22

22

யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நாளை திறக்கப்படவிருந்த நிலையில் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (22.04.2021) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

நமது ஈழ நாடு | செய்திகள் | Page 12எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

அதனை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் அதன் கட்டுமான பணிகள் நிறைவிற்கு வந்துள்ள நிலையில் , நாளை  (23ஆம் திகதி) அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலையே துணைவேந்தர் மாரடைப்பு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு சிறுபான்மையின மக்களை இலக்கு வைக்கக்கூடாது.” – சர்வதேச மன்னிப்புச்சபை

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது .” என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நினைவுகூரப்படுவதையிட்டு வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவில், “இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகள் மீதான தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதோடு, காயமடைந்தவர்கள் மற்றும் உறவுகளை இழந்தவர்களுடன் நாமும் கரம் கோர்க்கின்றோம்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் நினைவுகளை நாம் மதிக்க வேண்டும் மற்றும் எந்தவொரு சமூகத்தின்மீதும் பாகுபாடு காட்ட முற்படும் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.

இதேவேளை, இந்தத் தாக்குதல்களின் பின்னரான நீதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இலங்கை அதிகாரிகளுக்கு உள்ளது. அந்த விசாரணைகள் சர்வதேச நியாயப்பாடுகளுக்கு மற்றும் தரத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

குறிப்பாக, சிறுபான்மையினரைக் குறிவைப்பதற்கும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் போர்வையில் குற்றச்சாட்டுகள் இன்றி யாரையும் தன்னிச்சையாக பல மாதங்கள் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது.

இதேவேளை, கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறு பரிசிலனை செய்வதுடன், அதனை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையில் பல மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றால் ஆயிரக்கணக்கான சஹ்ரானை உற்பத்தி செய்ய முடியும்.” – அத்துரலிய ரத்னதேரர்

“இலங்கையில் பல மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றால் ஆயிரக்கணக்கான சஹ்ரானை உற்பத்தி செய்ய முடியும்.” என அத்துரலிய ரத்னதேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற நிலையில் அரசாங்கமும் எதிர்கட்சியும் எடுத்துள் நடவடிக்கைகள் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்ரசாக்களில் என்னவிடயங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வியமைச்சிற்கு எதுவும் தெரியாது என அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.
மத்ரசாக்களை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து தேசிய கருத்தொருமைப்பாட்டை உருவாக்க வேண்டியது ஜனாதிபதியின் கடமை என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முக்கியமானவை நாங்கள் அதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் பல மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றால் ஆயிரக்கணக்கான சஹ்ரானை உற்பத்தி செய்ய முடியும். நாங்கள் அவற்றை பல்கலைகழகங்கள் என அழைக்கின்றோம்.”  என அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இளைஞர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் விரைவில்..” – பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹண

வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.

இதனூடாக தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் சேவைக்கான ஆளணியை அதிகரிப்பது தொடர்பாக யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், சுதந்திரமான, ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேர்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ் மொழியில் இணைத்துக் கொள்பவர்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த தமது சொந்த மாவட்டங்களிலே கடமை புரிய வழியேற்படுத்தப்படும் என்று்ம அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 12,000ஐ தாண்டி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
மே 1ந்திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் . கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
கொரோனா தொற்றை 10% கீழ் குறைக்க ஏதுவாக RT-PCR பரிசோதனைகள் மேலும் உயர்த்தப்படும். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும்.” – யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன்

“தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும்.” என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு முன்னர் திட்டமிட்ட வாறு நடைபெறும்.
சுகாதார விதிமுறைகளை பின் பற்றி , மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறும். என தெரிவித்தார்.

தேசிய வெசாக் நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நயினாதீவு நாக விகாரையில் நடைபெறவுள்ளது. 24ஆம் திகதி சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை எதிர்வரும் மூன்று வார கால பகுதி எச்சரிக்கை மிக்க கால பகுதி எனவும் ,சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும் , பண்டிகை நிகழ்வுகளை நிறுத்துமாறும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் சீன தூதுவர் தங்கியிருந்த விடுதியில் குண்டுத்தாக்குதல் – 05 பேர் பலி !

