06

06

“ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில், இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” – சஜித்பிரேமதாஸ

“ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில், இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (05.04.2021) சாட்சியமொன்றினை வழங்குவதற்காக குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ஜெயமஹா சென்றிருந்தார். இதன்போது அவருடன் சஜித் பிரேமதாசவும் சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “அமெரிக்காவில் 9-11 தாக்குதல்களை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை, பயங்கரவாத வேலைநிறுத்தத்தின் சூத்திரதாரி ஒசாமா பின்லேடனைக் கைது செய்ய, அங்குள்ள அரசாங்கத்திற்கு உதவியது.

மேலும் பின்லேடன் 9-11 தாக்குதல்களை பல ஆண்டுகளாக திட்டமிட்டதை ஆணையகம் கண்டுபிடிக்க முடிந்தது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் சூத்திரதாரியை தீர்மானிக்க இலங்கையும் இதேபோன்ற தந்திரங்களை பின்பற்ற வேண்டும். மேலும் 9- 11 தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணையகம், குடியரசுத் தலைவராக இருந்த ஜோர்ஜ் புஷ்ஷினால் நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா செயற்படுத்தினார். இதனை இலங்கையும் மேற்கொள்ள வேண்டும். இதேவேளை பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை ஒழிக்க சிங்கப்பூரிலுள்ள சட்டங்கள், இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

“மியான்மருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியன்மாருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிறது.” – நெகிழ வைத்த மிஸ் மியன்மாரின் பேச்சு !

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி முதல் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியன்மார் நாட்டு அழகி ஹான் லே, மியன்மார் இராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

ப்ளீஸ் ஹெல்ப் மியான்மர்" - உலகை உலுக்கிய இளம் மாடல் அழகியின் உரை #HanLay |  Please help Myanmar, say Han lay in Miss Grand International stage

தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020′ அழகி போட்டியில் பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியன்மாருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம்’’ என கூறினார். 22 வயதான உளவியல் மாணவியான ஹான் லே சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு யாங்கூன் நகர வீதிகளில், மியன்மார் இராணுவத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்வதேச அரங்கில் மியன்மார் இராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு தாய்லாந்திலேயே தங்கி இருக்க ஹான் லே முடிவு செய்துள்ளார்.

“டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவதில்லை.”- வடகொரியா அறிவிப்பு !

வடகொரியா, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.

ஜப்பானில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா இந்த முடிவினை எடுத்துள்ளது. கடந்த மார்ச் 25ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லாததால் தங்களது விளையாட்டு வீரர்களின் நலனை முன்னிட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானில் நடக்கவிருந்த ஒலிம்பிக் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கமைய ஒலிம்பிக் தொடர், எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரையும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஒகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன.

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டித் தொடராக கருதப்படும் ஒலிம்பிக் தொடர், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹரகமவில் நடுத்தெருவில் வைத்து இளைஞன் தாக்கப்பட்ட சம்பவம் – தாக்கிய பொலிஸ் விடுதலை !

பன்னிபிட்டி பகுதியில் பாரவூர்தி சாரதி மீது கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம போக்குவரத்து பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை ரூ .500,000 இலட்சம் பிணையில் விடுவிக்க நுகேகொட தலைமை நீதவான் நேற்று (5.04.2021) உத்தரவிட்டார்.

என். ரிப்தீன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகரகம போக்குவரத்து சார்ஜன்ட் விக்ரமதுங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முந்தைய விசாரணையின்போது சந்தேக நபர் தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும், அடுத்த விசாரணையில் அறிக்கையை சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சார்ஜன்ட் விக்ரமதுங்க மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபருக்காக ஆஜரான சட்டத்தரணிகள் வசந்தா ரணசிங்க மற்றும் பிரதீப் சில்வா ஆகியோர், தாக்குதலுக்கு உள்ளான சாரதிக்கு சிறிய கீறல்கள் மட்டுமே இருப்பதாகவும், வழக்கை தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் அவரை பிணையில் விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினர்.

வாதிகள் மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில் பதுளையில் வசிக்கும் தமிழரான பிரவீன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சி !

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (06.04.2021) கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அதற்காகவே வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 கோடியை கடந்துள்ளது !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.23 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.66 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.735 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.28 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,200-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அடையாளம் காணப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி !

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை தகவல்களின்படி, லுக்மான் தாலிப், லுக்மான் தாலிப் அகமட்  என்ற தீவிரவாதிகள் 2016 முதல் தாக்குதல்கள் நடக்கும் வரை பல சந்தர்ப்பங்களில் சஹ்ரானை சந்தித்ததாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் லுக்மான் தலிப் அகமட் இலங்கையில் பிரசாரங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சாரா ஜஸ்மின் என்பவர் இறந்துவிட்டாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.

“இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார்.” – ஸ்ரீதரன் கேள்வி !

“இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏப்ரல் தாக்குதலின் போது பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று (06.04.2021) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில்  இது தொடர்பாக பேசிய பேசிய ஸ்ரீதரன், இறுதி யுத்தத்தின்தின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின்  மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொழும்பு பேராயர், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா அல்லது உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

தாயார் தொலைபேசியினைப் பறித்தமையால் தூக்கிட்டு தற்கொலை செய்த 15 வயது மாணவன் – யாழில் சம்பவம் !

தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் ஒருவன் தாயார் தொலைபேசியினைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

59fa928c 4e9b 471a 82eb 88896347b5df

இந்தச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்விகற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் என்ற 15 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையினால் மாணவனின் தாயார் தொலைபேசியை பறித்து வைத்துள்ளார். அதனைப் பொறுக்க முடியாத மாணவன் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.” – மனோ கணேசன்

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு:-

மத்திய மாகாணத்தில் ஆரம்பித்து, இப்போது ஊவா மாகாணம் வரை, மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு என்ற இயந்திரம் ஒழிக்கப்பட்டு, தமிழ்ப் பிரிவு ஆகிவிட்டது. 6 தமிழர் பெரும்பான்மை பிரதேச சபைகளை நுவரெலியாவில் போராடிப் பெற்றதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வரலாறு. இருப்பதையும் இழப்பது இப்போதைய வரலாறு.

தனியான தமிழ்க் கல்வி அமைச்சு என்றால் மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்தில், எங்கள் பாடசாலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத் தனியான நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம் – என்றுள்ளது