றி குறிப்பிட்ட போது,

இலங்கையில் வாழும் மக்கள் வறுமையில் இருந்து வெளிவர ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவை . இலங்கையில் தொழில் புரிவோரில் 70 வீதமானோர் 62 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்கள். இலங்கையின் போசாக்கு குறைபாட்டை சர்வதேச சமூகத்தினரின் அறிக்கையை நிராகரிக்கிறதே தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையின்படி நாட்டில் வறுமை தீவிரமடைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளவில்லை.

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 30 வீதமானோர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளதும் நினைவில்கொள்ள வேண்டும். தற்போது சர்வதேச ஆதரவுடன் இலங்கைக்கு உணவு வழங்கும் திட்டத்தை உலக உணவுத் திட்டம் ஆரம்பித்துள்ளது.” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

உணவு மூலப்பொருள் தட்டுப்பாட்டால் மூடப்பட்ட 10000 உணவகங்கள் !

கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 உணவகங்களில், சுமார் 10,000 உணவகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுச்சாண்டி உரிமையாளர் சங்கஉரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 சிற்றுண்டிச் சாலைகளில் இதுவரையில் சுமார் 10,000  சிற்றுச்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் குறித்த உணவகங்கள் ரொட்டி, பாண், மாவு, இறைச்சி மற்றும் மீன் இன்மையால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைகள் பாண், முட்டை, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றிற்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் நாட்டில் பாடசாலைகளில் 4,600 உணவகங்களும்,  3,000 அரச நிறுவனங்களில் உணவகங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில், திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள்  உட்பட பல்வேறு விசேட நிகழ்வுகளில் உணவு மற்றும் குடிபானங்கள் வழங்கும் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றிற்கு நிலவும் அதிக விலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது மற்றொரு காரணமாகும்.

மேலும் உள்நாட்டில் பாண், கேக் உற்பத்தி மற்றும் ஏனைய விசேட இனிப்பு பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 60,000 க்கும் மேற்பட்டோர் இவற்றினை தயாரிப்பதற்கான தேவையான  மூலப்பொருட்கள் இன்மையால் இடை நடுவில் உற்பத்திகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில் தோடம்பழம், வாழைப்பழங்கள் மற்றும் ஏனைய பழங்களை டொலரை பொருட்படுத்தாமல் தன்னிச்சையான விலைக்கு விற்கும் நியாயமற்ற வர்த்தக மாபியா இன்று நாட்டில் இயங்கி வருகிறது.

நுகர்வோர் பொருட்களை கட்டப்படுவதற்கு குறிப்பிட்ட விலைக் கட்டுப்பாடு இல்லாததே இந்த பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாகும்.

இன்று நாட்டில் இருக்கும் ஒருவர் உழைக்கும் பணத்திற்கு அதிகமாக உணவிற்காக பணத்தினை  செலவிட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. மேலும் வர்த்தக மாபியாக்கள் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 24 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலச்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதை பொருளுடன் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். தலைமை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய போதை ஒழுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலையிலான பொலிஸ் குழுவினர், சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது வியாபாரத்துக்காக ஹரோயின் போதைபொருளை எடுத்துக் கொண்டு வீதியில் நடந்து சென்ற இளைஞனை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 8 அரை கிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் 20 இலச்சம் ரூபா கொண்ட தங்க ஆபரணங்களான 6 காப்புக்கள் 4 சங்கிலிகள், தோடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் இவர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“ஜெனீவாவில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளது.” காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காட்டம் !

“ஜெனீவாவில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றியிருந்தார்.

 

இதன்போது அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர்  முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை தொடர்பான தீர்ணம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில் ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதோடு குறித்த கருத்துக்கு கடும் கன்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை – ஆதிவாசிகளின் தலைவர் விசனம் !

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.

தம்பன கொடபாகினிய கிராமத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தவறு நடந்திருந்தால் தகுந்த தண்டனை வழங்குவது நியாயம், ஆனால் அவர்களை நீண்ட காலம் காவலில் வைத்து உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்து 13 வருடங்களாகிய நிலையில் சொந்த அபிலாஷைகளுடன் புதிய தலைமுறை உருவாகியுள்ளது. – ஜெனீவாவில் இலங்கை !

