18

18

சுவிஸ் சூரிச் நகரில் புலரும் பொழுது – அரசியல் ஆய்வரங்கு : இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை!

சுவிஸ் சூரிச் நகரில் கலை இலக்கிய அரசியல் உணர்வாளர்களின் கரங்கள் இணைந்து எழுதும் புலரும் பொழுது!

மௌன அஞ்சலி மரியாதை! வரவேற்புரை!…. தலைமையுரை!

திருக்கோணேஸ்வர நடனாலயம் வழங்கும் பரதநாட்டியம்!…
 
கண்டிய நடனம்!… கவிதா நிகழ்வு!…

சுவிஸ் maxim அரங்க குழுவுடன் இணைந்து செயற்படும் நாடக அரங்க செயற்பாட்டாளர் விஐயசாந்தன் வழங்கும்
பூச்சியம்!

நவீன தனிநடிப்பு அரங்கம்.

சிறப்பு விருந்தினர்கள் உரை!
 
திரு. வி. சிவலிங்கம்!
அரசியல் ஆய்வாளர், இலண்டன்
திரு. எஸ். தவராஜா
சட்டத்தரணியும், அரசியல் சட்டவல்லுனரும், இலண்டன்
திரு. அழகு குணசீலன்!
அரசியல் சமூக அக்கறையாளர் சுவிஸ்

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு!
எது?… எங்கிருந்து தொடங்குவது?. என்ன செய்வது?

பொது மக்களுடன் அரசியல் ஆய்வாளர்களும், அரசியல் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடும் திறந்த அரசியல் ஆய்வரங்கு! இந்நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்கள் முகம் கொடுக்கும் உடனடிப்பிரச்சினைகள் குறித்தும், அரசியலுரிமை பிரச்சினை குறித்தும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு இலங்கை அரச தரப்பின் கவனத்திற்கு அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும். உங்கள் கருத்துக்களையும் சுதந்திரமாக தெரிவிக்கலாம்!

இரவு நிகழ்ச்சிகள்
இசை அபிநயம்!.. இன்னிசை நிகழ்ச்சி!!
பிரவேசம் இலவசம்!

காலம்: 19.12.2009 பிற்பகல் 15.00 மணிக்கு
இடம: Gemeinschaftzentrum Affoltern Bodenacker 25, 8046 Zürich
தொடர்புகளுக்கு: 076 2913532, 079 5506976, 076 4732717

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்:
இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை! சுவிஸ்

‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள், அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ எம் கெ சிவாஜிலிங்கம் – நேர்காணல் : த ஜெயபாலன்

Sivajilingam M K_TNA MP._._._._._.
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு : த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354, ரி சோதிலிங்கம் 07846 322 369, ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452
._._._._._.

‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் இன்று (மே 18 2009) தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டை நினைவுகூருமுகமாக அதன் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்திற்கு மாலை அணிவித்துவிட்டு யாழில் தங்கியிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரெலோ அமைப்பில் இருந்து எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விலகியதாக வெளிவந்த செய்திகளிலும் உண்மையில்லை எனவும்  தான் சுயேட்சை வேட்பாளராக நிற்பது தொடர்பாக கட்சிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அவருடைய நேர்காணல்…..

தேசம்நெற்: அண்மைக்காலம் வரை புலியாதரவு ஊடகங்களின் கௌரவிப்புக்களைப் பெற்ற நீங்கள் தற்போது அதே ஊடகங்களினால் துரோகியாக காட்டப்படுகின்றீர்கள் அது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?’

எம் கெ சிவாஜிலிங்கம்: என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்! பெப்ரவரி மாதத்தில் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டியில் ( ”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன் ) தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கேட்டிருந்தேன். அன்று அதைச் செய்திருந்தால் இன்று இவ்வளவு மோசமான அழிவு ஏற்பட்டு இருக்க மாட்டாது. அப்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது வந்து என்னைத் துரோகி என்கிறார்கள். இவர்கள் அரசியலைக் கொஞ்சம் படிக்க வேண்டும்.

