13

13

“வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம்.” – சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமாயின் நூற்றுக்கு நூறு வீதம் தங்களது உழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பிரித்தானியா – அனைவரையும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு பிரதமர் வேண்டுகோள் !

பிரித்தானியாவின் மற்ற பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், இங்கிலாந்திலும் பூங்காக்கள், கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பன மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் உட்பட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

இந்நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்துவதைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டம் ஒன்றுக்கு பிரதமர் ஜோன்சன் திட்டமிட்டிருந்த போதும் எடின்பர்க் டியூக் இறந்ததைத் தொடர்ந்து அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மூன்று மாதங்களுக்கும் மேலாக அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதி கிடைக்காத்தமையினால் இன்று போராட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

“அடொல்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்லர்.” – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு ஜேர்மனி தூதுவர் பதில் !

“ஜேர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ‘அடொல்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்லர்.” என இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஹோல்கர் செயுபேர்ட் தெரிவித்தார்.

இன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதில் மேலும் உள்ளதாவது:-

‘தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, ஹிட்லராக மாறுவார்’ என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ஹிட்லர்போல் ஆட்சிசெய்ய வேண்டும் - இராஜாங்க அமைச்சர் |  Kuruvi

ஹிட்லர் ஒருவர் இருந்தால் இலங்கையும் பயனடைய முடியும் என்ற விதத்திலான கருத்துக்கள் எனக்குக் கேட்கின்றது.

கற்பனைகளுக்கு அப்பால் மில்லியன் கணக்கான மரணங்களுக்கும் மக்களின் துன்பங்களுக்கும் பொறுப்பானவரே, அடொல்ப் ஹிட்லர் என்பதை நான் நினைவுகூர்கின்றேன்.

நிச்சயமாக அவர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்லர்.” என்றுள்ளது.

“ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவர் ஹிட்லரைப் போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.” – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது” எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏதேனுமொரு வகையில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பார் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு ஹிட்லரைப் போன்று செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்துகின்றனர். எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டிலுள்ள சில துறைகளின் செற்பாடுகளால் ஜனாதிபதி ஹட்லராகும் நிலைக்கு தள்ளப்பட்டால் அவர் அவ்வாறு செயற்பட வாய்ப்புள்ளது என்று நான் எண்ணுகின்றேன். அவ்வாறெனில் யாரும் அவர் மீது குற்றஞ்சுமத்தமாட்டார்கள்.

தேர்தல் காலத்தில் மகா சங்கத்தினரும் ஹிட்லர் ஆட்சியானாலும் கவலையில்லை என்றவாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவர் ஹிட்லரைப் போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.

எனினும் அவ்வாறு ஆட்சியை முன்னெடுக்க ஜனாதிபதி விரும்புவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர் அந்த நிலைக்கு தள்ளப்பட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.

“இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – அட்மிரல் சரத் வீரசேகர

“இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ்.அடிப்படைவாதம், வாஹப் வாதம், சல்பி வாதம் என மதம் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் காணப்படுகிறது.
உருவ வழிபாட்டுக்கு இவர்கள் முழுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.  தங்களின் மத கொள்கையினை பரப்புவதற்கு பிற மதங்களை கொல்வது சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுபிரிவினராலும் மாத்திரம் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

அடிப்படைவாதம் தொடர்பில் நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டும். தீவிர மத கொள்கையினை உடையவர்கள் ஒரு கட்டத்தில் அடிப்படைவாதிகளாக மாற்றமடைகிறார்கள். இறுதியில் பயங்கரவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இவ்வாறான பின்னணியில் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அடிப்படைவாத தாக்குதல்கள் நாட்டில் எதிர்காலத்தில் இடம்பெறாத அளவிற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை குறித்து எதிர்தரப்பினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்திருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்த்தரப்பினர் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினையும் அரசியல் தேவைக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்றார்.

உயிருடன் இருந்த கொரோனா நோயாளி இறந்து விட்டதாக வேறொருவர் உடலை உறவினர்களிடம் வழங்கிய மருத்துவ அதிகாரிகள் !

இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மக்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுன்னு குமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், சுன்னு குமார் இறந்துவிட்டதாக அவரது சகோதரரிடம் தெரிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகிகள், இறந்த வேறொருவரின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்து சுன்னு குமாரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டதும் பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதினார். அதில், இந்த விஷயம் குறித்து விசாரித்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

“கொரோனாவில் இருந்து இப்போதைக்கு மீட்சி இல்லை.” – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு !

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகத்தையே முழுதாக முடக்கி வருகின்றது. வைரஸ் பரவ ஆரம்பித்து  சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைய தொடங்கியது. மேலும் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வைரசின் தாக்கம் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாளோம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புகின்றனர். ஆனால் அது தவறானது.

கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்றார்.

உலக சுகாதார அமைப்பின் உயர்அதிகாரி மரியாவான் கெர்கோவ் கூறும்போது, தொடர்ந்து 7 வாரமாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் இறப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் 5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்றார்.

இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடையின் எதிரொலி – பலப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பாதுகாப்பு !

இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடைகளை தொடர்ந்து சர்வதேச வருகை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்யும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்த நிலையில் இந்த அச்சுறுத்தல் உணரப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த தடையை அடுத்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில ஆணையர்கள் மற்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மத அடிப்படைவாதிகள் விமானம் அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறுவதற்கான வாய்ப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மத அடிப்படைவாதிகள் தமிழ்நாட்டில் தளம் அமைப்பதைத் தடுக்க உளவுத்துறையை பலப்படுத்தவும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வாரம், தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அல்கொய்தா, ஐ.எஸ். உள்ளிட்ட 11 குழுக்களை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் சிறுபான்மை சமூகம் சார்ந்து பேசுபவர்களின் குரல்களை நசுக்கும்  சதி அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது.” – றிசாட் பதியூதீன்

“நாட்டில் சிறுபான்மை சமூகம் சார்ந்து பேசுபவர்களின் குரல்களை நசுக்கும்  சதி அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் பல்வேறு கிராமங்களிற்கு பயணம் செய்து மக்களை சந்தித்தார். இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எப்படியாவது என்னை சிறையிலே அடைக்க வேண்டும் என்று எத்தனையோ பொய் குற்றச்சாட்டுக்கள் முறைப்பாடுகளை செய்தும் பலன் கிடைக்காத போது, மன்னாருக்கு வாக்களர்களை பேருந்தில் அழைத்துச்சென்ற விடயத்தை முன்னிறுத்தி என்னை சிறையிலேயே அடைத்தார்கள்.

அதன்பிறகும் தொடர்ச்சியான சதிகளை இந்த அரசுசெய்து கொண்டேயிருக்கின்றது. குறிப்பாக கொரோனா தொற்று நோயினால் இறப்பவர்களின் சடலங்களை பலவந்தமாக எரிக்கும் சதியினை இந்த அரசாங்கம் செய்தது. எமது கருத்துக்களையும், மக்களின் வேதனைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஜெனீவாவால் அந்த விடயம் இடைநிறுத்தப்பட்டது.

அதன்பிறகு சிறுபான்மை சமூகம் சார்ந்து பேசுபவர்களின் குரல்களை நசுக்கும். சதி நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் அசாத்சாலியை கைது செய்தார்கள். அதேபோல அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளை எதிர்த்து பேசுகின்ற அசல சம்பத் என்கின்ற சிவில் அமைப்பை சேர்ந்தவரை கைது செய்திருப்பதாக அறிகிறேன்.

இந்த நாட்டில் என்ன நடக்கும் எப்போது நடக்கும் யாருக்கு நடக்கும்? என்னசெய்வார்கள் என்பது தெரியாது. அனைவரும் ஒரு பயந்த சுபாவத்தோடு வாழவேண்டும் என்று இந்த அரசு அச்சத்திலே வைத்திருக்கின்றது. கொழும்பைவிட்டு செல்லமுடியாத அளவிற்கு பலவகையான தொல்லைகள் எங்களிற்கு வழங்கப்பட்டது. அந்தவகையில் நான் சிறையில் இருந்தபோது எனக்காக மன்றாடிய அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக, கடமைப்பட்டுள்ளேன். என்றார்.

எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் விடுதலை !

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ அல்லது ‘ மாலிங்கமுவே சஞ்ச்ஜீவ ‘ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன உட்பட 11 சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே இந்த 11 பேரையும் விடுதலை செய்வதாக நீதிவான் அறிவித்தார். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் கடந்த யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு குற்ற தடுப்புப் பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த தீர்ப்பை அறிவித்தார்.

வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கனேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரை கைது செய்திருந்தனர்.

கனேமுல்லை சஞ்சீவ கைது செய்யப்படும் போது வேறு ஒரு வழக்குக்காக விளக்கமறியலில் இருந்தார். அவர் எம்.ஏ. சுமந்திரனை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகத்திலும் ஆயுத கடத்தல் தொடர்பிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விளக்கமரியலில் இருந்து தமது பொறுப்பில் எடுத்து, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் தடுத்து வைத்து 2019 ஆம் ஆண்டு முதல் விசாரித்திருந்தனர்.

சந்தேகநபர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் அதிக காலம் தடுத்து வைப்பு உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்ப்ட்ட 15 பேரில் 11 பேர் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர்.