04

04

“தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால், காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும்” – ஜெனீவாவில் கஜீவன் அய்யாதுரை

தமிழர்களுக்கு உரிய முறையில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் சிறந்த வழியென ஜெனீவா கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்றது.

அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பான பொது விவாதத்தில் ஏ.பி.சி தமிழ் ஒலி அமைப்பின் சார்பாக உரையாற்றிய கஜீவன் அய்யாதுரை  “தமிழர்களுக்கு உரிய முறையில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் சிறந்த வழி” என ஜெனீவா கூட்டத் தொடரில் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கூட்டத்தொடரில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மனித உரிமை உயர் ஆணையர் 31:1 தீர்மானத்தை நிறைவேற்றுதில் முன்னேற்றமில்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல், நீதி, உண்மை ஆகியவற்றை தேடுவதில் இலங்கை அரசு எவ்வித செயல்பாடுகளையும் செய்யவில்லை.

இன அழிப்பு குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், துன்புறுத்தல், போர் குற்றங்கள் போன்ற சில உலக குற்றங்களுக்கு மனித உரிமை உயர் ஆணையர் பரிந்துரைத்த உலக கட்டுப்பாட்டை உறுதி செய்யவேண்டும்.

மேலும், தங்களது உறவுகளுக்காக போராடிய தாய்மார்கள், சிலர் இறந்தும் விட்டனர். தற்போது நடைபெறுகின்ற தமிழின அழிப்பு பற்றி கலந்துரையாடல் நடத்த, 40:1 தீர்மானத்தின் முக்கிய குழுவையும் பிற உறுப்பினர்களையும் உடன்படிக்கை நாடுகளையும் அழைக்கின்றோம்.

2020 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இனஅழிப்பு நினைவேந்தலையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையும் திலீபன் நினைவு நாளையும் நினைவுகூற தடை விதித்தனர்.

அத்துடன், தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால், காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” – நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (04.09.2020) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாகக் கொண்டுவரப்படுகிறது என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இதற்குக் காரணம், நவம்பர் மாத நடுப்பகுதியில் சுயாதீக ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவிருக்கிறது. அவ்வாறு, முடிவடையும்போது இப்போது இருக்கின்ற அரசியலமைப்புச் சபையினுடைய அனுமதியோடுதான் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். தான் நினைத்தவர்களை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது.

ஆனால், அதற்கு முன்னதாக இந்த 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அடுத்த தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாகவே இருப்பார்கள். இதுவொரு பாரிய திருப்பத்தினை நாட்டில் ஏற்படுத்தும்.

சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்கள் கடந்த வருடங்களில் இந்த நாட்டிலே நடத்தப்பட்டிருக்கின்றன. அதற்கொரு பாரிய சவால் ஏற்படும். அதுதான் இத்தனை அவசரம்.

ஆனபடியால்தான், அவர்களுடைய கட்சிக்குள்ளே இருந்துகூட, இந்த இருபதாவது அரசியலமைப்புத் திருத்த ஏற்பாடுகள் பலவற்றுக்கு எதிர்ப்பு இருந்தபோதும், அவர்கள் அவற்றை மாற்றியமைப்பதாக இணங்கிக் கொண்டாலும்கூட, ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தையே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள்.

இல்லையென்றால், திருத்தங்களை உள்ளடக்கி வர்த்தமானியில் திரும்பவும் அரசியலமைப்புத் திருத்தம் பிரசுரிக்கப்பட வேண்டும். அதற்கு இரண்டு வாரகால அவகாசம் தேவை. அதற்குப் பிறகு நாடாளுமன்றத்திலே சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஒருவார கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