ஜெனீவாவில் 2022 செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை,

தலைவர் அவர்களே, எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் சபையுடனான எமது ஈடுபாட்டை ஒத்துழைப்பு, உரையாடல் என்ற உணர்வில் தொடர்வதற்குமான எமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஆரம்பத்தில் எமது அரசாங்கத்தின் சார்பாக மீண்டும் வலியுறுத்துகின்றேன். 46/1 தீர்மானத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரித்த போதிலும், எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கான இலங்கையின் விரிவான எழுத்துப்பூர்வ பதிலை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். சிறந்த நடைமுறைகளுக்கு அமைய, அறிக்கைக்கான ஒரு சேர்க்கையாக இலங்கையின் கருத்துக்கள் வைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தலைவர் அவர்களே, சமீப காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நாங்கள் நன்கு அறிந்தவர்களாகவும், அது குறித்து உணர்ச்சிபூர்வமானவர்களாகவும் இருக்கின்றோம். உள்ளக மற்றும் வெளிப்புறக் காரணிகளால் உருவாகும் கடுமையான பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்கும் பல படிப்பினைகளை வழங்குகின்றது. வியன்னா பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மையை இந்தச் சூழலில் நினைவு கூர்கின்றோம். எமது மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார இன்னல்கள் குறித்து அரசாங்கம் மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக உள்ள அதே வேளையில், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதன் மூலம் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்களது நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் உடனடியான பல்நோக்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நெருக்கடியின் பாதகமான பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்காக ஐ.நா. முகவர் மற்றும் இருதரப்புப் பங்காளிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது. பல சவால்கள் இருந்தபோதிலும், நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு முயற்சிக்கும்.

எமது நீண்டகால ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு சமீபத்திய மாற்றங்கள் சாட்சியமளிக்கின்றன. அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் கருத்துத் தெரிவிப்பதற்குமான அரசியலமைப்பு உரிமைகள், எமது மக்கள் தமது உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஜனநாயக இடத்தை உத்தரவாதப்படுத்தியது. இது சம்பந்தமாக, குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் விளையும் சட்டத்தின் மீறல்கள், சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு இணங்க, அத்தகைய சுதந்திரங்கள் ஜனநாயகமற்ற அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள கூறுகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சூழ்நிலைகளில் தீர்க்கப்பட்டன.

தலைவர் அவர்களே, கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைத் தொடர்வதில் இலங்கை உறுதியாக உள்ளது.

இந்த சபையின் பல உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையும் 46/1 தீர்மானத்தை எதிர்த்துள்ளதுடன், அதன் சட்டபூர்வமான தன்மை மற்றும் நோக்கங்களுடன் அடிப்படையில் உடன்படவில்லை. தீர்மானத்தின் உள்ளடக்கம், குறிப்பாக அதன் செயற்பாட்டுப் பந்தி 06, இலங்கை மக்களின் இறையாண்மை மற்றும் ஐ.நா. சாசனத்தின் கோட்பாடுகளை மீறுவதாகக் குறிப்பிட்டு நாங்கள் அதனை தொடர்ச்சியாக எடுத்துரைத்துள்ளோம். மீண்டுமொருமுறை, தீர்மானம் தொடர்பான எந்தவொரு தொடர் நடவடிக்கைகளையும் மற்றும் அது தொடர்பாக உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களையும் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

தலைவர் அவர்களே, உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது ´பொருளாதாரக் குற்றங்கள்´ குறித்து விரிவாகக் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. இந்த வார்த்தையின் தெளிவின்மைக்கு அப்பால், அத்தகைய குறிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையை மீறுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தீர்மானங்கள் 60/251, 48/141 மற்றும் ஐ.பி. தொகுப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுகூருகின்றோம்.

இருந்த போதிலும், நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் நிறுவப்பட்டு வரும் விரிவான சட்டக் கட்டமைப்பு குறித்து இலங்கை தொடர்ந்தும் சபைக்கு விளக்கமளித்துள்ளது. அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதுடன், இது ஜனநாயக நிர்வாகத்தையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும் மற்றும் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரசியலமைப்பு அங்கீகாரம் உட்பட, பொது ஆய்வு, நிர்வாகத்தில் பங்கேற்றல் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுதல் போன்வற்றை வலுப்படுத்தும். இதில், அரசியலமைப்பு சபையின் அமைப்பு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வு சேவை ஆணைக்குழுவை மீண்டும் அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். உத்தேச சட்டக் கட்டமைப்பானது, சொத்துப் பிரகடன முறையை வலுப்படுத்தி, நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்துவோரின் உரிமைகளைப் பாதுகாத்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சுதந்திரத்தை அதிகரிக்கும். பொது நிறுவனங்களில் மோசடி, விரயம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டறிந்து தடுப்பதன் மூலம் அரசாங்க செலவினங்களை மேற்பார்வையிடும் ஒரு ஆய்வாளர் நாயகம் போன்ற ஒரு அமைப்பை நிறுவுவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது.