தேசம்நெற்: ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் வெளிக் கொணர்வதற்கான சந்தர்ப்பம் என்று தெரிவித்துள்ளீரகள். ஆனால் நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உள்ளீர்கள்.

எம் கெ சிவாஜிலிங்கம்: தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட்டிய போது அனைவரும் ஒரே முடிவை எடுக்கவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலை பகிஸ்கரிகலாம் என்ற அபிப்பிராயமும் சிலரால் முன்வைக்கப்பட்டது. சிவசக்தி ஆனந்தன் மட்டும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்னும் சிலர் பொறுத்திருந்து முடிவெடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களை ஆதரித்த பழக்கத்தை விடும்படி கேட்டேன். குறைந்தபட்சம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவையோ சரத்பொன்சேகாவையோ ஆதரிக்க மாட்டாது என்று அறிக்கைவிடும்படியும் கேட்டேன் அவர்கள் உடன்படவில்லை. இவ்வாறு எவ்வித முடிவில்லாமல் கூட்டம் முடிவடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைசி வரை தமிழ் மக்களை காக்க வைக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரை அவர்கள் யாருடையதோ சமிஞசைக்காக காத்திருப்பதாகவே நான் நினைக்கின்றேன். இந்தத் தலைவர்களுடன் சர்வதேச அமைப்புகளும் இந்தியாவும் பேசிக்கொண்டுள்ளன. ஆனால் இதுவரை எவ்வித சமிஞ்சையும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் என்ஜிஓ ஒன்றின் அழைப்பில் ஜெனிவா சென்றுள்ளார். அது பற்றிய விபரம் எனக்குத் தெரியாது.

ஆனால் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னிருவரில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். நால்வர் ரெலோ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இவர்களுடன் தங்கேஸ்வரி சந்திரநேரு மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.

தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதால் உங்களுடைய ரெலோ அமைப்பிற்குள் பிளவை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதே?

எம் கெ சிவாஜிலிங்கம்: இது ஊடகங்களினால் திரிபுபடுத்தப்பட்ட செய்தி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்வராததால் நான் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்தேன். ஆனால் இந்த முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக உள்ள ரெலோவினைப் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதனால் தான் நான் ரெலோ சார்பாக இல்லாமல் சுயேட்சையாகப் போட்டியிடுவது என்று கூடித் திர்மானித்தோம். அது மட்டுமல்ல அதற்காக எனது பதவியையும் உறுப்புரிமையையும் விட்டுச் செல்லவும் தயாராக இருந்தேன். இந்த விடயங்களே ஊடகங்கள் ரெலோவிற்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டன. நான் இப்போதும் ரெலோ உறுப்பினன். எங்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.

தேசம்நெற்: நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன உரிமைகளைக் கோருகின்றீர்களோ அவ்வுரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருபவர்கள் சிறிதுங்க ஜெயசூரியவும் விக்கிரமபாகு கருணரட்ணாவும். அப்படி இருக்கையில் நீங்களும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி அவ்வாறான முற்போக்கு சக்திகளை ஆதரிக்க முன்வரவில்லை. ஏன்?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவும் விக்கிரமபாகு கருணரட்ணவுடன் பேசிவிட்டுத்தான் சென்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துமாறும் இல்லையேல் விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று நான் கருத்தை முன் வைத்தேன். விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு கஜேந்திரகுமார் மட்டுமே விருப்பம் தெரிவித்தார். ஏனையவர்கள் கொள்கையளவில் அதனை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் விக்கிரமபாகு கருணாரட்ன வெல்வதற்கான வாய்ப்பில்லை என்பதன் அடிப்படையில் அவரை ஆதரிக்க முன்வரவில்லை.

நான் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் தொடர்ந்தும் பேசி வருகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் இருவரும் இணைந்தே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளோம். தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கும்படி இருவரும் மக்களைக் கோருவோம். அதே போல் சிங்கள வாக்காளர் மத்தியில் விக்கிரமபாகு கருணரட்னாவை ஆதரிக்கும்படி இருவரும் கோருவோம்.