அப்படியெல்லாம் செய்துகொண்டிருக்க நவம்பர் மாதம் கடந்துவிடும். எனவேதான், 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அவர் மேற்கொண்ட போராட்டம் எனவே அந்த போராட்டத்தை நாங்கள் இழிவுபடுத்த முடியாது” – தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“ திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அவர் மேற்கொண்ட போராட்டம் எனவே அந்த போராட்டத்தை நாங்கள் இழிவுபடுத்த முடியாது” என தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04.09.2020) மட்டக்களப்பில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் கிறிஸ்தவ மத நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து மத வழிபாட்டின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடந்த காலங்களில் கூட திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல அதனை அசிங்கப்படுத்தியவர்களும் அல்ல நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். அதற்கான கௌரவத்தை கொடுத்திருக்கின்றோம். கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

திலீபனின் கனவு என்ன?  இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களும் ஏனைய சமூகத்துக்கு இணையாக, நிம்மதியாக, தலைநிமிர்ந்து வாழ வேண்டும் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது என்ற அந்த கனவை நனைவாக்க வேண்டும் என்று நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை அவர்கள் மற்ற சமூகத்துக்கு கைகட்டி வாழாமல் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் .

தீலீபனை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துகின்ற ஒரு சிலர் எங்கள் மீது அரசியல் காட்புணர்ச்சி காரணமாக நாங்கள் அமைதியாக இருந்தோம் என குற்றம் சுமத்துகின்றனர். நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போதும் திலீபனின் அந்த அகிம்சைவழி போராட்டத்தை மதிக்கின்றோம் மதித்துக் கொண்டிருக்கின்றோம் இதை தெளிவாக சில விசனத்தனங்களை கூறுகின்றவர்களுக்கு இந்த ஊடக சந்திப்பு வாயிலாக தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிரச்சனையை வைத்து நாங்கள் இனிமேல் அரசியல் செய்ய முடியாது நாங்கள் அரசாங்கத்தோடு இருப்பது என்பது பிரச்சனையை வைத்துக் கொண்டு எங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அரசியலை செய்ய முடியாது நாங்கள் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு ஹர்த்தாலை குழப்பவில்லை அதற்கு எதிர்மாறாக செயற்படவில்லை அந்த போராட்த்துக்கு மறுப்பு தெரிவித்ததில்லை கடந்த காலத்தில் 42 மேற்பட்ட போராட்டங்களை மேற்கொண்டோம். மக்களின் நியாயமான போராட்டங்களை மதிக்கின்றோம் அதனை கௌரவிக்கின்றோம் அதுதான் உண்மையும் அதுதான் யதார்த்தமும்.

20 சீர்திருத்தம் என்பது 18 வது சீர்திருத்தத்தை தளுவி அதை நடைமுறைப்படுத்தும் ஒரு செயற்திட்டம் தான் 20 சீர்திருத்த சட்டம் இருக்கின்றது. இது தொடர்பாக எதிர்கட்சியில் பல்வேறு எதிர்ப்புக்கள் இருக்கின்றது எது எவ்வாறாக இருந்தாலும் 18 சீர்திருத்தம் 20 சீர்திருத்தமாக ஒரு சில மாற்றத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கின்றது  என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? “ – அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கேள்வி .

“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? என்று அவரிடம் நான் சவால் விடுகின்றேன்“ என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

‘இலங்கை அரசு சார்பானவர்கள் மாகாண சபைகளை உடனே நீக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாண சபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. எம்மைப் பொறுத்தவரையில் முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு, கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும்’ என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துத் தொடர்பில் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகள் நீக்கப்பட வேண்டுமெனில் 9 மாகாண சபைகளும் நீக்கப்படும். விக்னேஸ்வரனுக்காக வடக்கு, கிழக்கைத் தவிர்த்து ஏனைய 7 மாகாண சபைகளையும் நீக்க முடியாது.வடக்கு, கிழக்கு மாகாண சபைகள்தான் மிகவும் ஆபத்தாக இருக்கின்றபடியால் மாகாண சபைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எனினும், மாகாண சபைகள் முற்றாக நீக்கப்பட வேண்டுமா? அல்லது 9 மாகாண சபைகளையும் மீள இயங்க வைக்க வேண்டுமா? என்பதை புதிய அரசமைப்பில் ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்துக் கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை.

சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இயங்க வேண்டும் என்று கூறுகின்ற விக்னேஸ்வரன், அதைமீறி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்க முடியாது என்றும் குறிப்பிடுகின்றார். சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும் என்று புதிய நகைச்சுவையை விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

அவரின் இந்தக் கருத்தின் விரிவாக்கம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் கனவான ‘தமிழ் ஈழம்’ கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளை நீக்க முடியாது என்பதேயாகும். விடுதலைப்புலிகள் போல் விக்னேஸ்வரனும் கனவு காண்கின்றார். அவரின் கனவு ஒருபோதும் நனவாகாது எனவும் குறிப்பிட்டுளளார்

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த கொரோனா நோயாளியின் 16வயது மகளுக்கும் கொரோனா உறுதி !- புங்குடுதீவிலும் 20பேர் தனிமைப்படுத்தலில்..,

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுள்ளதுடன் சமூகப்பரவல் தொடர்பான அபாயமுமத் ஏற்பட்டுள்ளது.

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர் பணிபுரிந்த மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேரும், திவுலப்பிட்டியவில் அவருடன் நெருக்கமாகப் பழகிய 150 பேரும் வீடுகளிலில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின்  16 வயது மகளுக்கும் இன்று மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததுள்ளார்.

அதே நேரம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்  பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண் இன்று ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பத்தினரும் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவருடன் தொடர்புடையவர்களும் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிஸ்யை உலுக்கிய தமிழ் குடும்பப் படுகொலைகள்! இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! ஐவர் மருத்துவமனையில்!! கொலையாளி தற்கொலை முயற்சியிலில் இருந்து தப்பி மருத்துவமனையில்!!!

