10

10

அரச ஊழியர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் 60 வயதை அடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.” – துமிந்த திஸாநாயக்க

சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பிரதேச சபையில் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலங்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச போக்குவரத்து சேவை நட்டமடைவத்கு அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும்.அரசியல்வாதிகள் தங்களின் சுய தேவைகளுக்காக அரச நிறுவனங்களை நட்டமடைய செய்துள்ளனர். அரசியல் நியமனங்களினால் இன்று அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.தற்போதைய நிலைக்கமைய அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

ஆனால் தனியார் மயப்படுத்த கூடாது.அரச நிறுவனங்கள் நட்டமடைவதற்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டும். அரச ஊழியர்கள் 60 வயதுடன் ஓய்வு பெறுவதை போன்று அரசியல்வாதிகளும் 60 வயதை அடைந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற வேண்டும். 60 வயதிற்கு பிறகு அரச சேவையாளர்களால் சேவையாற்ற முடியாது என்று குறிப்பிடப்படுகிறது. 60 வயதிற்கு பிறகும் அரசியல்வாதிகளினாலும் சேவையாற்ற முடியாது.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய தேவைக்காகவே அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகிறார்கள். அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அரசியல்வாதிகள் முதலில் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என்றார்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தை ஹக் செய்த பாடசாலை மாணவன் – திணறும் பரீட்சை திணைக்களம் !

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தை ஹக் செய்த பாடசாலை மாணவன் குற்றப் புலனாய்வு பிரிவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த மாணவர் இணையத்தளத்தை ஹக் செய்து , ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளை திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தினை போல தான் தனியான இணையத்தளத்தை அமைத்திருந்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவரின் இணையப் web portal ஹக் செய்த பின்னர் , அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 5,000 மாணவர்கள் குழுவைக் கொண்ட டெலிகிராம் குழுவிற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர் .

சுமார் 5,000 மாணவர்கள் குழுவைக் கொண்ட டெலிகிராம் குழுவிற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியர்கள். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இருப்பதாக குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. சகோதரிகளில் ஒருவர் பல்கலைக்கழகத்திலும் , மற்றைய சகோதரி உயர்தர வகுப்பிலும் படித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளியாகியுள்ள உயர்தரமாணவரகளின் பெறுபேறுகள் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து பல தரப்பினரும் கேள்விகளை எழுப்பியவண்ணமுள்ளனர்.

இந்த நிலையில் , வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் எனவும் பரீட்சை திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகள் 100 வீதம் சரியானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ஜி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த காலியில் உள்ள பாடசாலையொன்றின் உயர்தர மாணவன் சில சட்டவிரோத செயலில் ஈடுபட முற்பட்டுள்ளதாகவும் சட்ட திணைக்களத்தினால் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

எனவே, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்னமும் சரியாக வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்திடம் விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் பெறுபேறுகள் பத்திரமாக இருப்பதாகவும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் குடியிருப்பு வீடொன்றில் தாயும் மகளும் படுகொலை !

பதுளை ஹிங்குருகம கெலன்பில் தோட்டத்தில் இரு வயோதிப பெண்கள் கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர் குடியிருப்பு வீடொன்றில் வசித்து வந்த 83 மற்றும் 55 வயதுடைய தாயும் மகளுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 62 வயதுடைய மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரே இவர்களை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

“ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு தருவார்.”- ஜெனீவா சென்றுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ !

“ரணில் அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீரும்.” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரசாங்க குழுவிலுள்ள முக்கியஸ்தரான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளும், ஒத்துழைப்புக்களும் கட்டாயம் தேவை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் புலம்பெயர் தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கமாகச் செயற்பட முடியாது என்று தெரிவிக்கப்படும் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓர் ஒழுங்குமுறையில் தீர்வுகளைக் காணும் பணியை அரசாங்கம் முன்னெடுக்கும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீரும்.

மேலும் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நல்ல தீர்வு முன்வைக்கப்படும். அந்தக் கைதிகளில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். அத்துடன் காணி விடயம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி நடத்திய பேச்சின் போது இதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

சத்துருக்கொண்டான் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு !

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை மாலை (09) சத்துருக்கொண்டான் சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம் வளாகத்திற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக உள்ளுர் மக்கள் கருதுகின்றார்கள்.

படுகொலைக்களத்திலிருந்து ஒருவர் மட்டும் உயிர்தப்பி நடந்தவற்றைக் கூற சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் வெளி உலகத்துக்குத் தெரியவருகிறது.

