04

04

மே 6 உள்ளுராட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் பல தமிழர்கள் களமிறங்கி உள்ளனர்! : த ஜெயபாலன்

Mayor_and_Cllr_Pongal_14Jan10மே 6 பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் லண்டனில் உள்ள உள்ளுராட்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றது. லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் கவுன்சிலர்களே தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் மக்கள் சரியான தேர்தல் பிரிவுகளை இனம்கண்டு போட்டியிட்டு தமிழ் மக்களை தமக்க்கு முழுமையாக வாக்களிக்கச் செய்ய முடிந்தால் 60க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் என மதிப்பிடப்படுகின்றது. ஆனால் ஒரே தேர்தல் பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டு தமிழர்கள் தெரிவு செய்யப்படுவதை தடுக்கின்ற முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. அதுவும் தமிழ் தேசியத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை நியூஹாமில் உள்ள வோல் என்ட், ஈஸ்ற்ஹாம் நோத் ஆகிய இரு தேர்தல் பிரிவுகளில் 7 பேர் போட்டியிடுகின்றனர். நியூஹாம் பகுதியின் ஒரே தமிழ் கவுன்சிலர் போல் சத்தியநேசன் முதன் முதலில் வெற்றி பெற்ற வோல் என்ட் தேர்தல் பிரிவில் . வரதீஸ்வரன் கனகசுந்தரம் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து லிபிரல் டெமொகிரட் கட்சி சார்பில் பிரபாகரன் கொன்சவேடிவ் கட்சி சார்பில் ராஜ்குமார் ஆகிய இரு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

நியூஹாமின் மற்றுமொரு தேர்தல் பிரிவான ஈஸ்ஹாம் நோத்தில் மூன்று தடவைகள் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் தொழிற் கட்சியின் சார்பில் நான்காவது தடவையும் போட்டியிடுகின்றார். இவருக்குப் போட்டியாக வசந்தா மாதவன் துரைக் கண்ணன் ஆகிய இருவர் கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். சக்திவேல் லிபிரல் டெமொகிரட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

60 கவுன்சிலர்களைக் கொண்ட நியூஹாம் கவுன்சிலில் 54 கவுன்சிலர்கள் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் போல் சத்தியநேசன் ஒருவரே தமிழ் கவுன்சிலராக உள்ளார். லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற நியூஹாம் கவுன்சிலில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றனர். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் வருவதற்கு வாய்ப்பு இருந்த போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரே தேர்தல் பிரிவில் நிற்பதால் தமிழ் வாக்குகள் இங்கும் பிளவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக தமிழ் தேசியத்தின் பெயரில் அணிதிரண்ட ஒரு பிரிவினர் தற்போது ஈஸ்ற்ஹாமில் கொன்சவேடிவ் கட்சிக்கு அலுவலகம் ஒன்றைத் திறந்து ஈஸ்ற்ஹாமில் உள்ள ஒரே தமிழ் கவுன்சிலரான போல் சத்தியநேசனை தோற்கடிப்பதில் குறியாக உள்ளனர். இத்தமிழ் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி கட்சி கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட தாக்குதலாக நடாத்தப்படுகின்றது. ஏற்கனவே கவுன்சிலராக இருந்த போல் சத்தியநேசனுக்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததும் தெரிந்ததே.

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கான தனது சேவை என்றும் போல் தொடரும் எனத் தெரிவித்தார் போல் சத்தியநேசன். உள்ளாட்சித் தேர்தலிலும் நாடு தழுவிய ரீதியிலும் தொழிற்கட்சியின் நீண்ட கால ஆட்சி மீது மக்களுக்கு இயல்பான சலிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமது பகுதியில் தனது வாக்கு வங்கி பலமாகவே இருப்பதாகவும் அவர் தேசம்நெற்க்கு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கிழக்கு லண்டனைச் சேர்ந்த நியூஹாம் கவுன்சிலின் அயல் கவுன்சில்களான வோல்தம்ஸ்ரோ கவுன்சிலிலும் ரெட்பிரிஜ் கவுன்சிலிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இப்பகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் ஒரே தேர்தல் பிரிவில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோல்தம்ஸ்ரோவில் தொழிற்சங்கமும் சோசலிஸ் பார்ட்டியும் இணைந்து போட்டியிடுகின்றனர். தனபாலசிங்கம் உதயசேனன் வோல்தம்ஸ்ரோ ஹயம்ஹில் தேர்தல் பிரிவில் போட்டியிடுகின்றார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் உதயசேனனே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிக் கருத்துக்களில் நின்று தொடர்ச்சியான உள்ளுர்ப் போராட்டங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரேட்பிரிஜ் கவுன்சிலில் தொழிற்கட்சி சார்பில் தவத்துரை ஜெயரஞ்சன் நியூபரி தேர்தல் பிரிவிலும் கௌரி என்பவர் கிலேஹோல் தேர்தல் பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் போல் சத்தியநேசனைத் தவிரவும் கடந்த ஆட்சிக் காலத்தில் கவுன்சிலாகத் தெரிவு செய்யப்பட்ட எலிசா மஅன் (லிப் டெம்) – சதேக் கவுன்சில், யோகநாதன் மற்றும் அவரது மகன் (லிப் டெம்) – கிங்ஸ்ரன் கவுன்சில், சசிகலா (லேபர்) தயாஇடைக்காடர் (லேபர்), மனோ தர்மராஜா (லேபர்) ஆகிய மூவரும் ஹரோ கவுன்சில் – இவர்களும் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத பலரும் இத்தடைவ மீண்டும் களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் உதயசேனன் போன்ற புதுமுகங்களும் இத்தேர்தலில் களமிறங்கி உள்ளனர்.

மே 2ல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டு வீடுகளைத் தட்டியவர்களை சிலர் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அல்லது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகக் குழம்பிய சில சம்பவங்களும் நடந்துள்ளது. இலங்கைத் தேர்தல் போன்று பிரித்தானியாவில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலிலும் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்து சில பகுதிகளில் மீளவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சில ஆயிரம் வாக்காளர்கள் ஏகபோக பிரதிநிதித்துவக் கொள்ளை அடிப்படையில் விளையாட்டாக நடத்திய தேர்தலிலேயே மோசடி செய்து வெல்வதற்கு சிலர் முயற்சித்துள்ளனர் என்பது வேடிக்கையானதாக அமைந்துள்ளது. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முன்பு குறிப்பிட்டுள்ள தேர்தல்களிலும் பார்க்க நியாயமான முறையில் நடத்தப்படும் என்பதில் ஐயம்கொள்ள வேண்டியதில்லை.

இறுதிப் போரின் நாட்கள் நினைவு கூரப்படுகின்றன!

Wanni_Warஇறுதிக்கட்டப் போரினால் மக்கள் அதிகம் கொல்லப்பட்ட மே மாதப் பகுதியை விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்காகவும், அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையொட்டியும் மே மாதம் 18ம் திகதி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வெற்றி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, வன்னியில் இறுதிக் கட்டப் போரினால் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவுகளை வன்னி மக்கள் கண்ணிருடனும், துயரின் வேதனைகளுடனும் நினைவு கூருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்வலி விளம்பரங்கள் அதிகளவில் பிரசுரமாகி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குற்றச்செயல்களோடு, வதந்திகளும் யாழ்ப்பாண மக்களை அச்சமடைய செய்கின்றன!

Jaffna Townயாழ்குடா நாட்டில் இடம்பெறும் கடத்தல், கொலை, கொள்ளைச் சம்வங்களையடுத்து வதந்திகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடத்தல், கொள்ளை, கொலை செய்யப்பட்டதான உண்மையற்ற வதந்திகள் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு அவை காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.  கடந்த சில தினங்களாக வடமராட்சிப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிற வதந்தி பரவியதால் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்பிற்கும் உள்ளாகினர். வடமராட்சியில் இரு தினங்களாக மக்கள் ஆறு மணிக்குப்பிறகு விடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வணிக நிலையங்கள் நேரகாலத்திற்கே மூடப்படுகின்றன. ( தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா )

 இதே வேளை, யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத்  தடுக்க சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்படுவர் என யாழ். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எனினும் கடந்த 2ம் திகதி  நெல்லியடியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் 25 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சமட்பவத்தையடுத்து, பொது மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதன் காரணமாக பலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இலங்கையின் தென்பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கூட செல்லத் தொடங்கினர். போரின் முடிவின் பின்னர் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கொழும்பு மற்றும், தென்பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். மேற் குறிப்பிட்ட படுகொலைச் சம்பவமானது  யாழ்ப்பாணத்தில் கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி விட்டதோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது  மக்கள் இதனால் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கம்.

glpeiris.jpgஅவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தேவையற்றவை எனக் கருதப்படும் அவசரகால விதிமுறைகளே இப்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எவ்வாறாயினும் அவசரகால சட்டத்தை இப்போதைக்கு முழுமையாக நீக்கமுடியாது என்றும் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.

மேல் மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்கள்

மேல் மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக 5 பேர் இன்று(04) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பொதுத்தேர்தலையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே புதிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீ.ல.சு.க. கொழும்பு மாவட்டம் அஜ்மல் மவ்ஜுத், ஸ்ரீ.ல.சு.க. களுத்துறை மாவட்டம் எம்.எம்.எம்.அம்ஜாத், களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி. லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, மற்றும் உதயசாந்த பெரேரா, சுதத் மத்துமகமகே ஆகியோரே மேல் மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாவர்

ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச்சலுகை; பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு சாதகம்

glpeiris.jpgஜீ.எஸ்.பி.  பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகள் இலங்கைக்குச் சாதகமாக வுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மேற்படி வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத் தெரிவித்த அமைச்சர் வெளி நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தலை¨யிலான குழு முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

இதற்கென வெளிநாட்டமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கே. கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கண்டி மாவட்ட ஐ.ம.சு.மு. எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகைக்கு இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம் பெற்றதாக கூறப்படும் தேர்தல் வன்முறைகளை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிப தியிடம் நேற்று தனது அறிக்கையை சமர்ப் பித்ததனையடுத்தே ஜனாதிபதி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவே நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தொடர்பாக ஆராய்ந்து ஜனாதிபதியிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் விசாரணைகளுடன் போட்டியாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் இன்று முதல் 4 தினங்கள் கூடும்

parliament.jpgபாராளு மன்றத்தை இன்று (4) முதல் நான்கு தினங்கள் கூட்டுவதற்கு நேற்று (3) நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பி. டி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன் போது இன்றும் நாளையும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 6 ஆம் திகதி ஒழுங்கு விதிகளும் 7 ஆம் திகதி அனுதாபப் பிரேரணையும் இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.