பாரிஸில் தமிழர் வாழும் பகுதியான நொய்ஸ்-லி-சக் இன்ற இடத்தில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழர்கள் செறிந்த வாழ்கின்ற பொபினி பிக்காசோ ரான்ஸி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக இந்த நொய்ஸ்-லி-சக் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மைத்துனர் குடும்பத்தினரை அறையிலி வைத்து பூட்டிவிட்டு தனது மனைவியயையும் பிள்ளைகளையும் கொலையாளி படுகொலை செய்ததாகவும் அவருடைய மனைவி மற்றையவர்களைக் காப்பாற்ற போராடியதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பற்றி பாரிஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவியயையும் 5 வயது 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த மருமக்களான 5 வயது 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார். தனது மனைவி பிள்ளைகளைப் படுகொலை செய்தவர் அதன் பின் மைத்துனரின் குடும்பத்தினரையும் தாக்கி உள்ளார். அத்தாக்குதலில் மைத்துனரின் இரு பிள்ளைகள் கொல்லப்பட்டு உள்ளனர். அதன் பின் கொலையாளி தற்கொலை செய்ய முயற்சித்து தன்னை மிகவும் காயப்படுத்திக்கொண்டுள்ளார்.
இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நபர் பற்றி ஏற்கனவே பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இருந்துள்ளது. பொலிஸார் இந்நபர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டும் இருந்தனர். ஆனால் பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்ட போது அது குடும்பத்தகராறு என்று அதனை பெரிதுபடுத்தாமல் குடும்பத்தினர் பின்னர் சமாளித்துவிட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. இவ்வளவு கொடூரமான முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இது வெறுமனே குடும்பத் தகராறுடன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையா அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததா என்பதும் இதுவரை தெரியவரவில்லை. இன்று இச்செய்தி பிரான்ஸ் தொலைக்காட்சியின் முக்கிய செய்தியாகி உள்ளது. நாளை பிரான்ஸ் தேசிய பத்திரிகைகளிலும் முதற்பக்கத்தை நிரப்பும் முக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மாறியுள்ளது.
கொலையாளி மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்றும் அவர் சந்திப்பவர்களை கன்னியமாக நலம்விசாரித்துக் கொள்பவர் என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் அப்பாவித்தனமான இம்மனிதர் எவ்வாறு இப்படியொரு கூட்டுப்படுகைலையயைச் செய்தார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அதிர்ச்சியயை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் யாழ் சண்டிலிப்பாயயைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நேறைய தினம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அங்கு குழந்தையயை விற்று வாங்கும் ஒரு விடயம் இடம்பெற்றதாகவும் அதில் கணவன் வழி குடும்பமா? மனைவி வழிக் குடும்பமா என்றொரு சர்ச்சை எழுந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சம்பந்தப்பட்ட நபர் இக்கொடூரத்தை மேற்கொண்டிருந்த வேளை வீட்டில் யன்னல் வழியாக் ஏறிக் குதித்து தப்பி வெளியே சென்ற 13 வயதுச் சிறுவன் அருகில் இருந்த கபே ஒன்றிற்குள் சென்று உதவி கோரியதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கோரச் சென்ற சிறுவன் தங்களது மாமா பைத்தியம் பிடித்தவராக தங்களைத் தாக்குவதாக தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரிஸில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக பாரிஸில் மாடிக்கட்டிடத் தொகுதியிலேயே தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆனால் இக்குடும்பத்தினர் தனி பங்களோவீட்டில் இருந்துள்ளனர். அதனால் அச்சிறுவன் யன்னல் வழியாக தப்பித்து குதித்துச் செல்லக் கூடியதாக இருந்துள்ளது.
கொலைகளை மேற்கொண்டவர் கத்தி சுத்தியல் போன்ற நாளாந்தம் வீட்டில் பாவிக்கின்ற ஆயுதங்களையே பயன்படுத்தி இக்கொடூரத்தை மேற்கொண்டுள்ளதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இக்கொலைகளை அவர் திட்டமிட்டுச் செய்தாரா? என்ன நோக்கத்திற்காகச் செய்தார்? அவருடைய மனநிலை என்ன? என்பது பற்றிய விபரங்கள் தொடரும் பொஸில் விசாரணைகளில் இருந்தே தெரியவரும்.
இதுவரை தாய்மார் தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்து தாங்களும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவர்கள் பிரித்தானியாவில் மூன்று சம்பவமும் கனடாவில் ஒரு சம்பவமும் அஸ்திரேலியாவில் ஒரு சம்பவமும் இடம்பெற்று இருந்தது. இச்சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் இரு குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்தனர்.
மாறாக இவ்வாண்டு ஏப்ரல் பிற்பகுதியில் லண்டனில் தமிழ் தந்தை இரு குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார். நேற்றைய பாரிஸ் படுகொலையானது இவை எல்லாவற்றையும் காட்டிலும் மிக மோசமானதாக அமைந்துள்ளது. இச்சம்பவத்தில் கொலையாளி தாயயைக் கொன்றதுடன் மைத்துனர் குடும்பத்தையும் கொல்ல முயற்சித்துள்ளார். மருமக்களையும் கொன்றுள்ளார். தமிழர்களுடைய அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான கொடூரமான கூட்டுப்படுகொலைச் சம்பவம் இதுவாக அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகள் மற்றும் இவ்வாறான கொடூரமான கொலைகள் சகஜமாகி வருகின்றது. முன்னைய சம்பவங்களில் கொலையாளிகள் இவ்வாறான ஒரு கொடூரத்திற்கு துணிவதற்கான எவ்வித அறிகுறியயையும் வழங்கவில்லை. தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதாக எண்ணிய மனநிலையுடனேயே கொலைகளில் ஈடுபட்டு தற்கொலை செய்யவும் முயற்சித்தனர். ஆனால் பரிஸ் சம்பவத்தில் கொலையாளி சில அறிகுறிகளை காட்டி இருக்கலாம் அவர் ஒரு காரணத்தோடு செயற்பட்டாரா என்ற எண்ணங்கள் எழுகின்றது.
தமிழ் சமூகம் தன்னுடைய உளவியல் மனநிலை பற்றி நிறையவே ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது.