16

16

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

P Rayaharanநாம் தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த துறை தகவல் தொழில்நுட்பம். இந்த 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் பலாபலன்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு உள்ளோம். மித மிஞ்சிய தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி உலகம் இன்று விவாதிக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் அடிப்படைகளைக் கூட அனுபவிக்க முடியாத யுத்த சூழல் இலங்கையில் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றும் இலங்கை அரசும் தகவல்கள் மீதான தங்கள் அதீத கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தகவல்கள் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அவர்களுக்கு தகவல்கள் பலவழிகளிலும் கிடைத்தது. தகவல்களைப் பெறுவதற்கான பலவழிகளும் இருந்தது. ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்கள் உண்மைகளைத் தவறவிட்டன. தம் விருப்பு வெறுப்புகளுக்கும் தங்கள் அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப தகவல்களை வடிகட்டிக் கொடுத்தனர். மக்களை மாயைக்குள் வைத்திருந்தனர்.

நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவினமான நிலையில் இருந்தனர், பலவந்தமாக இளைஞர் யுவதிகளை படையணியில் சேர்த்தனர், மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர், தமது சொந்த மக்களையே சுட்டுக் கொன்றனர் என்ற விடயங்கள் சர்வதேச ஊடகங்களிலும் வன்னியில் இருந்தும் வந்திருந்த போதும் புல்ம்பெயர்ந்த தேசங்களில் இருந்த புலிசார்பு ஊடகங்கள் இந்த உண்மைகளைக் கண்டுகொள்ள மறுத்தனர். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது விம்பங்களைக் கட்டமைத்தனர். அதனாலேயே மே 18 2009 காலையில் மக்கள் நித்திரையால் எழும்பியபோது ‘சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது’ போன்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களில் பலர் இன்னமும் அதன் தாக்கத்தில் இருந்து மீளவில்லை.

இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் மிகப்பெரும் மனித அவலம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த போதும் 20 000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் மக்கள் கொல்லப்பட்ட போதும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவதற்குப் பதில் தமது அரசியல் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே தகவல்களைச் சமைத்துக் கொண்டனர். இதன் மூலம் தாயகத்தில் இருந்து 6000 மைல்களுக்கும் அப்பால் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு மாயையைச் சூழலை புலத்தில் உருவாக்கியது. இன்றும் பலர் அச்சூழலிலேயே வாழ்கின்றனர்.

தகவல்கள், தகவல்களின் நம்பகத்தன்மை, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளல் என்பன பொதுத் தளங்களில் தகவல்களைப் பரிமாறுபவர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயமான பொறுப்பு. விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தகவல்களைக் கட்டமைப்பதும் உண்மைகளைத் திரிபுபடுத்துவதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பாரதூரமானவை.

இன்றும் சிலர் இதனை உணர மறுக்கின்றனர். அந்த வரிசையில் தமிழரங்கம் பி இரயாகரனும் குறிப்பிடத்தக்க ஒருவர். அண்மையில் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து:
“வட்டுக்கோட்டை தீர்மானம்”, “நாடு கடந்த தமிழீழம்”, “மே 18 இயக்கம்” .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைத்து எப்படி நிகழ்கால அரசியலை செய்ய முனைகின்றனரோ, அதைத்தான் மாற்று கருத்து தளத்திலும் செய்ய முனைகின்றனர். மொத்தத்தில் கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.”

பி.இரயாகரன் Tuesday, 15 December 2009 11:22

வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், மே 18 இயக்கம் என்ற மூன்றையும் இரயாகரன் புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த கி பி அரவிந்தனும் நாடுகடந்த தமிழீழத்தை முன்னெடுக்கும் விஸ்வானந்தன் உருத்திரகுமாரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பவர்கள். இவை இரண்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலின் தொடர்ச்சி என்பது பொதுவாக நிறுவப்பட்ட உண்மை.

மே 18 இயக்கம் தீப்பொறி அமைப்பின் தொடர்ச்சி என்பதும் வியூகம் இதழ் உயிர்ப்பின் தொடர்ச்சி எனபதும் சுயவிமர்சனங்களுக்கு ஊடாகவே தாங்கள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளப் போவதாகவும் வியூகம் சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை டிசம்பர் 9ல் மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன் என்ற தலைப்பில் தேசம்நெற்ல் வெளியாகி இருந்தது. ரொறன்ரோவில் டிசம்பர் 13ல் இடம்பெற்ற வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ‘விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை வியூகம் ஆசிரியர் தலைப்புக் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேலாக வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மட்டுமல்ல ‘விடுதலைப் போராட்டமும் புலிகளும்’ என்ற பிரதான கட்டுரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

— On Mon, 14/12/09, Tamil Circle <tamil_circle@yahoo.no> wrote:

> From: Tamil Circle <tamil_circle@yahoo.no>
> Subject:
> To: tamil_circle@yahoo.no
> Date: Monday, 14 December, 2009, 8:48 PM
> கடுமையாக
> விமர்சிக்கப்பட வேண்டிய நிலையில் – பார்வைக்கு      
>      
> தமிழரங்கம்
> இணையத்தளம்  கருத்து
> மக்களைப் பற்றிக்
> கொண்டால் அது மாபெரும்
> சக்தியாக
> உருவெடுக்கும்
>                                                              
>           www.tamilcircle.net 
>
> வர்க்கம், அரசியல்,
> சாதியம், பெண்ணியம்,
> தேசியம், நிறம், மதம்,
> பண்பாடு, கலாச்சாரம்,
> இசை, சுற்றுச்சூழல் …
> என அனைத்து
> விடையங்களையும்
> இத்தளத்தில் நீங்கள்
>
> காணமுடியும்.                 
>        
> மின்னஞ்சல்  tamilcircle@tamilcircle.net     
> tamil_circle@yahoo.no

அதாவது மே 18 இயக்கம் புலி சார்பானது என இரயாகரன் எழுதுவதற்கு முதல்நாளே வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனிடம் இருந்துள்ளது. tamil_circle@yahoo.no என்ற மின் அஞ்சல் முகவரியில் இருந்து இது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அப்படி இருக்கையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், அமைப்புகளுடன் மே 18 இயக்கத்தையும் இணைத்து மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி அமைப்பு என்று இரயாகரன் முத்திரை குத்துவது எதற்கு? இதற்கு இரு காரணங்கள் இருக்க முடியும்.
1. தவறான தகவல் : வழமை போல் இரயாகரன் எவ்வித உறுதிப்படுத்தலும் நம்பகத்தன்மையும் இல்லாத தகவலைக் கொண்டு மே 18 இயக்கம் – வியூகம் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
2. தகவலை மறைப்பது : இரயாகரன் உண்மையை அறிந்திருந்த போதும் தகவல்களை வடிகட்டி தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அதனைத் திரிபுபடுத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.

இரயாகரன் தவறான தகவல்களின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இது இரயாகரனுக்கு மட்டுமுள்ள குறைபாடும் அல்ல. இது கீ போட் மாஸ்க்ஸிஸ்டுக்களுக்குள்ள பொதுவான குறைபாடு. இவர்கள் தகவல்களைச் சேகரிப்பது உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. தங்கள் உழைப்பைச் செலுத்துவதும் இல்லை. ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிட்டுக்கள். இவர்கள் பிரதான நீரோட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதனால் இவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மூலங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடிகின்றது. தங்கள் அரசியலுக்கு வலுச் சேர்க்கும் தகவல்கள் எதனையும் எவ்வித விசாரணையும் இல்லாமல் இவர்கள் பயன்படுத்துவார்கள்.

இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன் என்ற கட்டுரையில் இரயாகரன் அறுதியிட்டு சரியென வெளியிட்ட செய்திகள் எப்படி முற்றிலும் தவறான செய்திகளாக அமைந்தது என்பது உதாரணங்களுடன் மிக விரிவாக எழுதப்பட்டு உள்ளது. அதனால் தவறான தகவல்கள் அடிப்படையில் இராயாகரன் கட்டுரையை எழுதி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பானது என இரயாகரன் எழுதியது தவறான செய்திகளின் அடிப்படையில் அல்ல. ஏனெனில் இரயாகரன் மே 18 இயக்கம் அதன் பின்னணி பற்றிய தகவல்களை அறிந்த ஒருவர். யூலை இறுதிப் பகுதியில் அரசியல் நட்பு சக்திகளுடன் உரையாடலை ஆரம்பிக்கு முகமாக ஐரோப்பா வந்த ரகுமான் யான் ஓகஸ்ட் 1ல் பாரிஸில் இரயாகரனைச் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தமிழரங்கத்தில் கட்டுரை எழுதிய இரயாகரன் பின்வரும் அழைப்பை நட்புசக்திகளுக்கு விடுத்தார். ”மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!? இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை.”  இரயாகரன் தீப்பொறி அல்லது ரகுமான் யான் புலிகள் சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றால் ஏன் இந்த விமர்சனத்தை அன்று வைக்கவில்லை.

