25

25

பெங்களூரை 08 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் !

ஐ.பி.எல் தொடரில் இன்றைய மாலை நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.
சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருந்தாலும் கூட எதிர்பார்த்த அளவிலான ஓட்டத்தை பெற முடியவில்லை. மிக மந்தகதியிலேயே அணியின் ஓட்டம் நகர்ந்தது. சென்னை பந்துவீச்சாளர்கள் பெங்களுர் வீரர்களை நன்கு கட்டுப்படுத்தினர். இறுதியில்  20 பந்துப்பரிமாற்ற முடிவில் பெங்களூர் 6 இலக்குகள் இழப்பிற்கு  இழப்பிற்கு 145 ஓட்டங்களையே பெற்றது. அணிசார்பாக நிதான ஆட்டத்தை பெளிப்படுத்திய தலைவர் விராட் கோலி 43 பந்தில் 50 ஓட்டங்களை பெற்றமையே அணியின் அதிகபட்ச ஓட்டமாக அமைந்தது.
விராட் கோலி அரைசதம் அடித்தும் ஆர்சிபி-யால் 145 ரன்களே எடுக்க முடிந்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா?
சென்னை அணி சார்பில் சாம் கர்ரன் 3 இலக்குகளையும், தீபக் சாஹர் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 146 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர். சென்னை அணி 5.1 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்மிழந்தார். தொடர்ந்து கெய்க்வாட்டுடன் தலைவர் டோனி ஜோடிசேர்ந்தார். சிறப்பாக ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 பந்துப்பரிமாற்றத்தில்  வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 2 இலக்கு இழப்பிற்கு 150 ஒட்டங்கள் எடுத்து 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான சம்சங் நிறுவனத்தின் உருவாக்குனர் லீ குன் ஹீ காலமானார்!

உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அலருடைய 78ஆவது வயதில் இன்று காலமானார்.

கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தநிலையில் இன்று காலமானார் என்று சம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரண தொலைக்காட்சி நிறுவனமான இருந்த சம்சங் நிறுவனத்தை லீ குன் ஹீ தனது தந்தையிடம் இருந்து பெற்று இன்று உலகின் பெரிய நிறுவனமாக மாற்றியுள்ளார். ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மெமரி சிப் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சம்சங் நிறுவனம்  வெளியிட்ட அறிவிப்பில் “ சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அக்டோபர் 25-ம் தேதி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள், அவரின் மகன் உறுதி செய்தனர். லீ குன் நினைவுகளை சம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் பகிர்ந்து அவரின் பயணத்தை நினைவு கூர்கிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பால் லீ குன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கியபின் அவரின் சசோதரரும், லீ குன் மகனுமான லீ ஜே யங்கும் சேர்ந்து கவனித்து வந்தனர். தென் கொரியாவில் ஒரு குடும்பத்தால் நடத்தப்பும் மிகப்பெரிய தொழிற்சாலை எனும் பெருமையை சம்சங் நிறுவனம்  பெற்றிருந்தது.

ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமான வளர்ந்த சம்சங் நிறுவனம் மின்னணு துறை தவிர்த்து கப்பல் கட்டுதல், காப்பீடு, கட்டுமானம், ஹோட்டல் நடத்துதல், தீம் பார்க்க உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ஜப்பான் மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட கொரிய தீபகற்பத்தில் உள்ள டியாகு எனும் நகரில் லீ குன் பிறந்தார். லீ குன் தந்தை லீ யங் சல் கடந்த 1938-ம் ஆண்டுவரை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். அதன்பின் 1950-53-ம் ஆண்டு கொரியப் போருக்குப்பின் பல இழப்புகளைச் சந்தித்த லீ யங் சல், தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தைத் தொடங்கினார்.

வீடுகளுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனம் என்று சாம்சங் நிறுவனத்தை அறிமுகம் செய்து லீ யங் சல் நடத்தி வந்தார். தனது தந்தை மறைவுப்பின் லீ குன் அந்த நிறுவனத்தை கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஏற்று நடத்தத் தொடங்கினார். 1993-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தில் பல்வேறு புத்தாக்கங்கள், புதிய பொருட்கள் கண்டுபிடிப்புகளைச் செய்து அனைவரையும் லீ குன் திரும்பிப்பார்க்க வைத்தார்.

வெற்றிகரமாக சாம்சங் நிறுவனத்தை நடத்திய லீ குன் கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு நோயில்விழுந்தார். அதன்பின் நிறுவனத்தைக் கவனிப்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்ட நிலையில் தீவிர உடல்நல பாதிப்பால் இன்று காலமானார்.

வவுனியாவில் கைக்குண்டு வெடிப்பு – இரு சிறுவர்கள் படுகாயம் !

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் வசிக்கும் பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது பாட்டியுடன் சென்ற இரு சிறுவர்களும் மரம் ஒன்றின் அருகில் நின்று விளையாடிக் கொண்டு நின்றுள்ளனர்.

