01

01

மீண்டும் ஒரு தேர்தல்- மே 2010 : முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

tgta.jpgஏப்ரல் 8ல் தானே இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது, பிறகு என்ன “மே தேர்தல்” என குழம்ப வேண்டாம். இது நம் நாட்டு தேர்தல் அல்ல, ஐ.இ (UK)தில் மே 6ல் நடக்கும் பொதுத் தேர்தலும் அல்ல. இது ஒரு விசித்திரமான தேர்தல். உலகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ள தேர்தல், அதுவும் புலம் பெயர் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் தேர்தல்.

மே 2ம் திகதி முக்கிய மூன்று கண்டங்களில், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா வின் முக்கிய நகரங்களில் ஒரே நாளில் “தமிழ் புலி” (Tamil tigers)களின் ஆதரவாளர்கள் இலங்கையின் இறையாண்மையில் (Sovereignty) இருந்து பிரிந்து சென்று தனியான ஒரு ஆட்சியை இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் நிறுவி “தமிழ் ஈழம்” (Tamil Ealam) என்ற தனி இறைமை கொண்ட நாடொன்றை (State) பிறசவிப்பதே இத் தேர்தலின் நோக்கு.

இத் தேர்தலுக்கு “நாடு கடந்த தமிழீழ அரசு(Transnational government of Tamil Ealam)” சுக்கான தேர்தல் என்ற பெயரும் சூடப்பட்டுள்ளது. இந்த நா.க.த.அ சின் இணைப்பாளரான அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை/அமெரிக்க சட்டத்தரணி திரு. வி. உருத்திரகுமரனின் கூற்றுப்படி தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் இலங்கை தமிழர்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் (புலி ஆதரவாளர்கள்) தனித்தனியான குழுவாக, அதாவது நா.க.த.அ சின் அங்கமாக அந்தந்த நாடுகளில் செயல்பட்டு இறுதி இலக்கை அடைய (படாத) பாடுபடுவர்.

சர்வதேச சட்டத்தில் (International Law) இந்த நாடுகடந்த அரசை தஞ்ச அரசு (Government in Exile) என்றும் அழைப்பர். இந்த தஞ்ச அரசிற்கான சர்வதேச சட்டத்தின் வரைவிலக்கணம் பின்வருமாறு அமைகின்றது:

“இறைமையுள்ள நாட்டின் (அரசொன்றின்) அரசாங்கம் அந்நிய நாடொன்றின் இரானுவத்தால் பலாத்காரமாக பறிக்கப்பட்டு, அப்பிரதேசம் அந்நிய நாட்டின் ஆதிக்கதில் இருக்கும் போது அதிகாரம் இழந்த அரசாங்கம் மூன்றாம் நாடொன்றில், அந் நாட்டின் அனுசரணையுடன் தற்காலிகமாக ஒரு அரசாங்கத்தை நிறுவுவது” என்பதாகும்.

இந்த வரைவிலக்கணத்தை இலங்கையுடன், குறிப்பாக இலங்கையின் தமிழ் பிரதேசத்துடன் (வடக்கு, கிழக்கு) பொருத்தி பார்க்கும் போது இது முற்றும் பொருந்துவதாகவில்லை. ஏனெனில் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குற்பட்டது. வடக்கு, கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனியான ஆட்சி ஒன்று நிலவவில்லை. இலங்கை ராணுவம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உள்ளடக்கிய மொத்த ஆள்புல பிரதேசத்திற்கும் சொந்தமானது. இந்த ராணுவத்தை அந்நிய நாட்டு ராணுவமாக கருத முடியாது. இந்த மே 2 தேர்தலில் போட்டி இட்டு நா.க.த.அ சின் உறுப்பினராக வர இருப்போரும் பதவி இழக்கச் செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அல்லர். எனவே இந்த நா.க.த.அ என்பது ஒரு தஞ்ச அரசாங்கம் என்ற வரைவிலக்கணத்துக்குள் வரவில்லை. ஆகவே இந்த நா.க.த.அ என்பது சர்வதேச சட்டவரம்பில் ஒரு பரிசோதனை (Experiment) மட்டுமே. பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 2:1, இருப்பினும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கிலும், நாட்டின் சமகால அரசியல் நிலைமையிலும் இது என்றும் வெற்றி பெற முடியாத ஒரு விடயமே. சுருங்கக் கூறின் ஒரு கனவு, அதுவும் பகற்கனவு.

