05

05

நாளை ஊரடங்கா..? வெளியாகியுள்ள புதிய தகவல் !

ஊரடங்கு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளை நம்ப வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அரசாங்கம் இதனைக் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நபருக்கு மூன்று முறை கொரோனா வைரஸ் தொற்று !

ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறி அதன் பின்னர் மேலும் இரண்டு தடவைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடு திரும்பிய குறித்த இளைஞர், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது முதன்முறையாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பின்னர் தொற்றில் இருந்து குணமாகி வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த இளைஞர், அவரது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னர் செப்டம்பர் 17 ஆம் திகதி சிலாபம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் சோதனையில் அவர் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸுக்கு உள்ளாகியமை தெரியவந்தது.

அதன்பிறகு குறித்த இளைஞர் இரனவிலா கொவிட் -19 சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கொரோானா தொற்றில் இருந்து மீண்டு இரண்டாவது முறையாக வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இருப்பினும் மூன்றாவது முறையாக நோய்வாய்ப்பட்ட அவர், மீண்டும் ஒக்டோபர் 02ஆம் திகதி சிலாபத்தில் உள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதன்போதும் மூன்றாவது முறையாக அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இலங்கையில் ஒரே நபர் மூன்று முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்ட சந்தர்ப்பம் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

“சிறுபான்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழ்த்தாத பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம்“ – வவுனியாவில் மகிந்த தேசப்பிரிய !

“சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் நிகழாத விதத்தில் எடுக்கப்படும் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம்“ என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று(05.10.2020) விஜயம் செய்த அவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெரும்பான்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையான ஜனநாயகம் என்பது அவ்வாறு அல்ல. ஜனநாயக ஆட்சியில் மாத்திரமல்ல சாதாரணமாக ஒரு மரணச்சடங்குகளில் கூட பெருந்தொகையினர் சிறுதொகையினரது உரிமைகளை நசுக்கி செயற்படும் விதத்தினை நாம் காண்கின்றோம்.

பெரும்பான்மை இனத்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்து நாம் தேர்தலை நடத்தினால் சிறுபான்மை இனத்தவர்களின் விருப்பம் மறுதலிக்கப்படுகின்றது. ஆகவே ஒரு வர்ணத்தினால் தீட்டப்படும் ஓவியம் அழகாக இருக்காது. எனவே சிறுபான்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம் என மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ! – இலங்கையில் மீண்டும் அவசரகால நிலை அமுலில்- எச்சரிக்கின்றது சுகாதார அமைச்சு.

யாழில் பரிசோதனைக்கு உட்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருணாகலை வைத்தியசாலையில் இனம் காணப்பட்ட இரு நோயாளிகளும் தற்போது சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் மினுவங்கொட பிரதேசத்தில் பதிவான கொவிட் – 19 பரவல் காரணமாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 தொற்று மேலும் சமூகத்தில் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது திவுலப்பிட்டிய, வெயாங்கொட, மினுவாங்கொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மாத்திரம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டுதல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

சன நெரிசல் அதிகளவில் காணப்படும் இடங்களை புறக்கணிக்க வேண்டியது மக்களின் சமூகப் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார். வெளியில் செல்லும் போதும், வரும் போதும் முகக் கவசங்களை அணிவது அவசியம் எனவும், தொடர்ச்சியாக கைகளை கழுவுவதனையும், முகத்தை தொடுவதிலிருந்தும் விலகியிருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நோய் பரவாமல் தடுக்கவும், முதியவர்களை பாதுகாக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

16 வயதுடைய மாணவிக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட 1,500 பாடசாலை மாணவர்கள்!

கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்க திவுலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (04) இரவு வரையில் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பரிசோதகர்கள் இடம்பெற்று வந்ததாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

விஷேடமாக ஒலிபெருக்கி ஊடக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதிபர் ஊடக அனைத்து மாணவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் அனுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திவுலுபிட்டிய பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்றை தினம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் கடமையாற்றிய அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் சிலர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை தேடி தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திவுலபிட்டிய பகுதியில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! – எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக குறித்த 69 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்தலில் உள்ள 156 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளே இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ். டோனி புதிய சாதனை !

