17

17

சர்ச்சைகளுக்கு மத்தியில் 6வது முறையாக உகண்டாவில் ஜனாதிபதி பதவியை ஏற்கிறார் யோவேரி முசவேனி !

ஆபிரிக்க நாடான உகாண்டாவில் 1986ம் ஆண்டில் இருந்து என்.ஆர்.எம் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் யோவேரி முசவேனி (வயது 76) ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி உகாண்டாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. யோவேரி முசவேனி மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து என்.யு.பி கட்சி சார்பில் முன்னாள் பாப் நட்சத்திரமான பாபி வைன் போட்டியிட்டார். இவர்கள் தவிர 9 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். எனினும் யோவேரி முசவேனிக்கும், பாபி வைனுக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவியது.
ஆறாவது முறையாகவும் வெற்றி பெற்ற உகண்டா அதிபர் முசவேனி : தேர்தலில் முறைகேடு  இடம்பெற்றுள்ளதாக கூறும் போட்டியாளர் - NewsNow - Tamil
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முசவேனி வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 6வது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்க உள்ளார். முசவேனிக்கு 59 சதவீத வாக்குகளும், பாபி வைனுக்கு 35 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தேர்தலில் மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் அடக்குமுறைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான என்.யு.பி கட்சி தலைவர் பாபி வைன் குற்றம் சாட்டி உள்ளார். அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தல் உகாண்டாவின் வரலாற்றில் மிகவும் மோசடி இல்லாத தேர்தலாக இருக்கும் என அதிபர் முசவேனி கூறினார்.
ஆனால், துண்டிக்கப்பட்ட இணையதள தொடர்புகள் மீண்டும் வழங்கப்படும்போது, வாக்குப்பதிவில் மோசடி செய்ததற்கான ஆதாரங்களை வழங்குவதாக பாபி வைன் கூறி உள்ளார்.  தேர்தலுக்கு முன்னதாக இன்டர்நெட் துண்டிக்கப்பட்டது. இதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தன்னையும் தன் மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் பாதுகாப்பு படையினர் தடுத்து வைத்திருந்ததாக பாபி வைன் குற்றம்சாட்டி உள்ளார்.

“பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம். விரைவில் நான் அறிவிப்பேன் ” – ஜீவன் தொண்டமான் உறுதி !

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நாட் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாதம் இறுதிக்குள் நல்ல பதில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்க வேண்டும், அதுவும் அடிப்படை சம்பளமாக அமைய வேண்டும் என பல்வேறு மட்டத்தில் வழியுறுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நழுவப்போவதில்லை என காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது தலைவரின் கடமை ஆகையால் சம்பள விடயத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமான பதில் இம்மாத இறுதிக்குள் கிட்டும், அதை நான் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

“கொவிட் தடுப்பூசியை வாங்குவதற்கு அரசாங்கம் தனியார் துறையிடம் பிச்சை எடுக்கின்றது” – ரணில் விக்கிரமசிங்க

“கொவிட் தடுப்பூசியை வாங்குவதற்கு அரசாங்கம் தனியார் துறையிடம் பிச்சை எடுக்கின்றது” என  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது ஒரு முழுமையான பொய். ஏற்றுமதி வணிகர்களிடம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும். இந்த தொகையை நாங்கள் பட்ஜெட்டில் இருந்து நிர்வகித்திருக்க முடியும், அதற்கு பதிலாக நாங்கள் தனியார் துறையிலிருந்து பிச்சை எடுக்கிறோம். ” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமாக இருந்திருந்தால் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு என்ன உத்திகள் எடுக்கப்படும் என்று கூட்டத்தில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரமசிங்க,

நகைச்சுவையாக அளித்த பதிலில் ” இதில் ஒரு நன்மை இருக்கிறது, நாங்கள் தற்போது அரசாங்கத்திலோஅல்லது நாடாளுமன்றத்திலோ இல்லை” என்று பதிலளித்தார்.

யாழ்.பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு – பிரதமரிடம் கரிசனை வெயியிட்ட இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே !

யாழ்.பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டதாகவும்  அதன் பின்னரே நிலைமையை சுமூகமாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன என பிரபல பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

பிரபல பத்திரிகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நினைவுத்தூபி அழிக்கப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததும் இலங்கைக்கான இந்திய தூதுவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தொடர்புகொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அவ்வேளை பிரதமர் குருநாகலில் உள்ள தனது தொகுதியில் மக்களை சந்திப்பதில் ஈடுபட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பகல் பிரதமர் கொழும்பு திரும்பியதும் அவசரமாக அவரை சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்.பல்கலைகழத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை குறித்து கடும் கரிசனை வெளியிட்டார்.

இந்தியவெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெற்ற உடன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் தெரிவித்தார் என அறிய முடிகின்றது.

உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவையும் யாழ்பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராஜாவையும் தொடர்புகொண்டுள்ளார், திங்கட்கிழமை அதிகாலை வரை நிலைமையை சுமூகமாக்குவதற்காக பிரதமர் அவர்களுடன் தொடர்பிலிருந்துள்ளார்.

இதன்காரணமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களும் இன்னொரு நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர் திங்கட்கிழமை அதிகாலை அழிக்கப்பட்ட நினைவுத்தூபியின் கற்களை பயன்படுத்தியே அடிக்கல்நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்தது இலங்கை !

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கையின் இந்த நிராகரிப்பை தொடர்ந்து இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா, ஜேர்மனி வடமசெடோனியா, மொன்டினீக்ரோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளன.

புதிய தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரச போக்கை வெளிப்படுத்துபவையாக காணப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ள அதேவேளை ஒருமித்த தீர்மானமொன்றை ஏற்றுக்கொள்வது கூட இலங்கைக்கு அரசியல் ரீதியில் சவாலான விடயமாக காணப்படலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தீர்மானமொன்றை இலங்கை ஏற்றுக்கொண்டால் அது இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்ற கருத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தீர்மானமொன்றிற்கு இணைஅனுசரணை வழங்குவது குறித்த கேள்விக்கே இடமில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் அவ்வாறானதொரு தீர்மானமே அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகஅமைந்தது, அது அரசமைப்பிற்கும் இறைமைக்கும் மக்களிற்கும் எதிராக காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

கருத்தொருமைப்பாட்டுடனான தீர்மானம் என்பது கூட சாத்தியமா இல்லையா என்பதை என்னால் தெரிவிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆனால் அரசியல் ரீதியில் இது ஒரு பெரும் சவாலாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறியது குறித்த முடிவில் இலங்கை உறுதியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் 2019 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு, முன்னைய இணை அனுசரணை வழங்கப்பட்ட ஆணை குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னைய தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளும் புதிய தீர்மானத்தை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஆதரவளித்தாலும் ஆதரவளிக்காவிட்டாலும் அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் பலி – 100 பேருக்கு மேற்பட்டோரின் நிலை மோசம் – நோர்வேயில் மக்களிடையே தொடரும் அச்சம் !

ஐரோப்பிய நாடான நோர்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நோர்வேயில் இதுவரை 33 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், நோர்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட குறுகிய காலத்திற்குள் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 23 பேரில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. எஞ்சியவர்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. உயிரிழந்தவர்கள் நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்கள்.
இவர்கள் பைசர் தடுப்பூசியை பயன்படுத்திய பின் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் 80-வயதிற்க்கு மேற்பட்டவர்கள் ஆகும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என நோர்வே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பைசர் தடுப்பூசியை கவனமாக பயன்படுத்த நோர்வே அரசு அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசியின் வினியோகத்தை அந்நிறுவனம் குறைத்துள்ளது.