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதியின் கார் நிறுத்துமிடப் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
சீன தூதர் உள்பட சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் இந்த நட்சத்திர விடுதியில் தான் தங்கியிருந்துள்ளனர். எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் குறிப்பிட்ட நட்சத்திர விடுதியில் இல்லை என்று கூறப்படுகிறது.
இது ஒரு பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்த நட்சத்திர விடுதியில்  முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

“முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றனர்.” – த.கலையரசன்

“முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றனர்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோது அதில் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது தமிழ் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்திருக்கின்றார்கள். இந்த நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டுமாயின் எமது இந்த ஜனநாயக ரீதியான அரசியலைப் பலப்படுத்த வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இந்த நாட்டிலே தமிழர்கள் அடக்கப்பட்டதும், ஒடுக்கப்பட்டதும், பல இடம்பெயர்வுகள் இடம்பெற்றமையும் யாருமே மறுக்க முடியாதவை. இந்த நாட்டில் எமது இனமும் ஜனநாயக ரீதியாக வாழ வேண்டும்.

நீண்ட வரலாற்றினைக் கொண்ட எமது இனம் இந்த மண்ணிலே நிலையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் எமது இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு செயற்படுகின்றது.

இந்த நாட்டின் ஜனநாயகம் பொருந்திய ஒரு கட்சியாக எமது கட்சி இருக்கின்றது. நாங்கள் எந்த விடயத்திலும் சோரம் போய் எமது சமூகத்தைச் சிரழிக்கும் விடயத்திற்கு ஒருபோதும் முன்நிற்கவில்லை. தற்போது மிகவும் மோசமானதொரு அடக்கு முறையை எமது தமிழ் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் இறைவழிபாட்டைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒருநிலைமை இன்று இந்த நாட்டிலே நிலவுகின்றது. இந்து ஆலயம் அமைப்பதென்றால் பல இழுத்தடிப்புகளும், பௌத்த ஆலயம் அமைப்பதென்றால் உடனடி நடைமுறைகளுமே இங்கு இடம்பெறுகின்றது.

நாங்கள் வடக்கு கிழக்கு என்ற ரீதியில் மாத்திரமல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்குமான ஒரு தீர்வை வேண்டி நிற்கின்ற போது எங்களோடு தமிழ் பேசும் உறவுகளாக இருக்கின்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள்.

கடந்த காலங்களிலும் எம்மோடு ஜனநாயக ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்று எம்மிடம் தெரிவித்து விட்டு அதற்கு மாறாக அரசுடன் இணைந்த சம்பவங்களே பல இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டிருந்தாலும் கிழக்கில் இருக்கின்ற ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய சுய நலன்களுக்காக எமது சமூகத்தில் இருக்கின்ற சில அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்காக இப்போதும் முனைப்பான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

குறிப்பாகக் கல்முனைத தமிழ் பிரதேச செயலகம் என்ற அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டத்தினை ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் முன்னெடுப்பதென்பது மிகவும் ஒரு மன வேதனையான விடயம்.

முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் எமது கட்சி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் கூட முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களை எமது கட்சி முன்னெடுத்திருந்தது. இந்த நாட்டிலே ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்பதற்காககத் தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்கின்றோம்.

அவர்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டிலே இருக்கின்ற சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமான விடயங்களைச் சாதிப்பதென்பது எதிர்காலத்தில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும். அதனையே அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். நாங்கள் மனவேதனைப் படுகின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் நிறுத்த வேண்டும். தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. எனவே எதிர்காலத்தில் நாங்கள் எமது செயற்பாடுகளை தூரநோக்குக் கொண்டு அமைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றார்.

கோழி முட்டையிடவில்லை – பொலிஸில் முறைப்பாடு செய்த விவசாயி !

தனது கோழிகள் முட்டையிடவில்லை என விவசாயியொருவர் பொலிஸாரிடம் புகார் அளித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

புனேவைச் சேர்ந்த விவசாயியொருவர் கோழிப்பண்ணையொன்றை நடத்தி வந்துள்ளதோடு அப் பண்ணையிலுள்ள கோழிகளுக்கு புதிய கோழித்தீன் ஒன்றினை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருவாரம் கடந்த நிலையிலும் கோழிகள் முட்டை இடவில்லை என்பதால் குறித்த தீவன நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
எனினும் , அந் நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில் அளிக்கப்படாமையால் இச் சம்பவம் குறித்து அவர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில் கோழித்தீவனத்தை உண்ட பின் எனது கோழிகள் முட்டையிடவில்லை எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து விவசாயி தனது வேதனையை நூதன முறையில் வெளிப்படுத்தியதை உணர்ந்த பொலிஸார் அப்புகாரினை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிராகரித்தோர் இலங்கையில் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.” – நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன காட்டம் !

“தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிராகரித்தோர் இலங்கையில் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆனால் தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழ் ஈழத்தை தர முடியாதெனக் கூறியவர்கள் சீனாவிற்கு வழங்குகின்றனர். அவ்வாறெனில் இவர்களின் தேசப்பற்று எங்கு சென்றது ? இதுவும் தனியொரு ஈழமாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையான்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.