தலைவர் அவர்களே, உள்நாட்டு நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டுமானால், அது சம்பந்தப்பட்ட நாட்டுடனான ஒத்துழைப்பின் அடிப்படையில், அதன் மக்களின் அபிலாஷைகளுடன் இணக்கமாக, அதன் அடிப்படை சட்டக் கட்டமைப்பிற்கு இணக்கமாக இருக்க வேண்டும். அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் ஊடுருவும் வெளி முயற்சிகள் மீண்டும் மீண்டும் நாட்டில் அர்த்தமுள்ள முடிவுகளைத் தரத் தவறிவிட்டன என்பதையும், அவை உறுப்பு நாடுகளின் வளங்களில் பயனற்ற விரயத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் சர்வதேச சமூகம் அறிந்திருக்கின்றது.

அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கும். இலங்கையின் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு பொருந்தக்கூடிய அத்தகைய மாதிரியின் வரையறைகள் கலந்துரையாடப்படுகின்றன.

´முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புக்களின் மதிப்பீடு மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி´ தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு ஆலோசனைக் குழுவை நிறுவுதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் முற்போக்கான திருத்தங்கள் மற்றும் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கு வழிவகுத்துள்ளன. மேலதிக பரிந்துரைகள் காத்திருக்கின்றன.

இந்த ஆண்டு, மிகவும் கடினமான பணியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மீளாய்வை நாங்கள் வழங்கியதால், மனித உரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப மிகவும் விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டமாகக் கொண்டு வருவோம். குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியல் அண்மையில் நீக்கப்பட்டமை ஆக்கபூர்வமான உரையாடலுக்கு மேலும் உத்வேகத்தை வழங்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும், இழப்பீடுகளை வழங்குவதற்கும் நிறுவப்பட்ட சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்புக்கள், அந்தந்த ஆணைகளைத் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்படுத்துகின்றன.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விசாரணை மற்றும் சரிபார்ப்பு செயன்முறையைத் தொடங்கியுள்ளதுடன், தடயங்களுக்கானதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப ஆதரவு தொடர்பானதுமான தனிப் பிரிவுகளை அமைத்து, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகளில் பார்வையாளராக செயற்படுகின்றது.

பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இழப்பீடுகளுக்கான அலுவலகம் அதன் ஆணையைத் தொடர்ந்தும் வழங்குவதுடன், அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இழப்பீட்டுக் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள் பண இழப்பீட்டிற்கு அப்பால், ஏனைய வகையான ஆதரவை நோக்கி அலுவலகத்தின் பணியை விரிவுபடுத்தியுள்ளன. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான ஆதரவும் வளங்களும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

அனைத்து சமூகங்களையும் தலைமுறைகளையும் உள்ளடக்கிய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அணுகல் வெளிநாட்டிலுள்ளஇலங்கையர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் விரிவுபடுத்தப்படும் என்பதுடன், இதன் மூலம் மேலதிகமான தீவிர ஈடுபாட்டிற்கு உதவிகள் வழங்கப்படும்.

தலைவர் அவர்களே, உலகளாவிய பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, மனித உரிமைகள் ஒன்றுக்கொன்று சார்ந்தவையும், ஒன்றோடொன்று தொடர்புடையவையும் மற்றும் பிரிக்க முடியாதவையுமாகும். மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில், ஏனைய நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் கிடைக்கும் கணிசமான நிபுணத்துவத்திலிருந்து நாம் பயனடைந்துள்ளோம். நாங்கள் தொடரும்போது, அவசியமான சந்தர்ப்பங்களில் சிறந்த நடைமுறைகள் குறித்து மேலதிக ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறுவோம்.

மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடனான எமது ஒத்துழைப்பை மேலும் தொடருவோம். இலங்கையானது 9 முக்கிய மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் அங்கம் வகிப்பதுடன், ஐ.நா. சாசன அமைப்புக்களுடன் வழக்கமான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைப் பேணி வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் இலங்கைக்கு வருகை தருமாறு நாங்கள் நிலையான அழைப்பை விடுத்துள்ள அதே வேளையில், சமீப காலங்களில் அத்தகையோரின் அதிக எண்ணிக்கையிலான விஜயங்களுக்கு வசதிகளை வழங்கியுள்ளோம். உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறையின் மூலம் சபையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை எதிர்பார்க்கின்றோம். உலகளாவிய காலாந்தர மீளாய்விலான எமது கடமைகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்பதுடன், வரவிருக்கும் நான்காவது சுழற்சி உலகளாவிய காலாந்தர மீளாய்வில் முன்கூட்டியே ஈடுபடுவோம்.

