22

22

“அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை” – சஜித் பிரேமதாஸ

“அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை” என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டத்தின் போதே இவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா செயற்பட்டாலும் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லாமை கவலையளிக்கிறது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.

இந்திய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அயல் மற்றும் முக்கிய நட்பு நாடுகளிலிருந்து பிரதமர் மோடியின் அரசுக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறனைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு அமைவாகவும், கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட அனைவருக்கும் உதவும் வகையிலுமே இந்த திட்டம் அமைகிறது.

இதன் முதற் கட்டமாக பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகளிற்கான தடுப்பூசி விநியோகப் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கான விநியோகப் பணிகளை ஆரம்பிக்க முன்னர் அந்நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான அனுமதிகளை குறித்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடாகும். ஆனால் இலங்கை வெறுமனே வாய்மூலமாக வீராப்பு பேசுகிறது.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு எதுவும் முடியாது என்பது நிரூபனமாகியுள்ளது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எதிர்க்கட்சி முயற்சிக்கையில் அதற்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பது மாத்திரமன்றி நீதிமன்ற உத்தருகளில் நாட்டை ஆள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

போலித்தனமான பிரசாரங்களினால் மக்களை முழு அளவில் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு மற்றும் மக்களின் நலன்கள் குறித்து அக்கறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி !

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையா உள்ளது. இந்த நகரில் இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென்னு படகின் என்ஜின் பழுதாகி நின்றது.

இதனால் நிலை தடுமாறிய அந்த படகு கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருசிலர் நீந்தி உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்தில் 43 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளன.

இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.

அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றனர். இதனால் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த படகு விபத்தில் அதிகமானோர் உயிரிழப்புக்கு காரணம் என்று அகதிகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஐ.நா. அகதிகள் நல அமைப்புகள் தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டது. அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய புதிய ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமனம் !

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உரிய முறையில் செயற்பட்டனவா? என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மூவர் கொண்ட புதிய குழுவை நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர் நிமால்அபயசிறி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்தனவா? மனித உரிமை மீறல்கள் உறுதிசெய்யப்பட்டால் ஏதாவது நடவடிக்கை எடுத்தனவா? என ஆராய்வதே புதிய ஆணைக்குழுக்களின் நோக்கம்

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஒரு மாதகாலத்திற்குள் இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கோடாரியால் வெட்டிக்கொலை – உத்தரபிரதேச மாநிலத்தில் சம்பவம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே நடந்த 2 கற்பழிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிறுமி ஒருவரை மர்ம கும்பல் கற்பழித்து கொன்ற சம்பவம் நடந்து இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினரின் 4 வயது குழந்தையுடன் வயல் வெளிக்கு சென்றார். சிறுமியின் தந்தை வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சிறுமியும், அந்த குழந்தையும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர். 04 வயது குழந்தையை அடித்து அங்கிருந்து விரட்டிய கும்பல்  பின்னர் அந்த 15வயது சிறுமியை அவர்கள் கற்பழித்துள்ளனர். மேலும் கோடாரியால் வெட்டி அவரை கொலை செய்தனர்.

கும்பலால் தாக்கப்பட்ட 04வயது குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை கூறினாள். உடனே ஊர் மக்கள் அந்த பகுதிக்கு திரண்டு சென்றனர். ஆனால் சிறுமியை காணவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தூரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

செய்தி – மாலைமலர்

“நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும்” – ரணில் விக்கிரமசிங்க

“நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று(22.01.2021)  நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்காது தடுப்பூசி தொடர்பாக அரசு கதைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், தடுப்பூசியை வழங்கிய பின்னர் பிரச்சினை முடிந்துவிடும் என்று எண்ணிவிட முடியாது.

தடுப்பூசியைக் காட்டி மக்களை ஏமாற்றாது, கொரோனாவைத் தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பாக முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு அரசு வெளியிட வேண்டும்.

இலங்கையில் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும் – என்றார்.

“எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்களை சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்ததப்பட்டு இலங்கை கடற்றொழிலாளர்களும், எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தி வந்தேன்.

வலியுத்தியதுடன் மட்டும் நின்று விடாது, அதுதொடர்பான முன்வரைவு ஒன்றை தயாரித்திருந்தேன். கடந்த வருடம் ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட போது இந்தியப் பிரதமரிடமும் கையளித்திருந்தேன்.  இந்தியத் தரப்பினரும் குறித்த திட்டத்தினை வரவேற்றிருந்தனர்.

எனினும் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட கொவிட் – 19 காரணமாக அதனை முன்கொண்டு செல்ல முடியவில்லை.

அண்மைக்காலமாக இந்தியக் கடற்றொழிலார்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், குறித்த செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கடலில் மோதல் ஏற்பட்டு விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது.

உயிரிழந்தவர்கள் இந்தியக் கடற்றொழிலாளர்களாக இருப்பினும், அவர்களும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகள். கடந்த காலங்களில் நாம் துன்பத்தினை சுமந்த வேளைகளில் எல்லாம் எமக்காக உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள் – எமக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை எமக்கு இன்றும் ஏறபடுத்திக் கொண்டிருப்பவர்கள்.

அவ்வாறானவர்களுக்கு இன்னல் ஏற்படுவதை என்னால் எவ்வாறான சூழலிலும் தாங்கிக் கொள்ள முடியாது. நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ளேன்.

அதேவேளை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் எந்தளவிற்கு இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவன் என்ற அடிப்படையில், இந்தியக் கடற்றொழிலாளர்களும் இச்சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்படாது புத்திசாதுரியமாக எதிகால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

எவ்வாறிருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டுமாயின் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.