13

13

இலங்கையின் முதலாவது பெண்பொலிஸ்மா அதிபருக்கு பதவியுயர்வு !

இந்நாட்டு முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபரான பிம்ஷானி ஜாசிங்க ஆராச்சி , பொலிஸ் நலன்புரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது

“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு மாற்றங்களைச் செய்தாலும் அந்தச் சட்ட வரைவை நாம் எதிர்த்தே தீருவோம்” – எதிரக்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதி !

“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு மாற்றங்களைச் செய்தாலும் அந்தச் சட்ட வரைவை நாம் எதிர்த்தே தீருவோம்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

20ஆவது திருத்தச் சட்ட வரைவில் திருத்தம் எதனையும் மேற்கொள்ளாமல் அதை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டும் நிறைவேற்றலாம் என்று அரசு எண்ணியது. அந்த எண்ணம் இன்று தவிடு பொடியாகியுள்ளது. குறித்த சட்ட வரைவில் உள்ள சரத்துக்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல்கள் தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரங்கள், ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு வழங்கல், நாடாளுமன்ற கலைப்புக்கான ஜனாதிபதியின் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஆகிய நான்கு சரத்துக்களை நாடாளுமன்ற அனுமதியுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று  உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த நான்கு சரத்துக்களையும் நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது அரசுக்கு நீதித்துறை வழங்கியுள்ள சாட்டையடியாகும். எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு மாற்றங்களைச் செய்தாலும் அந்தச் சட்ட வரைவை நாம் எதிர்த்தே தீருவோம்.

ஏனெனில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தற்போது அவசியமற்றது. அதிலுள்ள மேலும் பல சரத்துக்கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை. எனவே, 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம்  என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீளப்பெறப்பட்டது – யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க, கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு இன்று (13.10.2020) மீளப்பெறப்பட்டது.

இதன்போது “பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாநகர சபை உறுப்புரிமை வழங்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த மனுவின் ஊடாக நீதிமன்றின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, அதனால் வழக்குச் செலவு இன்றி மனுவை மீளப்பெற மனுதாரர் முடிவு செய்துள்ளார்” என்று மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, “மணிவண்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விடயத்தை நான் அறியவில்லை. ஆனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையில்லை” என்று மணிவண்ணன் சார்பில், முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார். அதனால் மனுதாரரின் விண்ணப்பத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு அனுமதியளித்தது.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். மனுதாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் ஒன்றான, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை யாழ்ப்பாண மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஓகஸ்டில் வழங்கியது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அதனை மனுதாரர் மீளப்பெற்றார்.

“பாலியல், கட்டாயதிருமணம் எனப்பல அடக்குமுறைகளால் உலகம் முழுவதிலும் சுமார் 3 கோடி பெண்கள் அடிமைகளாகவுள்ளனர்”- ஐ.நா அதிர்ச்சி அறிக்கை !

உலக அளவில் பெண்களினுடைய நிலை எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பாக ஐ.நா. சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பாலியல், கட்டாயதிருமணம் எனப்பல அடக்குமுறைகளால் உலகம் முழுவதிலும் சுமார் 3 கோடி பெண்கள் அடிமைகளாகவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. பெண் குழந்தைகளை சுமையாகப் பார்க்கின்றனர். சில நாடுகளில் சட்டங்கள் கூட பெண்களுக்கு எதிராக உள்ளன. அவர்களுக்கான சொத்துரிமை மறுக்கப்படுகிறது. சில நாடுகளில் கணவரின் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

 

 பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்கள், அதே பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க சில நாடுகளின் சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன. சில நாடுகளில் மதங்களின் பெயரில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன. பாலியல் துன்புறுத்தல், பால்ய திருமணம், கட்டாய திருமணம், கட்டாய பணி என பல்வேறு வகைகளில் நவீன கால அடிமைகளாக பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

அதாவது 130 பெண்களில் ஒருவர் இத்தகைய கொடுமைக்கு ஆளாகிறார். ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 3 கோடி பெண்கள் அடிமைகளாக வாழ்கின்றனர். அரபு நாடுகளை சேர்ந்த பெண்கள் கட்டாய திருமணத்தில் சிக்கி அடிமைகளாக வாழ்கின்றனர். அந்த நாடுகளில் வீட்டு பணிப்பெண்கள் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது.

இந்தியா, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் சிறுமிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் பெண்கள். அவர்களின் சுதந்திரம், உரிமைகளை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலின பாகுபாட்டை ஒழித்து, பெண்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று 6 லட்சத்தைக் கடந்தது – 3 அடுக்கு பொதுமுடக்கம் அமுல் !