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பராக 100 பிடியெடுப்புக்களை பிடித்துள்ளார். பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் அடித்த பந்து பின்னால் நின்றிருந்த டோனி கைக்குச் சென்றது. இதனால் 99 பிடியெடுப்புக்கள் பிடித்திருந்த டோனி தனது 100-வது பிடியெடுப்பு பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் டோனி உள்ளார். இது தவிர டோனி 39 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனையையும் டோனி கடந்த போட்டியில் நிகழ்த்தினார். அவர் 193 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முந்திய நிலையில், டோனிக்கு ரெய்னா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டி தொடரையும் சி.எஸ்.கே. கைப்பற்றும் என டுவிட்டரில் வெளியிட்ட தனது வாழ்த்துச் செய்தியில் ரெய்னா பதிவிட்டார்.
இதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் 192 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 180 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3402 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிற நேற்றைய தினம் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த கடலோடி ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை திவுலபிட்டியவில் நேற்று பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதோடு, அவரது 16 வயது மகளுக்கும் தொற்று உறுதியானது.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3402 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான 3258 பேர் இதுவரையில் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.அதேநேரம் தொற்றுக்கு உள்ளான 131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் எல்லா அமெரிக்கர்களுக்காகவும் தான் இங்கே போராடிக்கொண்டிருக்கிறேன் – விரைவில் மீண்டும் வருவேன் ” – இராணுவ மருத்துவமனையில் இருந்து ட்ரம்ப்.

உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது, இது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்குதல் டிரம்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. முதலில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிகிச்சை பெற்ற டிரம்ப், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2-ந் தேதி பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சேர்க்கப்பட்டார். அங்கு விரைவில் குணம் அடைவதற்கு வசதியாக அவருக்கு ‘ரெம்டெசிவிர் சிகிச்சை’ அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் 4 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உடல்நிலை நன்றாக இல்லாத நிலையில், நான் இங்கு வந்தேன். இப்போது நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக கடுமையாக உழைக்கிறோம். நான் விரைவில் திரும்ப வருவேன். தேர்தல் பிரசாரத்தை முடிக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். நாம் இந்த கொரோனா வைரசை வெல்லப்போகிறோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் நாங்கள் அதை நன்றாக வீழ்த்தப்போகிறோம்.

நான் எல்லா அமெரிக்கர்களுக்காகவும் தான் இங்கே போராடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த சில நாட்களில், ஒரு உண்மையான பரிசோதனை இருப்பதாக நான் யூகிக்கிறேன். எனவே அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம். என் மனைவி மெலனியா இளமையாக இருப்பதால் நன்றாக இருப்பதாக உணர்கிறார். இளம்வயதினரைப் பொறுத்தமட்டில் கொரோனாவின் லேசான அறிகுறிகளைத்தான் அனுபவிக்கிறார்கள்.

நானும் நன்றாக இருக்கிறேன். நாம் நல்லதொரு முடிவை பெறப்போகிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த சில நாட்களில் நாம் நிச்சயமாக அதை தெரிந்துகொள்ளப்போகிறோம். அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும், அவர்களது ஆதரவு வார்த்தைகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியில் டிரம்ப் வழக்கம் போல ‘கோட்-சூட்’ அணிந்திருந்தாலும், ‘டை’ அணியாமல், அமெரிக்க தேசிய கொடி பறக்க விடப்பட்ட சூழலில், மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்து காணப்பட்டார். வெள்ளை மாளிகை மருத்துவ நிபுணர் டாக்டர் சீன் கான்லி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் ஜனாதிபதி மிகச்சிறப்பாக செயல்படுவதாகவும், சிகிச்சைக்கு சாதகமாக பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார். மெலனியா டிரம்ப், தொடர்ந்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் எந்த மாற்றமும் இல்லை ! – இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்காக புதிய இணையத்தள சேவையை ஆரம்பித்தது பரீட்சைகள்  திணைக்களம்..! | Newlanka

அதற்கமைய ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் நிலைமை குறித்து பரிசீலித்து வருவதாகவும் எனினும் உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

பரீட்சைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அட்டவணையானது கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை வழமையாக ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறும். எனினும் கொரோனா தாக்கம் காரணமாக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

முன்னதாக 2020ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் 7 முதல் ஒப்டோபர் 2 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்கவே அது மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.