மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

des_browneStephen_Smith_and_Rajaparksa._._._._._.
இன்று லண்டனில் வெளியான லண்டன் குரல் பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தி. இப்பத்திரிகையில் வெளியான ஏனைய செய்திகளும் வரும் நாட்களில் தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படும். லண்டன் குரல் பத்திரிகையின் அச்சுப் பிரதியைப் பெற விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும்)
._._._._._.

அரசியல் தஞ்சம் கோரியுள்ள படகு அகதிகளை திருப்பி அனுப்ப
பிரித்தானிய அரசு அவுஸ்திரேலிய அரசுக்கு முழு ஆதரவு!!!

இந்தோனேசியக் கடலில் ஒரு மாதமாக தத்தளிக்கும் 260 படகு அகதிகளை திருப்பி அனுப்ப முற்படும் அவுஸ்திரேலிய அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கி உள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதி டெஸ் பிரவுணியே ‘தமிழர்கள் உட்பட மக்களை திருப்பி அனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்’ (‘’We take the view that it is safe to return people, including Tamils, to Sri Lanka.’’ ) என்று கன்பராவில் நவம்பர் 10 அன்று தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தாம் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக ஐந்து இலங்கைத் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பட்டுள்ள டெஸ் பிரவுணி அவ்வழக்குகளில் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக தீர்ப்புக் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னரேயே டெஸ் பிரவுணியைச் சந்தித்த அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் ஸ்டிபன் சிமித் நவம்பர் 9 அன்று இலங்கை சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயும் அகதிகளை அழைத்துச் செல்லும் முகவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இலகுவாக்கவும் தகவல்களை நபர்களைப் பரிமாறவும் உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.

ஏற்கனவே படகு அகதிகள் தொடர்பாக ‘இந்தோனேசியத் தீர்வு’ என்பதனையே அவுஸ்திரேலியா பின்பற்றுகிறது. படகு அகதிகள் அவுஸ்திரேலியத் தரையைத் தட்டுவதற்கு முன் அவர்களை கடலிலேயே வழிமறித்து இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பதை ஒரு வழிமுறையாக அவுஸ்திரேலியா பின்பற்றுகின்றது. அதற்காக இந்தோனேசியாவிற்கு தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்புக்களிலும் பேசவுள்ளனர்.

இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8ல் Australian Tamil Forum for Justice & Equality அமைப்பினரைச் சந்தித்த டெஸ் பிரவுணி பிரித்தானிய அரசு இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டையே சர்வதேச சமூகமும் கொண்டுள்ளதாக அவர் அங்கு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவ மாட்டாது என்றும் தீர்வைக் கொண்டுவருவதற்கு எதிராக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெஸ் பிரவுணி உடனான சந்திப்புப் பற்றி கருத்து வெளியிட்டுள்ள Australian Tamil Forum for Justice & Equality அமைப்பின் பிரதிநிதி ஆர் ரவீந்திரன், டெஸ் பிரவுணி தமிழ் மக்களிடம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். தாங்கள் கடுமையான கோரிக்கை எதனையும் அங்கு வைக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஆர் ரவீந்திரன் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு சரியான பாதையில் செல்வதாக அமையும் என டெஸ் பிரவுண் கருத்து வெளியிட்டதாகக் தெரிவித்தார். ‘தனியரசு கேட்கமாட்டோம்’ என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என டெஸ்பிரவுண் கருதுகின்றாரோ தெரியாது எனவும் ஆர் ரவீந்திரன் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. 2002 கணிப்பின்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது.

படகு அகதிகள் தொடர்பான பிரித்தானிய, அவுஸ்திரேலிய அரசுகளின் நிலைப்பாட்டை பிரித்தானிய சோசலிசக் கட்சியின் துணையமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு வன்மையாகக் கண்டித்து உள்ளது.

BTF Bannerஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை – பிரிஎப் அல்லது அதன் முக்கிய உறுப்பினர்கள் பிரித்தானிய தொழிற்கட்சிக்கும் கொன்சவேடிவ் கட்சிக்கும் பல்லாயிரம் பவுண்களை நன்கொடையாக வழங்கி உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகளுடன் பல்லாயிரம் பவுண் செலவில் விருந்துபசாரங்கைளயும் மேற்கொண்டுள்ளன. இது தொடார்பாக பிரிஎப் இடம் கேட்கப்பட்ட போது அவர்கள் பதிலளிக்கவில்லை.

பிரித்தானிய தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசு தொடர்பான கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த போதிலும் அவை எதுவும் செயற்பாடுகளில் காட்டப்படவில்லை. தற்போது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அவுஸ்திரேலிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும்போக்கான நிலைப்பாட்டுக்கு டெஸ் பிரவுணி முண்டுகொடுத்துள்ளார். ஏற்கனவே பிரித்தானியா இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டு உள்ளது. தற்போது அகதிகளைத் திருப்பி அனுப்புவது முக்கியம் என்றும் அதன் மூலமே அந்தச் செய்தி சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடையும் என்றும் அதுவே அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்தும் என்றும் டெஸ் பிரவுணி அவுஸ்திரேலிய அரசுக்கு ஆலோசணை வழங்கி உள்ளார்.

தாங்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள இலங்கையர்களின் வழக்கில் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தால் அது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் திருப்பி அனுப்பப்படுவதற்கு வழிவகுக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • kovai
    kovai

    புது அகதிகள் வந்தால் பழைய அகதிகள் மௌசு போயிரும். இருக்கிற அடிமைகளை வைச்சு, அவையின்ர அந்தந்த நாடுகளை சுரண்டுறதான் வசதி. இது உலகளாவிய கொள்கையாக மாறிவிட்டது இனி அரசாங்கங்களை அண்டி வாழ்றதுதான் நமக்கு ஒரே வழி. அதிலை நல்ல வருமானம் இருக்கு. கங்காணியா வரலாம். இதில மஹிந்த எண்டாலென்ன, கோர்டன் பிரவுனோ அல்லது கொன்செர்வேட்டிவ் ஆனாலென்ன?
    உலகத் தமிழர்களே ஒன்று படுங்கள். உங்கள் எசமானர்கள் மனம் கோணாதபடி நெறி கொள்ளுங்கள். நாலெழுத்து இங்கிலீஷு தெரிஞ்சா உந்த மூண்டாம் உலக நாடுகளை, எங்க எசமானர்களுக்கு சேவகம் செய்ய வைக்க மாட்டமா, என்ன?

    Reply