அப்போது திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயராக இருந்தவரும் மட்டக்களப்பு சமாதானக் குழுவின் உறுப்பினருமாக இருந்த கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை சம்பவம் நடந்த மறுதினம் இராணுவத்தின் துணையுடன் படுகொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்றிருக்கிறார். “முழுவதும் எரியூட்டப்பட்டிருந்தது. ஆனால், முழுவதும் எரியாத நிலையில் தலைகள், உடல் அங்கங்கள் கிடந்தன. அப்போது, என்னை அழைத்துச் சென்ற இராணுவ கர்ணல் பேர்சி பெர்ணான்டோ, “எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. எங்களுடைய ஆட்கள்தான் செய்திருக்கிறார்கள். எனவே, நான் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக தற்போது ஓய்வுநிலையில் இருக்கும் முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அன்று நடந்ததை  பகிர்ந்துகொண்டார்.

படுகொலை சம்பவம் இடம்பெற்ற ‘போய்ஸ் டவுன்’ இராணுவ முகாமிலிருந்து கால் மைல் தூரத்தில், குளக்கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் சாப்பைப் புற்காட்டில் உயிர்ப்பயத்துடன் மறைந்திருந்தவாறு, அலறல் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்த இரத்தினஐயாவும் அன்று கண்ட சம்பவத்தை  பகிர்ந்துகொண்டார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவ அதிகாரியான கேர்ணல் பேர்சி பெர்ணான்டோ இந்த சம்பவத்தை மறுதலிக்கும் வகையில் சாட்சியமளித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்று 32 ஆண்டுகளாகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய் – யாழில் கையெழுத்துப்போராட்டம் !

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று (10) காலை 10 மணி அளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும் சென்று அம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோரும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவான், சி.வீ.கே.சிவஞானம், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் கி. சேயோன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த ஊர்திவழிப் போராட்டம் மூலம் 3 நாட்களுக்கு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கையெழுத்தை சேகரிக்கவுள்ளதுடன் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

“தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக அமைச்சுக்களை வழங்கிய ரணில்.” – விமல் வீரவன்ச

“தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராஜாங்க அமைச்சுக்களை வழங்கியுள்ளார். இதனால் சர்வக்கட்சி அரசாங்கத்தை இனி ஸ்தாபிப்பது சாத்தியமற்றது“  என மேலவை மக்கள் கூட்டணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மேலவை இலங்கை கூட்டணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.வாழ்க்கை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறன்றன. பொருளாதார நெருக்கடிக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எதுவும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லவில்லை.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களினால் நாடும் ,நாட்டு மக்களும் பல்வேறு நெருக்கடிகளை தற்போது எதிர்கொள்ள நேரிட்டது.

பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமர்று முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு விடுத்த கோரிக்கை பயனளிக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது பதவிக்கு ஏற்றாட் போல் ஆரம்பத்தில் செயற்பட்டிருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.

தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 37 பேருக்கு இராஜாங்க அமைச்சுக்களை வழங்கியுள்ளார்.எதிர்வரும் நாட்களில் பலருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அமைச்சரவை அமைச்சுக்களை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளோம்.ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட்டால் நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கும் என்றார்.

இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்ல மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி – நாமல்ராஜபக்ச

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார்.

தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான தலைமைத்துவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். அதற்கான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் புதிய அரசராகிறார் மூன்றாம் சார்லஸ் !

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.

பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான். பிரிட்டன் அரச தம்பதி மறைந்த பிலிப் – ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை அடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ்.

எலிசபெத்தின் மறைவை அடுத்து, பட்டத்து இளவரசரான சாா்லஸ் (73) பிரிட்டனின் அடுத்த மன்னரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சாா்லஸ் உடனடியாக அடுத்த மன்னரானார். எனினும் இன்று அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவா் 3 ஆவது சாா்லஸ் என அழைக்கப்படுவாா் என்றும் கூறப்பட்டுள்ளது.

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது தந்தை ஆறாம் ஜாா்ஜ் மறைவைத் தொடா்ந்து, 1952 இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமா்களை அவா் நிா்வகித்துள்ளாா்.

95 வயதிலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் அவா் மீண்டு வந்தாா். இந்நிலையில், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்தாா். ராணியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தாா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற லிஸ் டிரஸ்ஸை நேரில் அழைத்து அரசி எலிசபெத் சந்தித்ததுதான் கடைசி நிகழ்வாக அமைந்தது. அதன் பின்னா் எலிசபெத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லிஸ் டிரஸ்ஸின் முழு அமைச்சரவை பதவியேற்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எலிசபெத் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை அறிவித்தது. ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடல்நிலை குறித்து அறிந்து, ராணியின் மகனும் பட்டத்து இளவரசருமான சாா்லஸ், அவரது மனைவி கமீலா, பேரன் வில்லியம் ஆகியோா் பால்மரால் விரைந்தனா். இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏராளமானோா் கூடினா்.

எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. எலிசபெத்தின் கணவா் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி தனது 99 ஆவது வயதில் காலமானாா்.

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐ.நாவுக்கு வலியுறுத்துகிறது சர்வதேச மன்னிப்புச் சபை !

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான தற்போதைய பொறுப்புக்கூறல் திட்டத்தை வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கு இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பொறிமுறைகளின் அவசியத்தை உணர்ந்து, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளைசர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.