10

10

“அரசியல்வாதிகள் தமது அரசியல்பலத்தினை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாடறுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.” – சிவசேனை அமைப்பு குற்றச்சாட்டு !

“அரசியல்வாதிகள் தமது அரசியல்பலத்தினை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாடறுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.” என சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் தமிழ்த்திரு அ.மாதவன் தெரிவித்தார்.

இலங்கை அரசியல் அமைப்பில் சைவசமயத்திற்கு முன்னுரிமை விதி, மதமாற்றத் தடைச்சட்டத்தை ஏற்படுத்து, மாடுவெட்டத் தடைவிதி போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அடையாள உண்ணாவிரதபோராட்டம் ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பழனிமுருகன் ஆலயத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எமது பகுதிகளிலும் பசுவதை செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. சில அரசியல் வாதிகள் தமது அரசியல் பலத்தினை வைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான வகையில் அதிகளவான மாடுகளை வெட்டும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவை பொறுத்தவரை பசுவதை செயற்பாடுகளை யார் முன்னெடுக்கின்றார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். எனவே இந்த செயற்பாடுகள் உடனடியாக முற்றாக நிறுத்தப்படவேண்டும். அத்துடன் ஒருவரது மனோநிலையை பயன்படுத்தி மதமாற்றத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இவை தடுக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பிலே இந்தவிடயங்களும் உள்ளடக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“2019 ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு எந்த விதத்திலும் அரசாங்கம் நிதி உதவியை வழங்கவில்லை.” – அட்மிரல் சரத் வீரசேகர

“2019 ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு எந்த விதத்திலும் அரசாங்கம் நிதி உதவியை வழங்கவில்லை.” என  பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக சரத் வீரசேகர தெரிவித்தார்.

குண்டுத்தாக்குதலை நடத்த முதல் தடவையாக இப்ராஹிம் 50 மில்லியன் செலவிட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் இவ்வாறு வழங்கப்பட்ட நிதியில் 30 மில்லியன் சஹரனிடமும் அவரது நண்பர்களிடம் இருந்ததாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தில் பேசியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதேவேளை சந்தேகநபர்களுக்கு எந்த விதத்திலும் அரசாங்கம் நிதி உதவியை வழங்கவில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபரும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

அதன்படி குறுகிய காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்டும் என்றும் தீவிரவாதிகளின் கொள்கைகளை பரப்புவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

`முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை – எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார் !

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றிவீதி என பெயர்சூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கு அமைவாக கிளிநொச்சி காவல்துறையினர் இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்று காலை 8 மணியளவில் அழைக்கப்பட்ட தவிசாளரிடம் சுமார் ஒரு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, குறித்த பெயருக்கு சொந்தமானவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி எனவும், சமூகமட்ட செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தமைக்காக அவரது பெயரை பொதுமக்கள் சூட்டியதாக காவல்துறையினருக்கு தெரிவித்ததாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

குறித்த வீதியானது பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைவாகவோ அல்லது, வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ பிரதேச சபையினால் திறந்து வைக்கப்படவில்லை எனவும், பொதுமக்கள் தாமாக முன்வந்து குறித்த வீதிக்க பெயர் வைக்க ஏற்பாடு செய்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதியாக தானும் கலந்து கொண்டதாக குறித்த விசாரணைகளில் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

குறித்த வீதிப் பெயர்ப்பலகையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.அதற்கு அமைவாக தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுதலை! 

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் நீதவான் ஏ.பீற்றர் போல் மணிவண்ணனை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

மணிவண்ணனுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

யாழ். மாநகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் பொருட்டு, மாநகர சபையினால் மாநகர காவல் படை ஒன்று நேற்றுமுன்தினம் தமது பணியை ஆரம்பித்தது. இதற்குப் பிரத்தியேகமாக சீருடை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த காவல் படை மற்றும் சீருடை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சில இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

விடுதலைப் புலிகளின் காவல் துறையின் சீருடைய ஒத்ததாக மாநகர காவல் படையின் சீருடை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனிடம் நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிஸார் ஆறு மணித்தியாலங்கள் விசாரணையை முன்னெடுத்தனர்.

இதன்பின்னர், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், வவுனியாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணை அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் மணிவண்ணன் பயங்கரவாதச் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.