23

23

அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700 பேர் கைது !

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷ்யா முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) போராட்டங்கள் நடைபெற்றன.

தலைநகர் மாஸ்கோ, விளாடிவோஸ்டாக், சைபீரியாவின் பல நகரங்கள் மற்றும் மத்திய நகரமான விளாடிமிர் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 நகரங்களில் கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 804 பேரும், யூரல்ஸ் நகரமான உஃபாவில் 119 பேரும் உட்பட 1,782பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், மற்ற கைதிகள் போலவே நவல்னியும் நடத்தப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் கண்டனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

“ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருகின்றது.” – கலாநிதி வே. இராதாகிருஷ்ணன்

“ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருகின்றது.” என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் தொழில் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது. அதுமட்டுமல்ல தொழில் சுமைகள் எதுவும் அதிகரிக்கப்படாமலேயே ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் சம்பள உயர்வு விவகாரத்தில் இன்று சூழ்ச்சி இடம்பெற்று​ வருகின்றது.

ஒரு நாள் பெயருக்கு 18 கிலோ கொழுந்தே பறிக்க வேண்டும். அந்த அளவை 20 கிலோவாக அதிகரிப்பதற்கு கம்பனிகள் முயற்சித்து வருகின்றன. தொழிலாளர்களையும் வற்புறுத்துகின்றன. இந்நிலையில் தோட்டத் தலைவர்களை அழைத்து, 20 கிலோ பறிக்குமாறு இ.தொ.கா. அழுத்தம் கொடுத்துள்ளது. எனவே, தோட்டக் கம்பனிகளுடன் மீண்டும் உறவு வைத்து இ.தொ.கா. இவ்வாறு செய்கின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு குறித்து முடிவு எடுக்கப்படும் என தோட்டக்கம்பனிகள் கூறின. இன்று மாறுபட்ட கருத்தை முன்வைத்து வருகின்றன. 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு தொழிலாளர்களை கம்பனிகள் நிர்ப்பந்தித்து வருகின்றன. இதனால் மக்களும் குழம்பிபோயுள்ளனர். அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளது. அதன்பின்னர் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம்.

தற்போது எடுக்கப்படும் 18 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டாம் என தொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். தொழிலாளர்களுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.

“கையெடுத்துக்கும்பிட்டு கேட்கின்றேன். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வேண்டுகோள் !

எதிர்வரும் வார இறுதியில் நீண்ட விடுமுறை இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக அனர்த்த நிலையை புரிந்துகொண்டு தேசிய பொறுப்பாக கருதி செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று (23.04.2021) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தினங்களில் மத வைபவங்கள் இடம்பெறவுள்ளன. புத்தாண்டு வைபவங்களையும் நடத்துவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் இந்த அனைத்தையும் நிறுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் காணப்படும் கொவிட் 19 வைரஸ் புதிய திரிபு ஆகும். இது முன்னைய வைரசிலும் பார்க்க மாற்றத்தைக் கொண்டதாகும். சுனாமியைப் போன்று வேகமாக தற்பொழுது இந்தியா போன்ற நாடுகளில் பரவி வருகின்றது. இது எந்த வகை வைரஸ் தொற்று என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு 14 நாட்களுக்கு பிறகே நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன. 1 ஆவது, 2 ஆவது வைரஸ் தொற்று அலையின் போது நாட்டு மக்கள் அதனை பொறுப்புடன் செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதேபோன்று தற்போது நெருக்கடியான தொற்றுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தாம் கரம்கூப்பி மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

“நாடு முடக்கப்பட மாட்டாது.” – ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உறுதி !

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23.04.2021) நடைபெற்ற கொவிட் தொற்று பரவலைத் தடுக்கும் ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அனர்த்தநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

எந்த வகையிலும் நாட்டை முடக்குவதற்கும், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும் அவற்றை வரையறுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சுக்கு  தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பொதுமக்கள் ஒன்றுகூடும் வைபவங்களை வரையறுக் குமாறு ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

“ஊழல் நிரூபிக்கப்பட்டால் பதவி துறக்கத்தயார்.” – நாடாளுமன்றில் அமைச்சர் பந்துல குணவர்தன!

“புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் பதவியைத் துறக்கத்தயார்.” என  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23.04.2021) உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில்,

“புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக 12 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை சூப்பர் மார்க்கெற் மற்றும் சதொச உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு வழங்கியிருந்தோம்.

குறித்த பொதிகளில் தரமான பொருட்கள் காணப்படவில்லை எனவும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சலுகைப் பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டால் அக்கணமே பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.

உண்மையாக நாம் எவரையும் கைது செய்யுமாறு கூறவில்லை. அர்ப்பணிப்புடனேயே சேவை செய்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்றைய ஒரே நாளில் 900க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் – ஒரு இலட்சத்தை நெருங்கும் தொற்றாளர்கள் தொகை !

இலங்கையில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 931 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் 99,653 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 90,036 ஆகும்.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 634 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“30 வருட யுத்தத்தில் நாட்டில் 29 ஆயிரம் பேரும் 10 வருட வீதி விபத்தில் 20ஆயிரம் பேரும் மரணமடைந்துள்ளனர்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“நாட்டில் 30 வருட யுத்தத்தின் போது 29 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் 10 வருடங்களுக்குள் வீதி விபத்துக்களினால் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.” என  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வீதி ஒழுங்குகள் மீறப்படுவதாலேயே பெருமளவு வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதிலும் குறிப்பாக போதைப்பொருள் பாவனை, வீதி விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை சோதனையிடுவதற்கான விசேட பொறிமுறை ஒன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

50 வீதமான வீதி விபத்துக்களுக்கு போதைப்பொருள் பாவனையே காரணமாக அமைந்துள்ளது. கஞ்சா, ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களை பாவிப்பதால் இடம்பெறும் வீதி ஒழுங்குகளை மீறும் செயற்பாடுகளிலேயே வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள் உபயோகிப்போரை மிக விரைவாக இனங்காணும் வகையில் நவீன உபகரணங்களை உபயோகிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் மேற்படி உபகரணங்களை விரைவாக உபயோகத்திற்கு விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

““பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களை கொலை செய்து கடலில் போட்டனர்.” – நாடாளுமன்றில் பொன்சேகா பகீர் !

“பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களை கொலை செய்து கடலில் போட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சி தேமற்கொள்ளப்படுகின்றது.” என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(23.04.2021)  நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர் குறித்தும் இந்த ஆணைக்குழு குறித்தும் நாட்டிற்கு விசர்பூனை ஆணைக்குழு என கூறினால்தான் தெரியும்.

அந்தளவு மோசமான, கிறுக்குத்தனமான ஆணைக்குழுவாகும். நீதிமன்றத்தை பலவீனப்படுத்தி சட்டத்தை ஆணைக்குழு கையில் எடுக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது. இந்த ஆணைக்குழு மூலமாக எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இன்று பிரச்சினை எழுகின்றது.

ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்படும் நிலைமையொன்று பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எமக்கு தெரியவருகின்றது. இதற்கு அரசாங்கத்தில் உள்ள பலர் விருப்பமில்லை என்பதும் எமக்கு தெரியும்.

எதிர்க்கட்சி உறுபினர்களின் பிரஜாவுரிமையை பறிப்பது ஜனநாயக செயற்பாடு அல்ல, இந்த செயற்பாடுகள் பயந்த, பலவீனமான அரசியல் நகர்வுகள் என்றே நாம் கருதுகின்றோம். இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்னவெனில், முன்னைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு தற்போது சிறையில் உள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும். முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.

பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளி வந்த நேரத்தில் அவர்களை கொலை செய்து கடலில் போட்டனர்.

இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் ?, இதுவா சட்ட நியாயாதிக்கம் ?, இவ்வாறன செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம்.

அதேபோல் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி போன்றவர்களை விடுதலை செய்யவும் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. இவர்களை காப்பாற்ற அன்றும் எமது தரப்பில் இருந்த சட்டத்தரணிகள் முன்வந்தனர், அவர் இன்று ஜனாதிபதியுடனும் மோதிக்கொண்டுள்ளார்.

அதேபோல் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யக்கோரியும் இந்த விசர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதே போல் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டில் செய்த எட்டுப்பேர் கொலை, அவர்களை தாக்கி தலைகளை வெட்டிய சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஒரு இராணுவ சிப்பாயாக இருக்கலாம், அல்லது இராணுவ அதிகாரி என்பதற்காக அநாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது. அதே போல் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை பாதுகாத்தோம் என கூறவும் முடியாது. இதனை எவரும் ஏற்றுகொள்ள முடியாது, கொலைகாரர்களை விடுதலை செய்துவிட்டு எவராலும் புகழாரம் சூட்டிக்கொள்ள முடியாது என்றார்.

“கோட்டாபய அரசாங்கம் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்துள்ளது.”  – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு !

“கோட்டாபய அரசாங்கம் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்துள்ளது.”  என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்க முயற்சிக்கும் அரசாங்கம், தமது வரம்பை மீறுவதற்கு முற்படுவதாக

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நீதித்துறையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிலரை அரசாங்கம் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆணைக்குழு அரச ஊழியர்கள், அரசியல்வாதிகள், சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலங்களை பெறுவதற்கு அப்பால் ஏனையோரிடம் விசாரணைகளை நடத்துவதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தன்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்திற்கும், நீதிக்கும் அப்பால் சென்று செயற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இன்று திறந்து வைப்பு !

யாழ்- பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் சமூகத்தில் பலரும் இது தொடர்பான தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துணைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு  துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.