மேலும் அன்று இரயாகரன் எழுதியது ”எம்முடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், இயல்பாக தம்முள் பாட்டாளி வர்க்கத்தை மறுக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுடன்தான், தம்மை முன்னிறுத்த முனைகின்றனர்.’‘ இந்த வரிகளின் மூலம் இரயாகரன் தனது நோக்கத்தை அம்மணமாகத் தெரிவிக்கிறார். “Over time it’s going to be important for nations to know they will be held accountable for inactivity,You’re either with us or against us in the fight against terror.” நவம்பர் 6 2009ல் இதனைத் தெரிவித்தது வேறு யாருமல்ல அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஸ். இதே கருத்துப்படவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் நடந்து கொண்டார். தனது வழியே சரியானது என்றும் அந்தவழியில் பயணிக்காதவர்கள் தமிழ் தேசியத்தின் துரோகிகள் என்றும் சுட்டுக்கொன்றார். இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது வழியில் பயணிக்காதவர்களை நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்கள் என்று வைகின்றார்.

தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:
From: tamilcircle@tamilcircle.net
To: ashokyogan@hotmail.com
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000

”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”

2007 டிசம்பர் பிற்பகுதியிலும் 2008 ஜனவரியிலும் என்எல்எப்ரி யின் ஹற்றன் நஸனல் வங்கிக்கொள்ளை தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் பலரும் இரயாகரனிடம் கேள்வி எழுப்பினர். தன்னிடம் அவ்வாறான ஒரு கேள்வி எழுப்பப்பட்டதற்கே பொங்கியெழுந்து பல கட்டுரைகளை எழுதிய இரயாகரன் குறிப்பிட்ட வங்கிக் கொள்ளை தொடர்பாக எந்தப் பதிலையும் கூறவில்லை. ஆனால் ஓராண்டு கழித்து ”அசோக், நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப் பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்று இரயாகரன் மிரட்டுகின்றார். இரயாகரனின் இந்த அரசியல் நேர்மையை என்னவென்பது.

இரயாகரனும் இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் மார்க்ஸிஸத்தில் புலிகள் அல்ல. இவர்கள் புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள்.

மே 18 இயக்கம் மீதும் ரகுமான் யான் மீதும் புலி முத்திரை குத்துவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது இரயாகரனுடைய முன்னைய கட்டுரை மூலம் மிகத் தெளிவாகிவிட்டது. ரகுமான் யான் தன்னுடன் பாரிஸ்க்கு கதைக்க வந்ததை ”எமது வழிதான் சரியானது என்பது, தெளிவாக அரசியல் ரீதியாக உணரப்படுகின்றது.” என்று புல்லரித்துக் கொண்ட இரயாகரன் ரகுமான் யான் மே 18 இயக்கத்தை ஆரம்பிக்கிறார் என்ற செய்தி உறுதியானதும் பல்டி அடித்துக் கொண்டார். ”கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.” என்று ஒரு குற்றச்சாட்டை போட்டு வைக்கின்றார். மற்றவர்களை மக்களுடன் நிற்காதவர்கள் என்று எழுதும் இரயாகரன் ”எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது.” என்று மக்களை மந்தைகள் என்று திட்டித் தீர்க்கின்றார். ”ஆறாவது அறிவை இழந்த மந்தைகள்” என்று மேலதிக விளக்கமும் கொடுக்கின்றார். ‘தமிழ் சமூகத்தில் ஆறறிவுள்ள ஒரே அரசியல் விலங்கு ‘அண்ணன் இரயா’ மட்டும் தான் என்பதனை இந்த தமிழ் சமூகம் அறிந்திருந்தால் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஒரு பட்டாசு வெடியுடனேயே முடித்திருக்கலாம்.’ என்ற கணக்கில் தான் இரயாகரன் தன்னைப் பற்றிய விம்பத்தைக் கட்டமைக்கின்றார். 

இராயாகரன் தன்னைப்பற்றிக் கொடுக்கும் மற்றுமொரு பில்ட்அப் ”இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன் சமூக விடயங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;….. எனது சொந்த உழைப்பில் தான் எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன். கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவோர் கிடையாது. …. இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன்.”

இவற்றிலிருந்து மே 18 இயக்கம் புலிகள் சார்பான அமைப்பு என்ற இரயாகரனின் குறிப்பு இரயாகரன் மிகத் திட்டமிட்டு தனது அரசியல் விம்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் சேறடிப்பே என்ற முடிவுக்கே வர முடிகின்றது. சேறடிப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத இரயாகரன் தங்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்கள் இடையேயான பனிப் போரில் அதனுடன் சம்பந்தப்படாத ரகுமான் யான் இராணுவச் சீருடையில் நிற்கின்ற படத்தைப் போட்டுள்ளார். கட்டுரையுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்புகைப்படம் அதில் பிரசுரிக்கப்பட்டது யாருக்கு ரகுமான் யானை காட்டிக்கொடுக்கும் முயற்சி? இது ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுத்தலே. ஒரு போராளி அவனுடைய சமூகத்தின் உடமை. அவனைக் காட்டிக்கொடுக்கின்ற உரிமையை இரயாகரன் எங்கிருந்து பெற்றார். இந்தக் காட்டிக் கொடுப்பு இரயாகரன் மக்கள் நலன்சார்ந்து செயற்படவில்லை என்பதை மட்டும் உறுதியாக்குகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த லண்டன் வந்திருந்த போது அவருடன் ஒரு நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தேன். அப்போது தனது தாடி பற்றி நகைச்சுவையாகத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த தனக்கு பிடல் கஸ்ரோ மீது மிகுந்த அபிமானம் என்றும் அவரளவுக்கு வர முடியாவிட்டாலும் அவர் போன்று தாடியை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இப்படி வாழ்க்கையில் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும். அப்படித்தான் இரயாகரனுக்கும் புரட்சி செய்ய முடியாவிட்டாலும் புரட்சிக்காரன் போல் இராணுவச் சீருடையும் தொப்பியும் அணிந்து செல்ல விருப்பம் மட்டுமல்ல டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம். ஸ்ரண்ட் காட்டுவதற்குப் படம் தேவைப்பட்டால் உங்களுடைய இந்தப் படத்தையே போட்டிருக்கலாமே. எதற்காக சம்பந்தப்படாத ரகுமான் யானின் படத்தை அவ்விடத்தில் போட வேண்டும். கீ போட் புரட்சியாளர்களுக்கு தலைமறைவு வாழ்வின் யதார்த்தத்தை அவ்வளவு இலகுவில் புரிய வைத்திட முடியாது.

எது எப்படியானாலும் இரயாகரனும் அவர் ஊறிய அதே குட்டையில் ஊறிய கீ போட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் தங்கள் வெற்றுக் கோசங்களால் மக்களை மட்டுமல்ல அவர்களுடைய மக்களையும் வென்றெடுக்க முடியாது. இவர்கள் தங்களை மாஓயிஸ்ட்டுக்கள் என்பதால் மாஓவின் மொழியில் காகிதப் புரட்சியாளர்கள் என்பதே வெகுபொருத்தமானது. இவர்கள் ”நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. ” என்று கட்டுரை எழுதுவதற்கே லாயக்கு. இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மீது விமர்சனம் வைப்பது ஒரு வகையில் பாலவர்ணம் சிவக்குமார் மீது கல் எறிந்ததற்குச் சமனாகும். இவர்களை அனுதாபத்துடன் அணுகுவதே முறை. குழந்தைகளின் மனநிலையை அறிய அவர்களிடம் வெள்ளைத் தாளையும் பேனையையும் கொடுத்து கீறச் சொல்வார்கள். வளர்ந்தவர்களுக்கு கீ போட்டைக் கொடுத்து எழுதச் சொல்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை மொழி உளவியல் நிபுணரிடம் கொடுத்தால் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள். இதனை ‘கீபோர்ட்-மார்க்ஸ்-சின்ட்ரம்’ என வகைப்படுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

