26

26

“அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்” – அமைச்சர் டக்ளஸ் தேவானத்தா

“பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானத்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்றொழில் அமைச்சராக தான் இருக்கும் வரை எக்காரணத்திற்காகவும் தயவுதாட்சண்யம் காண்பிக்க கூடாது என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று (26.01.2021) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாய்த்தக் கூட்டத்திலேயே குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், மன்னார் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் தமது கடல் பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள், சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “வெளி மாவட்டங்களுக்கான அனுமதிகளைக் கொண்டிருப்போர் பூநகரி கடல் பிரதேசத்தில் தொழில் ஈடுபடுவது தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

அத்துடன் பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தடை செய்யப்பட்ட தொழிற் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸார் ஆகிய தரப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒருங்கிணைப்பு முன்னாய்த்தக் கூட்டத்தில் பூநகரிப் பிரதேச செயலாளர் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளது” – எம்.ஏ.சுமந்திரன்

“அரசியல் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (26.01.2021), தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இரு சமூகங்களும் ஒன்றிணைந்து தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து பயணிக்க வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் அவசியம். அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .

அத்துடன் ஜனாஸா அடக்கம் தொடர்பாக குரல்கொடுத்த கஜேந்திரன், சாணக்கியன் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி எனவும் அவர் கூறினார்.

இதேவேளை முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளதாவது, “முன்னைய காலங்களில் சுமந்திரன், மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன உட்பட நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாராந்த செய்தியாளர்கள் சந்திப்புகளை நடாத்தி வந்ததோடு, சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தோம்.

இந்நிலையில் தற்போது அதனை மீண்டும் புதுப்பித்து, இரு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்து அரசியல் ரீதியிலான ஒற்றுமையுடன் ஒரேயணியாக தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயாராக வேண்டியது அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம் !

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று இன்று (26.01.2021) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில்  போராட்டம்.(படங்கள் இணைப்பு)

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை’, ‘விவசாய உற்பத்திகளை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் காப்ரேட் நிறுவனங்கள் அல்ல. இந்திய மத்திய அரசே முடிவு செய்’, என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையிலும் இந்திய இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்பப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

‘அடுத்த மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வழங்கப்படும்” – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து 600.000 டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக மூன்று இலட்சம் பேருக்கு தலா இரண்டுடோஸ்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னிலை பணியாளர்கள் பொலிஸார் முப்படையினருக்கு முதற்கட்டமாக மருந்துவழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலகசுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“பைடன் நிர்வாகம் தொடர்ந்தும் மனிதஉரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும்” – இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்

“அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனிதஉரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும்” என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீது திணிக்காது – அமெரிக்க தூதுவர் அலைனா  | Tamil First

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்து கொள்ளுமா? என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள தூதுவர் எனினும் ஏனைய நாடுகள் மூலமாக இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதிசெய்வதற்காக பாடுபடும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் கீழும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தகதியிலே காணப்படுகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைக்கு ஆதரவளிப்பதை இலங்கையுடன் வலிந்துமோதலில் ஈடுபடுவதாக கருதக்கூடாது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

“கொரோனாவின் மூன்றாம் அலை நாட்டைத் தாக்கியபோது, நாட்டை முழுமையாக முடக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அரசே கொரோனாவைப் பரப்பியது” – மங்கள சமரவீர குற்றச்சாட்டு !

“கொரோனாவின் மூன்றாம் அலை நாட்டைத் தாக்கியபோது, நாட்டை முழுமையாக முடக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அரசே கொரோனாவைப் பரப்பியது” என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போலியான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசு, இன்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திக்குமுக்காடுகின்றது.

நல்லாட்சி அரசை எப்படியெல்லாம் விமர்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அன்று விமர்சித்தது ராஜ்பக்ச அணி. இன்று பௌத்த தேரர்களும், நாட்டு மக்களும் இந்த அரசைத் தூற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் நலன் கருதி –  சர்வதேசத்தின் உறவைப் பேணிக்காத்து நல்ல வேலைத்திட்டங்களை நாம் அன்று முன்னெடுத்தோம். ஆனால், இந்த அரசோ எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றது.

கொரோனாவின் மூன்றாம் அலை நாட்டைத் தாக்கியபோது, நாட்டை முழுமையாக முடக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அரசே கொரோனாவைப் பரப்பியது. இன்று அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

கொரோனாவை சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்த எத்தனித்த அரசு, இன்று கொரோனாவால் ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளது.

சிங்களவர்களின் மனதில் இடத்தைப் பிடிக்கும் நோக்குடன் தமிழ், முஸ்லிம்களின் மத, கலாசார, பண்பாட்டு உரிமைகளில் இந்த அரசு கைவைத்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதேபோன்று போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்குத் தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது – என்றார்.