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 42,875 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளோர் பட்டியலில் பிரித்தானியா 12-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் 3 அடுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தொற்று விகிதங்களைப் பொறுத்து நடுத்தரம், அதிகம் மற்றும் மிக அதிகம் என 3 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
முதல் அடுக்கு: கொரோனா பாதிப்பு நடுத்தரம்
இங்கு பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவு. இறுதிச் சடங்கு, திருமணம் போன்றவை தவிர 6 பேருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் அனைத்து இடங்களும் இதில் அடக்கம்.
இரண்டாம் அடுக்கு : பாதிப்பு அதிகம்
கொரோனா பரவலால் பாதிப்பு அடைந்த மான்செஸ்டர், போல்டன், நாட்டிங்ஹாம், லங்காஷயர், மேற்கு யார்க்ஷயர், லீட்ஸ், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், பர்மிங்காம், நாட்டிங்ஹாம்ஷைர் உள்பட பல்வேறு இடங்கள் அடங்கும்.
மூன்றாம் அடுக்கு – பாதிப்பு மிக அதிகம்
மக்கள் ஒன்றுகூடும் எவ்வித நிகழ்வும் அனுமதிக்கப்படாது. மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
ஜிம்கள், கேசினோக்கள், சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட வேண்டுமா? என்று உள்ளூர் அரசியல்வாதிகள் முடிவு செய்யலாம்.
இப்பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. லிவர்பூல் நகர மண்டலம் முழுவதும் இதில் அடங்கும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிதியுதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நாட்டை முடக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை – கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டியது அவசியம்“ – ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல .

“தற்போது உக்கிரமடைந்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை“ என ஊடகத்துறை அமைச்சரும் ஊடகத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவு நிபுணத்துவ வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர ‘கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘‘நான் மிக்க உறுதியாக இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்’’ – தேர்தல் களத்தில் டொனால்ட்ட்ரம்ப் !

அமெரிக்காவில் கொரோனா தொற்ற விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக்கவசம் அணியமாட்டேன் என்று  கூறியவர் அமெரிக்கஜனாதிபதி டொனால்டு டிரம்ப். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார்.
கடந்த வாரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெள்ளை மாளிகை திரும்பிய டொனால்டு டிரம்ப் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்து கொள்ள தீவிரம் காட்டி வருகிறார். புளோரிடாவில் தேர்தல் பிரசாரத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாஸ்க் அணியாமல் மேடையில் தோன்றினார்.
அப்பேது டொனால்டு டிரம்ப் ‘‘நான் மிக்க உறுதியாக இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்’’ என்று தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் கூறினார். கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ள ட்ரம்ப் மீண்டும் தேர்தல் களத்துக்கு இவ்வளவு உத்வேகமாக வருகை தந்துள்ளமையானது அவருடைய ஆதரவாளர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கொவிட் – 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட்-19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்“ – வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர

“கொவிட் – 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட்-19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்“ என பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவு நிபுணத்துவ வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் (கொவிட் 19) ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது. எனவே, கொவிட் – 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட் 19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூக செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியாது.

கொவிட் -19 நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம், அதே நேரத்தில் இயல்பு வாழ்க்கையை பேண வேண்டும்.உயர்தர பரீட்சைகள் சுமார் ஒரு மாத காலத்துக்கு நடைபெறும். எனவே, அதற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் செயற்படுவதை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பொறுப்புடன் உறுதிப்படுத்த வேண்டும். தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுத விசேட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, கொவிட் -19 அச்சுறுத்தல் காணப்பட்டாலும் மாணவர்கள் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பரீட்சையை எதிர்கொண்டு வெற்றி பெறுவது சவால் மிக்கது எனவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் கோரிக்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களினால் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், குறித்த சம்பவத்திற்கு எதிராக காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கையின் வட பகுதியில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது.

தற்போதைய ஆட்சிக் காலத்திலும் வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் பலர் விசாரனைக்கு அழைக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம் பெற்ற சம்பவங்களுக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை

இதன் ஒரு தொடர் கதையாகவே முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் மரக்கடத்தல் மாபியாக்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோத செயற்பாடுகளை வெளிப்படுத்த முனைந்த ஊடகவியலாளர்கள் மீதே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஒரு சில அதிகாரிகளின் துணையுடன் மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் குழுவொன்று தொடர்பில் துணிச்சலுடன் செய்தியை வெளியிட முனைந்த ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம். குறித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

““தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களைப் பேச முடியாது.” – நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களைப் பேச முடியாது. அதனை எமது சமூகம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