குறிப்பு: நண்பர் இரயாகரன் எப்படியும் நீங்கள் இக்கட்டுரைக்கு சில கட்டுரைத் தொடர்கள் எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுதுவது தான் உங்கள் உளநலத்திற்கும் நல்லது. ஒரு சிறு வேண்டுகோள் வழமையாக நீங்கள் எழுதும் கட்டுரைகளை தொகுப்பாக வெளியிடுவது உங்கள் வழக்கம். அதனால் ஏற்கனவே நீங்கள் தேசம்நெற் பற்றி எழுதிய கட்டுரைகளையும் இனிமேல் எழுதப் போகின்ற கட்டுரைகளயும் தொகுத்து ஒரு புத்தகமாக்க முடியுமா என்று பாருங்கள். இப்பொழுது எனக்கு வாசிக்க நேரமில்லை. புத்தகமாக இருந்தால் வயதான காலத்தில் பேரப் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு உந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். ஒத்துழைப்பிற்கு நன்றி.

பொன்சேகா மீது சட்ட நடவடிக்கை: சட்ட மா அதிபருடன் அரசு ஆலோசனை

rajitha_senarathna00jpg.jpgசரத் பொன்சேகா படை வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தெரிவித்த கூற்று தொடர்பில் எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கம் சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இவருக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும். இவர் தொடர்பாக சி. ஐ. டி. யினூடாக விசாரணை நடத்த சட்ட மா அதிபர் பணித்தால் அவரிடம் வாக்கு மூலம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அடைமழையால் கிழக்கில் 65 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

front.jpgகிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். இம்மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 377 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் தங்கி இருப்பதாக மட்டு. மாவட்ட இணைப்பாளர் கே. விமலராசா கூறினார்.

திருமலை மாவட்டத்தில் சுமார் 5600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக திருமலை மாவட்ட இணைப்பாளர் எம். எஸ். எம். ரிஸ்வி கூறினார். இத்தொடர் மழையின் விளைவாக அம்பாறை மாவட்டத்தில் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் சுமார் 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மாவ ட்ட செயலாளர் சுனில் கன்னங்கர கூறினார்.

தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகனேரி, றூகம், நவகிரி, புனாணை, உன்னிச்சை குளங்களின் அணைகள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவற்றின் சில வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற் கொண்டுள்ளது. இது தொடர்பான அறி வுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாகரை, காத்தான்குடி, வாழைச்சேனை, வெல்லாவெளி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் சில குடும்பங்கள் பொதுக் கட்டடங்களிலும் தங்கியுள்ளன.

பல கிராமங்களின் தொடர்பு வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பாதைகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வாகனங்கள், பயணிகள் பயணிக்க முடியாதுள்ளது.

கல்விப் பொதுத்தராதரப் சாதாரன தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் சிலர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆப்கானில் உள்ள பிரிட்டிஷ் படைகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள்

ஆப்கானிஸ்தானில் தனது இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையில், கூடுதலாக 22 சினூக் ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தாங்கள் வாங்கவுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு தேவையான பணத்துக்காக இதர இராணுவ செலவினங்களை குறைக்க பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்களில் முதலாவது 2013 ஆண்டில் செயற்படத் தொடங்கும்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அதன் இராணுவ வீரர்களுக்கு போதிய அளவில் ஹெலிகாப்டர்கள் வழங்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அங்கு பிரிட்டிஷ் இராணுவத்தினர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருக்கும் சாலையோர வெடிகுண்டுகளை எதிர்த்து சமாளிப்பதற்கு மேலும் கூடுதலாக 250 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்காக மேலும் 08 பேர் நேற்று (15) கட்டுப்பணம் செலுத்தினர்.

சுயேச்சை வேட்பாளர்களாக மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா, கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் டபிள்யு. எம். யு. பி. விஜேகோன் ஆகியோரும் கட்சிகளின் சார்பாக கெ. ஜி. ஆர். எல். பெரேரா, எம். சி. எம். இஸ்மாயில், ஒஸ்வர்ட் அருணடி சொய்ஸா, சனத் பினதுவ, அதுரகே செனரத்ன சில்வாவும் நேற்று தேர்தல்கள் திணைக்களத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தினர்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் 17 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 04 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர்.

வேட்புமனுத் தாக்கலின் பின் கட்அவுட், போஸ்டர்கள் அகற்றும் நடவடிக்கை

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்படும் என சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளருமான நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா இரண்டு தொழிலாளர் வீதம் இணைக்க ப்பட்டு 864 தொழிலாளர்களின் உதவியுடன் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

தேர்தல் சட்டத்திற்கமைய வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து மேற்படி பெனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள் அகற்றப்படுதல் வேண்டும்.

