11

11

இலங்கை விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் – சமந்தா பவர்

நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.

நேற்றையதினம் (10) இலங்கை வந்தடைந்த அவர், ஜா எல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இங்குள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததாகவும், எரிபொருள் நெருக்கடி, உரமின்மை காரணமாக விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, இலங்கை விவசாயிகளின் தேவைகளுக்காக அமெரிக்க மக்களிடமிருந்து மேலதிகமாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாகவும், இதன் மூலம் 1 மில்லியன் உள்ளூர் விவசாயிகள் உரம் மற்றும் அவர்களுக்கு அவசியமானவற்றை பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இந்த புதிய நிதியானது, அடுத்த பயிர்ச்செய்கைப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விவசாயத் தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவும் வகையிலும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார்.

நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில், இலங்கைக்கு நிதி உதவி வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியுள்ள சமந்தா பவர், அமெரிக்கா இந்தியா மற்றும் இலங்கை மக்களின் அனைத்து நண்பர்களுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக வலியுறுத்தினார்.

IMF திட்டம் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், IMF உடனான ஈடுபாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்றும், IMF திட்டத்தைப் பெறுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும், பூர்வாங்க ஒப்பந்த நிலையை எட்டியுள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டில் கடன் தொல்லைகள் கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகவும், அரசாங்கமும் இலங்கையர்களும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த தேவையான கடனை எவ்வாறு பெறுவது என்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

 

அமைச்சர் ஒருவரின் தொலைபேசிக்காக மட்டும் சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவு – அனுரகுமார விசனம் !

தற்போதைய அமைச்சரவையானது குறுக்கு வழியில் நிற்கும் விரட்டியடிக்கப்பட்ட கால்நடைக் கூட்டம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தொலைபேசிக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. அரச நிதியில் அவர்கள் சுகபோகமாக இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஜோடியாக குடைகளுக்குள் செல்வதால் கலாசார சீர்கேடு என்கிறார் யாழ். மாநகர சபை உறுப்பினர் !

யாழ். ஆரியகுளமானது தற்போது கொழும்பு காலிமுகத்திடலை விட மிக மோசமான அளவிற்கு சென்று கொண்டிருப்பதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார்.

ஆரியகுளத்து சூழலில் ஜோடியாக குடைகளுடன் சென்று பொழுத்தினை கழிக்க அனுமதிக்கின்றார்கள், இது ஒரு கலாசார சீர்கேட்டிற்கு ஆரம்பமாகும்.

பண்ணை கடற்கரை இதே போன்று பண்ணை கடற்கரையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது. மகிழ்வீட்டுத் திடல் என்று சொல்லக்கூடிய அவ்விடத்திற்கு குடும்பத்துடன் சென்று பொழுதினை கழிக்க வேண்டுமே தவிர இவ்வாறான அநாகரிகமான செயல்களை யாழ். நகர மத்தியில் நடத்துவது என்பது தவறானதாகும்.

எதிர்காலத்தில் எங்கள் சமுதாயத்தினருக்கு இவ்வாறான விடயங்கள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது தொடர்பாக இனி வருகின்ற கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகவும்  சுட்டிக்கட்டியுள்ளார்.

………………………

யாழ்பாணத்தில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே தீவிரமடைந்துவருகிறது, இது போக தனியார் கல்வி நிறுவனங்களின் அதிகரிப்பால் இலவச கல்வியின் தரம் சீர்கெடுகிறது, பாடசாலைகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மேலோங்கியுள்ளன இவையெல்லாம் இந்த அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. மொழி – மதம்-கலாசாரம் என பழைய புராணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டு இன்னமும் இந்த தமிழ்சமூகத்தை பாதாளத்துக்குள் தள்ளத்தான் பார்க்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். மாநகர சபை உறுப்பினர் கூறுவது போல கலாச்சார சீரழிவுகள் எவையும் இடம்பெறுவதாக குறித்த பகுதியில் தெரியவில்லை. அது பொழுதுபோக்கு இடமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காதலர்கள் வருவதும் வழமையாகியுள்ளது. பண்ணை கடற்கரை பகுதியிலும் இதே நிலை தான். இது தவிர யாழ்ப்பாண பல்கலைகழக காதல் ஜோடிகள் அதிகமாக உலா வருகின்றனர். இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் கூறுவது போல கலாச்சாரத்தை சீரழிக்க தான் வருகிறார்கள் என்றால் ரகசியமான பல இடங்களுக்கு அவர்கள் செல்ல முடியும். பொதுவெளிக்கு ஏன் வரவேண்டும் என்ற அடிப்படையைான சிந்தனை கூட இல்லை.

ஒரே குடையில் செல்வதால் யாழ்ப்பாணத்து சமூனம் சீரழிந்து விட்டது என கூறும் இந்த அரசியல்வாதிகள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் – இஅதனால் ஏற்பட்ட – ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அபத்தங்கள் பற்றியெல்லாம் பேசுவது இல்லை. ஏதாவது ஒரு கிழமைக்கான ஊடக அறிவிப்பை வெளியிட்டு தங்களுடைய பெயர்களை நினைவுபடுத்துவதே இந்த வகையறா அரசியல்வாதிகளின் நோக்கம் மற்றும் படி சமூகமாற்றம் எல்லாம் துளியுமில்லை.

ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடர் – சம்பியனானது இலங்கை அணி !

ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை அணி 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. 67க்கு 43 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணியை இலங்கை அணி வீழ்த்தியது. இதேவேளை , மற்றைய அரையிறுதி போட்டியில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் மலேசியவை வீழ்த்திய சிங்கப்பூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தது.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்ற இலங்கை அணி 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் வெற்றியாளரானது. அதேநேரம், தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மகளிர் வலைப்பந்து தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறிய 500 இலங்கை வைத்தியர்கள் – அதிருப்தியில் சுகாதார அமைச்சு !

கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலைமை பாரதூரமான விடயம் எனவும் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன் காரணமாக இராஜினாமா அறிவித்தல் விடுத்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார். வைத்தியர்கள் நாட்டைவிட்டு செல்வது நாட்டின் சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை – யாழில் குடும்ப உறவுகளையும் சீரழிக்க ஆரம்பித்துள்ள போதைப்பொருள் கலாச்சாரம் !

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே அதிகரித்லு வருகின்றது. வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை இந்த போதைப்பொருள் பாவனை மிகத் தீவிரமடைந்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள் மற்றும் ஊசி போதைப்பொருள் பாவித்ததால் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் வாள்வெட்டு – வன்முறை கலாச்சாரத்தை தூண்டிவருகிறது.

இந்த போதைப்பொருள் பாவனையை தடுக்க வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரோ – கல்விகற்ற சமூகத்தினரோ – சமூக அமைப்புக்களோ எந்த நடவடிக்கைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொள்ளவில்லை.  அன்றாடம் செய்திகளில்  நாம் காணும் – இலகுவாக நாம் கடந்து செல்லும் செய்திகளில் உள்ள ” யாழ்.கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது, மாணவனிடம் இருந்து ஐஸ்போதைப்பொருள் மீட்பு, இளைஞர்களிடையே வாள்வெட்டு” என ஏதேனும் ஒரு செய்தி சரி காணப்படும். அந்தளவிற்கு நமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மலிந்துவிட்டது.

தொடர்ந்து தீவிரமடையும் இந்த போதைப்பொருள் பாவனையின் விளைவு வடக்கிலுள்ள குடும்ப உறவுகளையும் சீரழிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் போதைப்பொருள் பாவித்த சகோதரன் தன்னுடைய சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியால் சகோதரி உயிரை பார்த்துக்கொண்ட கொடூரம் நமது சமூகத்தில் தான் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்;

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வீடொன்றில்  போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய 20 வயதுடைய இளம் பெண் (11.09.2022)  இன்று தன்னுடைய உயிரை மாய்த்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இது குறித்து மூத்த சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதன் வெளிப்பாடே இந்த சம்பவமுமாகும். வழமை போல் சில தினங்களுக்கு ஊடகங்களும் இதைப்பற்றி பேசிவிட்டு புதிய பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் அதன் பின்னால் ஓட  ஆரம்பிப்பார்கள்.

ஆனால் இது நாம் எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க – போதைப்பொருள் அற்ற சமூதம் ஒன்றை உருவாக்க நாம் விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் என யாருமே சிந்திப்பது கிடையாது. இந்த சுயநல மனோநிலையின் வெளிப்பாடே யாழில் நடந்து கொண்டிருக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களின் நீட்சியும் – பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சியுமாகும்.

இந்த போதைப்பொருள் பாவனை பிரச்சினை புதிய வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை.

இது தொடர்பில் யாழ்ப்பாண பகுதியில் உள்ள பொலிசாரும் – பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும்  விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

இப்போதும் நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.