தேசம்நெற்: இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஏன் இரு வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்கள்?

எம் கெ சிவாஜிலிங்கம்: கடந்த தேர்தல்களில் விக்கிரமபாகு கருணாரட்ன பெற்ற வாக்குகள் குறைவானது. இதுவொரு தந்திரோபாய நடவடிக்கையே. எமது நோக்கம் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் விழும் வாக்குகளைச் சிதறடிப்பதே. இதன் மூலம் இவர்களுக்கு 50 வீதமான வாக்குகளைக் கிடைக்காமல் செய்வதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது. 50 வீதமான வாக்குகள் கிடைக்காத நிலையில் 2வது தெரிவை கணிக்க வேண்டிய நிலையேற்படும். இன்று என்னைத் துரோகி என்பவர்கள் நான் இந்நிலையை ஏற்படுத்தினால் என்ன சொல்வார்கள்.

தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாக நிற்பதற்கு பின்னாலுள்ள அரசியல் பற்றிய சந்தேகங்கள் உள்ளது. நீங்கள் மகிந்த ராஜபக்சவின் உந்துதலால் அல்லது இந்தியாவின் உந்துதலால் தமிழ் வாக்குகளை பொன்சேகாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்காகவே தேர்தலில் களம் இறங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எம் கெ சிவாஜிலிங்கம்: இப்படி பல ஊகங்கள் வெளிவரும். இவர்கள் ஒரு விசயத்தை மறக்கிறார்கள் இன்று யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் புளொட், கிழக்கில் ரிஎம்விபி கருணா, ஈபிஆர்எல்எப் என இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள். இதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யாவிட்டால் பெருமளவு தமிழ் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. அதனையும் தடுப்பதற்காகவே நான் தேர்தலில் நிற்கின்றேன்.

இன்று இலங்கையில் உள்ள எந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யுத்தக் குற்றங்கள் தமிழ் மக்களின் படுகொலைகள் பற்றிக் கதைக்கிறார்கள். அப்படிக் கதைக்கும் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பியைக் கூறுங்கள். நான் இன்றைக்கும் இலங்கையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக் குரல் கொடுக்கின்றேன். சுயாட்சி ஒன்றே தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றேன்.

மஞ்சள் கண்ணாடியைப் போட்டுப் பார்த்துக் கொண்டு மஞ்சளாக இருக்கிறது என்றால் என்ன செய்ய. தமிழீழ விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவன். இன்று ஆயுதப் போராட்;டம் முடிவுக்கு வந்துவிட்டது. புலிகள் அழிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கொலை செய்தவனுக்கு அல்லது கொலை செய்யச் சொன்னவனுக்கு வாக்குப் போடு என்று தமிழ் மக்களிடம் போய்க் கேட்க முடியாது.

ஒருசிலர் திட்டமிட்ட பிரச்சாரங்களை என்மீது நடத்துகின்றனர். நான் இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டுவிட்டேன் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நான் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் மட்டும் இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகி விடாது.

தேசம்நெற்: நீங்கள் டிசம்பர் 20ல் மீண்டும் ஐரோப்பா வரவுள்ளீர்கள். இதன் நோக்கம் என்ன? ஐரோப்பாவில் உங்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவைத் தேடும் நோக்கம் உண்டா?

எம் கெ சிவாஜிலிங்கம்: என்மீதும் நான் சுயேட்சையாகப் போட்டியிடுவது தொடர்பாகவும் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஊடகங்களையும் அதற்குத் தூண்டிவிட்டுள்ளனர். இதுவொரு சிறு குழுவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரம். அதனால் லண்டனுக்கும் தமிழகத்திற்கும் சென்று என்னுடைய அரசியல் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அவசர பயணம். லண்டனில் மூன்று நாட்களும் தமிழகத்தில் நான்கு தினங்களும் தங்கி இதனைச் செய்ய உள்ளேன்.

நிச்சயமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதும் எனது பயணத்தின் நோகம்.

அரைமணி நேரம் நீடித்த நேர்காணலின் முடிவில் லண்டன் தமிழர்களின் தேசம்நெற் வாசகர்களின் கேள்விகளுக்கு பொது மேடையில் பதிலளிப்பதற்கு நீங்கள் தயார எனக் கேட்டேன். சற்றும் தயக்கமின்றி ‘பொதுக்கூட்டத்தை கூட்டுங்கள் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்’ என ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் உறுதிபடத் தெரிவித்தார். அவரது உறுதிமொழிக்கமைய எம் கெ சிவாஜிலிங்கத்துடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 21 2009 மாலை 5:30 முதல் 9:00 மணிவரை இக்கேள்வி நேரம் இடம்பெறும்.

நிகழ்வு விபரம்:
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு :
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம் 07846 322 369
ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452

யாழ் – கண்டி பஸ் சேவை இன்று ஆரம்பம் – இலங்கை போக்குவரத்து சபை தகவல்

buss.jpgயாழ்ப் பாணத்திற்கும் கண்டிக்குமிடையிலான பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இன்று கண்டியில் இருந்து 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கான பஸ் புறப்படவுள்ளன. இது மாத்தளை,  தம்புள்ளை,  மதவாச்சி மற்றும் வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளது.

நாளை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கான பஸ் சேவை இடம்பெறவுள்ளதாக இ.போ. சபை மேலும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியது கனடா

canada.jpgஇலங் கையில் சமாதான சூழல் காணப்படுவதுடன், பாதுகாப்பு நிலைவரம் சீரடைந்துள்ளதால் கனடா அரசு இலங்கை தொடர்பாக பேணிவந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பிரயாணக்கட்டுபாடுகளைத் தளர்த்தியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில் இலங்கையில் அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று கனடா அரசு தெரிவித்துள்ள போதிலும் இலங்கைக்கு விஜயம் செய்யும் அந்நாட்டுப் பிரஜைகள், இலங்கைக்குள் அனாவசிய பிரயாணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா தூதுவர் புரூஸ் லெவி, விடுதலைப் புலிகளுடனான தீவிரயுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கை புதிய யுகம் ஒன்றிற்குள் பிரவேசித்துள்ளதை இது எடுத்து காட்டுகின்றது. புலம்பெயர் இலங்கையர்கள் மிகக் கூடுதலாகக் கனடாவில் குடியேறியுள்ள நிலையில் அதிக அளவிலான கனேடிய மக்கள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய பிரஜாவுரிமை பெற்ற அநேகமான இலங்கையர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இலங்கைக்கு வருகைதரலாம் என்று நம்புகிறோம்  என்று கூறினார். 

ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி – இலங்கை முற்போக்கு முன்னணியின் மனு நிராகரிப்பு

sri_election.jpgஇலங்கை யின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுக்காலை கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்றுக்காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் கட்சிகளின் 23 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் முன்னிலையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார். இதற்கிணங்க மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  மேற்படி மனுக்களை சமர்ப்பித்தவர்களும் சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள க்கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தனர். இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மனுதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

 இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசூரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (ஜாதிக சங்வர்தன பெரமுன)
புனாகொட தொன் பிரின்ஸ் சொலமன்
அநுர லியனகே (ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத பெரமுன)
ராஜபக்ஷ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாஹு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம்.இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.ஜீ.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருஹுணு ஜனதா பக்ஷய)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கைஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)

அம்பாறை மாவட்ட நீர் விநியோகத் திட்டம்!

அம்பாறை மாவட்டத்தின் குடி நீர் வசதியில்லாத குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் 3ஆவது கட்டத்;தை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் நிதிதிட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்திற்கான செலவீன மதீப்பீட்டுத் தொகையின் 85 வீதமான 91.8 மில்லியன் டொலரை வரையறுக்கப்பட்ட அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு  கடனுதவியாக வழங்குகின்றன. எஞ்சிய 15 வீதத்துக்கான  13.3 மில்லியன் அமெரிக்க டொலரை ஹட்டன் நெஷனல் வங்கி கடனாக வழங்குகிறது.

உலமா சபையின் செயற்பாடுகளில் அரசியல் சாயம் பூசவேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpgஉலமா சபையின் நடவடிக்கைகளில் அரசியல் சாயம் பூச முனைய வேண்டாமென மெளலவி நியாஸ் முஹம்மத் (கபூரி) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

அண்மையில் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இவ்வாறான விஜயங்கள் ஜனநாயக உரிமையாகும்.  அவரவரின் தெரிவுமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பக்க சார்புகளின்றி நடுநிலைமையாய் சமய, சமயோசித வழியில் வழிநடத்த ப்படும் முஸ்லிம்களுக்கான ஒரு பொது ஸ்தாபனமாகும்.

இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகா வந்துசென்றதை சிலர் தவறாக விமர்சிக்கின்ற கதையும் அரசியலாக்க முனைகின்ற கதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது விடயத்தில் பிழையாக நடந்துகொண்டதாகவும் அதற்காக எதிரணி உலமா சபை ஒன்று உருவாகி உள்ளதாகவும் கதை ஏற்படுத்தி பிரசாரம் செய்வதும் ஒரு வகை அரசியல் இலாபம் ஈட்ட முன¨யும் காரியமாகும்.

உலமா சபை தலைமை பீடத்திற்கு ஜனாதிபதி அபேட்சகராக களமிறங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா வருகை பற்றி கட்சி உணர்வில் உந்தப்பட்டசிலரின் தனிப்பட்ட வித்தியாசமான கருத்துகளின்றி அது மேல் மட்டத்தில் வெளியான கருத்தல்ல. 16.12.2009ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து இது விடயமாக உலமா சபையின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்திய போது ஜனாதிபதி புன்னகை பூத்தவராக ‘மெளலவி அவர்களே இதுவெல்லாம் யார் சொன்னகதை’ அப்படி நான் கருத்துக்கள் கொண்டவனுமல்ல இதற்கு எதிராக விமர்சனம் செய்பவனுமல்ல.

உலமா சபை என்பது உலமாக்களின் சமயத்துடன் இணைந்த ஒரு முஸ்லிம் மத ஸ்தாபனமாகும். அங்கு எவரும் வரலாம், வாழ்த்தும் பெறலாம். அவர்களுக்காக ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்த எனக்கு அவர்கள் நன்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்ததும் எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அந்த உலமா சபை தலைமையகத்துக்குச் செல்ல ஆசைதான். பாதுகாப்பு நலன் கருதி நான் அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் மூலம் உலமா சபை உலமாக்களை எனது இல்லத்தில் சந்திக்கவும் நான் ஆவலுடன் இருக்கின்றேன்.

இது ஒரு பெரிய விவகாரமும் அல்ல. இதை எனது சார்பில் உலமா சபைக்கு அறிவிக்க தாங்களுக்கு அனுமதி தருகிறேன் என ஜனாதிபதி கூறியதை நினைவூட்டி உலமா சபையை பிரிக்க முனைகிறார்கள் என்ற பிரசாரங்களை விளங்கிக் கொள்வது நல்லது என கருதுகிறேன். எவருக்கும் அரசியல் செய்ய உரிமையுண்டு. ஆனால் உலமா சபையையும் உலமாக்களையும் அடகு வைக்காமல் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் அவரவரின் அரசியலைத் தொடரட்டும்.’ என அறிவுரை வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியதை நியாஸ் மெளலவி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு இம்முறை வன்முறைகள் இடம்பெறலாம் – ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இடம்பெறாதளவு வன்முறைகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறப் போவதாக எச்சரித்துள்ள ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, வடக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் இதுவரையில் அரசினால் ஏற்படுத்தப்படவில்லையெனவும் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கரு ஜயசூரிய மேலும் கூறியதாவதுதேர்தல் பிரசாரங்களை நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுத்துச் செல்ல ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. நாம் ஊடகங்களை மதித்தே செயற்படுகின்றோம். எம்மீது அரசு சேறு பூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக அரச ஊடகங்களை பாவித்து மக்களை ஏமாற்றி வருகின்றது.

வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடர்பில் 20/20 போட்டி தொடர்கின்றது. இந்நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறலாம். ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் நிலையில் எம் மீதும் ஆரம்பித்துள்ளது. கிழக்கிலுள்ள எமது கட்சி உறுப்பினரான சசிதரன் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளதுடன் கம்புறுப்பிட்டியிலுள்ள எமது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. அரசு அரசியலமைப்பை மீறி செயற்படுவதனாலேயே இவ்வாறான தேர்தல் சட்டவிதிகளை மீறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 17 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் சுயாதீன தேர்தல், பொலிஸ் உட்பட ஏனைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தேர்தல் சுயாதீனமாக இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிதிகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

இன்று அலரி மாளிகை அன்னதான மடமாக மாறியுள்ளது. இது தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகும். அவர்கள் சொந்த பணத்தைக் கொண்டு இதனை செய்தால் பிரச்சினையில்லை. அரச இடம் மற்றும் நிதியைக் கொண்டு மேற்கொள்வதால் எதிர்க்கின்றோம். பொலிஸ் அதிகாரிகள் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றனர். எனினும் அதிலுள்ள சிலர் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர். எனவே சகல தரப்பினரும் நடுநிலையுடன் செயற்படவேண்டுமெனக் கோருகின்றோம்.

தேர்தல் வரலாற்றில் இத்தேர்தலிலேயே அதிகளவு வன்முறைகள் இடம்பெறப் போகின்றன. இதனை அரசே தற்போது ஆரம்பித்துள்ளது. அரச செலவுடனேயே பதாகைகள் அமைக்கப்படுவதுடன் நியமனங்களும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் தேர்தல் காலப்பகுதியில் இடமாற்றம் மேற்கொள்ள வேண்டாமெனக் கோரிய நிலையில் வடமத்திய மாகாணத்தில் 205 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.

அரச ஊடகங்களில் இரண்டில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊடகங்கள் எவ்வாறு நேர்மையாக செயற்படும்.தேர்தல் வடக்கில் சுயாதீனமாக இடம்பெற அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. நாம் வடக்கில் பிரசாரம் முன்னெடுக்க அனுமதி பெற்றே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக முகாம்களிலுள்ள மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு கோருகின்றோம்.

தற்போது முகாம்களில் எஞ்சியுள்ளவர்களில் 75 வீதமானவர்களுக்கு வீடுகள் உள்ளன. எனவே இவர்களை அடைத்து வைக்க வேண்டாமெனக் கோருகின்றேன். மக்கள் தமது விருப்புக்கேற்ப எந்த அழுத்தமுமின்றி சுயாதீனமாக வாக்களிக்கவும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையின்றி சுதந்திரமாக பிரசாரத்தை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு முக்கிய பங்குண்டு.

வெள்ள அனர்த்தம் – கிழக்கில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

front.jpgகிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 363 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டதாக தேசிய அனர்த்த நிவாரண நிலையப் பணிப்பாளர் சரத் பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

இந்த வெள்ள நிலைமையினால் 136 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 1336 வீடுகள் பகுதியாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வார இறுதியில் பெய்த அடை மழையினால் இவ்வாரத்தின் முற்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:- கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.

அம்பாறை மாவட்ட செயலாளரின் தகவலின் படி, அங்குள்ள 15 பிரதேச வாழும் 54 ஆயிரத்து 308 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இரு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 45 வீடுகள் முழுமையாகவும், 316 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டம்!

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
57 மில்லியன் யூரோவை ஈரான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு கடனுதவியாக வழங்குகின்றது. இத்திட்டத்தினூடாக 1000 கிராமங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் பாவனையாளர்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.