இந்த நா.க.த.அ தேர்தலுக்காக ஐ. இரா (UK) தில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் முக்கியமாக இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான தனி நாடொன்றை மிக விரைவில் (மூன்று ஆண்டுக்குள்) அமைத்து தமிழரின் சுதந்திர வாழ்வை உறுதிபடுத்துதல், மற்றையது இனஅழிப்பு, போர்குற்றம் தொடர்பாக முக்கியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் சகோதரர், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லல் என்பவையாகும். இவை இரண்டும் நடந்தேறுவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை என்பதை இந்த தேர்தல் வேட்பாளர்கள் வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றனர். இதை விடவும் ஐ.இரா வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வேட்பாளர் ஒருபடி மேலே சென்று இந்த நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் ஆயுத வழிக்குச் செல்வதை விட வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். ஆக இவர்கள் புலிகள் முடித்த இடத்திலிருந்து தொடங்க எத்தனிக்கின்றனர் எனலாம்.

நிற்க, தமிழர்களுக்குகான தனி நாடென்பது “வட்டுக்கோட்டை தீர்மான (VaddukKodai Resolution)” த்தின் அடிப்படையை கொண்டது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானமானது இலங்கையின் பல்லினத்துவ (Multi Ethnic) தன்மையை குறுக்கி அதை இருவின நாடாக காண முற்படுவது. அதாவது இலங்கையில் சிங்களவர், தமிழர் என்ற இரண்டு இனங்களே உள்ளனர் என்றும், இந்த இனங்களுக்கே அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை (Right to self determination) உள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்கும், கிழக்கும் சேர்ந்த தமிழரின் பூர்வீக நிலத்தில் தமக்கான தனி அரசை நிறுவ தமக்கு தார்மிக ரீதியிலான அரசியல் அதிகாரம் உள்ளதாகவும். அதை சிங்கள அரசு முற்றாக நிராகரிக்கிறது என்பதுமே இந்த வேற்பாளர்களின் ஒட்டுமொத்த அரசியல் ஞானமாகின்றது. இந்த அடிப்படையிலேயே தமது நா.க.த.அ சுக்கான கோரிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த நியாயப்படுத்தலை தான் சர்வதேசத்திடமும் கொண்டு செல்லவுமுள்ளார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் இன்னொரு தேசிய இனத்தால், அதாவது இலங்கை சோனகர்களால் (Sri Lankan Moors) நிராகரிக்கப்பட்டது. தமிழர் சொல்லும் பூர்வீக நிலம் என்ற பிரதேசத்தில் சோழனின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு முன்பே சோனகர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே அப்பிரதேசம் தமிழரைவிட சோனகர்களுக்கே அதிகம் உரித்துடையது. இந்த வகையில் இலங்கையின் கிழக்கு தொடர்பாக பேசும் போது அல்லது அது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும் போது இலங்கை சோனகர் புறந்தள்ளபட முடியாதுள்ளனர். எனவே அவர்களின் விருப்பு இல்லாமல் அந்த பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் அதிகாரம் இல்லை. மேலும் இந்த இலங்கை சோனகர் தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கும் போது அத்தகைய சூழ்நிலையை எப்படி இந்த நா.க.த.அ எதிர்கொள்ளும் என்பது தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை.

அத்துடன் புலி ஆதரவாளர்கள் இன்னும் 1970ம் ஆண்டின் சனத்தொகை கணிப்பின்படியே வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பெரும்பான்மை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரை 1.5 மில்லியன் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதையோ, அவர்களில் சுமார் 20% மேலானோர் இலங்கை பிரஜா உரிமையை இழந்து விட்டனர் என்பதையோ, மீதமானோர் வெளிநாட்டு பிரஜா உரிமையை எதிர்பார்துள்ளனர் என்பதையோ இவர்கள் கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர். இதைவிடவும் 2010 ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு தரவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் எதிர்வு கூறமுடியாதுள்ளனர். ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடைபெறும்போது இந்த தனி நாட்டுக்கான கோரிக்கை கிழக்கு தமிழராலும், கிழக்கு சோனகராலும் தோற்கடிக்கப்படும் என்பதை இப்போதே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம். ஆக இந்த நா.க.த.அ யாருக்கு என்ற கேள்விற்கு முகங்கொடுக்க வேண்டியவர் இந்த வேற்பாளர்களே. இதை விடவும் இலங்கையின் கடந்த பொதுத் தேர்தலில் புலிகளுடன் ஒட்டி நின்று பிரிவினையை ஆதரித்த முக்கிய போட்டியாளர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளதையும், இந்த நா.க.த.அ ஏற்பாட்டாளர்களுடன் அரசியல் ரீதியாக ஒத்து போகாத ஒருவகை மிதவாத தமிழர்களே மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.

