02

02

“அரசாங்கம் ஏற்கனவே பெரும்பான்மை மக்களுக்கான ஒரு அரசியல் யாப்பு வரைவை தயார் செய்து விட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்கிறது”  – சி.வி.விக்னேஸ்வரன்

“அரசாங்கம் ஏற்கனவே பெரும்பான்மை மக்களுக்கான ஒரு அரசியல் யாப்பு வரைவை தயார் செய்து விட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்கிறது”  என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

புதிய அரசியல் யாப்பு பற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் கருத்துக்களை அனுப்பிய போது, இதனையும் தெரிவித்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் க.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மையில் நீதி அமைச்சினால் பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்பு பற்றிய கருத்துக்களைக் கோரியது சம்பந்தமானது இக்கடிதம். மேன்மைமிகு மற்றும் படித்த பெரியோர்கள் உங்கள் நிபுணத்துவ குழுவை அலங்கரித்துக் கொண்டிருப்பினும் எங்களுடைய அதுவும் முக்கியமாக தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசீலிக்கப்பட மாட்டாது என்பது எமது பார்வை பாற்பட்ட கருத்தாகும்.

எமது சந்தேகப்படி பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த வரைவை வெளிவிடுவதே உங்கள் எண்ணம் என்று நாம் கருதுகின்றோம்.

எம்மிடம் கருத்துக்கள் கோரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தமைக்கு காரணம் எல்லோரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்தோம் என்று உலகத்திற்குப் பறைசாற்றவே என்று நாம் எண்ணுகின்றோம்.

இவ்வாறான எமது கருத்துக்கு வலுச் சேர்ப்பது என்னவென்றால் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு எம்மிடம் இருந்து தமிழ்ப் பெயர்களைப் பெற்றபின் முதலில் முற்றிலும் சிங்கள மக்களைக் கொண்ட ஆணைக்குழுவையே நீங்கள் நியமித்தீர்கள். அதுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறான பெரும்பான்மையினரை மட்டுமே நியமித்தீர்கள். பொதுமக்கள் தமது ஏமாற்றத்தை வெளியிடப் போய் பின்னர் ஒரு தமிழரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஆகவே பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல்வேறு வகைபாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்தில் எடுத்து அதற்கேற்ப ஒரு அரசியல் யாப்பு வரைவு கொண்டுவரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.

ஏழு மாகாணபெரும்பான்மையினர் தமக்கு இயைபான சட்டத்தை இயற்றி மற்றைய இரு மாகாண பெரும்பான்மையினரின் உரிமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பாதிக்கும் வண்ணம் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக நாம் கணிக்கின்றோம். கடந்த 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பேசும் பெரும்பான்மையிரே இவ்விரு மாகாணங்களிலும் இருந்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை.

ஆனால் புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்ற அவச்சொல் வராதிருக்கவே நாம் எமது கருத்துக்களை பிறிதொரு ஆவணத்தில் உள்ளடக்கி இத்துடன் இணைத்துள்ளோம்.

11 விடயங்கள் பற்றி எமது கருத்துக்களைக் கோரி 12வதாக மேற்படி 11ல் உள்ளடங்காதவற்றைப் பற்றி குறிப்பிடலாம் என்று கூறியுள்ளீர்கள்.

ஆனால் நாம் முன்னுரையாக சில விடயங்களைக் கட்டாயமாக எடுத்துக்கூற வேண்டியுள்ளது. இதில் நாம் கடந்தகால உண்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசாங்கம் வேண்டுமெனில் முன்னர் செய்த அதே தவறுகளை இம்முறையும் இழைக்காது இந்தப் புதிய முயற்சியின் போது இந் நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புக்களையும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவுசெய்யும் விதத்தில் ஒரு தகுந்த அரசியல் யாப்பை வரைந்துநாடாளுமன்றத்தில் பதிந்து நிறைவேற்றலாம்.” என  குறிப்பிட்டுள்ளார் விக்கினேஸ்வரன் .

‘எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம். பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்’ – புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் !

‘எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம். பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்’ என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (01.01.2021) இடம்பெற்ற நீதித்துறை உத்தியோகத்தர்களின் புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில், தலைமை உரையாற்றியபோதே மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களில் மேல் நீதிமன்ற நீதிபதி,  நீதிபதிகள் உட்பட உத்தியோகத்தர்கள், அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக நேற்று காலை 9 மணிக்கு உறுதியுரை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதவான் நளினி சுபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tamilmirror Online || யாழ்.நீதிபதிகள் உறுதியுரை

இதன்போது தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் ஜே.ஜெயரஞ்சன், கணக்காளர் வி.ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் நீதிபதிகள் முன்னிலையில் உறுதியுரையை நிறைவேற்றினர்.

நாட்டில் தற்போது நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று தொடர்பில் சிறப்புரை ஆற்றுவதற்காக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தார். அவர் கோவிட் – 19 தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளும் நடைமுறைகள் பற்றி உரையாற்றினார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

“சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளை கட்டுப்படுத்த  வடக்கில் மக்களுடைய ஒத்துழைப்பு தேவை” – சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண

“சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளை கட்டுப்படுத்த  வடக்கில் மக்களுடைய ஒத்துழைப்பு தேவை” என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது ,

“கடந்த வருடம் உலகத்தினை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் அச்சத்துடன் கடந்து சென்றுள்ளது.

அதேபோல் எதிர்வரும் காலத்திலும் உலக நியதிக்கு இணங்க வட பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய கட்டுப்பாடுகள், நடைமுறைகளை பின்பற்றி பொது மக்களை செயற்படுத்துவதற்கு காவல்துறையினர் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.

அதேபோல வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தை விட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிகமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் வட மாகாணத்தில் தற்போது இடம்பெறுகின்ற சில கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து அதனை கட்டுப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோல பொதுமக்களுக்கு ஒரு அழைப்பினை விடுக்க விரும்புகின்றேன். அதாவது சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் அறிந்திருந்தால் அதனை தெரியப்படுத்தினால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும்”  என தெரிவித்தார்.

“இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும்” – இரா.சாணக்கியன்

“இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் நேற்று (01.01இ2021)  இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

“இந்த வருடம் மூன்றாவது மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூடவுள்ளது. கடந்த அரசாங்கத்தில் இப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ஆனால் தற்போதைய புதிய அரசாங்கம் இப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாமும் சகல தமிழ் தரப்பினரும் தற்போது இணைந்து ஒரு முன்மொழிவினை இப்பேரவையில் முன்வைக்கவே விரும்புகின்றோம்.

இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். சில அரசியல் தரப்பினர் அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தில் செயற்பட முயல்கின்றனர். இந்த பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவினை நாம் பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்த முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் காலஅவகாசம் கேட்டுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தன. இவை முற்றுமுழுதான பொய்கள் ஆகும். இப்பொய்களை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம். இப்பேரவையின் விடயங்கள் குறித்து அறிக்கை விடும் சிலருக்கு இப்பேரவை எவ்வாறு இயங்குகின்றது என கூட தெரியாமல் உள்ளது.

அண்மையில் ஒரு சிலர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை இவ்விடயத்தில் கோருகின்றனர். அவ்வாறு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென்றால் இன்னுமொரு நாடு பிரேரணையை முன்வைக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்தும் இனி ஒரு நாடு வந்து பிரேரணை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் நம்பவில்லை. இதை சிலர் குறுகிய இலாப அரசியலுக்காக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் புதிய அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து நாம் இப்பேரவையினை பயன்படுத்த முடியும். 11 வருடங்களாக எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்காது இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீதி கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும்.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முஸ்லீம் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையை இப்பேரவையின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் முஸ்லீம் நாடுகளின் ஆதரவினை பெற இஸ்லாமிய மதகுருக்களை அங்கு அழைத்து சென்றிருந்துடன் ஆதரவு கோரிக்கையை முன்வைத்திருந்தது. இதனால் இஸ்லாமிய நாடுகளும் அதன்போது ஆதரவாக வாக்களித்திருந்தது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்தை காப்பாற்ற வாக்களித்திருந்தனர். ஆனால் இன்று அச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. அதாவது நல்லடக்கம் செய்யும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும். 2013 ஆண்டு திகண அளுத்கம வில் தொடங்கி தற்போது ஜனாசா வரை இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம்” – சரத் பொன்சேகா

“மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(01.010.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ,

“அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டக் காரணம் என குற்றம் சாட்டினார். அத்துடன் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கம் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்,கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், அரசாங்கத்தின் இயலாமை காரணமாக அதனை கட்டுப்படுத்த முடியாது போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம் எனவும் மாகாண சபைக்கு புதிய முகங்களையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“‘நிச்சயமாக, தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடுவேன்” – கிறிஸ் கெய்ல் நம்பிக்கை !

மேற்கிந்தியதீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர் கிறிஸ் கெய்ல். 41 வயதாகும் இவர் தனது 20 வயதில் கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2000-த்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். டி20 கிரிக்கெட் போட்டியில் 2006-ல் அறிமுகம் ஆனார்.
ஆகஸ்ட் 2019-ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடியதுதான் கடைசி ஒருநாள் போட்டி. 2014-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
41 வயதாகும் கிறிஸ் கெய்ல் 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடுவேன். இரண்டு உலக கோப்பைகள் இன்னும் பாக்கி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘நிச்சயமாக, தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடுவேன் என்று நம்புகிறேன். ஆகவே, 45 வயதிற்கு முன் வாய்ப்பே இல்லை. இன்னும் இரண்டு உலக கோப்பை பாக்கி உள்ளது’’ என்றார்.

காங்கோ குடியரசில் தொடரும் உள்நாட்டுப்போர் – கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 25 பொது மக்கள் பலி !

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.  இந்த மோதல்களின் போது கிளர்ச்சியாளர்கள் நடத்து தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் பென்னி மாகாணத்தில் உள்ள ஒரு கிராம பகுதிக்குள் ஏ.டி.எஃப் என்ற கிளர்ச்சிப்படையினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த கிராம பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கிராம மக்களில் 25 பேரை கிளர்ச்சியாளர்கள் கொன்று உடலை வீசியிருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்ததை கண்ட பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்  கிளர்ச்சியாளர்கள் கிராமப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். அந்த கிளர்ச்சியாளர்களை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்த கொரோனா – புதிய கொரோனா வைரஸ் சீனாவிலும் !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா சீனாவில் பரவாமல் இருந்தது.
இந்நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது உருமாறி மீண்டும் சீனாவையே வந்தடைந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து டிசம்பர் 14-ம் திகதி 23 வயது நிரம்பிய இளம் பெண் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திற்கு விமானத்தில் வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், அந்த கொரோனா உருமாறிய கொரோனா வைரசா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அந்த 23 வயது நிரம்பிய பெண்ணுக்கு பரவியுள்ளது.
 இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் என சீன அரசு நேற்று (டிசம்பர் 31) தெரிவித்துள்ளது. இதன் மூலம் உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவிவிட்டது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறி மீண்டும் 2020 டிசம்பர் மாதம் சீனாவையே வந்தடைந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதன் எதிரொலி – பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார் இங்கிலாந்து பிரதமரின் தந்தை !

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது 2016-ம் ஆண்டு அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் உறுதியானது.  ஆனால் அந்த முடிவில் இருந்த சில நடைமுறை சிக்கலால் இழுபறி நிலவியது. இறுதியில் கடந்த ஆண்டு ஜனவரி 31-ம் திகதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது. ஆனாலும், ஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்தின் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.
இந்த பிரச்சனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்வு எட்டப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு சட்டமாக்கப்பட்டது.இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இங்கிலாந்து நேற்று முன்தினம் (31.12.2020) அதிகாரப்பூர்வமாக விலகியது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியதையடுத்து, இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் இனி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பெற்றுவந்த சலுகைகள் முடிவுக்கு வந்துள்ளது. பயண சலுகைகளும் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இவர் பழமைவாத கட்சியை சேர்ந்தவர். போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டன்லி ஜான்சனும் இதே பழமைவாத கட்சியை சேர்ந்தவர் தான். ஆனால், ஸ்டன்லி ஜான்சனுக்கு இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதில் விருப்பம் இல்லை. 2016-ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பிலும் இவர் பிரேக்ஸிட்டுக்கு எதிராகவே வாக்களித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து முழுவதும் விலகியுள்ள நிலையில் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டன்லி ஜான்சன் பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் நாடான பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்தது தொடர்பாக 80 வயது நிரம்பிய ஸ்டன்லி ஜான்சன் கூறியதாவது:-

“இது பிரெஞ்சு குடிமகனாவதற்காக செய்யப்பட்டது அல்ல. இது ஏற்கனவே நாம் யார் என்பதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை. எனது தாய் பிரான்சில் பிறந்தவர். நான் எப்போதும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்தவன் தான்” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பிரதமர் போரிஸ் ஜான்சன். ஆனால், தற்போது பிரதமர் ஜான்சனின் தந்தையே ஐரோப்பிய நாடான பிரான்சில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ள நிகழ்வு ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஜனவரி 20-ம் திகதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம்” – கமலா ஹாரிஸ் நம்பிக்கை !

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20-ம் திகதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம் எனவும் துணைஜனாதிபதியாகவுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
2020-ம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் முதல் காட்டுத்தீ மற்றும் சூறாவளி, இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது சவாலான பணிகளை மேற்கொண்ட முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். 2021-ம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம். உங்களுக்கும் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.