முறிகண்டி நேசக்கரங்கள் அமைப்பின் மூலம் வீரமுனை காயத்திரி மக்கள் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது தமிழ்ப் பிரதேசங்கள் யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பது மட்டுமல்லாது யுத்தம் நடந்திருந்தாலும் இன்னொரு வழியில் இந்தப் பிரதேசத்தில் இருக்கும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலர் செயற்பட்டிருக்கின்றார்கள். அந்த செயற்பாட்டின் காரணமாக இந்தப் பிரதேசத்தில் மிக மோசமான சூழலில் எமது தமிழ் சமூகம் அகப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலே வாழ்ந்த தமிழர்கள் தங்கள் இருப்புக்கள் தொடர்பான விடயத்தை ஜனநாயக ரீதியான முன்னெடுப்புகள் வெற்றி தராததன் காரணமாக ஆயுத ரீதியான போராட்டங்களின் மூலம் முன்னெடுத்ததன் காரணமாக சிங்களத் தலைவர்கள் எதிர்மறையான பார்வையைக் கூடுதலாக எங்கள் மீது செலுத்தியதன் விளைவாக இந்த நாட்டிலே மிகவும் மோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் என்ற ரீதியில் இங்கு பல புறக்கணிப்புகள் இடம்பெற்றிருக்கின்றது. நாங்கள் 2012ம் ஆண்டு மாகாணசபைக்குள் நுழையும் போது இதனை நேரடியாக அவதானித்திருந்தோம். அக்காலத்தில் குறிப்பாக எமது மக்களின் பல காணிகள் பலவாறாக அபகரிப்புச் செய்யக் கூடியதான தீர்மானங்கள் கூட எமது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்டது. அதற்கு எதிராகப் பல குரல்கள் கொடுத்தவர்கள்.

இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எந்த அரசியல்வாதியும் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி எமது சமூகம் சார்ந்த விடயங்களைப் பேச முடியாது. அதனை எமது சமூகம் முதலில் உணாந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர எங்களுடைய இனம் சார்ந்த, சமூகம் சார்ந்த விடயங்களைக் கையாள்வதற்கு முன்வரமாட்டார்கள் என்ற விடயத்தை நான் உங்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

நாங்கள் பல்வேறு விடயங்களை எமது பிரதேசங்களுக்குச் செய்திருக்கின்றோம் அவற்றை படம் போட்டுக் காட்டவில்லை. ஏனெனில் எமது நாட்டில் மிகவும் மோசமான சூழல் இருந்தது. எமது சமூகமும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த நிலையிலும் எமது சமூகத்திற்காக எங்களால் முடிந்த செயற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் இன்னும் பல உதவிகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.

இந்த நாட்டில் யுத்தம் முடிந்த கையோடு எமது மக்களைக் கையாளுகின்ற விடயங்களை எமது மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளெல்லாம் இந்த நாட்டிலே நடைபெறுகின்ற போது அதற்கு எதிராக எங்களுடைய மக்களின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய ஒரே ஒரு சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். நாங்கள் தொடர்ச்சியாக எமது மக்கள் சார்ந்த, அவர்களின் அடிப்படை விடயங்கள் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

எமது மாவட்டத்திற்குரிய ஒரே ஒரு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநித்துவம். நாங்கள் ஒரு சவால் நிறைந்த காலகட்டத்தினை எதிர்நோக்கியிருக்கின்றோம். எங்களுடைய தமிழர்களின் நிலையான இருப்பைக் கேள்விக் குறியாக்குகின்ற அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தலையைத் தடாவி கழுத்தை அறுக்கின்ற செயற்பாடுகளே எமது சமூகத்திற்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்மை ஆதரிப்பதாக, அரவணைப்பதாகக் கூறி எம்மை இல்லாமல் செய்கின்ற ஒரு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதிலே நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் போராட்டம் கடந்த காலங்களிலே வெற்றி தரவில்லை என்று எவருமே கூற முடியாது. நாங்கள் ஒரு தடவையல்ல பல தடவைகள் வெற்றியடைந்துள்ளோம். எமது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட காலம் தொடக்கம் இற்றைவரைக்கும் நாங்கள் அழிவுகளைச் சந்தித்திருந்தாலும் படிப்படியான வெற்றி வளர்ச்சிகளைக் கண்டிருக்கின்றோம் என்பதைத் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் போராட்ட இடைவெளிகளைப் பயன்படுத்தி சிலர் மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் எம்மை அடக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசில் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற பதம் பேசப்படுகின்றது. இருந்தும் எமது மக்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த மாவட்டத்தில் எமது சமூகத்திற்கு எவ்வித புறக்கணிப்புகளும் இருக்கக் கூடாது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம். இது எதிர்காலத்தில் இன ரீதியான முறுகல்களை உருவாக்கும்.

நடந்து முடிந்த இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே பல தமிழர்கள் தவறுகளை விளைவித்தவர்களாக எதிர்காலத்தில் இந்த மாவட்டத்திலே தலைதூக்கி வாழமுடியாத வகையிலான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த நிலையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம் மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கின்றது. எனவே நாங்கள் எமது சமூகம், எமது கட்சி, எமது இனம் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.

எமது மக்களின் இடங்களுக்குச் சென்று அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்தவர்களாகவே நாங்கள் இருந்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் நிலையான தீர்வைப் பெறுகின்றவர்களாக இருந்து செயற்படுவோம். குறிப்பிட்ட காலத்திற்குள் எமது மாவட்ட ரீதியான பல விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.