இதன்போது மரத்தின் அடியில் மண்ணில் புதையுண்டு கிடந்த கைக்குண்டு ஒன்றை எடுத்த சிறுவர்கள் அதனை தட்டி விளையாடிய போது அது வெடித்து சிதறியது. அதில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு காயமடைந்தவர்களாவர். இது தொடர்பில் இரணை இலுப்பைக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“20 ஆம் திருத்தத்தில் அரசின் செயற்திட்டங்கள் எல்லா சமூகத்திற்கும் பயனுடையது என்பதால் பலர் அதற்கு ஆதரவளித்தார்கள்” – வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் .

“20 ஆம் திருத்தத்தில் அரசின் செயற் திட்டங்கள் எல்லா சமூகத்திற்கும் பயனுடையது என்பதால் பலர் அதற்கு ஆதரவளித்தார்கள்” என வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நேற்று (25.10.2020)நியமனம் வழங்கி வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலின் போது அப்போதைய எமது ஜனாதிபதி வேட்பாளர் மீது அபாண்டங்களை கூறி இப்பகுதியில் விழ இருந்த வாக்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். அதே போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் பல விதமான இனவாத கருத்துக்கள் பரப்பப்பட்டன.

அவை எல்லாவற்றையும் விடுத்து நாம் இனவாதிகள் அல்ல. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை நீங்கள் காட்டியதன் மூலம் நான் இரண்டாவது தடவையாகவும் நாடாளுமன்றம் சென்றுள்ளேன்.

சில கட்சியினுடைய பிரதிநிதிகள் வேலை வாய்ப்புக்காக ஒரு தொகை நிதியையோ அல்லது ஏதாவது உதவியையோ பெறுகிறார்கள். எமது கட்சியில் உள்ள சிலரும் அப்படி செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் எமது கட்சி அப்படியல்ல. அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்தும் எமது கட்சியால் மக்களுக்காக வழங்கப்படுகின்றது. இதில் எந்த கையூட்டல்களும் இல்லை. அப்படி யாராவது பெற்றிருந்தால் தெரியப்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

நாம் கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் இவ் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். இதனை எமது அரசாங்கம் உங்களுக்கு வழங்கியுள்ளது.

20 ஆம் திருத்தத்தில் அரசின் செயற் திட்டங்கள் எல்லா சமூகத்திற்கும் பயனுடையது என்பதால் பலர் அதற்கு ஆதரவளித்தார்கள். கட்சி மாறி ஆதரவளித்தவர்கள் சிறுபான்மை சமூகத்தினரே. சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பு இல்லை என்பதால் அவர்கள் கட்சி மாறி ஆதரவு வழங்கினார்கள்

இதற்கு நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். எமது கட்சிக்கு நீங்கள் கிராமங்களில் இருந்து பலம் சேர்க்க வேண்டும். எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் வாக்குகளை அதிகரிக்க வேண்டும். எமது கட்சிக்கான அங்கத்தவர்களை கூட்டுங்கள். இதனையே நாம் எதிர்பார்க்கின்றோம் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம்” – எச்சரிக்கின்றார் தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி !

“பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம்” என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை, தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், மக்கள் தொடர்ந்தும் ஏனையவர்களுடன் அதிகளவில் தொடர்புகொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மரணச்சடங்குகள், திருமணங்கள், மத நிகழ்வுகள் மூலம் கொரோனா ரைவஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தி கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

“20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தி கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது,

“நாம் சட்டத்துக்கு எப்போதும் மதிப்பளிப்பவர்கள். எமது காலத்தில் பல ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இவை தொடர்பாக மக்களுக்குத் தெரியும். இதுதொடர்பாக நான் தனிப்பட்ட ரீதியாக விமர்சிக்க விரும்பவில்லை. நாம் அன்று பல செயற்பாடுகளை மக்களுக்காக செய்தோம். இதனைத் தான் குறியாகக் கொண்டு இயங்கினோம்.

எனவே, ஆணைக்குழுக்களை அவதானிக்கவும் அதனை விமர்சிக்கவும் எமக்கு காலம் இருக்கவில்லை. இன்று 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் இதற்கு எதிரானவர்கள் என்பதில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.

எனினும், எமது அணியிலிருந்து சிலர் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இவர்களுக்கு எதிராக நாம் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக சபாநாயகருக்கும் விரைவில் அறிவிக்கவுள்ளோம். இவ்வாறான ஏமாற்று வேலைகள், அரசியல் வரலாற்றில் புதிதல்ல. ஒருவரது தனிப்பட்ட முடிவை நாம் விமர்சிக்க முடியாது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால் தான், குறித்த நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளால், நாம் என்றும் பின்னடைவை சந்திக்கப்போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் !

நிறைவேற்ற பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக தமது பரிந்துரைகளை பொதுமக்கள் முன்வைக்க முடியும் என நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே. மாயாதுன்னே முன்னர் அறிவித்திருந்தார்.

இதற்கமைவாக இது தொடர்பாக நாட்டின் பிரஜை ஒருவர் தமது ஆலோசனைகள் அல்லது கருத்துக்களை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் எந்த ஒரு மொழியிலாவது அனுப்ப முடியும்.

அவற்றினை 2020 நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், நிபுணர்கள் குழு, இலக்கம்-32, தொகுதி 02, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் கொழும்பு 7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.அல்லது expertscommpublic@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்எனவும் என நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .