28

28

“கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கி இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்” – கனடா பிரதமர் ஜஸ்டின்

கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்கி இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “நேற்று 2,674 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,22,887 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,001 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதுவரை 1,86,464 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க இருப்பதால் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்கள் தொகை – கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 9ஆயிரத்தை தாண்டியது !

இன்றைய தினம் நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த 211 பேருள் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று பரவியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 140 பேர் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நான்காயிரத்து 75 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் நான்காயிரத்து 987 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் 19 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை வழங்கவே துமிந்தசில்வா விடுதலை மனுவில் கையெழுத்திட்டேன்” – பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்

துமிந்தசில்வாவை விடுதலை செய்வதற்காக கோரிய மனுவில் கையெழுத்திட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மீது பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இது பற்றி மனோகணேசன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஏன் குறித்த மனுவில் கையெழுத்திட்டேன் என்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை மனதில் வைத்தே துமிந்தசில்வாவை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டேன். துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான வலுவான அழுத்தத்தினை கொடுக்கலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பமகக கருதியே அதில் கையெழுத்திட்டேன்.

தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த நினைத்தேன். குறித்த மனுவில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

அது சுயாதீன ஆவணம் – எதிர்க்கட்சியில் உள்ள பலர் கைச்சாத்திட்டுள்ளனர். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.

“இலங்கையை அமெரிக்காவின் இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் வருகையாகும்” – அனுரகுமார திசாநாயக்க

“இலங்கையை அமெரிக்காவின் இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் வருகையாகும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(28.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அமெரிக்கா தனது இராணுவ பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இலங்கையை இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது. அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவுடனான எக்‌ஸா உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். எனினும் இலங்கை இதுவரை சர்வதேச போர் அமைப்புக்களுடன் எந்தவொரு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் இராணுவ அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதில்லை.

இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. எனவே சதித்திட்டங்களுடான இராணுவ ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“ தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” – சவுதிஅரேபியா அரசு அறிக்கை !

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று திங்கட்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ்க்கும் மக்ரோனுக்கும் எதிராக இஸ்லாமிய நாடுகளில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. ஈரான், பாகிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் கடுமையான போராட்டங்கள் பிரான்ஸுக்கு எதிராக நடந்து வருகின்றன.

இந்தநிலையில் தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சவுதிஅரேபியா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதிஅரேபியா அரசு வெளியிட்ட அறிக்கையில்,

“ தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளது.மேலும், முகமது நபியின் உருவத்தை கார்ட்டூனாக வரைந்த பிரான்ஸின் சார்லிகெப்டோ பத்திரிகை நிறுவனத்துக்கு சவுதிஅரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்லாமிய விரோத, இஸ்லாம் வெறுப்புப் பதிவுகளைத் தடை செய்வது அவசியம். இது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தைக் கிளப்பி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மார்க் ஸுக்கர்பர்க்கிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், ”இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களைப் படுகொலை செய்வது நடந்து வருகிறது. இதனால் தீவிரவாதமே அதிகமாகும். இஸ்லாமிய வெறுப்பைத் தடுக்க ஃபேஸ்புக் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

யூத விரோதம், படுகொலை, துவேஷம் ஆகியவற்றைத் தடை செய்தது போல் இஸ்லாமிய விரோதம், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகவும் நீங்கள் தடை விதிக்க வேண்டும்” என்று இம்ரான்கான் குறிப்பிட்டு இருந்தமையும் நோக்கத்தக்கது.

 

அமெரிக்காவில் மீண்டும் கறுபினப்பிரஜை ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை – நூற்றுக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டம் !

அமெரிக்காவில் மீள ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பதற்றமான சூழல் ஒன்று மீள ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நேற்று முன்தினம்(26.10.2020)  மாலை கருப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி கத்தியை கீழே போடும்படி எச்சரித்தனர். ஆனால் அந்த வாலிபர் போலீசாரை நோக்கி முன்னேறி வந்ததால் அதிகாரிகள் 2 பேரும் அவரை துப்பாக்கியால் பலமுறை சுட்டனர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விசாரணையில் கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதற்கிடையில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அந்நகரில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போலீசாருக்கு எதிராக போராடினர். இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் போலீசாரை தாக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் கார்களுக்கும் தீ வைத்தனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நகரின் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் !

நீண்டகாலமாக தீவு நாடான தாய்வானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இது தொடர்பாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தாய்வானின் பக்கம் நிற்கிறது. தாய்வான் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக அந்த நாட்டுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஏற்கனவே வர்த்தகம், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான மோதல் நீடிக்கும் சூழலில் தற்போது தாய்வான் விவகாரம் மோதலை மேலும் அமெரிக்க – சீன அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக அமெரிக்காவின் 3 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.37 பில்லியன் டாலர்கள் ஆகும். ஹார்பூன் ஏவுகணை கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 500 பவுண்டு எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது. இது கடலோர பாதுகாப்பு தளங்கள், மேற்பரப்பில் வான் ஏவுகணை தளங்கள், விமானம், துறைமுகங்களில் உள்ள கப்பல்கள், துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மையங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.

 

 

உலகில் சுமார் 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.24 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 10.62 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முற்றாக முடக்கப்படுகின்றது மேல்மாகாணம் – கொழும்பு அபாயநிலையில் என்பதை ஏற்றுக்கொண்டார் ஜெனரல் சவேந்திர சில்வா !

மேல் மாகாணம் முழுவதும் நாளை(29.10.2020) நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு நகரின் தற்போதைய நிலை தொடர்பில் செய்திளார்கள் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிடம் வினவிய போது தெற்கு பதிலளித்த அவர்,

“கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது. ஆனால் அதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதுள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் 7 நாட்கள் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தொற்று நோயியல் நிபுணர்கள் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை“ – அமைச்சர் ரமேஷ் பத்திரன

கொவிட்-19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததுள்ளார்.

முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.

அத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திகளை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில்களையும் வழங்கியுள்ளார்.

கேள்வி : – வைத்தியசாலைகளில் கட்டில்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளரே?

பதில் :- இலங்கையில் தற்போதைய சூழலில் 4,468 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வேறாக பராமரிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களாயின் அங்கு விசேட கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணவும் வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :- நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறிப்படுகின்றனர். இது ஒரு கொத்தணியா அல்லது வைரஸ் சமூகப் பரவலைடைந்துள்ளதா?

பதில் :- நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிக்கும் செயற்பாடுகள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. தொற்று நோயியல் நிபுணர்களின் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை.

கேள்வி :- கொவிட் 19 க்கு உள்ளானவர்களுடன் முதல் தொடர்பை பேணியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அரசாங்க அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துவிட்டதா?

பதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துள்ளமை தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால்தான் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக அதிகரித்துள்ளது. முதல் முறை பரவலிலிருந்த வைரஸையும் விட தற்போது பரவியுள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாகவுள்ளது. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். சுகாதார வழிக்காட்டல்களை முழுமையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.

ஆகவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார ஆலோசர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.