14

14

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சைவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க தீர்மானம் !

 

இலங்கையின் உயர்கல்வி பீடங்களாக கருதப்படக்கூடிய பல்கலைக்கழக மட்டங்களில் பகிடிவதை தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சைவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.

புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைப் பிரகாரம், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் 4 பேருக்குக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் குற்றத்தின் பாரதூரத் தன்மை கருதி மாணவி ஒருவருக்குக் கடும் எச்சரிக்கையுடனான விலக்களிப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் இன்று (14.10.2020) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் 03 ஆம் திகதி சித்த மருத்துவத்துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பிலான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சித்தமருத்துவத் துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பில் ஆரம்பகட்ட பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதனடிப்படையிலான குற்றப்பத்திரிகை மீதான முறைசார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அறிக்கை இன்று மாலை மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைக்கமைய தண்டனைக்குரியவர்களுக்கான அறிவித்தல்கள் நாளை துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகளான பத்துப் பேரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்களும், மாணவ ஆலோசகர் ஒருவரும், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி (புறொக்டர்) ஒருவரும், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவருமாக இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப்பதிவாளர் செயலாளராகவும் செயற்படுகின்றனர்.

இன்றைய கூட்டத்தில், சித்த மருத்துவத் துறை மாணவர்களுக்கான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டதுடன், இனிவரும் காலத்தில் இதே பொறி முறையில் இம்சை வதையில் ஈடுபட்டு, குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து கற்றல் நடவடிக்கைகளுக்கான தடை, சிறப்புத் துறைகளைகளுக்கான தடை, முதலாம், இரண்டாம் வகுப்புச் சித்திகளுக்கான தகைமையிழப்பு, மகாபொல மற்றும் நிதியுதவிகளைத் தடை செய்தல், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல்கலைக்கழக மாணவர் பதிவு இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

2020 சுற்றுலா பயணம் செல்ல உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !

2020 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணம் செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. “கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பில் தகவல்களை வௌியிடும் இதழ் இதனை வௌியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் வௌியிடப்பட்ட குறித்த பத்திரிக்கையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகள்” இல் இலங்கைக்கு 93.96 புள்ளிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இதில் முதலாவது இடத்தை இத்தாலி 94.05 புள்ளிகளுடன் பெற்றுள்ளது.

இந்நாட்டு கலாசாரம், தேயிலை தோட்டம் மற்றும் காதலர் கடற்கரை ஆகியன குறித்த இதழில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துக்கல், ஜப்பான், கிரீஸ், தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் வாசகர்களின் விருப்பத்தின் படி முறையே அடுத்த இடங்களை பிடித்துள்ளன.

வவுனியாவில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை – வடக்கில் தொடரும் தற்கொலைச்சாவுகள் !

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று(14.10.2020) காலை 7.00 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் கணவர் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது குறித்த குடும்ப பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிற்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்துள்ளார். இதனை அடுத்து, இவ்விடயம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை அவதானித்ததுடன், வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கினார்.

வவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயவியல் பொலிஸாரின் விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27 வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“புதிய அரசை கொவிட்-20 தாக்கியுள்ளது. கொரோனாவைப் போல் அதற்கும் மருந்து இல்லை” – பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

“புதிய அரசை கொவிட்-20 தாக்கியுள்ளது. கொரோனாவைப் போல் அதற்கும் மருந்து இல்லை” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (14.10.2020)எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்திற்குள் 20 ஆவது திருத்தம் தொடர்பில் பெரும் குழப்பம் இடம்பெறுகிறது . நாம் இதை எதிர்ப்பதை போன்று அரசுக்குள் இருக்கின்ற அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கேவிந்து குமாரதுங்க போன்றோர் எதிர்க்க தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் அரசு இதற்கு முடிவு எடுக்காமல் இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. இதுதான் இன்று அரசை பிடித்துள்ள கொவிட் 20 நோயாகும். கொரோனாக்கு எவ்வாறு மருந்து இல்லையோ அதே போல புதிய அரசியல் திட்டத்திற்கும் முடிவு இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

“ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தபோதிலும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை” – முன்னாள்பிரதமர் ரணில் விக்ரமசிங்க .

“ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தபோதிலும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை” என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்  தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது முறையாக சாட்சியம் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் குறித்து தகவல்கள் வௌிவராமை, இணையத்தளம் ஊடாக மாத்திரம் அவர்கள் தொடர்புகளைப் பேணியமை தெரியவந்ததால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரச நிர்வாகத்தின்போது தமது தரப்பிற்கும் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பிற்கும் இடையில் அரசியல் ரீதியாக பாரிய கருத்து மோதல்கள் ஏற்படவில்லை எனவும் ரணில்விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் அபிவிருத்தி பணிகள் போன்ற அன்றாட செயற்பாடுகள் தொடர்பாக மாத்திரம் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும்  அப்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டங்கள் குறுகிய அறிவித்தலுக்கு அமைய இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கடமைகளை இரத்து செய்து பாதுகாப்பு பேரவை கூட்டங்களில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் பாதுகாப்பு பேரவை கூடுவதற்கான நிலையான நாள் ஒன்றை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

“வளரும் நாடுகளில் covid-19 தடுப்பூசி மருந்துகளை பெறவும் சிகிச்சைக்காகவும் 1200 கோடி டாலர் உதவி “ – உலக வங்கி அறிவிப்பு !

வளரும் நாடுகளில் covid-19 தடுப்பூசி மருந்துகளை பெறவும் சிகிச்சைக்காகவும் உலகவங்கி 1200 கோடி டாலர் உதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

உலக வங்கி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகள் கோபிக்கு 19 தடுப்பூசி மருந்துகளை வாங்கவும் அதற்கான சிகிச்சைகளுக்கு செலவிடவும் இந்தத் தொகையை பயன்படுத்தலாம் எனவும் உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

covid-19 தொடர்பான தேவைகளுக்காக வளரும் நாடுகளுக்கு ஜூன் 2021 ஆம் ஆண்டு வரை 160 பில்லியன் டாலர் உதவி வழங்க உலக வங்கி குழுமம் தீர்மானித்துள்ளது. அந்த 160 பில்லியன் டாலரில் இந்த 12 பில்லியன் டாலர் உதவியும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிர்வாக சபைக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

“அமெரிக்க ஜனாதிபதியாக ஜோபைடன் தேந்தெடுக்கப்பட்டால் அவர் சீனா மீதான வர்த்தக வரிகளை நீக்குவார்” – ட்ரம்ப் காட்டம் !

“அமெரிக்க ஜனாதிபதியாக ஜோபைடன் தேந்தெடுக்கப்பட்டால் அவர் சீனா மீதான வர்த்தக வரிகளை நீக்குவார்” என்று டொனால்ட்ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியரசு கட்சியின் ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப்  தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டொனால்ட்ட்ரம்ப் கூறும்போது, “ அமெரிக்காவின் மீதான சீனாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நான் தடுத்து வருகிறேன். மேலும் அமெரிக்கர்களின் வேலைவாய்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இதன் காரணமாக நமது விவசாயிகளுக்கு உதவ முடிந்தது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான ஜோபைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா மீதான வர்த்தக வரிகளை நீக்கி விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக சீனாவை உலகஅளவில் அடையாளப்படுத்தி அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் ஏற்படுத்திய ட்ரம்ப் , ஜோபைடனை முழுமையான சீனச்சார்பாளராகவே அடையாளப்படுத்தி பிரச்சார மேடைகளில் டொனால்ட் ட்ரம்ப் பேசிவருவதும் குறிப்பிடத்தக்கது.

“முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும்’ – கெஹெலிய ரம்புக்வெல்ல

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் செய்தியாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சூரியன் எப்.எம். வானொலியின் முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் சண்முகம் தவசீலனும், மற்றுமொரு செய்தியாளரான கணபதிப்பிள்ளை குமணனும் முறிப்பு பகுதியில் வைத்து,சட்டவிரோதமாக மரம் வெட்டும் குழவினரால் கடந்த தினம் தாக்கப்பட்டனர்.

குமிழமுனை மற்றும் முறிப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெற்று வந்த மரம் வெட்டும் நடவடிக்கை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, அவர்கள் இருவரும் தாக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர்களில் இரண்டு பேரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றுமொருவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 29.4 மில்லியன் ரூபாய் செலவில் 141 சிறிய குளங்களின் திருத்தப்பட்டுள்ளன” – கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் .

வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள குளத் திருத்த வேலைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைளை மேலும் விருத்தி செய்து விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அமைவாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்த்தில் உள்ள குளங்களை புனரமைத்து அதனை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 29.4 மில்லியன் ரூபாய் செலவில் 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 105 சிறிய குளங்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு 34 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. அந்நிதியை அரசாங்கத்திடம் இருந்து பெற்று குறித்த குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயிகளும் குளங்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஒரு வருடத்தை அண்மிக்கும் கொரோனாப்பரவல் – 10 லட்சத்து 90ஆயிரம் பேர் பலி !

 உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 83 லட்சத்து 46 ஆயிரத்து 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,20,805
பிரேசில் – 1,51,063
இந்தியா – 1,09,856
மெக்சிகோ – 83,945
இங்கிலாந்து – 43,018
இத்தாலி – 36,246
பெரு – 33,419
ஸ்பெயின் – 33,204
பிரான்ஸ் – 32,942
ஈரான் – 29,070
கொலம்பியா – 28,141