14

14

“ஜனாதிபதியையும் ஹிட்லரையும் இணைத்து கூறப்பட்ட கருத்து இராஜாங்க அமைச்சருடைய தனிப்பட்ட கருத்தேயாகும்.” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

“ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல.” என அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையிலேயே மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஹிட்லர் ஆகியோரைப் பற்றி தெரிவிக்கப்பட்டது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார். இந்த கருத்து அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்றும் அரசாங்கத்தின் முன்னோக்கு என்று கருதக்கூடாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவை தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவருடன் முரண்பாட்டை ஏற்படுத்தாது என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

விராட் கோஹ்லியை பின்தள்ளி ஐ.சி.சி. தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த பாபர் அசாம் – இருபதுக்கு 20 ல் மட்டும் இலங்கை வீரர்கள் இருவர் முதல் 10 இடங்களில் !

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லியை பின்தள்ளிய பாபர் அசாம் 865 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.

முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லி 856 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டதுடன், ரோஹித் ஷர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்த தரப்படுத்தலின் முதல் 10 வீரர்களில் இலங்கையர் எவரும் இல்லை. இந்த தரப்படுத்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அஞ்சலோ மெத்தியூஸ் 575 புள்ளிகளுடன் 39 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிப் பிரிவில் மாத்திரம் இலங்கையர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த பங்களாதேஷ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மையில் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிகளின் வீரர்கள்கூட இலங்கையர்களைக் காட்டிலும் சிறப்பான தரவரிசைகளில் உள்ளனர்.

இதில் சர்வதேச இருபதுக்கு 20 தனிநபர் தரப்படுத்தல்களில் லக்சான் சந்தகன், வனிந்து ஹசரங்க மற்றும் சமரி அத்தபத்து ஆகிய மூவரைத் தவிர எவரும் முதல் 10 இடங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

இதில் சந்தகன் 639 புள்ளிகளுடனும் ஹசரங்க 625 புள்ளிகளுடனும் ஆண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் பந்துவீச்சாளர்களுக்கான தனிநபர் தரப்படுத்தலில் முறையே 9 ஆம் மற்றும் 10 ஆம் இடங்களை வகிக்கின்றனர்.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தப்பத்து பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் சகலதுறை தரப்படுத்தலில் 265 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தை வகிக்கிறார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான என்னுடைய கைதுக்கு இவர்கள் தான் காரணம் – யாழ்.மாநகர முதல்வர் குற்றச்சாட்டு !

யாழ் மாநகர காவல் படையின் சீருடையின் நிற சர்ச்சை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ் காவல்துறையினரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாழ் மாநரக முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் “பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதற்கு ஊடகங்களும் முகநுால் போராளிகளுமே காரணம்.” என யாழ் மாநரக முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.

ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான எந்தவொரு தவறையும் நான் செய்யவில்லை. யாழ் மாநரக சபையை தூய்மையாக பேணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள யாழ் மாநகர காவல் படையின் செயற்பாடுகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும். யாழ் மாநகர காவல் படையின் ஆடையின் நிறம் தொடர்பாக காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராயப்படும்.

யாழ் மாநகர காவல் படையின் ஆடை தொடர்பாக ஊடகங்களிலும் முகநுால்களிலும் தவறாக சித்தரிக்கப்பட்டமையினாலேயே தாம் கைது செய்யப்பட்டதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“பல்வேறு நெருக்கடிக்கள் அழுத்தங்கள் மற்றும் கைது ஆகியவற்றுக்கு மத்தியிலும் எனது பயணம் உறுதியுடன் தொடர்கின்றது.” – புத்தாண்டு வாழ்த்தில் யாழ்.மாநகர மேயர் !

மலரும் பிலவ வருடம் தமிழ் மக்கள் உரிமைகளையும் சுபீட்த்தையும் மேன்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து உலக மக்களுக்கும் கொவிட் பெரும் தொற்றுக் காரணமாக ஒரு துரதிஸ்டவசமாக ஏமாற்றம் நிறைந்த ஆண்டாக கடந்து சென்று விட்டது.

மலரும் பிலவ வருடம் நோய் நொடிகளில் இருந்து விடுபட்டு தமிழ்மக்கள் உரிமைகளைகளையும் சுபீட்த்தையும் மேன்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நான் மாநகரத்தின் பொறுப்பை இவ்வாண்டு தை மாதமளவில் ஏற்றுக்கொண்டிருந்தேன். பல்வேறு நெருக்கடிக்கள் அழுத்தங்கள் மற்றும் கைது ஆகியவற்றுக்கு மத்தியிலும் எனது பயணம் உறுதியுடன் தொடர்கின்றது.

இந்த மாநகரத்தை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு என்னால் ஆன சகல முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.

மாநகர மக்கள் அனைவரும் எனது இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமல்லாது பக்க பலமாகவும் உறுதுணையாகவும் என்னுடன் இருக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் வேண்டுகின்றேன்.

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

“யுத்தம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை விடவும் அச்சுறுத்தலான நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.” – ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு !

“யுத்தம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை விடவும் அச்சுறுத்தலான நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.” என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர மேலும் கூறுகையில் ,

கொவிட் தொற்றின் காரணமாக கடந்த வருடம் தமிழ் – சிங்கள புத்தாண்டை நாட்டு மக்களுக்கு கொண்டாட முடியாமல் போனது. எனினும் இந்த ஆண்டு புற்றுநோய் மூலக்கூறுகள் அடங்கிய எண்ணெய் இறக்குமதி அச்சத்தில் மக்களால் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது.

இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் சில உணவு பொருட்களிலும் புற்று நோய் மூலக்கூறுகள் இருப்பதாகக் கூறினார்.

அந்த உணவுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை. இது மேலும் அச்சத்திற்கு காரணமாகியது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மிக்க இந்த விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை கோருகின்றோம்.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக சகல அதிகாரங்களையும் தன்னகப்படுத்தியுள்ள அவர் இது தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துவதில் ஏன் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாது ?

யுத்தம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை விடவும் அச்சுறுத்தலான நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

எனவே தேங்காய் எண்ணெய் தவிர வேறு எந்த உணவு பொருட்களில் புற்றுநோய் மூலக்கூறுகள் உள்ளன என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு வெளியான சுற்று நிரூபம் – “கஞ்சி ” வழங்க தடை உட்பட மேலும் 30 விதிமுறைகள் !

ரமழான் பண்டிகையினைக் கொண்டாடும் போது முஸ்லிம் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய 30 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமை பள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மாத்திரமே வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பள்ளிவாசல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அளவுக்கதிகமானோர் கூடுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வழிபாடுகளின் போது நிச்சயம் தனிநபர் இடைவெளி பேணப்பட வேண்டும். சமூக இடைவெளியைக் கருத்திற் கொண்டு 100 பேரைவிடக் குறைவானோரே அனுமதிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நோன்பு காலங்களில் வழங்கப்படும் ‘கஞ்சி’ இம்முறை வழங்கப்படக் கூடாது. அத்தோடு பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்பளுக்கு அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு , ஊழியர்களும்அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலகுவான வெற்றியை தவற விட்டது கொல்கத்தா – முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை !

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில்  வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பை  தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடச் செய்தது. ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
குயின்டன் டி காக் 2 ஓட்டங்களில் வெளியேறினார். ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் விளாசினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 1 ஓட்டங்களில் வெளியேறினார். ரோகித் சர்மா 43 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன்பின் அந்த்ரே ரஸல் பந்துவீச்சில் மும்பை அணி திணறியது. ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களிலும், குருணால் பாண்ட்யா 15 ஓட்டங்களிலும், மார்கோ ஜென்சன் 0 ஓட்டங்களிலும், ராகுல் சாஹர் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 152  ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
கொல்கத்தா அணியின் அந்த்ரே ரஸல் 4 பந்துப்பரிமாற்றங்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 இலக்குகளை  சாய்த்தார்.
153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், ஷுப்மான் கில்லும் இறங்கினர்.
இருவரும் இணைந்து  72 ஓட்டங்கள் சேர்த்தனர். கில் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 5 ஓட்டங்களிலும், மார்கன் 7 ஓட்டங்களிலும், ஷகிப் அல் ஹசன் 9 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் இலக்குகள் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி 4 பந்துப்பரிமாற்றங்களில் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல் ஆடினர். 17வது பந்துப்பரிமாற்றத்தில் 8 ஓட்டங்கள் கிடைத்தது. 18வது பந்துப்பரிமாற்றத்தில் 3 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது. 19வது பந்துப்பரிமாற்றத்தில் வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி பந்துப்பரிமாற்றத்தில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் போல்ட் 2 இலக்குகளை வீழ்த்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 7 இலக்குகள் இழப்புக்கு 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
 மும்பை அணியின் ராகுல் சாஹர் 4 இலக்குகளையும், டிரெண்ட் போல்ட் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” – ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட்

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” என ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இராணுவம் ஆயுதபலம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 600-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் இராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மியன்மாரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையால் அடக்கப்பட்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்ததை சுட்டிக்காட்டி மைக்கேல் பேச்லெட் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சிரியாவில் 2011-ம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது மியன்மாரின் நிலைமை ஒரு முழுமையான மோதலை நோக்கி நகர்கிறது. சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.

அரசாங்கத்துக்கு ஜே.வி.பி பாராட்டு !

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு மக்கள் விடுதலை முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது.

இருப்பினும் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த முடிவு புத்தாண்டு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்றும் இது அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

1,000 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளல் உட்பட பல்வேறு தோல்வியுற்ற முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 5,000 கொடுப்பனவு வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்ட நேரத்தில், அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றும் நாடு, பொருளாதாரம் அல்லது மக்கள் மீதான அக்கறை குறித்து அதிகாரிகளுக்கு புரிதல் இல்லை என்பதை இந்த முடிவு காட்டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

“இலங்கை மக்கள்எந்தவிதமான பேதங்களும் இன்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் சிங்கள, தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும்.” – ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்து !

“இலங்கை மக்கள்எந்தவிதமான பேதங்களும் இன்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் சிங்கள, தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும்.” என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த வருடம் புத்தாண்டு பிறப்பின் போது நாட்டில் நிலவிய சீரற்ற சுகாதார நிலைமைகள் அதற்குத் தடையாக இருந்தபோதிலும், பண்டைய பாரம்பரியங்கள் மற்றும் மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ஆண்டின் பின்னணியை நாம் அனைவரும் சேர்ந்து அமைத்திருக்கின்றோம்.

அது புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதை காட்டுகிறது.

சிங்கள, தமிழ் புத்தாண்டு எங்களது மிகப்பெரும் கலாசார விழாவாகும். நாட்டு மக்கள் ஒரே சுபநேரத்தில் புத்தாண்டு கிரியைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சம் மலரும் என்று எங்கள் உள்ளங்களில் ஒரு வலுவான நம்பிக்கை ஆழப் பதிந்துள்ளது.

சிறுவர்களை மகிழ்விக்கும் புத்தாண்டு ஆடைகள், உணவுகள் மற்றும் விளையாட்டுகளை பார்த்து பெரியவர்கள் அளவில்லா ஆனந்தம் அடைகின்றனர். மேலும், சூழலில் ஏற்படும் இனிமையான மாற்றங்கள் எமக்கு உடல் மற்றும் உள ஆறுதலைத் தருகின்றன.

சிக்கலான எண்ணங்களுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடும் வளர்ந்தவர்கள் அவர்களுக்கிடையே ஏற்படும் கவலைதரும் மனக்குறைகளை தேற்றிக்கொள்ள கிடைப்பதும் புத்தாண்டின் ஒரு விசேட சிறப்பம்சமாகும்.

அனைத்து மக்களும் எந்தவிதமான பேதங்களும் இன்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் சிங்கள, தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். புத்தாண்டு காலத்தில் தங்களது பிள்ளைகளை பிரிந்து கடமைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரினதும் அர்ப்பணிப்புகளை நான் இச்சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவுகூர்கிறேன்.

மலரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.