ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்

Oceanic_Viking_Refugeesஅவுஸ் திரேலியாவின் சுங்கத் திணைக்கள ஓசானியா வைக்கிங்கில் இருந்து 22 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்து உள்ளனர். ஓசானிய வைக்கிங்கில் உள்ள 78 அகதிகளையும் இந்தோனேசியாவில் தரையிறங்குமாறும் அவர்களது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை உடனடியாகப் பரிசீலிப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதற்கு கப்பலில் இருந்தவர்களில் ஒரு பிரிவினர் சாதகமாக முடிவெடுத்துள்ளனர். அவர்களது தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படவார்கள் என்றும் அவ்வதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இக்கப்பலில் உள்ள ஏனையவர்களும் இதே முடிவையே எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அரசு வழங்கி உள்ள உறுதிமொழியின் அடிப்படையில் சிலரது தஞ்ச விண்ணப்பங்களை ஏற்று அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் ஏனையவர்கள் திருப்பி அனுப்பப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. சிலரைத் திருப்பி அனுப்புவதன் மூலம் அவுஸ்திரேலிய அரசு தாங்கள் அகதிகள் விடயத்தில் கடும்போக்கு உடையவர்கள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கும் என்றே அவதானிகள் கருதுகின்றனர்.

 ஓசானியா வைக்கிங்கில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் உடன்பாட்டுக்கு வருமாறு நெருக்குகின்றனர்:

அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களக் கப்பலா ஓசானிய வைக்கிங்கில் உள்ள 78 அகதிகளையும் இந்தோனேசியாவில் தரையிறங்குமாறும் அவர்களது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை உடனடியாகப் பரிசீலிப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஓசானியா வைக்கிங்கில் உள்ள அகதிகளை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களது தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படவார்கள் என்றும் அவ்வதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டு இருந்தார்.

தற்போது இந்த அகதிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அவுஸ்திரேலிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

நான்காவது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் விவகாரம் பிரதமர் கெவின் ருட் மீதான அவுஸ்திரேலிய மக்களின் கருத்துக்களை மிகவும் பாதித்து இருப்பது அண்மையில் வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகளில் வெளிப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்தே படகு அகதிகளின் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர அவுஸ்திரேலிய அரசு மிகுந்த கவனம் எடுக்கின்றது.

பிரதமர் கெவின் ருட் தனது முகத்தைக் காப்பாற்றவே இவ்வாறான ஒரு உடன்பாட்டுக்குச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்கம் ரேன்புல் குற்றம்சாட்டி உள்ளார். இந்த உடன்பாடு அவுஸ்திரேலியாவை நோக்கி அகதிகளை வரத் தூண்டும் என்றும் கெவின் ருட் அவர்களை எப்படியோ காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் எதிர்க் கட்சித்தலைவர் குறறம்சாட்டி உள்ளார்.

ஐநா வுக்கான இலங்கைப் பிரதிநிதி பலித கோகன்ன படகு அகதிகளை பொருளாதார அகதிகள் என்று நவம்பர் 11ல் அவுஸ்திரேலிய ஏபிசி ஊடகத்தில் குற்றம்சாட்டி உள்ளார். அவர்கள் அருகில் உள்ள இந்தியாவிற்குச் செல்லாமல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தது பொருளாதார நோக்கங்களுக்காகவே என்றும் அவர்களைத் திருப்பி அனுப்புவதன் மூலமே மேற்கொண்டு அகதிகள் வருவதைத் தடுக்க முடியும் என்றும் பலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியான டெஸ் பிரவுணியும் இவ்வகதிகளை திருப்பி அனுப்புமாறு ஆலோசணை வழங்கி இருந்தார்.

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறுவதாகவும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவதாகவும் குற்றம்சாட்டும் சர்வதேச நாடுகள் அதன் காரணமாக வெளியேறும் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பதற்கு மறுப்பதுடன் இலங்கையில் தமிழ் மக்கள் திரும்பிச் சென்று பாதுகாப்பாக வாழ முடியும் என்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவிக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *