20

20

“அதிகளவு கடல் வளங்கள் இலங்கையில் காணப்படுவதால் அந்த வளங்களை நிலைபேறான வகையில் பேணுவது அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“இலங்கை கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வது நாட்டின் கடற்தொழிலாளர்களுக்கும் கடற்தொழில் துறைக்கும் ஆரோக்கியமான எதிர் காலத்தினை உருவாக்கும்.” கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை  கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு மற்றும் இலங்கை – நோர்வே தூதரகம் ஆகியன இணைந்து இன்றைய தினம் ஆரம்பித்திருந்தன.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடற்தொழில் துறையில் இலங்கையும் நேர்வேயும் நீண்டகால பரஸ்பர உறவுகளைக் கொண்டிருப்பதுடன் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் ஆகியவற்றையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன. அதுமட்டுமல்லாது அதிகளவு கடல் வளங்களைக் கொண்ட தீவாக இலங்கை காணப்படுவதால் அந்த வளங்களை நிலைபேறான வகையில் பேணுவது அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது.

அதனடிப்படையில் இத்தகைய ஆய்வுகள் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பிரயோகித்து அந்தத் துறையை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

சவால்கள் நிறைந்த தற்போதைய சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்காக நோர்வே அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைன் ஜோன்லி ஸ்கெண்டல், கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இணையத்தளங்களில் பகிரப்படும் போலி தகவல்களிலிருந்து சமுகத்தை பாதுகாக்கும் நோக்கில் சட்டம் – அமைச்சரவை அங்கீகாரம் !

இணையத்தளங்களில் பகிரப்படும் போலி தகவல்களால் மக்களிடையே பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதனை தடுக்கும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இணைந்து, இந்த யோசனையை முன்வைத்துள்ளனர். இணையத்தளங்களில் போலித் தகவல்கள் பகிரப்படுகின்றமையினால், பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாக இந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் சமுகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படுதல், வைராக்கியம் ஏற்படுதல், சமுகநல நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுதல் போன்ற விடயங்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான போலி தகவல்களிலிருந்து சமுகத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கஞ்சா வளர்ப்பினை சட்ட ரீதியானதாக்குங்கள். மதுபானசாலைகளை காலை 01 மணி வரை திறக்க அனுமதி வழங்குங்கள்.” – பாராளுமன்றில் டயானா கமகே !

கஞ்சா வளர்ப்பினை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும் என்றும், அரச முயற்சியில் அவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்யவும் வேண்டும் எனவும் ஆளுங்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே யோசனை முன்வைத்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று(20.04.2021) உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.
 
அரசாங்கத்தின் அனுசரணையில் கஞ்சா வளர்ப்பு செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக, அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் நாட்டிலுள்ள மதுபானக் கடைகள் இன்று காலை 09 மணிக்கு திறக்கப்பட்டு 11 மணியுடன் மூடப்படுகின்றன. மூடப்படுகின்ற நேரத்தை அதிகாலை 01 மணியாக அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என்ற யோசனையை சமர்பிக்கின்றேன்” என்று அவர் கூறினார்.

புத்தர் சிலை உடைப்பு விவகாரம் – ஏழு முஸ்லிம்கள் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் !

பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், ஏழு முஸ்லிம்கள் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது பேரும், மாவனெல்ல மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

அவர்களுக்கு எதிராக ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையிலேயே கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நௌபர் மௌவலி, இப்ராஹிம் மௌலவி, மொஹமட் சஜிட், மொஹமட் சஹீட், சதீக் அப்துல்லா, சனூல் அப்டீன், மொஹமட் மில்ஹான் ஆகியோரும் ஏனைய ஒன்பது பேருக்கு எதிராகவுமே இவ்வாறு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு  அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.” – யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை !

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு  அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் போது வடபகுதியில் எத்தனை ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன, எத்தனையோ மக்கள் இறந்தார்கள். தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிச்சயமாக இருக்கின்றது. அது உண்மைதான் இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது.

ஆனால் சரியான ஒரு காரியத்தை ஒருவர் செய்யவில்லை என்பதற்காக சரியான காரியத்தை நாங்கள் செய்யாது இருக்கக்கூடாது. ஆண்டவர் இயேசு சொல்லுவார் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. அதேபோல் அவர்களுடைய துன்ப வேளைகளில் எங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டியது எங்களுடைய கிறிஸ்தவ மக்களுடைய கடமையாகும்.

ஆகவே நாளைய தினத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நாங்கள் செய்து எங்களுடைய ஆதரவினையும் அஞ்சலிகளையும் செலுத்துவதற்கு முன் வருவோம் இந்த வேளையிலே அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம். இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான பாதுகாப்புகளை நீங்கள் கொடுக்கிறீர்கள்.

அதற்காக நாங்கள் நன்றி சொல்கின்றோம் இதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் 30 ஆண்டுகளாக அனுபவித்த போரின் போது இறந்து போன ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த எங்களுக்கு அனுமதி தரவேண்டும், பாதுகாப்பு தர வேண்டும், அது நாங்கள் செய்ய வேண்டிய ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக இருக்கிறது என்பதையும் இந்த வேளையிலே தெரிவித்து, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனை எடுத்து அனுமதிகளை விரைவில் வழங்க வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே அனைத்து மக்களுடனும் இணைந்து குறிப்பாக யாழ் மறைமாவட்ட ஆயர் குருக்கள் துறவிகள் அனைவரும் இணைந்து தாக்குதலில் இறந்து போனவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் ஆறுதல் கூறுவோம். எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ இந்த நாட்டிலே சமாதானம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வே. பிரபாகரனின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்த நாம்  துறைமுக நகர சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றோமா..?” – ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி !

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்த நாம்  துறைமுக நகர சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றோமா..?” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட போது துறைமுக நகரம் தொடர்பான பாதகமான கொள்கைகளை மாற்றியமைப்போம் என உறுதியளித்தோம்.

அதன் விளைவாக அபிவிருத்தித் திட்டத்தின் அமுலாக்கத்தில் தாமதமேற்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவ்வாறு இருப்பினும் கூட துறைமுக நகரத்தின் உரிமை சீனாவிடம் கையளிக்கப்படுவதை நிறுத்தி 99 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கினோம்.

அது மாத்திரமன்றி மிக முக்கியமாக துறைமுக நகரத்தின் இடத்தை மேல் மாகாணத்திற்கு உட்பட்ட கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஓரங்கமாகவும், அரசாங்கத்திற்குரிய இடமாகவும் பிரகடனப்படுத்தினோம்.

எனினும் தற்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டத்தில் நாட்டிற்கு கேடானது பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள குறிப்பாக களியாட்ட விடுதிகள், கசினோ, போன்றவற்றுக்கு துறைமுக நகரத்திற்குள் அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.

கொழும்பு துறைமுகநகர அபிவிருத்தித் திட்டம் சீர்குலைய வேண்டும் என்று நாம் ஒருபோதும் விருப்பப்படமாட்டோம் எனினும் எமது நாட்டின் வெளிவிவகார கொள்கைகளுடன் எவ்வித முரண்பாடுகளையும் தோற்றுவிக்காத வகையில் இந்த அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை தொடரந்து இலங்கை சீனாவின் காலனித்துவக நாடாக மாறப்போகின்றதா? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தனிநாட்டைக் கோரிய பிரபாகரனின் கோரிக்கையை நிராகரித்த நாம் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றோமா? என கேள்வி எழுப்பினார்.

யாழில் உறவினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் – வாள்வெட்டாக மாறி ஒருவர் உயிரிழப்பு !

