01

01

தனது 15 ஏக்கர் காணியை வீட்டுத்திட்டங்களை இழந்து நிற்கும் மக்களிற்காக கையளித்த வீ.ஆனந்தசங்கரி !

சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை அரசாங்கத்திடன் கையளிக்கும் பத்திரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஒப்பிமிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்தியவகுப்பு காணியாக இருந்தது. குறித்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்த வந்த நிலயைில் அக்காணியை தமக்கே பகிர்ந்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்துமூலமான கோரிக்கையை பிரதேச செயலாளர் மற்றம் அரசாங்க அதிபரிடம் முன்வைத்தார். கொவிட் பரவல் காரணமாக குறித்த நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வந்த நிலயைில் அக்காணியை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்னெடுத்த வருகின்றது.

அந்த வகையில்,  இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆனந்தசங்கரியின் இலத்திற்கு சென்ற பிரதேச செயலக காணி அலுவலக உத்தியோகத்தர்கள் பகிர்நதளிப்பு செய்வது தொடர்பில் பேசியிருந்ததுடன், மத்திய வகுப்பு காணியை அரசாங்கத்திடம் பாரமளிப்பதற்கான ஆவணத்தினையும் வழங்கியிருந்தனர்.

குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்ட ஆனந்தசங்கரி, அவற்றை உரிய முறையில் மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். குறித்த காணிகள் அரச காணியாக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் காணியற்ற மக்களிற்கு பகிர்நதளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், 3 மாத கால அவகாசத்திற்குள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

குறித்த காணி பகிர்நதளிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி, மத்தியவகுப்பு காணி என்பதற்காக வீட்டுத்திட்டங்களை இழந்து நிற்கும் மக்களிற்கு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், இயலுமானவரை மக்களின் கரங்களிற்கு குறித்த காணி விரைவாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் வினயமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை – முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளருக்கு மதுபானம் விற்க தடை !

கொரோனா பரவல் தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,563 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சத்தீஸ்கர் மாநில அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளருக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மதுபான கடைகளுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி வழங்குவது, முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு முகக்கவசம் வழங்குவது, வளாகத்தை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மதுபான கடைக்கும் தலா ரூ.10 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கண்காணிப்பு குழுவினர் நாள்தோறும் 5 முறை மதுபான கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தவும் சத்தீஸ்கர் அரசு அறிவுறுத்தியுள்ளது.

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா !

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.‌ இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.‌ இதனிடையே கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷியாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.

‘அமெரிக்கா, கனடா, போலாந்து, ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ள நிலையில்  இந்த மாதம் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சியின் எதிரொலி – 43 சிறுவர்கள் சுட்டுக் கொலை !

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதால் வன்முறை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அமைப்பு எச்சரித்துள்ளது.

அத்தோடு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 536 ஆக உயர்ந்துள்ளது.

ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி தேர்தலில் வென்ற நிலையில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதனை அடுத்து ஆட்சி மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்போது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி முன்னர் போராட்டத்தை அடங்கிய இராணுவம் தற்போது துப்பாக்கிச்சூட்டை நடத்திவருகின்றது.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை மட்டும் மியன்மார் இராணுவம் சுமார் 100 ற்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொலை செய்த நாளே கொடிய நாள் என கூறப்படுகின்றது.

சஹ்ரான் ஹஷீமின் வீடியோவை, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த இருவர் கைது !

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு, சில மணிநேரத்திற்கு பின்னர், சஹ்ரான் ஹஷீம், சிலருடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வீடியோவை, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்றைய தினம்(31.03.2021) இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் இந்த சந்தேகநபரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹரான் ஹஷீமின் இனவாத கொள்கைகளை சமூக வலைத்தளங்களின் ஊடாக பரப்பிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் வாங்கிய கிராம சேவகர் வவுனியாவில் கைது !

வவுனியா, கோவில்குளம் பிரிவு கிராம சேவகர், இலஞ்ச ஊழல் பொலிஸாரால் நேற்று (31.03.2021) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கிராம சேவகர், நபரொருவரிடம் இலஞ்சம் வாங்கியதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரைக் கைதுசெய்தது.

மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் கிராம சேவகர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மனைவியை கழுத்தை நெரித்து கொன்று தானும் தூக்கில் தொங்கி உயிரிழந்த கணவன் – கிளிநொச்சியில் சம்பவம் – அநாதைகளாக்கப்பட்ட 03 குழந்தைகள் !

கிளிநொச்சியில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் தானும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.

மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்…!! கிளிநொச்சியில் பயங்கரம்..!! அநாதரவான மூன்று பிள்ளைகள்..! | Newlanka

குடும்பத்தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாணையில் தெரியசந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 3பிள்ளைகளின் பெற்றோரான வேலாயுதம் சிவஞானம் வயது 38, சிவஞானம் குகனேஸ்வரி வயது 36,ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

இச்சம்பவத்தினால் 16, 13, 6 வயதுடைய மூன்று பிள்ளைகள் அநாதையாகியுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்றதான குடும்ப வன்முறைகள் தொடர்ச்சியாக தமிழர் பிரதேசங்களில் அரங்கேறிய வண்ணமே உள்ளன. இதனை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்லாமல் இது தொடர்பாக கவனமெடுக்க வேண்டிய தரப்பினர் இதய சுத்தியுடன் சமூக மாற்றத்துக்காக இயங்க முன்வர வேண்டும்.

பெரும் யுத்தம் ஒன்றை சந்தித்த சமூகம் ஒன்றுக்கு அபிவிருத்திகள் எவ்வளவு தேவையானதோ அதை விட தேவையானது உளவியல் சார்ந்த ஆற்றுப்படுத்தல்களாகும். இது தனித்து சில அதிகாரிகளால் மட்டுமே முடியக்கூடியது அல்ல. எல்லாவற்றுக்கும் அரசு  மேல் பிழை போட்டு விட்டு ஒதுங்கிக்கொள்ளும் நம்முடைய அரசியல் தலைமைகளும் இது தொடர்பாக கவனம் செலுத்தி சமூக மாற்றத்துக்காக இயங்க முன்வர வேண்டும்.

வடக்கில் எத்தனையோ சமூக நலன் சார் அமைப்புக்கள் உள்ள போதும் அவை பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்கும் நிலை மாற வேண்டும். வன்னியின் கிராமங்களுக்கே ஒப்பீட்டளவில் அதிகமான ஆற்றுப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன.

இது யாருடையதோ பிரச்சினை என கடந்து செல்லாது விரைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவருடையதுமேயாகும். இதனை வழமை போலவே ஒரு செய்தியாக நாம் கடந்து செல்வோமாகில் இன்னும் பல சிறுவர்கள் யுத்தம் முடிந்த பின்பும் அநாதைகளாகும் நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

“அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் பொதுமக்களை பலிகொடுக்கவேண்டாம் என நாங்கள் அரசாங்கத்தை  கேட்டுக்கொள்கின்றோம்.” – முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய

“அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் பொதுமக்களை பலிகொடுக்கவேண்டாம் என நாங்கள் அரசாங்கத்தை  கேட்டுக்கொள்கின்றோம்.” என முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டிற்கு பாதிப்பு அல்லது தீங்கு நேர்ந்தால் உண்மையான இலங்கையர்களே அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர். இதன்காரணமாகவே நாட்டில் இன்று இடம்பெறும் விடயங்களை பார்க்கும்போது நாங்கள்ஆழ்ந்த கவலையடைகின்றோம். ஆனால் துரதிஸ்டவசமாக அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்தது போன்று பிடில் வாசிக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்களை கண்களை திறந்து நாட்டின் மீது கவிழுகின்ற பெரும் துயரத்தை பார்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் பொதுமக்களை பலிகொடுக்கவேண்டாம் என நாங்கள் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் இந்த பேரழிவிலிருந்து நாட்டை காப்பாற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை தனது இன்று நாங்கள் நாட்டிற்குள் இருந்து மாத்திரம் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. சர்வதேச ரீதியிலும் நாங்கள் நெருக்கடியான நிலையில்உள்ளோம். ஜெனீவாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்அதனை வெளிப்படுத்தியுள்ளது.இது தொடர்பில்அரசாங்கத்தினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவாகிளயுள்ள நிலைமைகுறித்து அனுபவம் மிக்க இராஜதந்திரிகள் வேறு விதமான கருத்தினை கொண்டுள்ளனர், அவர்கள் அதனை பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
எதிர்கட்சிகளும் இது குறித்து ஆராய்ந்துதங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் நாங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையின் பாரதூரதன்மையை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சரியாக புரிந்துகொண்டுள்ளார்களா?
எங்கள் நாட்டின் மரியாதை மற்றும் கண்ணியத்தை நாங்கள் காப்பாற்றியுள்ளோமா?

நாங்கள் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு இது பற்றி பேசவில்லை.
இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனீவா தீர்மானம் குறித்து நாங்கள் ஆழமாக ஆராய்ந்தோம். நாங்கள் எங்கள் நாட்டின் வெளிநாட்டுச்சேவை உருவாக்கிய தலைசிறந்த இராஜதந்திரிகளின் ஆலோசனைகளை பெற்றோம்- வெளிவிவகார நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றோம். இவையனைத்தையும் பக்கசார்பற்று நாங்கள் ஆழமாக ஆராயும் போது எங்கள் நாட்டின் ஆட்சியாளர்கள் எங்களை தோல்வியடையச்செய்துவிட்டார்கள் என எங்களால் மிகதெளிவாக தெரிவிக்க முடியும்.

அவர்கள் தங்கள் தோல்வியை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை பேரவையில் இந்த நடைமுறை தொடர்ந்தால் எங்கள் நாடு மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும். எவரும் எதனை சொன்னாலும் இதுவே உண்மை.
இறுதியில் துயரங்கள் இந்த நாட்டின் அப்பாவி மக்களின் தோள்களிலேயே சுமத்தப்படும். ஜெனீவாவில் இந்த நிலையை நாங்கள் ஏன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது?இதற்கான பதில் தெளிவானது
கடந்தகாலங்களில் எங்களுடன் இணைந்திருந்த பல நாடுகளை நாங்கள் இழந்துவிட்டோம்.ஆசிய பிராந்தியத்தில் மாத்திரம் இது இடம்பெறவில்லை சர்வதேச அளவிலும் இது நிகழ்ந்துள்ளனது.

கடந்தகாலங்களில் பல நாடுகள் எங்களிற்கு ஆதரவை வழங்கின.அணிசேரா கொள்கையை முன்னெடுத்த நாடுஎன்ற அடிப்படையில்கடந்த காலங்களில் பல நாடுகள் எங்களிற்கு ஆதரவளித்தன.ஆனால் அந்த நாடுகளில் பல எங்களிற்கு எதிராக வாக்களித்துள்ளன.அல்லது வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டுள்ளன,இது எங்களை காயப்படுத்துகின்றது.
ஆனால் என்ன நடந்ததுஎன்பது குறித்து எங்களிற்கு ஒரு புரிதல் உள்ளது.இதன் காரணமாக முறைப்பாடு செய்வதன் மூலம் இந்த நாட்டு மக்களை நாங்கள் ஏமாற்றக்கூடாது.

இது யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடப்பது தொடர்பானது.
நவீன உலகில் எந்தநாடும் தனித்து செயற்படமுடியாது.
நாங்கள் எப்போதும் எங்கள் பாரம்பரிய சகாக்களுடன் நெருக்கமாகயிருக்கவேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தான் அடக்கப்பட்ட நேரத்திலும் , அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தான் அடக்கப்பட்ட நேரத்திலும் , அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகையின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை போரின் போதும் போருக்குப் பின்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி ஒலித்த ஒரு குரல். போரில் நசுக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட அல்லது காணாமல்போனோரின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கிட்டு சர்வதேசத்துக்கும் ஆணைக்குழுக்களின் முன்பும் பகிரங்கமாகவே சாட்சியம் அளித்த ஒருவர். எமது மக்களின் இன்னல்களுடன் அனைத்து வழிகளிலும் பாடுபட்டதோடு அவை தொடர்பில் எமக்கு காலத்துக்குக் காலம் உரிய ஆலோசணைகளையும் வழங்கி வந்த ஒருவரை இழந்து நிற்கின்றோம்.

இலங்கை கத்தோலிக ஆயர் பேரவைக்கு சட்ட ஆலோசகராக நான் செயற்பட்ட காலத்தில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையுடனான உறவு மேலும் அதிகரித்தது. என்றுமே மக்களின் விடயங்களிலேயே அதிக கரிசனை கொண்டவராகக் காணப்பட்ட ஆயர், நோய்வாய்ப்பட்ட பின்பும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என இரவு பகலாக முயற்சித்தார். அதனால் இன்று அவரை இந்த முயற்சியில் இருந்து நிரந்தரமாக விடுவித்துள்ளது.

இவ்வாறு தனது இன மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தது மட்டுமன்றி அதற்காகவே வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவரை இழந்து நிற்பது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆற்றுப்படுத்த முடியாத துயருமாகும். இதனால் ஆயரின் பிரிவால் துயருற்ற அனைவருக்கும் விசேடமாக கத்தோலிக்க மக்களுக்கும் எனது இரங்கலைக் காணிக்கையாக்குகின்றேன் ”.  என்றுள்ளது.

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் கூறும்போது “

தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கினை ஆத்மார்த்தமாகவும் உணர்வாகவும் வெளிப்படுத்திய ஆன்மா ஒன்று மீளாத்துயரில் உறங்கிக் கொண்டிருக்கின்றது எனவும்  தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்து இன்று உறக்கம் கொள்கின்ற அவரை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது.” எனவும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோசேப்பு ஆண்டனை  தனது 80ஆவது வயதில் காலமானார் !

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோசேப்பு ஆண்டகை  தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார்.

நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30  மணியளவில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.

ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மறைந்தார். - www.pathivu.com

இந்நிலையில் இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

இன, மத மொழிகளிற்கு அப்பால் சாதாரண மக்களின் உரிமைகளிற்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம். மக்களின் உரிமைகளிற்காக போராடிய மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என நாம் இறைவனை பிரார்த்திப்பதோடு, ஆண்டகையின்

மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும், அன்னாரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.