இந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான இரண்டு விஜயங்களுக்கு நாங்கள் தடையற்ற அணுகலை வழங்கினோம். இந்த விஜயங்கள் பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கும் முன்னேற்றத்தைக் காண்பதற்குமான வாய்ப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு வழங்கியது.

தலைவர் அவர்களே, இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பின்னர் தமது சொந்த அபிலாஷைகளுடன் புதிய தலைமுறை உருவாகியுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள் உள்நாட்டு செயன்முறையின் மூலம் விரிவாகக் கையாளப்படும் அதே வேளையில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சபையின் நிகழ்ச்சி நிரலில் தொடரும் இந்தத் தீர்மானத்தின் பாதையை யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கும், அது இலங்கை மக்களுக்குப் பலனளித்ததா என்பதைப் பற்றிய யதார்த்தமான மதிப்பீட்டையும் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. களத்தில் உண்மையான முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டு இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தற்போதைய சவால்கள் வலிமையானதாக இருந்தாலும், எமது மக்களின் முன்னேற்றத்திற்காக நிறுவன மாற்றத்தை நோக்கிச் செயற்படுவதற்கான தனித்துவமான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சவாலான நேரத்தில் எமது நண்பர்கள் மற்றும் பங்காளிகள் வழங்கிய ஒற்றுமை மற்றும் ஆதரவை இலங்கை பாராட்டுகின்றது. ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது ஆரம்ப உரையில், ´நாம் ஒன்றுபட்டால், தேசத்தை உற்சாகப்படுத்த முடியும்´ எனக் குறிப்பிட்டார்.

தலைவர் அவர்களே, பல சவால்களின் ஊடாக, ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான இலங்கையில், அதன் மக்கள் தமது ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அதே வேளையில், உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சியுடன் உள்ளனர். எங்களுடைய சவால்களை ஒப்புக்கொண்டு, புதிய வீரியத்துடன் முன்னேறுவதற்கு நாங்கள் தயங்குவதில்லை. எமது உடனடியான அக்கறையாக பொருளாதார மீட்சி விளங்கினாலும், எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதும் அதற்கு சமமான முன்னுரிமையாகும். இந்தப் பாதையில் நாம் செல்லும்போது, இந்த சபையின் உண்மையான ஆதரவையும் புரிதலையும் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை மீதான ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தல் !

இலங்கை மீதான ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன.

சர்வதேச மன்னிப்புசபை, ஃபோரம் ஏசியா, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு ஆகியவையே வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான, தற்போதைய ஆணைகளை வலுப்படுத்தும் மற்றும் நாட்டின் சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் வகையில் வலுவான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று குறித்த நான்கு அமைப்புக்களும், பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது உட்பட, நடப்பு துஷ்பிரயோகங்களுக்குத் தீர்வு காணவும் இலங்கைக்கு இந்தத் தீர்மானத்தின் மூலம் அழைப்பு விடுக்க வேண்டும்.

இலங்கை, கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையில் கடந்தகால சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக நீதியைக் கோரி வருகின்றனர். அதே நேரத்தில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறி, பொறுப்புக்கூறலைத் தடுத்து, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை உயர் பதவிக்கு உயர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில், இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இலங்கை தொடர்பான தமது அறிக்கையில்,ஆழ்ந்த இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் இல்லாமை, தண்டனையின்மை என்பன கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை உருவாக்கியது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் விபரித்துள்ளார்.

எனவே இலங்கைக்குள் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்களை சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணை செய்ய வேண்டும் என்றும், வெளிநாடுகளில் உள்ள திருடப்பட்ட சொத்துக்களை கண்டுபிடித்து முடக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

2019 ஏப்ரல் 21 தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொலையுண்டமை தொடர்பான விசாரணைகளில் சர்வதேச பங்கிற்கு அழைப்பு விடுத்த உயர்ஸ்தானிகர், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பங்கு குறித்து பதிலளிக்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், இடைக்காலத்தில் அதன் பயன்பாட்டிற்கு உடனடித் தடை விதித்தல், சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்தல், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்நோக்காத அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபையின் தெற்காசிய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா கோரியுள்ளார்.

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்தன.எனினும் அவை முறியடிக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

எனவே உறுப்பு நாடுகள் இலங்கைக்கு அதன் உறுதிப்பாடுகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் மற்றும் நடப்பு துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாமினி மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.