வடமராட்சி- பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது31) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் பின்னர் வாள் வெட்டுடன் முடிவடைந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அஸ்ராஜெனிகா ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியாக சீன தடுப்பூசியை ஏற்றவா அரசாங்கம் முயற்சிக்கின்றது.? – சஜித் பிரேமதாச

“இலங்கையில் முதலாம் கட்ட தடுப்பூசியாக அஸ்ராஜெனிகா ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியாக சீன தடுப்பூசியை ஏற்றவா அரசாங்கம் முயற்சிக்கின்றது.? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுப்பூசியை மாற்றுவதற்கு இப்போது பரிந்துரைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுமாவென தெரியவில்லை என கொவிட் -19 வைரஸ் தடுப்பு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்படும் காலம் குறித்து கேள்வி எழுப்பினர்,

இதன்போது கேள்வி எழுப்பிய சமிந்த விஜயசிறி எம்.பி, “சினோபார்ம்” தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அனுமதிக்கவில்லை, அவ்வாறு இருக்கையில் நாட்டில் பணிபுரியும் பத்தாயிரம் சீனர்களுக்கு ஆறு இலட்சம் “சினோபார்ம்” தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒருவருக்கு இரு தடுப்பூசிகள் என்றாலும் கூட 20 ஆயிரம் தடுப்பூசிகள் போதும், ஆனால் ஆறு இலட்சம் தடுப்பூசிகள் எதற்கு ? அப்படியென்றால் ஏனைய தடுப்பூசிகள் இலங்கையில் முதலாம் தடுப்பூசியாக அஸ்ராஜெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக “சினோபார்ம்” தடுப்பூசியை ஏற்றவா என கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, “சினோபார்ம்” தடுப்பூசியை பயன்படுத்த முடியாது எனக் கூறிய நிபுணர் குழு உறுப்பினர்களை அரசாங்கம் நீக்கியுள்ளது, அப்படியென்றால் இரண்டாம் தடுப்பூசியாக “சினோபார்ம்” ஊசியை பயன்படுத்த திட்டம் உள்ளதென்பது தெளிவாகின்றது. எனவே அரசாங்கம் இதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி !

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி அமெரிக்காவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,
இன்று முதல் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடைவர்கள் ஆவர். தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது. பெருந்தொற்றை நாம் இப்படித்தான் முடிவுக்க்கு கொண்டு வரப்போகிறோம். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 799- ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.67 லட்சமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“முழுமையாக தோல்வியடைந்துள்ள அரசாங்கம் விற்பதற்கு எதுவும் இல்லாமல்  துறைமுக நகரை விற்க முயற்சிக்கிறது.” -லக்ஷ்மன் கிரியெல்ல

“முழுமையாக தோல்வியடைந்துள்ள அரசாங்கம் விற்பதற்கு எதுவும் இல்லாமல்  துறைமுக நகரை விற்க முயற்சிக்கிறது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கூட இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை. இவ்வாறான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படும் போது நீதிமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு வார காலம் காணப்படும்.

எனினும் இந்த சட்ட மூலம் விடுமுறை ஆரம்பமாகும் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தில் காணப்படும் பாரதூரமான விடயங்கள் நாட்டுக்கு வெளிப்படுவதை தடுப்பதற்காக சூட்சுமமாக அரசாங்கம் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த சட்ட மூலத்தில் நிதி சலவை சட்ட உறுப்புரையை உள்ளடக்க வேண்டும். அத்தோடு இது தொடர்பில் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த துறையுடன் தொடர்புடையவர்களின் ஆலோசனை இன்றி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது.

தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு எமக்கு எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் இதன் ஒரு சிறு பகுதி கூட விற்கப்படவில்லை.

எனவே துறைமுக நகரத்தை நாடாளுமன்ற நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதோடு , கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு இதன் செயற்பாடுகள் தொடர்பில் ஆண்டுதோறும் அறிக்கை தயாரிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அத்தோடு நிதி சலவை சட்ட உறுப்புரையையும் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்க வேண்டும் என்றார்.