இருந்த போதிலும் புலம் பெயர் நாடுகளில் வாழும் (புலி) தமிழர்கள் ஆகக் குறைந்தது இலங்கையில் வாழும் தமிழ் இனத்தின் விருப்பு வெறுப்புகளையோ, இந்த நா.க.த.அ தொடர்பான அவர்களின்அபிப்பிராயத்தையோ கருத்தில் எடுக்காமல் ஒருதலை பட்சமாக இந்த முடிவுக்கு சென்றுள்ளதென்பது நா.க.த.அ சுக்கான ஏற்பாட்டாளர்களின் அரசியல் மதியீனத்தையும், தமிழர்களின் இயல்பு வாழ்க்கையில் அக்கறை இல்லா தன்மையும், சர்வதேச அரசியல் நகர்வுகளை மதிப்பிட திராணியில்லா நிலையையும் தெளிவாக காட்டி நிற்கின்றது.

இந்த உத்தேச நா.க.த.அ க்கு மொத்தமாக 135 பிரதிநிதிகள் உலகளாவிய ரீதியில், இலங்கை நீங்கலாக, தெரிந்தெடுக்கப்படப் போகிறார்கள். இதில் 115 பேர் தேர்தல் மூலமும், 20 பேர் நியமன பிரதிநிதிகளாகவும் உள்வாங்கப்படுவர். ஐ.இ (UK) தில் போட்டியிடும் 38 பேரில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். நடைமுறையில் இந்த 135 பேரும் தமிழ் புலிகளின் மே18க்கு பின்னான முகவர்களே. புலிகள் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடித்த அன்றைய த.தே.கூ (TNA) அங்கத்தவலும் பார்க்க இவர்கள் அரசியல் அதிகாரம் எதுவுமே இல்லாதவர்கள். இவர்களுக்கு இருக்கும் அதி கூடிய தகைமை, ஐ.இ (UK) நா.க.த.அரசுக்கான தேர்தல் வேற்பாளர்களின் ஒப்புதல்படி, 2009ம் ஆண்டு தை முதல் வைகாசி மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற அரச எதிர்ப்பு/புலி ஆதரவு ஊர்வலங்களில் கலந்து கொண்டமை. அதே நேரத்தில் இவர்களின் கல்வி தகைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்க வகையில் அனேகமாக எல்லோரும் படித்தவர்கள். ஆனாலும் கனடாவில் போட்டியிடுவோரில் அனேகர் பண விவகாரங்களில் கறுப்பு புள்ளி பெற்றவர்களாம். இந்நிலையில் இவர்களின் தகைமை, தகுதி என்பவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக இந்த நா.க.த.அ சை நிறுவுவதற்கான சாத்தியபாட்டையும் அது சுதந்திரமாக வளர்ந்து செல்லும் சாத்தியத்தையும் (Viability) பார்த்தால் அது ஆரம்பிக்கும் வேகத்திலேயே அதன் முடிவையும் சந்திக்கும் என்பதை எதிர்வு கூர்வதில் சிரமம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஆக, இந்த நா.க.த.அ என்பது ஒரு பொழுது போக்குக்கான விடயம், புலம்பெயர் அப்பாவி தமிழர் இந்த கனவரசின் நடைமுறை செலவினத்தை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுவர். புலம்பெயர் நாட்டின் தேசிய அரசியலில் இருந்து தமிழர்கள் அப்புறப்படுத்தப்படுவர். சர்வதேச ரீதியில் தமிழர் பிரச்சினைக்குரியவர் என்ற நிரந்தர பட்டத்தையும் பெறுவர். எஜமானார்களோ இலங்கையின் முன்னைய புலித் தலைவர்கள் போல் தம் சொந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பர். ஆகவே இந்த அரசியல் நகர்வு என்பது தமிழ் அரசியலில் அத்தியாயம் 2. புத்தியுள்ள தமிழர் இதை எதிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் அமைதியாக இதை நிராகரித்து மீதமுள்ள தமிழரை காத்தல் வேண்டும். இது தமிழர்களின் தார்மீக அரசியல் பணி.

நன்றி, Mohamed SR. Nisthar.(from London)

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற உழைக்கும் மக்களின் பங்களிப்பு அவசியம் – மே தினச் செய்தியில் ஜனாதிபதி

president.jpgசர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றிகொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது : பயங்கர வாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தாராளமான உதவியோடு தலைமைத்துவத்தை அடைந்துகொண்ட ஒரு தலைவன் என்ற வகையில் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்கு முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ள முடிந்தமை எமது வெற்றியின் இரகசியம் என நான் கருதுகின்றேன்.

நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியில் உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மென்மேலும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது முன்னேற்றப் பாதையில் தடையாகவிருக்கும் எல்லா சவால்களையும் வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையுடன் அடையப்பெறும் தேசிய அபிவிருத்தியின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க முடியும் என இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

உழைக்கும் மக்களுக்கு வெற்றி கிட்டுமாகுக.

எதிர்கால சவாலை வெற்றிக்கொள்ள இத்தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம் – பிரதமர் மேதினச் செய்தி

deemu.jpgமூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்திலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரமானதும் அடிமையற்றதுமான நாட்டில் கொண்டாடப்படும் இந்த உலகத் தொழிலாளர் தினத்தை, எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான திடசங்கற்பத்தை உழைக்கும் மக்களின் மனங்களில் பதியச் செய்யும் தினமாகக் கருதுவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன விடுத்துள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சாலையிலும் விவசாய மண்ணிலும் மற்றம் கடலிலும் உழைத்து வியர்வை சிந்தும் சகல ஊழியர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்கும் சவாலே இன்று எம்முன் உள்ளது.

இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களுடன் பங்களிப்புச் செய்வது எனது எதிர்பார்ப்பாகும். நமது நாடு நெருக்கடியைச் சந்தித்த சகல சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியும், சகல இடையூறுகளையும் சகித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் உலகுக்கு வெளிப்படுத்திய முன்மாதிரிக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்”, என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், உழைக்கும் மக்களின் ஆதரவு முன்னரைவிட தற்போது கூடுதலாக அவசியமாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளைஞர் விவகார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் குழுத் தலைவருமான டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில், மேதினத்தில் உள்ள வரலாற்றைப் போன்று சமூக, அரசியல் முக்கியத்துவமான மே முத லாந்திகதியொன்று இலங்கை மக்களுக்குக் கிட்டியுள்ளதென்றும் 30 வருடங்களின் பின்னர் முழு இலங்கையிலும் உழைக்கும் வர்க்கம் இந்தத் தடவையே உண்மையான கெளரவத்துடன் அனுஷ்டிக்கிறார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை – ஆணையிறவில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்

gotabaya.jpgபுலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.

புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும்,  இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும்,  இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.

சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை தொழில் உரிமையை பாதுகாக்கவும் ஏற்பாடு – அமைச்சர் லொக்குகே

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.  தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.  அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று மே தினம்; பொலிஸ், அதிரடிப்படை பாதுகாப்பு கொழும்பில் 11 கூட்டங்கள்; 6 ஊர்வலங்கள்;

2010-may-day.jpgஉழைக்கும் வர்க்கத்தினரைக் கெளரவிக்கும் மே தினம் இன்றாகும். இதனையிட்டு நாடு முழுவதும் ஊர்வலங்களும், கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளின் பின்பு நாட்டில் மிகவும் அமைதியான சூழலில் நடைபெறும் இந்த மே தினக் கொண்டாட்டங்களையிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு மாநகரில் 11 கூட்டங்களும், ஆறு மே தின ஊர்வலங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் ஐ. ம. சு. மு.வின் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை திடலில் நடைபெறுகிறது.  ”வேலைத் தளத்துக்கு பலம், தொழில்சாலைக்கு சுறுசுறுப்பு, தாய்நாட்டுக்கு சமாதானம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இவ்வருட மே தினம் அமைகிறது என இளைஞர் விவகார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பல மே தின கூட்டங்கள் நடைபெறுகின்றன. பல தொழில் சங்கங்கள் பங்குபற்றும் இந்த கூட்டங்களில் பெருமளவு மக்கள் கூட்டம் திரளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி முன்னணி சங்கங்கள் நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கிருலப்பன பொது விளையாட்டு மைதானத்துக்கு வந்து அங்கு கூட்டம் நடத்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி இம்முறையும் மேதின கூட்டம் எதனையும் நடத்தப் போவதில்லை. அதற்கு பதிலாக கடந்த வருடங்களைப் போன்று சமய நிழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்க அமைப்பான ஜாதிக சேவக சங்கமய சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் தலைமையகம் அறிவித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் மேதினக் கூட்டத்தை இம்முறை தலவாக்கலையில் நடத்துகிறது. இக்கூட்டத்துக்கு இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை வகிப்பார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை பொரள்ள கெம்பல் பூங்காவில் நடைபெறுகிறது. இலங்கை தொழில் சங்கம், கெசல்வத்தையில் உள்ள ஏ. ஈ. குணசிங்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய சோஷலிச கட்சி கொடவத்தையில் அதன் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறது. ஜுலை 1980 வேலை நிறுத்தக்காரர்கள் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மே தின கூட்டத்தை நடத்துகிறது.
 

பதுளையில் கடும் மழை

lightning-01.jpgபதுளை மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ரணுகொல்ல ஆறு பெருக்கெடுத்ததால் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் சிக்கிய மேலும் ஆறுபேர் காப்பாற்றப்பட்டனர். பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்