வார்ட்’ புயல் சின்னம் இன்று மன்னார் நோக்கி நகரும் காற்றழுத்த வலுவிழப்பால் கடந்து செல்வதில் தாமதம்

satellite-dec.jpgவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ‘வார்ட்’ புயல் சின்னம் வலுவிழுந்து இன்று இலங்கைக்கு மேல் திருகோணமலை ஊடாக மன்னார் குடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது.

காற்றழுத்தம் மிகவும் வலுவிழந்துள்ளதால் இலங்கையை கடந்து செல்வது தாமதமாகிறது. இதனால் வடக்கு கிழக்கு, வட மத்திய வடமேல் மாகாண, மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இலங்கைக்கு மேல் மேகக் கூட்டங்கள் அதிகளவு காணப்படும். அத்துடன் மன்னார், வளைகுடா பகுதி வடக்கு கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கிறது. முதலில் தமிழகத்தின் நாகப்பட்டினம் கரையை இலக்காகக் கொண்டு நகர்ந்த வார்ட் புயல் சின்னம் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து. பின்னர் இலங்கைக்கு கிழக்கே திருகோணமலையை நோக்கி நகரத் தொடங்கியது.

நேற்று முன்தினம் இலங்கை கரையை அண்மித்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டால் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இலங்கையை கடந்து சென்று விடும். எனினும் தற்போதைய நிலவரப்படி மிகவும் குறைந்த வேகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காணப்படுவதால் மெதுவாகவே நகர்ந்து செல்கிறது. வடக்கு, கிழக்கு வட மத்திய பகுதிகளில் கன மழை பெய்தாலும் ஏனைய பகுதிகளில் காலநிலை மந்தமாக காணப்படுவதுடன் இடைக்கிடை மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

‘வேட்புமனுத் தாக்கல் நாளை; கொழும்பில் விசேட போ.வ. ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினமான நாளை 17ஆம் திகதி காலை 9.00 மணி முதல் தேர்தல் திணை க்களம் அமைந்துள்ள ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களம் அமைந்துள்ள சரண மாவத்தைப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுவதுடன் தேர்தல் ஆணையாளரின் அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.

பொரளைச் சந்தி முதல் கொட்டா வீதியூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனநாயக்கா சந்தி முதல் பாராளுமன்ற பாதையூடாக வெலிக்கடை பொலிஸ் வரையி லான வீதி ஆகியன நாளை காலை 9.00 மணி முதல் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வுள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை க்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கரு தியே காலை 9.00 மணிக்குப் பின்னர் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் முடிந்த வரையில் நாளை நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாளை காலை 9.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகள் குறித்த ஒத்திகையொன்று இன்று 16ஆம் திகதி கலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மேற்குறிப்பிடப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தாது மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளரும் அவரது இரண்டு பிரதிநிதிகளும், அவருடன் மேலும் 10 பேர் மட்டுமே சரண மாவத்தையூடாக அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுடன் வரும் ஆதரவாளர்களுக்கு வாகன தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வந்து பின்னர் திரும்பிச் செல்லும் வரையில் இந்த போக்குவரத்து ஏற்பாடு அமுலில் இருக்கும் என்றும் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.

போக்குவரத்து பிரிவின் உதவி பொலிஸ் மா அதிபர் லக்கி பீரிஸ் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வரைபடங்கள் மூலம் விளக்கினார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கீரிமலை சிவன்கோயில் திறப்பு

keerimalaitemple.gifஇலங் கையில் உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்குப் பொது மக்கள் இராணுவத்தின் முன்னனுமதியின்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய பொதுமக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

காரைநகரில் 113 மீனவர்களுடன் 24 வள்ளங்கள் கரையொதுங்கின

நாட்டில் நிலவும் மோசமான கால நிலைக்கு மத்தியில் மீன்பிடிக்கச் சென்ற 113 மீனவர்களுடன் 24 வள்ளங்கள் காரைநகர் பகுதியில் கரையொதுங் கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தொடுவாவ, சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளிலிருந்து ஆழ்கடலு க்கு மீன்பிடிக்கச் சென்றவர்களே வள்ளங்களுடன் கரையொதுங்கி யுள்ளனர்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கை யின் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் அதிக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த மீன் பிடி வள்ளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.