24

24

“16 கோடிக்கு தகுதியானவர் இல்லை கிறிஸ்மோரிஸ்.” – கெவின் பீட்டர்சன்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனவர் கிறிஸ்மோரிஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25(இந்திய ரூபாய்)  கோடிக்கு ஏலம் எடுத்தது.

எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.

இந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. மற்ற ஆட்டங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதேபோல பந்து வீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய ரூ.16 கோடி அதிகம் என நினைக்கிறேன். அந்த தொகைக்கு அவர் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்ததை மோரிஸ் தற்போது உணர்ந்து வருகிறார். அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்க மாட்டார்.

நாம் அவரைப் பற்றி அதிகமாக பேசுகிறோம் என நினைக்கிறேன். 2 போட்டிகளில் ரன் அடிப்பார். சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார். இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.

34 வயதான கிறிஸ் மோரிஸ் 4 ஆட்டத்தில் 48 ரன்களே எடுத்துள்ளார். 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இலங்கை அணித்தலைவர் கருணாரட்ண இரட்டைச்சதம் !

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது கன்னி இரட்டைச் சதத்தை இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரட்ண பதிவு செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த 11 ஆவது இலங்கையர் என்ற சிறப்பை திமுத் கருணாரட்ண பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னதாக பிரெண்டன் குருப்பு, அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம, மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, ஹஷான் திலகரட்ண, குமார் சங்கக்கார, திலான் சமரவீர, அஞ்சலோ மெத்தியூஸ் ஆகிய 10 வீரர்கள் இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசியவர்களாவர்.

இலங்கை சார்பாக குவிக்கப்பட்ட இரட்டைச் சதங்களில் குமார் சங்கக்கார 12 இரட்டைச் சதங்களையும் மஹேல ஜயவர்தன 7 இரட்டைச் சதங்களையும் மார்வன் அத்தப்பத்து 6 இரட்டைச் சதங்களையும் சனத் ஜயசூரிய 3 இரட்டைச் சதங்களையும் பெற்றுள்ளனர்.

மேலும், அரவிந்த டி சில்வா, திலான் சமரவீர இருவரும் தலா 2 இரட்டைச் சதங்களை பெற்றுள்ளனர்.

ஏனையோரில் பிரெண்டன் குருப்பு, ரொஷான் மஹாநாம, அஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரட்ண ஆகியோர் தலா ஒரு முறை இரட்டைச் சதங்களை விளாசியுள்ளனர்.

இந்நிலையில் பங்களாஷே் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று போதிய வெளிச்சமின்மை காரணமாக 4.50 மணியளவில் இடைநிறுத்தப்பட்டது.

பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் திமுத்து கருணாரத்தன 234 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

இந்நிலையில், நாளை 5 ஆவதும் இறுதியும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

“மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை.” – மைத்திரிபால சிறிசேன

“மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை.” என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் மே தின நிகழ்வை நாம் தனியே நடத்துவது என்று அறிவித்திருந்தோம். ஆனால், மே தின நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் மேற்பார்வையில் இயங்கும் கொரோனாத் தடுப்புச் செயலணியே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்தச் செயலணி இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தது. அதன் பின்னர் மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கொரோனாதான் காரணம் எனில் அதை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேரணிகள் அல்லாமல் சிறு கூட்டங்களுடனாவது அந்த நிகழ்வை நடத்துவதற்கு அரசு அனுமதித்திருக்கவேண்டும்.

அரசின் இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் அரசுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என்று எதிரணியினரும், ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அரசு எடுத்த இந்தத் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு இலட்சத்து 517ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 94 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளதுடன், தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 638ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 724 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் கொரோனா பாதிப்பு வரிசையில் நோர்வேக்கு அடுத்து 89ஆவது நாடாகவும் இலங்கை பதிவாகியுள்ளது.

“இந்த அரசு தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“இந்த அரசு தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது.”  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

“உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்பதை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் அரசு இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்களும் 2009ஆம் ஆண்டுமுதல் வலியுறுத்துகின்றனர். இதன் ஊடாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளே பொருத்தமானதாக அமையும் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணத்தை அரசு வழங்கியுள்ளது.

நானும் எனது கட்சியும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள். இது தொடர்பில் நீதிமன்றில் போராடினோம். நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தோம். அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்டே எமக்கு எதிரான பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நான் தனிப்பட்ட ரீதியில்  குற்றம் சாட்டப்பட்டிருந்தேன். பின்னர்  விடுவிக்கப்பட்டேன். பின்னர் எனது நண்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நாட்டில் மோசமான ஒரு கலாசாரம் உள்ளது. அமையும் ஒவ்வொரு அரசும்  முன்னைய அரசுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே  அது. தற்போதுள்ள அரசு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கி நியாயமான தீர்ப்பு முறையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. அரசானது நீதிமன்றத்துக்குச் செல்லாது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாது முந்தைய அரசின் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆணைக்குழுவின் ஊடாக தீர்வுகாண முற்படுகின்றது.

இப்போது நடப்பதைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவர். கடந்த சில ஆண்டுகளாகக் கையாளப்பட்ட நீதித்துறை முறைமையற்றது என விளங்கியுள்ளது. இந்த அரசு தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் சர்வதேச சமூகத்துக்கு இதனை அரசு நிரூபித்துக்கொண்டிருக்கின்றது.

போரின்போது தமிழ் மக்களுக்கு மிகவும் பாரதூரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்த விசாரணை ஆணைக்குழுவின் ஆணை அதிகார வேறாக்கத்தைதயும் சட்ட விதியையும் மீறுவதான அல்லது அதற்கு முரணானதாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களின் சுயாதீன தன்மைகளை மூழ்கடித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவியமைக்காவே ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.” – அமைச்சர் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையின் பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் துரிதமாக கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரன் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவியமை , அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பாக நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன. அந்த விசாரணை அறிக்கைகளின் எட்டு பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த அறிக்கைகளில் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

“இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.” – பிரித்தானிய போரிஸ் ஜோன்சன்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்வால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரித்தானியா  பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போரிஸ் ஜோன்சன் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மிகக்கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீனும் அவருடைய சகோதரும் கைது !

நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரான ரியாத் பதியுதீன் ஆகியோர் சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Spotlight on the Bathiudeen brothers - The Morning - Sri Lanka News

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.